ஆடிட் கமிட்டி முடிந்ததும் அறையை விட்டு வெளியேறுவதில் குறியாயிருந்தார் ஃபிலிப் சுந்தரம்.
நாடாரும் அவரைத் தொடர்ந்து சற்று நேரத்தில் சோமசுந்தரமும் அவரவர் சொந்த அலுவல்கள் காரணமாக கூட்டத்திலிருந்து வெளியேறியதும் சேதுமாதவனின் குடைச்சல் தாங்கமுடியாததாகிப் போனது.
ரிசர்வ் வங்கியின் இயக்குனரான சாம்பசிவத்தின் நடத்தையிலும் மாற்றம் தெரிய ஆரம்பித்தது.
வங்கியின் கணினி இலாக்காவின் (EDP) வருடாந்தர ஆய்வறிக்கையில் தணிக்கையாளர்கள் குறிப்பிட்டிருந்த குறைபாடுகளுக்கு ஃபிலிப் சுந்தரத்தையே பொறுப்பாக்கி அவரை துளைத்தெடுத்துவிட்டனர் இருவரும்.
வங்கியின் இயக்குனர் குழு அங்கத்தினர்களில் ஒருவரான ராஜகோபாலன் நாயர் இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு வாய்மூடி அமர்ந்திருந்தது சேதுமாதவனுக்கு தெம்பையளிக்க எல்லை மீறிச் செல்ல துவங்கினார்.
‘மிஸ்டர் ஃபிலிப் நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் கமிட்டி ஒத்துக்கப்போறதில்ல. இந்த டிப்பார்ட்மெண்டே ஒங்க கண்ட்ரோல்லதான் இருக்கு. நான் பலதடவ இந்த டிப்பார்ட்மெண்ட்ட ஒங்கக்கிட்டருந்து எடுத்து உங்கள மாதிரியே ஒரு சி.ஜி.எம் தலைமையிலயோ அல்லது தனியா ஒரு ஜி.எம் தலைமையிலயோ ஃபார்ம் பண்லாம்னு சொல்லியும் நீங்க அதுக்கு ஒத்துக்கல. அப்படி நாம செஞ்சிருந்தா இந்த டிப்பார்ட்மெண்டோட ஃபங்க்ஷன்ஸ சரிவர கவனிச்சிக்கறதுக்கு ஒரு ஆள் இருந்திருப்பார். இந்த மாதிரி சீரியஸ் அட்வேர்ஸ் கமெண்ட்சும் வந்திருக்காது. இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?’
ஃபிலிப் சுந்தரத்திற்கோ அடக்க முடியாத கோபம் பொங்கி வந்தது. உண்மையில் இந்த EDP இலாக்காவை கணினி இலாக்கா என்று பெயர் மாற்றம் செய்து அதை தனியான இலாக்காவாக அமைக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்ததுடன் கடந்த சில மாதங்களில் இலாக்கா தலைவர் பொறுப்பில் அமர்த்த டி.ஜி.எம் பதவியிலிருந்த பல அதிகாரிகளுடைய பெயரை சோமசுந்தரத்திற்கு பரிந்துரை செய்து கடிதங்கள் எழுதியிருந்தார்.
ஒவ்வொரு அதிகாரியையும் சில்லறை காரணங்களைக் காரணம் காட்டி நிராகரிப்பதிலேயே குறியாயிருந்த சோமசுந்தரம் இப்போது கமிட்டி உறுப்பினர்கள் முன்னர் தன்னை குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம் என்று விளங்காமல் இவ்விஷயத்தைக் குறித்து முழுவதும் அறிந்தும் தன்னுடைய உதவிக்கு வராத சுந்தரலிங்கத்தை சற்றே எரிச்சலுடன் பார்த்தார் ஃபிலிப்.
சுந்தரலிங்கத்தின் பிரச்சினையே இதுதான். தன் உள்மனதில் சரியென்று தோன்றும் விஷயங்களைக் கூட வெளியே சொல்ல தயங்குவார்.. ஒவ்வொன்றையும் மனதுக்குள் போட்டு பல முறை உருட்டி, பிரட்டி அவருடைய கருத்தை வெளியே சொல்வதற்குள் பிரச்சினையே தன்னுடைய முடிவைத் தேடிக்கொள்ளும்.
‘என்ன மிஸ்டர் ஃபிலிப், எம்.டியோட குற்றச்சாட்டுகளுக்கு ஒங்க பதில் என்ன?’ என்றார் ராஜகோபாலன் நாயர் பந்தாவாக ஏதோ இதுவரை நடந்த சம்பாஷனையை நன்கு புரிந்துக்கொண்டவர்போல்.
இந்த ராஜகோபாலன் நாயர் வேறு இடையில்.. என்று நினைத்தார் ஃபிலிப் சுந்தரம்.. ஒரு மூட்டைப்பூச்சியைப் போல் அவ்வப்போது நேரம் காலம் தெரியாமல் கடித்து குதறுவார். காலால் மிதித்து அழிக்கவும் மனம் வராது தூசு என்று நினைத்து தட்டிவுடவும் முடியாது. எந்த நேரத்தில் என்ன பேசுவார், யார் பக்கம் சாய்வார் என்றே கணிக்க முடியாத ரெண்டுங்கெட்டான் மனிதர். அவருக்கு வங்கியில் பெரிதாக ஒன்றும் முதலீடு இல்லையென்றாலும் சோமசுந்தரத்தின் அடியாட்களைப் போலத்தான். அவருடைய தயவால் இயக்குனர் குழுவில் இருப்பவர்.
ஃபிலிப் சுந்தரம் அவரை ஏறெடுத்தும் பாராமல் அவருடைய கேள்விக்கு பதிலளித்தார். ‘சார்.. இத பலமுறை எக்ஸ்க்யூட்டிவ் மீட்டிங்க்ஸ்ல டிஸ்கஸ் செஞ்சிருக்கோம். அது எம்.டிக்கும் தெரியும். அடுத்த டிட் கமிட்டி மீட்டிங்ல இதப்பத்தி தனியா பிரத்தியேகமா ஒரு ப்ரொப்போசல் வைக்கிறேன்னு உறுதியா சொல்றேன்.’
அதை எதிர்த்து சோமசுந்தரம் ஏதோ சொல்ல வாயெடுக்கும் முன் ரிசர்வ் வங்கி இயக்குனர் அமர்ந்திருந்த இருக்கையின் அருகிலிருந்த தொலைப்பேசி சிணுங்க அவர் எடுத்து, ‘யெஸ் சாம்பசிவம்’ என்றார். பிறகு இணைப்பைத் துண்டித்துவிட்டு, ‘ஒக்கே.. மானேஜ்மெண்ட் கமிட்டி மெம்பர்ஸ் வந்துட்டாங்களாம். செக்கரட்டரி மீட்டிங் முடிஞ்சிருச்சான்னு கேக்கறார். அதனால, இப்ப மிஸ்டர் ஃபிலிப் சொன்ன க்ளாரிஃபிக்கேஷனோட இந்த மீட்டிங்க முடிச்சிக்கலாம். One more thing Mr.Philip. Please prepare a detailed report on the follow up actions taken by the department on this ISO Audit report and place it before the next ACB. Is that clear?’
புரிகிறது என்று ஃபிலிப் தலையை அசைக்க அன்றைய ஆடிட் கமிட்டி கூட்டம் முடிவுக்கு வந்தது.
******
கூட்டம் முடிந்ததுமே அறையை விட்டு வெளியேறிய ஃபிலிப் சுந்தரம் தன்னுடைய சக அதிகாரிகளுக்காக காத்திராமல் அடுத்து துவங்கவிருந்த மேனேஜ்மெண்ட் கமிட்டி கூட்டத்திற்கான கோப்புகளை எடுக்க தன்னுடைய அறையை நோக்கி வேகமாக நடந்தார். சாதாரணமாக எச்.ஆர் இலாக்காவின் தலைவர் மிஸ் வந்தனாதான் இதற்கு பொறுப்பு. அன்று அவர் விடுப்பிலிருந்ததால் அவருடைய நேரடி அதிகாரியான ஃபிலிப் சுந்தரத்தின் தலையில் இப்பொறுப்பு விழுந்திருந்தது.
அவர் தன்னுடைய அறை வாயிலை அடையவும் வாயிலிலிருந்த வரவேற்பறையில் காத்திருந்த பாபு சுரேஷ் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினார்.
அவரைக் கண்டதும்தான் சற்று முன் சேர்மன் அறையில் நிகழ்ந்த சம்பாஷனை நினைவுக்கு வர, ‘வாங்க பாபு.. உள்ள வாங்க..’ என்றவாறு அவரை அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்து தனுடைய இருக்கையில் அமர்ந்தார்.
அப்போதும் இருக்கையில் அமராமல் தயங்கி நின்றவரைப் பார்த்து புன்னகைத்தார். ‘என்ன பாபு.. You are going to be the part of the HO Team.. இங்கல்லாம் ஜி.எம் ராங்க்ல இருக்கறவங்க ஒக்கார சொல்லணும்னு எதிர்பார்க்க மாட்டாங்க. வந்தோமோ, ஒக்காந்தோமோ, பேச வந்தத பேசிட்டு ஓடுனாமோன்னு இருப்பாங்க.. நீங்கதான் ஏற்கனவே HOவில இருந்திருக்கீங்க இல்லே.. அப்புறமென்ன.. ஒக்காருங்க.. என்ன விஷயம்?’
பாபு சுரேஷ் உடனே அமர்ந்து, ‘சார்.. இன்னைக்கி காலைல சேர்மன் சேம்பர்ல நடந்த விஷயமாத்தான்..’ என்று தயங்க ஃபிலிப் சுந்தரம் அவரை வியப்புடன் பார்த்தார்.
‘தயங்காம சொல்லுங்க. அதுல பேசறதுக்கு என்ன இருக்கு? இன்னும் கொஞ்ச நேரத்துல எம்.சி தொடங்கப் போவுது. நான் என்னோட ஃபைல்ஸ எடுத்துக்கிட்டு போலாம்னுதான் வந்தேன். இன்னைய மீட்டிங்ல டாக்டர் சொன்ன ப்ரொப்போசல ஓரலா சொல்றேன்.. நாடார் மட்டுந்தான் ஏதாச்சும் சொன்னா சொல்வாருனு நினைக்கேன். மத்தபடி ப்ராப்ளம் ஏதும் இருக்காது. மீட்டிங் முடிஞ்சதும் ஒங்க போஸ்டிங் ஆர்டர அடிச்சிற வேண்டியதுதான். என்ன, இது மாதவன் சாருக்கு இது ஃபர்ஸ்ட் எம்.சிங்கறதால மீட்டிங் முடிய கொஞ்சம் லேட்டாவும். அதுவரைக்கும் நீங்க காத்துக்கிட்டு இருக்கணும்னு இல்லே... ஒங்க பிராஞ்சுக்கு போலாம். ஏதாச்சும் தேவைன்னா நான் ஃபோன் பண்றேன்.. மீட்டிங்குக்கு நேரமாச்சு.. வேற ஏதும் இல்லைன்னா அப்புறம் பாக்கலாம்.. இங்கதான இனி இருக்க போறீங்க?’ என்றவாறு மேசையிலிருந்த கோப்புகளை கையில் எடுத்துக்கொண்டு அவர் எழுந்து நிற்க வேறு வழியில்லாமல் பாபு சுரேஷ¤ம் எழுந்து நின்றார்.
இருப்பினும் அவருடைய நடத்தையில் இருந்த தயக்கத்தையுணர்ந்த ஃபிலிப் சுந்தரம், ‘என்ன மிஸ்டர் பாபு ஏதோ சொல்ல வந்து தயங்கறாப்பல இருக்கு? Whatever it is.. come out with it..’ என்றவாறை வாயிலை நோக்கி நடந்தார்.
அவரைத் தொடர்ந்த பாபு, ‘சார் டாக்டர் சொன்ன போஸ்ட்ல வர்றதுக்குத்தான் கொஞ்சம் தயக்கமாருக்கு.. மத்தபடி இங்க வர்றதுக்கு எனக்கு விருப்பம்தான்..’ என ஃபிலிப் சுந்தரம் அப்படியே நின்று அவரை வியப்புடன் திரும்பிப் பார்த்தார்.
‘What are you trying to say Mr.Babu? Does it mean Dr.Somasundaram has recommended your name without you asking for it? Is that it?’
அவருடைய நேரடி கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறிப்போனார் பாபு சுரேஷ்.. ‘அப்படி இல்ல சார்..’ என்று தயங்க.. ஃபிலிப் சுந்தரத்தின் செல் ஃபோன் அலறியது. கம்பெனி செக்கரட்டரி!
எடுத்து மறுமுனையிலிருந்து அவர் பேச முயலுவதற்கு முன், ‘Yes, I am on the way..’ என்று இணைப்பைத் துண்டித்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டார்.
‘I am sorry Mr.Babu.. I have to go.. I will think about what you said.. Bye.. நீங்க எதுக்கும் மீட்டிங் முடியறவரைக்கும் போர்ட் ரூமுக்கு வெளிய வெய்ட் பண்ணுங்க..’
தன்னுடைய மறுமொழிக்கு காத்திராமல் பரபரப்புடன் லிஃப்ட்டை நோக்கி ஒட்டமும் நடையுமாக சென்றவரையே பார்த்தவாறு மெள்ள நடந்தார் பாபு சுரேஷ்..
********
‘என்னய்யா.. இப்பல்லாம் ஒங்கள மாதிரி அதிகாரிகளுக்காக கமிட்டி மெம்பர்ஸ் காத்துக்கிட்டிருக்க வேண்டியிருக்கு.’ ஃபிலிப் சுந்தரம் மேல் மூச்சு வாங்க அறைக்குள் நுழையவும் நாடாருடைய கேலிப் பேச்சு காதில் விழ திடுக்கிட்டு தன்னுடைய புது சேர்மனைப் பார்த்தார்.
‘பாத்தீங்களா சார்.. இன்றைக்கு எம்.சி யோட கன்வீனரே இவர்தான்.. ஒங்களுக்கு இது ஃபர்ஸ்ட் மீட்டிங்னு தெரிஞ்சும் லேட்டா வர்றத பாருங்க..’ என்ற நாடாரை புன்னகையுடன் பார்த்தார் புது சேர்மன் மாதவன்.
‘போட்டும் சார்.. அவர்தான ஏ.சி.பிக்கும் கன்வீனர் போலருக்கு? மிஸ் வந்தனா இல்லாம இவர் நடத்தற முதல் எம்.சி போலருக்கு. அதான்.. என்ன மிஸ்டர் ஃபிலிப் நான் சொல்றது சரிதானே..?’
ஃபிலிப் சுந்தரம் தனக்கு பரிந்துக்கொண்டு வந்த மாதவனை நன்றியுடன் பார்த்தவாறு தன் இருக்கையில் அமர்ந்து சேது மாதவனையும் சுந்தரலிங்கத்தையும் ஓரக்கண்ணால் பார்த்தார்.
சேதுமாதவன் முகம் கண்ணாடி போன்றது. ஆத்திரமானாலும், மகிழ்ச்சியானாலும் அப்படியே தெரிந்துவிடும். 'நான் ஏன் மேன் என் ஃபீலிங்ச மறைக்கணும்?' என்பதுபோன்ற நிலை அவருடையது. ஆனால் சுந்தரலிங்கம் அப்படியல்ல. தான் நினைப்பது சரிதானா தவறானதா என்ற முடிவுக்கு வரவே நேரம் போதாது.. அதுவும் இத்தகைய உயர்மட்ட கூட்டங்களுக்கு வரும் நேரத்தில் அவர் முகமூடி ஒன்றை அணிந்து வருவாரோ என்ற விதத்தில் இருக்கும் அவருடைய உணர்ச்சியற்ற முகம்..
‘என்ன சார்.. இன்றைய அஜெண்டா?’ என்ற கேள்வியுடன் மாதவன் அன்றைய கூட்டத்தை துவக்கி வைக்க காரசாரமான அஜெண்டாக்களுடன் வங்கியின் தலைவிதியை நிர்ணயிக்கும் அதிகாரமும் பணபலும் கொண்ட இயக்குனர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மேனேஜ்மெண்ட் கமிட்டி கூட்டம் துவங்கியது...
தொடரும்..
4 comments:
"யானை வாய்க் கரும்பு"-நினைவுக்கு
வருது
வாங்க ஜி!
யார், பிலிப்தானே? ஆமாம்.
அந்த மாதிரி வேதனைய நானும் சில கூட்டங்கள்ல அனுபவிச்சிருக்கேன்.
வாங்க ஜி!
யார், பிலிப்தானே? ஆமாம்.
அந்த மாதிரி வேதனைய நானும் சில கூட்டங்கள்ல அனுபவிச்சிருக்கேன்.
பிலிப் சுந்தரம் நிறயவே சூசையின்
மறு பிரதிதானே........!
Post a Comment