9.1.06

சூரியன் – 1 (தொடர் கதை)

இடம்: சென்னை ECR சாலை.

சுமார் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் சாலையில் வழுக்கிக் கொண்டு சென்ற இந்நோவா வாகனத்தின் அகண்ட பின்புற இருக்கையில் சரிந்து அமர்ந்திருந்த சிலுவை மாணிக்கம் நாடார் தன் அருகில் இருக்கையில் கிடந்த கைத் தொலைப்பேசியில்..

‘சொல்லுங்க சுந்தரம்’

எதிர்முனையில் இருந்த முதன்மை பொது மேலாளர் பிலிப் சுந்தரம் ஒரு விநாடி தன் முன்னேயிருந்த குறிப்பேட்டை பார்த்தார். புது சேர்மன் பதவியேற்க இன்னும் இரண்டு தினங்களே இருந்தன என்றது குறிப்பேடு.

‘திங்கள் கிழமை காலைலதான் ஊருக்கே வரார் சார்.’ என்றார் ஒலிவாங்கியில்.

‘என்னது திங்க கிழமையா? என்ன இது? அப்போ ரிசர்வ் பாங்குக்கு நாம பண்ண ரெப்பரசண்டேஷன் என்னாச்சி?’

சுந்தரம் எப்படி சொல்வதென்று தயங்கினார். நாடாரின் முன் கோபம் வங்கி உயர் அதிகாரிகளிடையே பிரசித்தமானது. கோபத்தில் எதிரிலிருப்பது யாராயிருந்தாலும் பார்க்க மாட்டார். கடித்து குதறிவிடுவார்.

சுந்தரம் ‘சார்..’ என்று தயங்கவே.. எதிர்முனையிலிருந்து டைம் பாம் வெடித்தது.

‘என்னங்க இது? நீங்கல்லாம் என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க? நல்லால்ல, சொல்லிட்டேன். நம்பளையெல்லாம் முட்டாப் பசங்கன்னு நினைக்கிதா ரிசர்வ் பேங்க்? ஏங்க, தெரியாமத்தான் கேக்கேன். பெருசா சி.ஜி.எம்முன்னு சொல்லிக்கிட்டு.. அங்க யாரையும் தெரியாதா உங்களுக்கு? எதுக்கு எடுத்த எடுப்பிலயே நாலு வருஷம்னு போட்டாங்களாம்? யாரையாச்சும் பிடிச்சு கேக்கலாம்லே.. என்ன எளவுதான் பண்றீங்களோ?’

கோபம் தணியும் மட்டும் திட்டித் தீர்க்கட்டும் என்று நினைத்து ஒலி வாங்கியை காதிலிருந்து ஓரடி தள்ளிப் பிடித்துக்கொண்டு காத்திருந்தார் சுந்தரம்.

‘என்னவே.. நான் சொல்றது காதுல கேக்குதா? எங்கய்யா போனீரு?’ ஒலிவாங்கியை கிழித்துக்கொண்டு ஒலித்த குரலைக் கேட்டவர், ‘என்னடா இது சும்மா கேட்டுக்கிட்டு இருக்கலாம்னு பார்த்தா இந்த மனுஷன் விடமாட்டார் போலருக்கே.’ என்று நொந்து போனார்.

‘என்ன சார்?’ என்றார் தயக்கத்துடன்.

‘ஹும்? சொரக்காய்க்கு உப்பில்ல.. ஏன்யா சுந்தரம்? அரை மணி நேரமா கத்திக்கிட்டிருக்கேன். எல்லாத்தையும் கேட்டுட்டு என்ன சார்னு கேட்டா என்ன அர்த்தம்? நாம ரெண்டு வருஷத்துக்குத் தானய்யா ரெக்கமெண்ட் செஞ்சோம்?’

‘ஆமா சார்.’

‘அப்புறம் என்ன எளவுக்குய்யா இவர நாலு வருஷத்துக்குன்னு ஆர்டர் வருது?’

‘சார், அதுக்கு ஏதாவது வேலிட் ரீசன் இருக்கும். இல்லாட்டி இப்படி பண்ண மாட்டாங்க சார்.’

‘அதான ஏன்னு கேட்டீங்களாங்கறேன்?’

சுந்தரம் சுவரிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தார். மணி இரவு 8.00ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. இன்று சனிக்கிழமை. நாளை அவருடைய தலைமையில் சர்ச்சில் நடக்கவிருந்த Parish Council கூட்டத்தில் பேசுவதற்கு தயாரிக்க வேண்டும். இந்த சம்பாஷனையை சரியான முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போனால் இன்று இரவு முழுக்க கண் விழித்திருக்க வேண்டியதுதான். எப்படியாவது இவரை சமாதானப்படுத்த வேண்டும். ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை.

வங்கியின் முந்தைய தலைவர் போர்ட் அங்கத்தினர்களுடன் ஒத்துப் போக முடியாமல் ராஜிநாமா செய்துவிட்டு போனதிலிருந்தே இந்திய ரிசர்வ் வங்கியின் நேரடி பார்வை வங்கியின் மேல் விழ ஆரம்பித்தது.

புதிய தலைவருக்கான மூன்று பேர் கொண்ட பேனலை (Panel) வங்கியின் போர்ட் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியபோது ரிசர்வ் வங்கியில் சம்பந்தப்பட்ட இலாக்காவிலிருந்து சுந்தரத்திற்கு உடனே புறப்பட்டு மும்பை வருமாறு ரகசிய அழைப்பு வந்தது.

சுந்தரத்திற்கு மும்பை செல்ல தயக்கமாக இருந்தது. வங்கியில் தலைவருக்கு அடுத்த நிலையிலிருந்தவர் சேதுமாதவன். அப்படியிருக்க தன்னை ஏன் அழைக்கிறார்கள் என்று நினைத்தார். சேதுமாதவனின் பேரில் நம்பிக்கையில்லாததாலா அல்லது அவரும் ஒரு போர்ட் உறுப்பினர் என்ற நிலையில் வங்கியின் சார்பில் பரிந்துரைத்தவர்களுள் அவரும் ஒருவர்தானே என்பதாலா?

எப்படி இருப்பினும் அவருக்கு தெரியாமல் தான் மும்பைக்கு புறப்பட்டு செல்வது சாத்தியமில்லை என்பதால் அவருடைய அறையில் அவர் இருக்கிறாரா என்பதை அவருடைய காரியதரிசி பெண்ணிடம் உறுதி செய்துக்கொண்டு சென்று கதவைத் தட்டினார்.

‘யெஸ் கம் இன்.’ என்ற குரலில் ஒலித்த அகங்காரம் அவரை ஒரு விநாடி தயங்கச் செய்தது.

சேதுமாதவனுக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம், எட்டாம் பொருத்தம் என்பது வங்கியிலிருந்த அனைவருக்கும் தெரியும். இருவருக்கும் இடையே நடக்கும் பனிப்போர் வங்கியின் உயர் மட்ட அதிகாரிகளை, குறிப்பாக தலைமையலுவலகத்திலிருந்த அதிகாரிகளை, இரு வேறு குழுவாக பிரித்திருந்தது.

இதுவும் முந்தைய தலைவர் ராஜிநாமா செய்துவிட்டு சென்ற காரணங்களுள் ஒன்று.

உயர் மட்ட அதிகாரிகளுடைய கலந்துரையாடலில் கூறப்படும் கருத்துகளை ஒன்றுவிடாமல் அன்றிரவே போர்ட் அங்கத்தினர்களிடம் தொலைப்பேசியில் அம்பலப்படுத்துவதில் சேதுமாதவன் படு சூரர்.

அதிகாரிகள் இலை மறை, காய் மறைவாக பேசும் வார்த்தைகளைக் கூட திரித்து, பெரிதுபடுத்தி கூறுவதிலும் வல்லவர்.

ஆகவே தான் சுந்தரம் ரிசர்வ் வங்கியிலிருந்து வந்த தொலைப்பேசி அழைப்பை அவரிடம் எப்படி கூறுவது என்று மீண்டும் ஒருமுறை யோசித்தார்.

ரிசர்வ் வங்கியிலிருந்து அழைப்பு வந்ததைக் கூறாமல் இருக்க முடியாது. ஆனால் காரணம் இதுதான் என்று கூறாமல் மறைத்தாலென்ன என்று நினைத்தார். ‘யெஸ். வொய் ஷ¤ட் ஐ டெல் ஹிம் த ட்ரூத்? எதையாவது சொல்லிட்டு போய் பார்க்கலாம். வந்துட்டு வேணும்னா, தேவைப் பட்டா சொல்லிக்கலாம்’ என்ற முடிவுடன் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்து கடுவன் பூனை என்ற பட்டப் பெயருக்கு பொருத்தமாயிருந்த சிறிதளவும் சிரிப்பில்லாத அந்த முகத்தைப் பார்த்து மெலிதாய் புன்னகை செய்தார்.

‘இந்த நேரத்துல இவன் ஒருத்தன்’ என்ற பாவனையில் கடுவன் பூனை பதிலுக்கு ஹும் என்று உறுமியதைப் பொருட்படுத்தாமல், ‘சார் ரிசர்வ் பாங்குலருந்து உடனே புறப்பட்டு வரச்சொல்லி கால் வந்திருக்கு’ என்றார் பட்டும் படாமலும்.

‘என்னது, உடனேவா? அதெங்கன? எனிக்கி கொற எங்கேஜ்மெண்ஸ் உண்டு பிலிப்.. ஐ காண்ட் கோ. நீங்க வேணும்னா எனக்கு பதிலா போய்ட்டு வாங்க. திருச்சி வந்து எந்தா காரியம்னு பரஞ்சா மதி. எந்தா?’

‘உங்கள கூப்பிடலை சார்.’ என்று பதிலளிக்க வந்த நாவை கடித்துக்கொண்டு, ‘ஈஸ் இட்? நோ ப்ராப்ளம் சேது சார். நான் போய்ட்டு வந்து சொல்றேன்.’ என்று அவருடைய பதிலுக்கு காத்திராமல் வெளியேறினார்.

தொடரும்..

4 comments:

G.Ragavan said...

சேதுமாதவன் மாதிரி ஆளுங்க இருக்கவும் செய்யுறாங்க. என்னான்னு சொல்லி முடிக்குறதுக்குள்ளயே முடிவெடுத்து அதச் செயல் படுத்தீரவும் செஞ்சிருவாங்க.

வழக்கம் போல நல்ல கதை. நல்ல தொடக்கம். இந்தக் கதையும் உங்களுக்குப் பேரும் புகழும் பெற்றுத் தர என்னுடைய வாழ்த்துகள்.

சிங். செயகுமார். said...

வாழ்த்துக்கள் நட்சத்திரமே!

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

இந்த கதையில வரப்போற நிறைய நபர்களை நாமும் நம்முடைய அலுவலகங்கள்ல பார்த்திருப்போம். என்னால முடிஞ்ச வரைக்கும் அவர்களுடைய குணாதிசயங்களை தத்ரூபமா கொண்டு வருவேன்.

என்ன, ஆஃபீஸ் விஷயங்கள எவ்வளவு முயன்றாலும் சுவாரஸ்யமா எழுதறது கொஞ்சம் சிரமம். பொறுமையா படிச்சா நல்லது.. பார்ப்போம்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க சுந்தர்,

என்ன டெஸ்ட்டுன்னு ஒரு ப்ளாக்கை தொடங்கிட்டீங்க. முதல்ல இதுக்கு ரெஸ்பாண்ட் பண்ணலாமா.. ஒரு வேளை வில்லங்கமானதா இருக்குமோன்னு உங்க Profileஐ இப்பத்தான் பார்த்துட்டு வந்தேன்.

உங்க வாழ்த்துக்கு நன்றி.