27.4.06

சூரியன் 65

தாம்பரம் தேவாலய வளாகத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் எண்ணிக்கை தெருவில் போவோர் எல்லோரும் ஒரு நொடி நின்று பார்த்துவிட்டு செல்லும் அளவுக்கு இருந்தது.

மாணிக்க வேலின் அணுகுமுறை அவருக்கு வங்கியில் இருந்த எல்லா நிலைகளிலும் நண்பர்கள் இருந்தனர். சென்னையிலிருந்த அவருடைய வங்கிக் கிளைகளின் அனைத்து மேலாளர்களும் அவற்றில் பணிபுரிந்த சக அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் அவருடைய தலைமையலுவலகத்தில் அவருக்கு பரிச்சயமான அதிகாரிகள், அலுவலர்கள் என சுமார் முன்னூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கமலியின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியுற்று இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள வந்திருந்தனர்.

தேவாலய வளாகத்தில் நுழைந்து நின்ற வாகனத்திலிருந்து இறங்கியதும் ‘கூட்டத்த பார்த்தீங்களா பிலிப்?’ என்ற சுந்தரலிங்கத்தைப் பார்த்தார் பிலிப் சுந்தரம். ‘ஆமாம் சார்.’ என்றார் வியப்புடன்.

அவருக்கும் பிரமிப்பாகத்தான் இருந்தது. இதற்கு முன்னர் தன்னுடைய வங்கியின் ஊழியர்களுடைய திருமணம் மற்றும் மரண வீடுகளுக்குச் சென்றிருக்கிறார். ஆனால் இந்த அளவு கூட்டத்தை ஒரு சேர பார்த்ததில்லை. எந்தவித பந்தாவுக்கும் ஆளாகமல் எளிமையாக பழகக்கூடியவர் மாணிக்க வேல் என்று கேள்விப்பட்டிருக்கிறார். அவருடைய எளிமையும் அவருடைய மகளுடைய வயதும் வங்கியில் அவரை அறிந்திருந்த அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும் என்று நினைத்தார்.

இந்த கூட்டத்தில் அவரைத் தனியே சந்தித்து தங்களுடைய வருத்தத்தைத் தெரிவிப்பது அவ்வளவு எளிதாயிருக்காது என்றும் நினைத்தார். இன்னும் அரை மணி நேரத்திலாவது கிளம்பினால்தான் சுந்தரலிங்கத்தின் வீட்டிற்கு திரும்பிச் சென்று குளித்துவிட்டு விமான நிலையத்துக்குச் செல்ல முடியும்.

வாகனத்தை ஓட்டுனர் கிளப்புவதற்கு முன் அவரை சைகைக் காட்டியழைத்து, ‘இங்கயே வாசல் கிட்டவே நிறுத்திக்குங்க. உள்ள போய்ட்டா ஃப்யூனரல் வண்டி போறவரைக்கும் நம்மால வெளியே வரமுடியாது போலருக்கு.’ என்றார்.

வாகனம் அவர்களை விட்டு செல்லவும் கோவில் நுழைவாயிலில் நின்றிருந்த ஒரு இளைஞன் தங்களை நோக்கி ஓட்டமும் நடையுமாய் வருவதைப் பார்த்தார் பிலிப் சுந்தரம்.

‘சார் ஐ ம் ஜோ. நாந்தான் உங்கள ஃபோன்ல கூப்டேன். பல்லாவரம் ப்ராஞ்ச் அசிஸ்டெண்ட் மானேஜர்.’

பிலிப் சுந்தரம் திரும்பி சுந்தரலிங்கத்தைப் பார்த்தார். ‘சார் நாம இவர்கூடவே கோவிலுக்குள்ள போய் இந்த ரீத்த வச்சிட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு போயிரலாம்.’

ஜோ முன்னே செல்ல அவர்கள் இருவரும் தங்களைப் பார்த்ததும் மரியாதையுடன் அமைதியாய் வழிவிட்டு நின்ற வங்கி அலுவலர்களைக் கடந்து தேவாலயத்திற்குள் நுழைந்தனர்.

வரிசை வரிசையாய் போடப்பட்டிருந்த மர இருக்கைகளைக் கடந்து பலிபீடத்தின் முன்னே ஒரு பெஞ்சில் வைக்கப்பட்டிருந்த திறந்த சவப்பெட்டிக்குள் ஒரு தேவதையைப்போல் உதடுகளில் தவழ்ந்திருந்த புன்னகை மாறாத தோற்றத்தில் இருந்த அந்த இளம் பெண்ணின் சடலம் அவர்கள் இருவரையுமே சங்கடத்தில் ஆழ்த்தியது.

‘ஐயோ பாவம். இந்த சின்ன வயசுல இப்படியொரு மரணமா?’ என்று அங்கலாய்த்துப்போனார் பிலிப்.

சுந்தரலிங்கம் பெட்டிக்குள் கிடந்த சடலத்தைக் காண சகியாமல் தலையை குனிந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்யலானார்.

சிறிது நேரம் கழித்து தலைநிமிர்ந்து மர இருக்கைகளின் முதல் வரிசையில் தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்த மாணிக்க வேல் குடும்பத்தாரையே சில விநாடிகள் பார்த்தார்.

இவர்களிடம் போய் என்னவென்று பேசுவது? ஒரு சில வார்த்தைகளில் தேற்றிவிடக்கூடிய இழப்பா இது?

தன் அருகில் கண் மூடி தலைகவிழ்ந்து நின்றுக்கொண்டிருந்த பிலிப் சுந்தரத்தின் கரத்தைத் தொட்டு மாணிக்க வேலுவை நோக்கி சைகைக் காட்டினார். ‘அவர்கிட்ட என்ன சொல்றது பிலிப்? இந்த சூழ்நிலையில ஒன்னும் சொல்லாம போயிடறதுதான் நல்லதுன்னு தோனுது. What do you think?’

மவுனமாக ‘ஆமாம்’ என்று தலையையசைத்த பிலிப் நிமிர்ந்து மாணிக்கவேலையும் அவருடைய குடும்பத்தாரையும் பார்த்தார்.

தங்களை அழைத்துச் சென்ற ஜோ என்ற இளம் அதிகாரி மாணிக்க வேலின் தோளை லேசாகத் தொட்டு தங்களை நோக்கி சைகைக் காட்டுவதை இருவரும் கண்டனர்.

உடனே எழுந்து தங்களை நோக்கி வர முயற்சி செய்த மாணிக்க வேலுவை, ‘வேண்டாம்’ என்று சைகைக் காட்டிய பிலிப், சுந்தரலிங்கத்தை அழைத்துக்கொண்டு அவர் இருந்த இருக்கைக்குச் சென்று அவருடைய கரங்களைப் பற்றி ஆறுதலாக தட்டிக்கொடுத்தார். ‘கடவுளோட சித்தம்னு நினைச்சிக்குங்க மாணிக்கம். God will take care of your daughter. இந்த இழப்பையும் அவர்கிட்டவே ஒப்படைச்சிருங்க. இன்னைக்கி நம்ம புது சேர்மன் வர்றதுனால நானும் சிஜிஎம் சாரும் ஏர்போர்ட் போறோம். ஒரு வாரத்துக்கப்புறம் வீட்டுக்கு வரேன்.’ என்றவாறு அவருக்கருகில் அமர்ந்திருந்த அவருடைய மனைவியை நோக்கி கை கூப்பினார். ராணி அவர்கள் இருவரையும் பார்த்தும் பாராததுபோல நேர்குத்திய பார்வையுடன் அமர்ந்திருக்க பிலிப் சற்று தள்ளி தலை குனிந்தவாறு அமர்ந்திருந்த சந்தோஷை நெருங்கி அவனுடைய தோளில் கைவைத்தார். திடுக்கிட்டு நிமிர்ந்த சந்தோஷின் கண்களில் நிறைந்திருந்த கண்ணீர் அவரை என்னவோ செய்ய அவனுடைய தலைமுடியை கோதிவிட்டு விட்டு மெள்ள நகர்ந்தார். அவரைப் பின்பற்றி சுந்தரலிங்கமும் வெளியேறி தேவாலய வாசலை நோக்கி நகர்ந்தனர்.

********

‘காலைல எத்தன தரம் படிச்சிப் படிச்சி சொன்னே? சரியா மூனு மணிக்கெல்லாம் வந்துடறேன்னு சொன்னவ இன்னமும் வரலை பார்.’

சமையலறையில் பரபரப்பாய் இருந்த ஜானகி அங்கிருந்தே, ‘நீங்க சும்மா சும்மா அதையே சொல்லி புலம்பிண்டிருக்காதேள். அவள மொபைல்ல கூப்டுங்கோ. அவா வர்றதுக்கு இன்னமும் நேரம் இருக்கில்ல?’ என்றாள்.

பட்டாபி எரிச்சலுடன், ‘அவதான் செல்ஃபோனை ஆஃப் பண்ணி வச்சிருக்காளேடி. எங்க கூப்ட்டு தொலையறது?’ என்று முனகியவாறு ஹாலில் இருந்த தொலைப்பேசியை நோக்கி நகர்ந்தார்.

அவர் தொலைப்பேசியை நெருங்கவும் அது ஒலிக்கவும் சரியாக இருந்தது. எடுத்து ‘ஹலோ பட்டாபி’ என்றார்.

எதிர் முனையில் மைதிலியின் குரல் கேட்டதும், ‘ஏய் மைதிலி நீ பண்றது நன்னாருக்காடி? மணி இப்ப நாலாவப் போவுது. ஆத்துக்கு வந்து சேர்றத விட்டுட்டு எங்கருந்து ஃபோன் பண்றே?’ என்று இரைந்தார்.

சமையலறையிலிருந்தவாறு தன் கணவருடைய குரலைக் கேட்ட ஜானகி கைவேலையை அப்படியே போட்டுவிட்டு ஹாலுக்கு ஓடிச்சென்று தன் கணவருடயை கையிலிருந்த ஒலிவாங்கியை வெடுக்கென்று பிடுங்கினாள். ‘நீங்க செத்த போய் ஒக்காருங்கோ. டென்ஷனாயி பிரஷர் ஏறிட்டா அப்புறம் அவா வந்திருக்கற நேரத்திலும் எதையாச்சும் சொல்லிண்டே இருப்பேள். நா பேசிக்கறேன்.’ என்றவள் ஒலிவாங்கியில், ‘எங்கடி மைதிலி இருக்கே? என்னது பாந்த்ராவா? என்னடி விளையாடறியா? இந்த நேரத்துல அங்க என்ன பண்ணிண்டிருக்கே?’ என்றாள்.

‘பாந்த்ராவா? பாத்தியாடி ஒம்பொண்ணுக்கு இருக்கற நெஞ்சழுத்தத்த? அந்த ஓட்ட ஸ்கூட்டிய ஓட்டிக்கிட்டு அவ்வளவு தூரத்துல வந்து சேர்றதுக்குள்ள பொழுது போயிரும். அவா வந்துட்டு திரும்பித்தான் போகப் போறா?’ என்று இரைந்த தன் கணவரைப் பொருட்படுத்தாமல் மைதிலி கூறுவதை கேட்பதில் குறியாயிருந்தாள் ஜானகி.

‘அம்மா, அப்பாவ பதட்டப்படாம இருக்கச் சொல்லு. நா சீனிய அவனாத்துல விட்டுட்டு வரத்தான் போனேன். அவனுக்கு கால்ல ஒரு ஃபிராக்சர் ஆயிருச்சி. நம்ம ராஜகோபாலன் அங்கிள்கிட்டத்தான் கூட்டிண்டு போனேன். திருப்பி வீட்ல விட்டுட்டு வந்திர்றலாம்னுதான் போனேன். ஆனா அவா வீட்ல யாருமே இல்ல. வீடும் பூட்டிக்கிடக்கு. வேலக்கார மாமியையும் காணோம். அதான் அவ வீட்டு வாசல்லயே நிக்க வேண்டியதா போச்சி. அதான் அவனையும் கூட்டிண்டு நம்மாத்துக்கு வரலாமான்னு கேக்கத்தான் கூப்டேன்.’

ஜானகிக்கு மைதிலி சொல்ல சொல்ல கோபம் ஏறிக்கொண்டே சென்றாலும் அடக்கிக் கொண்டாள். மாப்பிள்ளையாத்துலருந்து வர்ற நேரத்துல அந்த பிள்ளாண்டானயும் கூட்டிண்டு வரட்டான்னு கேக்கறாளே இவள என்ன பண்றது? இத இவர் கேட்டா பின்னே கேக்கவே வேணாம். வீட்டையே ரெண்டாக்கிருவார்.

ஆகவே தன் கணவரைப் பார்த்து, ‘ஏன்னா, செத்த நேரம் நீங்க ஸ்டவ்வுலருக்கற பாலை கிண்டிண்டு இருங்கோளேன். தீயற வாடை அடிக்குதே.’ என்றாள். ‘ஆமா, நீ இந்த பால்கோவாவ கிண்டலைன்னு யார் அழுதா? பொண்ணையே காணோம். இதுல சொஜ்ஜியையும் பஜ்ஜியையும் யார் சீந்தப் போறா?’ என்றவாறு சலிப்புடன் எழுந்து சென்ற பட்டாபியையே பார்த்துக்கொண்டிருந்த ஜானகி, ‘ஏண்டி பொண்ணே நோக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? பேசாம அந்த பிள்ளாண்டானை அங்கேயே விட்டுட்டு வந்து சேர். அவனையும் கூட்டிண்டு வந்து நின்னு எங்க மானத்த வாங்காத. இப்ப வர்றவா ஆச்சாரமான குடும்பமாம். தரகர் மாமா சொன்னார். என்ன சொல்றே?’

‘இல்லம்மா. அப்படி பண்ண முடியாது. வேணும்னா ஒன்னு பண்றேன். சீனிய மறுபடியும் ராஜகோபாலன் அங்கிளோட க்ளினிக்ல விட்டுட்டு வரேன். மாப்பிள்ளையாத்துலருந்து வந்துட்டு போனதும் அவன கொண்டு வீட்ல விட்டுக்கலாம். சரியா?’

ஜானகி சில நொடிகள் யோசித்தாள். கடங்காரி. அவ பிடிச்சதுக்கு மூனே கால்னுட்டு அப்பன மாதிரியே நிக்கறா. அவ யோசனைக்கு ஒத்துக்கலைன்னா பேசாம வரேன்னுட்டு வராமயே நின்னுக்கிட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. அவா யோசனைப்படியே செஞ்சி தொலைக்கட்டும். ‘சரிடி.. அப்படியே செஞ்சிட்டு வந்து சேர். இன்னும் அரைமணியில அவா வர்றதுக்குள்ள வர்றமாதிரி வா.  வச்சிடறேன்.’

சமையலறையில் பாலைக் கிண்டி, கிண்டி அலுத்துப்போன பட்டாபி, ‘என்னடி, என்னவாம் ஒம் பொண்ணுக்கு? வர்றாளாமா? இல்ல அப்படியே அவனோடவே ஒடிப்போறேங்கறாளா?’ என்றார் எரிச்சலுடன்.

‘ஏன்னா, ஒங்க வாய்ல நல்ல வார்த்தையே வராதா? பெத்த பொண்ண பத்தி பேசற பேச்சா இது? வந்துண்டே இருக்காளாம். நீங்க போயி குளிச்சிட்டு ரெடியாவுங்கோ. இன்னைக்கின்னு பார்த்து அந்த பாயிம்மா வராம மட்டம் போட்டுட்டா பாருங்கோ. நாளைக்கு வருவாளோன்னா பேசிக்கறேன்.’ என்ற ஜானகி படபடப்புடன் சமையலறையை நோக்கி நடந்தாள்..

தொடரும்..

4 comments:

G.Ragavan said...

ம்ம்ம்ம்ம்ம்....முதல் பாகம் கொஞ்சம் சோகம். ரெண்டாவது பாகம் விறுவிறுப்பு.......

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

முதல் பாகம் கொஞ்சம் சோகம். ரெண்டாவது பாகம் விறுவிறுப்பு....... //

சோகத்த எழுதி முடிச்சதும் விறுவிறுப்பா ஏதாவது எழுதணும்னு நினைச்சேன். அதுக்கு மைதிலி வீட்டு விஷயம்தான் சரின்னு பட்டுது..

மாதவன் வந்து சேர்ந்ததும் விறுவிறுப்பா போகும்னு நினைக்கிறேன்.

siva gnanamji(#18100882083107547329) said...

28/04/06...6=10
indraya idugayai innum kanom
oru velai mythili vanitbag le mattiducho?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

நேத்தைக்கி 12.00 மணியிலருந்து ஒரு செமினார்ல இருக்க வேண்டியதா போச்சிங்க.

இன்னைக்கி போட்டுடறேன். சாரி:-(