1.5.06

சூரியன் 67

பிலிப் சுந்தரத்தை வழியனுப்ப தேவாலயத்தின் வளாக வாயில் வரை வந்த அவருடைய காரியதரிசி ராஜி தன் அருகில் வந்து நின்ற வாகனத்தை வைத்தே வருவது யாரென ஊகித்து அவரை தவிர்க்கும் நினைப்பில் அங்கிருந்து நகர்ந்துவிட நினைத்தவள் வாகனத்திலிருந்து இறங்கிய இருவரையும் பார்த்து ஒரு நொடி திகைத்துப்போனாள்.

வாகனத்தின் கதவைத் திறந்துக்கொண்டு இறங்கிய மஞ்சு திகைத்துபோய் நின்ற ராஜியை சிநேகத்துடன் பார்த்து லேசாய் புன்னகைத்தாள். பிறகு குனிந்து ரவியைப் பார்த்தாள். ‘நீங்க போய் கார பார்க் பண்ணிட்டு வாங்க நா இங்கயே ராஜி கூட நிக்கிறேன்.’

வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்த இடத்தை நோக்கிச் சென்ற ரவியின் வாகனத்தையே பார்த்தவாறு நின்றிருந்த மஞ்சு திரும்பி ராஜியை நெருங்கி அவளுடைய கரங்களை சிநேகத்துடன் பற்றினாள். ‘கமலியோட மரணம் மறுபடியும் எங்களுக்கு ஒரு புதுவாழ்வு குடுத்திருக்குன்னு நினைக்கிறேன் ராஜி. ரவி எந்த அளவுக்கு மாற தயாராயிட்டார்னு அவரோட தோற்றத்த பார்த்தாலே தெரிஞ்சுக்குவீங்க. அவர் கார பார்க் பண்ணிட்டு வரும்போது பாருங்க.’

ரவியை நேற்று காலையில்தானே அலுவலகத்தில் பார்த்தேன்? இருபத்திநாலு மணி நேரத்தில் அப்படியென்ன மாற்றம் ஏற்பட்டிருக்க முடியும் என்று யோசித்தாள் ராஜி.

அதைவிட அவள் எதிர்பார்த்திராத மாற்றம் மஞ்சுவும் ரவியும் ஒரே வாகனத்தில் வந்து இறங்கியதுதான். நேற்று காலை ரவியிடம் மஞ்சுவை வேறொரு இளைஞருடன் கடைத்தெருவில் வைத்துப் பார்த்ததாக தான் கூறியதை ரவி மறந்திருக்கமாட்டானே என்றும் நினைத்தாள்.

மஞ்சுவின் பார்வை சென்ற பாதையில் தன்னுடைய பார்வையைத் திருப்பிய ராஜி ரவியின் தோற்றத்தைக் கண்டு மிரண்டுதான் போனாள். நேற்று காலை மீசை தாடியுடன் சோக பிம்பமாய் தான் பார்த்த ரவியா இது?

அவள் நின்றிருந்த இடம் தேவாலயம் என்பது மட்டுமல்லாமல் ஒரு அகால மரணத்தின் இடம் என்பது தன்னுடைய நினைவுக்கு வர தன் மனதில் சட்டென்று கிளம்பிவந்த மகிழ்ச்சியை அடக்கிக்கொண்டாள் ராஜி.

அவர்கள் இருவரையும் நெருங்கிய ரவி ராஜியைப் பார்த்து, ‘எப்படீங்க ராஜி இது நடந்தது? ஜோ ஃபோன்ல கூப்டதும் ஒரு நிமிஷம் என்னால நம்பவே முடியலை. ரெண்டு மூனு மாசத்துக்கு முன்னால கூட அந்த பொண்ண ஒரு ஃபங்ஷன்ல பார்த்திருக்கேனே..’ என்றான்.

‘அதான் சார் எனக்கும் புரியலை. ப்ரெய்ன் ஹெமர்ரேஜ்ஜாம். ராத்திரியில நடந்ததுனால யாருமே பாக்காம போய்ட்டாங்க. உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருந்தா பிழைக்க வச்சிருக்கலாமாம். என்னன்னு சொல்றது.. சாகற வயசா இது.. என்ன மேடம் சொல்றீங்க?’ என்றவாறு மஞ்சுவைப் பார்த்தாள் ராஜி.

'ஆமாம் ராஜி.. ரவிக்கு ஃபோன் வந்தப்போது நானும் பக்கத்துலதான் இருந்தேன். என்னாலயும் நம்பவே முடியலை..’ என்ற மஞ்சு குரலை இறக்கி, ‘வந்தனா மேடம் வந்திருக்காங்களா? அவங்களும் அந்த கமலியும் ரொம்ப க்ளோஸ்னு கேள்விப்பட்டிருக்கேன்.’ என்றாள்.

ராஜி சோகத்துடன் ஆமாம் என்று தலையை அசைத்தாள். ‘அத ஏன் கேக்கறீங்க மேடம். வந்தனா மேடம் காலையில விஷயத்த கேள்விப்பட்டதும் அதிர்ச்சியோட ஓடி வந்திருக்காங்க. கமலியோட பிரேதத்த பார்த்ததும் ப்ர்ஷர் ஜாஸ்தியாயி அன்கான்ஷியசாயிட்டாங்களாம். இப்போ அப்போலோவில ICUல இருக்காங்க. அவங்க சிஸ்டர்ஸ் யாருமே மெட்றாஸ்ல இல்லாததுனால மேடத்தோட பி.ஏதான் துணைக்கு இருக்கறாங்க.’

ரவியும் மஞ்சுவும் திகைப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். ரவி தன்னுடைய இடைக்கால பணிநீக்கத்திற்கு வந்தனாவும் ஒரு காரணம் என்ற வருத்தம் இருந்தாலும் அவருக்கு உடல் நலம் பாதிப்படைந்ததைக் கேள்விப்பட்டதும் அவனையுமறியாமல் வேதனைப்பட்டான்.

‘சார் சர்ச்சுக்குள்ள சர்வீஸ் தொடங்கிருச்சி. இன்னும் அரைமணி நேரமாவது ஆகும்னு நினைக்கிறேன். இப்ப உள்ள போனாலும் பாடிய பார்க்கமுடியாது.. வாங்க அப்படியே வாசல்ல ஒதுங்கி நிற்போம்.’ என்றவாறு ராஜி அவர்களுக்கு முன்னால் நடக்க தேவாலய வளாகத்தில் நின்றிருந்த அவனுடைய ஒரு சில நண்பர்களின் கேலிப் பார்வையை கண்டுக்கொள்ளாமல் தலையைக் குனிந்தவாறு மஞ்சுவுடன் சேர்ந்து நடந்தான் ரவி.

கமலியின் மரணம் அவனுக்கு வருத்தத்தைக் கொடுத்திருந்தாலும் அதன் மூலமாக மஞ்சுவுடனான தன்னுடைய உறவில் மீண்டும் வசந்தம் வந்ததே என்று திருப்தியடைந்தான்.

***

மும்பை-சென்னை விமானம் தரையிறங்கி அதற்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் நின்றது.

சுமார் இரண்டு மணி நேரம் இருந்த இடத்தில் அசையாமல் இருந்ததில் களைப்படைந்துபோன தொழிலதிபர்கள், அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த உயர் அதிகாரிகள் விமானம் நிற்கும்வரை காத்திருக்க பொறுமையில்லாமல்...

‘விமானம் முழுவதும் நிற்கும் வரை தயவு செய்து உங்களுடைய செல் ஃபோன்களை ஆஃப் செய்த நிலையிலேயே வைத்திருக்கவும்.’ என்ற பணிப்பெண்ணின் அறிவுரையைக் கேட்டு முகம் சுளித்ததைப் பார்த்து கேலியுடன் புன்னகைத்தாள் வத்ஸலா.

திரும்பி அதே முகபாவத்துடன் கையிலிருந்த செல் ஃபோனை பார்த்தவாறு அமர்ந்திருந்த தன்னுடைய தாயையும் பார்த்தாள். ‘என்னம்மா நீ யாருக்கு இவ்வளவு அவசரமா ஃபோன் பண்ணப் போறே?’

தன்னுடைய செல் ஃபோனில் மிஸ்ட் கால் எதையும் காணாமல் எரிச்சலுடன் இருந்த சரோஜா, ‘வேற யாருக்கு? எல்லாம் உன் அருமைத் தம்பிக்குத்தான். என்ன ஆச்சி ஏதாச்சின்னு கூப்டானா பார்.’ என்றாள்.

வத்ஸலா ஒரு நீண்ட பெருமூச்சுடன் விமானத்தைவிட்டு வெளியேறுவதற்கு அமைதியிழந்து நின்றவர்களைப் பார்த்தவாறு, ‘Leave him alone for some days அம்மா. கொஞ்ச நாளைக்கு அவன் தனியா, தனக்கு பிடிச்சதை செய்யட்டுமே..’ என்றாள்.

சரோஜா வியப்புடன் தன் மகளைப் பார்த்தாள். ‘என்னடி சொல்றே, கொஞ்ச நாளைக்கா? அவன் நாளைக்கு புறப்பட்டு வரேன்னுதானே சொன்னான்?’

அவர்களுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து பொறுமையிழந்து நின்றுக்கொண்டிருந்த சக பயணிகளைப் பார்த்துக்கொண்டிருந்த மாதவன் லேசானதொரு புன்னகையுடன் திரும்பி தன் மனைவியையும் மகளையும் பார்த்தார். ‘வத்ஸலா சொல்றது சரிதான். Let him enjoy his freedome for some more days. சரோ.. ப்ளீஸ் Don’t call him for two three days. அவனுக்கா தேவைப்படும்போது கூப்பிடுவான்.’

சரோஜா சலிப்புடன் செல் ஃபோனை அணைத்து தன் கைப்பைக்குள் வைத்துவிட்டு எழுந்து நின்றாள். ‘என்ன உக்காந்துக்கிட்டே இருக்கீங்க? ஏய் வத்ஸ்.. ஓவர் ஹெட் கம்பார்ட்மெண்ட்ல என்னோட வானிட்டி கிட் இருக்கு.. எடுத்துக்குடு.. வெளிய போறதுக்குள்ள கொஞ்சம் டச்சப் பண்ணிக்கறேன்..’

வத்ஸலா புன்னகையுடன் தன் தந்தையைப் பார்த்து புருவத்தை உயர்த்தினாள். மாதவனும் புன்னகையுடன் எழுந்து நின்று தலைக்கு மேலிருந்த அலமாரியைத் திறந்து தன்னுடைய கைப் பெட்டியையும் சரோஜா மற்றும் வத்ஸலாவின் பைகளையும் இறக்க ஆளுக்கொரு பெட்டிகளைப் பிடித்தவாறு விமானத்திலிருந்து இறங்கினர்.

‘ஏர் போர்ட்டுக்கு யார் வருவான்னு சொன்னீங்க?’ என்றாள் சரோஜா.

மாதவன் தோளைக் குலுக்கியவாறு உதட்டைப் பிதுக்கினார். ‘என்னோட பி.ஏ. வருவார்ங்கறது தெரியும். அப்புறம் அந்த சுந்தரலிங்கம் ஃபோன் பண்ணி என்னோட ஃப்ளைட்ட பத்தி கேட்டதால அவர் வருவார்னு நினைக்கிறேன்.. செல் ஃபோனை ஆஃப் செஞ்சி வச்சிருந்ததால வேற யாராச்சும் வராங்களான்னு தெரியலை.. இரு, செல் ஃபோன ஆன் பண்றேன்.’

அவர் செல் ஃபோனை ஆன் செய்வதற்கெனவே காத்திருந்ததுபோல் சிணுங்க, ‘ஹலோ’ என்றார். நாளை முதல் அவருக்கு காரியதரிசியாக இருக்கப் போகிற சுபோத் மிஷ்ரா.. ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சார்ந்தவர் என்று சொன்னதாக ஞாபகம். அவர் சொல்லாவிட்டாலும் அவருடைய பிரத்தியேக ஆங்கில உச்சரிப்பே அவரை இனங்காட்டுகிறதே என்று நினைத்தார்.

‘சொல்லுங்க மிஸ்டர் சுபோத். இன்னும் ஒரு அஞ்சி நிமிஷத்துல உங்கள மீட் பண்றேன்.’ என்றார் ங்கிலத்தில். ‘உங்கள தவிர வேற யாராச்சும் வந்திருக்காங்களா?’

சில நொடிகளின் தயக்கத்திற்குப் பிறகு, ‘யெஸ் சார். சி.ஜி.எம்ஸ் மிஸ்டர் சுந்தரலிங்கமும், மிஸ்டர் ஃபிலிப் சுந்தரமும் வந்திருக்காங்க.. அப்புறம்.. எம்.டி மிஸ்டர் சேதுமாதவனும் அவரோட மிசஸ்சும் வந்திருக்காங்க.’ என்று எதிர்முனையிலிருந்து வந்த குரலைக் கேட்டதும் திரும்பி தன்னுடன் வந்துக்கொண்டிருந்த சரோஜாவைப் பார்த்தார்..

சேதுவும்.. மிசஸ் சேதுவும்.. சரோஜா... how will she react when she meets both of them.. after these long years...?

‘ஓக்கே மிஸ்டர் சுபோத்.. we will be there in a couple of minutes.’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு திரும்பி, ‘சரோ’ என்றார் தயக்கத்துடன்.

அவருடைய குரலில் இருந்த தயக்கத்தை உணர்ந்த சரோஜா, ‘என்னங்க.. என்ன விஷயம்?’ என்றாள்.

மாதவன் தயக்கத்துடன் தன் மனைவியையும் மகளையும் பார்த்தார். ‘அந்த சேதுவும் அவரோட வொய்ஃபும் வந்திருக்காங்களாம்..’

சரோஜா திகைப்புடன் அவரைப் பார்த்தாள். ‘யாரு அவங்களா..?’

மாதவன் ஆமாம் என்று தலையை அசைக்க.. வத்ஸ்லா, ‘யார் வந்தா என்ன மம்மி? உங்களுக்கு பிடிக்கலைன்னா சிம்பிளா ஹலோன்னு சொல்லிட்டு போயிர வேண்டியதுதானே..’ என்றாள் தன் தாயைப் பார்த்து..

சரோஜா இல்லை என்று தலையை அசைத்தாள், ‘நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாதுங்க. ஊருக்கு வந்த முதல் நாளே அவங்க ரெண்டு பேர் முகத்துலயும் முளிச்சி என் மூட ஸ்பாய்ல் பண்ணிக்க நான் விரும்பலேங்க.. இப்படியே திரும்பி போயி அடுத்த ஃப்ளைட்ட புடிச்சி வந்தாலும் வருவேனே தவிர..’

வத்ஸலா திகைப்புடன் தன்னுடைய தந்தையைப் பார்க்க மாதவன் என்ன செய்வதென புரியாமல் திகைத்து நின்றார்..

தொடரும்...

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

//ippdiye adutha flight......//
sri yum mythili yum een ippadi iukkanga nu nalla puriyudhu

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

sri yum mythili yum een ippadi iukkanga nu nalla puriyudhu//

என்னங்க ஜி.. சரோஜா சொன்னதுல தப்பு இருக்கறதா எனக்கு தோனலே..