7.7.06

சூரியன் 104

இத்தன வருசம் கழிச்சி ஏன் திடீர்னு அவரப் பத்திய இந்த நினைவு எனக்கு வருது..?

ஏன்னு தெரியலையே..

கண்கள் கலங்கி நிறைய, வழிந்தோடிய கண்ணீரை பொருட்படுத்தாமல் படுத்துக் கிடந்தாள் வந்தனா..

தன்னையுமறியாமல் தன்னுடைய மனதில் ஏதோ ஒரு மூலையில் மோகனைப் பற்றிய நினைவுகள் ஒளிஞ்சிக்கிட்டிருக்கோ.. அதுதான் இப்போ உடலும் மனமும் சோர்ந்துபோய் இருக்கறப்போ எட்டிப் பாக்குதோ?

இந்த வயசுல இது ஒனக்கு தேவையா என்றது மனது.. ‘ஏன் அதுல என்ன தப்பு?’ என்றது வேறொரு குரல், உள்ளிருந்து..

கமலியின் மறைவுதான் தன்னை இப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது என்று நினைத்தாள் வந்தனா..

கமலியுடன் அவளுக்கு ஏற்பட்டிருந்த பிணைப்பு அவளுடைய வாழ்க்கையிலிருந்த வெறுமையை ஒரளவுக்கு போக்கியதென்பதுடன் அவளுடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தையும் கொடுத்திருந்தது..

இது இப்போது இல்லையென்றாகிவிட்டது.. இனி என்ன? வருடம் ஒருமுறை வந்துபோகும் தன்னுடைய சகோதரிகள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளுக்காக காத்திருப்பதுதான் என்னுடைய வாழ்க்கையின் எதிர்பார்ப்பாக இருக்கப் போகிறதா?

But how long? பிள்ளைகள் பெரியவர்களானப் பிறகு இந்த பெரியம்மாவின் நினைவு வருமா?

நான் என்ன செய்ய போகிறேன்.. இன்னும் ரெண்டோ மூனோ வருசம்.. பணியிலிருந்து ஓய்வு.. அதற்குப்பிறகு?

நாளொன்றுக்கு மூன்று, நான்கு மணி நேர தனிமையே கொல்கிறதே.. நாள் முழுவதும் தனியாக அடைந்துகிடக்கும் வாழ்க்கை தனக்கு ஒத்துவருமா?

ஏன் மோகனை தேடி பிடிக்கக்கூடாது? Can’t we  start a healthy no strings attached relationship? I mean an intellectual companionship..

ஏய்.. ஒன் மனசுலருக்கற தப்பான ஒரு எண்ணத்துக்கு சாயம் பூசி நியாயப்படுத்த பாக்காதே.. மோகனுக்கு இந்நேரம் தோளுக்கு மேல வளர்ந்து நிக்கற பிள்ளைங்க இருப்பாங்க.. What will they think about your so called intellectual companionship with their Dad?

சே.. என்ன இது? எம்புத்தி ஏன் இப்படியெல்லாம் போவுது? I think this environment is the cause for this kind of thoughts.. I should leave.. I am ok now.. I should get out and start my work..

வந்தனா மெள்ள எழுந்து அமர முயன்று முடியாமல் மீண்டும் படுக்கையில் விழுந்தாள்..

My God what’s happening? Why am I so tired? என்ன ஆச்சிப்பா எனக்கு.. மனசுலருக்கற வலி போறாதுன்னு என் ஒடம்பையும் படுத்தறயேப்பா?

வந்தனாவின் முயற்சியும் அவளுடைய இயலாமையும் அடுத்த படுக்கயைருகில் நின்றுக்கொண்டிருந்த நர்சின் கவனத்தை ஈர்க்க பதறிக்கொண்டு ஓடிவந்தாள்..

‘மேடம் என்ன செய்றீங்க? தயவு செஞ்சி நீங்களா எழுந்துக்க முயற்சி பண்ணாதீங்க.. ஒங்க ப்ரஷர் இன்னும் நார்மலாகலை.. காலையில கூட அப்நார்மலாத்தான் இருந்துது.. I think you are disturbed.. ராத்திரியெல்லாம் என்னத்தையோ யோசிச்சிக்கிட்டு இருந்துருக்கீங்க.. Your blood pressure was not this high last night.. You should relax..’

வந்தனாவின் கண்கள் அவளையுமறியாமல் நிறைய கண்ணீரினூடே தேவதையாய் தெரிந்த நர்சைப் பார்த்து ‘எனக்கு பல் தேய்ச்சி எதையாவது சூடா குடிக்கணும்போலருக்கு சிஸ்டர்.’ என்றாள். ‘I feel extremely tired..’

நர்ஸ் புன்னகையுடன் குனிந்து அவளுடைய முதுகில் கைகொடுத்து அணைத்து அவளை படுக்கையில் அமர்த்தினாள். தலைமாட்டிலிருந்த பையிலிருந்த டூத் பிரஷ் மற்றும் பசையை எடுத்து அவளுடைய கையில் கொடுத்துவிட்டு, ‘நான் போய் ஒரு சின்ன பக்கெட்ல வார்ம் வாட்டர் கொண்டுவரேன்..’ என்றவாறு அறையின் கோடியிலிருந்த குளியலறையை நோக்கி செல்ல.. வந்தனா நடுங்கும் கைகளுடன் பற்பசையை பிரஷ்ஷில் வைத்து தேய்க்க துவங்கினாள்..

இரண்டு, மூன்று முறைக்கு மேல் தேய்க்க முடியாமல் சோர்ந்து போய் நர்சுக்காக காத்திருந்தாள்..

‘Yes.. please gargle your mouth..’ என்றவாறு திரும்பி வந்த நர்சின் உதவியுடன் வாயைக் கழுவி முடித்த வந்தனா, ‘தாங்ஸ் சிஸ்டர்.. ஒரு காப்பியோ, டீயோ.. எதையாச்சும் தந்தீங்கன்னா.. I will be grateful.’ என்றாள்..

நர்ஸ் புன்னகையுடன், ‘நோ காஃபி, நோ டீ.. கிச்சன்லருந்து சூடா ஒரு க்ளாஸ் ஓட்ஸ் கஞ்சி வரும்.. குடிச்சிட்டு அப்படியே சாஞ்சி ஒக்காந்திருங்க.. சீஃப் டாக்டர் வந்து பார்த்ததும் என்ன செய்யணும்னு டிசைட் பண்லாம்.. ஓக்கே..’ என்றவாறு அவளுடைய பிரஷ்சையும் பக்கெட்டையும் எடுத்துக்கொண்டு நகர வந்தனா தலைமாட்டிலிருந்த தலையணையில் சாய்ந்து கண்களை மூடினாள்..

மனது கமலி, கமலி என்று அடித்துக்கொண்டது அவளையுமறியாமல்..

***

ராசம்மாளின் குரலில் இருந்த ஏதோ ஒன்று தன்னுடைய மனதை பிசைவதை உணர்ந்த செல்வம் சன்னல் வழியாக போர்ட்டிக்கோவை பார்த்துக்கொண்டிருந்த அவளையே பார்த்தான்..

வேதனையுடன்..

‘இது ஒனக்கு தேவையா ராசி.. நீ நம்ம கம்பெனியில செய்யவேண்டியது எவ்வளவோ இருக்கு. அதுல நீ கவனத்த செலுத்தணும்னுதான் நா ஆசைப்படறேன்.. மாமாவுக்கும் அதுதான் விருப்பம். அத விட்டுட்டு..’

ராசம்மாள் சடாரென்று திரும்பி அவனைப் பார்த்த பார்வையிலிருந்த உக்கிரத்தைப் பார்த்து பதறிப்போனான் செல்வம்.

‘அடிபட்ட வேதனை எனக்குத்தான் தெரியும் செல்வம்.. ஒனக்கில்ல..’ அடுத்த சிலநொடிகளில் சமாதானமான ராசம்மாள் ‘எங்கூட வா’ என்றவாறு ஹாலைக் கடந்து கீழ்தளத்தின் பின்னாலிருந்த தன்னுடைய அறையை நோக்கி நடந்தாள்.

ஒரு பெருமூச்சுடன் அவள் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்ற செல்வம் அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

கீழ்தளத்திலிருந்து அந்த சிறிய அறை ராசேந்திரன் தன்னுடைய அலுவலக அறையாக உபயோகித்துக்கொண்டிருந்தான். ராசம்மாளை அந்த அறைக்குள் விடவே மாட்டான். ‘ஏய் எதுக்கு இங்க வரே.. ஒனக்கு என்னத்த புரியப்போவுது.. போய் பேசாம கிச்சன்ல ஆகவேண்டியத பார்.. வந்துட்டா, என்னவோ எசமானியம்மா மாதிரி..’ என்று எரிந்து விழுவான்..

அறையில் போட்டது எல்லாம் போட்ட படியே இருந்தன.. அறையை சுற்றிலும் இருந்த சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த மர அலமாரி முழுவதும் பல்வேறு நிற கோப்புகள் தாறுமாறாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தான் செல்வம். என்ன கோப்புகள் இவை? எதுக்கு இந்த ரூமுக்குள்ள வச்சிருக்கு?

‘என்ன ராசி.. என்ன ஃபைல்ஸ் இதெல்லாம். இங்க எதுக்கு வச்சிருக்கே?’

ராசம்மாள் பதிலளிக்காமல் சற்று முன் தான் எடுத்து படித்துவிட்டு மேசையின் மீது வைத்திருந்த ஒரு கோப்பை எடுத்து உரக்க படித்தாள்..

அவள் படித்து முடிக்கும்வரை காத்திருந்த செல்வம் அதிர்ச்சியுடன், ‘இது ராசேந்திரனோட ரூமா.. இங்கருந்துதான் இந்த சதி வேலையெல்லாம் செஞ்சிருக்கானா? இப்படியெல்லாம் சிந்திக்க அவனுக்கும் ரத்தினவேல் மாமாவுக்கும் எப்படித்தான் வருதோ.. சரி.. இதெப்படி இங்க..? ராசேந்திரன் வீட்லருந்து வெளியேறுனப்போ இத எல்லாம் எடுத்துக்கிட்டு போகணும்னு தோணியிருக்குமே..?’

ராசம்மாள் மெள்ள அவனை திரும்பி பார்த்தாள். ‘தோணாம இருக்குமா? அவர் ஒரு வாரம் முழுசும் வீட்டுக்கு வராம இருந்தப்போ நான் கண்டுபிடிச்ச புதையல் இது.. ஒவ்வொன்னா படிச்சி முடிச்சப்பத்தான் தெரிஞ்சது அப்பாவும் புள்ளையுமா போன ஒரு வருசமா செஞ்சிக்கிட்டிருந்த அக்கிரமம்.. அவர் போட்டிருந்த பூட்டை ஒடச்சி பாக்கத் தெரிஞ்ச எனக்கு வேற ஒரு பூட்ட போடத்தெரியாதா என்ன? அவர் திரும்பி வந்து பார்த்துட்டு தாம் தூம்னு குதிச்சார்.  வீட்ட விட்டு இப்பவே போடின்னார்.. நானும் விடலை.. இது எங்கப்பா எனக்காக வாங்குன வீடு.. போவேண்டியது நான் இல்லே.. நீங்கன்னு ஒரு போடு போட்டேன்.. மனுசன் ஆடிப்போய்ட்டார்.. ஒனக்கு அவ்வளவு திமிராடி.. உங்கூட இனி எனக்கு வாழ்க்கையில்லேன்னு போய்ட்டார்.. ரெண்டு நாள். ஒரு வாரம். வருவார், வருவார்னு அப்பாக்கிட்ட கூட சொல்லாம காத்திருந்தேன். வரவேயில்லை.. அப்புறந்தான் தெரிஞ்சது அந்த மலையாளத்தா சைட் ஆக்ட்ரஸ் கூட போய்ட்டார்னு.. நாம கொஞ்சம் ஓவரா பேசிட்டமோன்னு கூட தோணிச்சி.. கொஞ்சம் விட்டு புடிச்சிருக்கலாமோன்னு நினைச்சேன்.. சரி.. ஆனது ஆயிருச்சி கொஞ்ச நாளைக்கு மதுரையில போய் இருப்போம்னு நினைச்சி அப்பாவுக்கு  ஃபோன் பண்ணேன்.. நா சொன்னத கேட்டதும் அப்பா கொதிச்சி போய்ட்டார். மோகன் சாரோட இங்க வந்து இந்த ஃபைலையெல்லாம் ஒக்காந்து படிச்சார்.. அப்புறந்தான் நானும் அப்பாவும் மதுரைக்கு பொறப்பட்டு போனோம்.. போற வழியில நான் மட்டும் வீட்டு வாசல்கதவு பூட்ட¨யும் மாத்தாம போயிருந்தேன்னா இது எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு போயிருப்பார். ரெண்டு மாசமா காத்திருந்தேன்  செல்வம். நா அவசரப்பட்டு பேசினது தப்புத்தான். இனி ஒங்க பிசினஸ் விஷயத்துல தலையிடமாட்டேன்னு எத்தனதரம் ஃபோன் செஞ்சிருப்பேன்.. கடிதாசி போட்டுருப்பேன்.. ஒன்னுக்கும் அவர்கிட்டருந்து பதில் வரலை.. ரத்தினவேல் மாமாவுக்கும் அத்தைக்கும் போன் செஞ்சி பேசினேன். ஒன்னுத்துக்கும் மசியலை.. அப்புறமா அப்பா போனதடவை மெட்றாஸ் வந்தப்போ.. அதான் போன சனிக்கிழமை.. ராசேந்திரனும் மாமாவும் அவங்க பேர்லருந்த நம்ம கம்பெனி ஷேரை ஒரு சேட்டுக்கு வித்துட்டதா கேள்விப்பட்டு ரத்தினவேல் மாமா வீட்டுக்கு போயி பெரிய ரகளையே பண்ணிட்டு வந்திருக்கார். வர்ற வழியிலதான் அப்பா எல்லாத்தையும் எங்கிட்ட சொன்னார். அப்பத்தான் நினைச்சேன்.. ராசேந்திரனும் ரத்தினவேல் மாமாவும் சும்மா இருக்க மாட்டாங்க. நிச்சயம் பழிவாங்கணும்னு துடிச்சிக்கிட்டுருப்பாங்க. அவங்க நம்மள அடிக்க ஆரம்பிக்கறதுக்குள்ள நாம அவுகள அடிச்சா என்னன்னு? இப்ப சொல்லு நான் நினைக்கறது தப்பா?’

இவ்வளவு நடந்திருக்கிறதா என்று மலைத்துப்போனான் செல்வம். மோகன் சார் கூட தன்னிடம் சொல்லவில்லையே என்று நினைத்தான்.. ஒருவேளை இதை நான் கேள்விப்பட்டு ஆத்திரத்தில் ஏதாவது ஏடாகூடமாக செய்துவிடுவோன் என்று மாமா நினைத்திருப்பாரோ? இருக்கும்..

தன் முன்னே கோபத்துடன் நின்ற ராசம்மாளைப் பார்த்தான்..

நீ நினைக்கறதுல தப்பே இல்லை ராசி.. என்பதுபோல் தலையை அசைத்தான் மெதுவாக..

தொடரும்..



  

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

the best form of defence is attack!
carry on raajamma. all the best!

வந்தனாவின் சிந்தனை சரியே.ஆயினும் அவர் அறிந்த சமூக
மதிப்பீடுகள்(social values)அவரைத் தடுக்கின்றன.இதனால் எதிர் காலத்தில் மோசமான விலையைத்தரவேண்டிய நிர்ப்பந்தம்
கூட ஏற்படலாம்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

the best form of defence is attack!//

கரெக்ட்!

இதனால் எதிர் காலத்தில் மோசமான விலையைத்தரவேண்டிய நிர்ப்பந்தம்
கூட ஏற்படலாம் //

ஏற்படலாம்!