குமாரி வந்தனா தேவி: வங்கியின் இரு பொது மேலாளர்களில் ஒருவர்.
**
படுக்கையறையிலிருந்த மேசைக்கு முன் அமர்ந்து அதுவரை மும்முரமாக எழுதிக் கொண்டிருந்த வந்தனா பேனாவை மூடி வைத்துவிட்டு இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி நெட்டி முறித்தாள். தன் முன்னே மேசையின் மேலிருந்த ரேடியம் பொருத்திய அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய வெளிநாட்டு கடிகாரத்தைப் பார்த்தாள். நள்ளிரவு கடந்திருந்தது.
அமர்ந்திருந்த நாற்காலியைப் பின்னுக்கு தள்ளிக் கொண்டு எழுந்து நின்றாள். தன் முன்னே திறந்துக் கிடந்த நாட்குறிப்பு புத்தகத்தை (Diary) பார்த்தாள்.
கல்லூரி பருவத்திலிருந்தே இந்தப் பழக்கம்அவளுக்கு இருந்தது. ஒவ்வொரு வருடமும் அவள் எழுதி முடித்த நாட்குறிப்பு புத்தகங்களை இன்றுவரை காப்பாற்றி வைத்திருக்கிறாள்.
அவள் மேலாளராக பணியாற்றிய காலத்தில் ஊர் ஊராக மாறி செல்லவேண்டியிருந்தபோதும் கூட இவற்றை மறக்காமல் பாதுக்காப்பாக கொண்டு செல்வது வழக்கம். மனம் சோர்வடைந்திருந்த சமயங்களிலெல்லாம் தன்னுடைய கல்லூரி நாட்களில் நண்பிகளுடன் சேர்ந்து அவள் அடித்து லூட்டிகளைப் படித்து ஆறுதலடைவாள்.
திறந்துக் கிடந்த நாட்குறிப்பை மூடிவிட்டு குளியலறையை நோக்கி சென்றாள். செல்லும் வழியில் இருந்த ஜன்னலின் வழியே சில்லென்று காற்று அவளை நடுத்து நிறுத்த திரையை ஒதுக்கி வெளியே பார்த்தாள்.
பத்தாவது மாடியிலிருந்து பார்த்தபோது இரவு நேர சென்னை மிகவும் அழகாகத் தெரிந்தது. கீஈஈஈழே இந்த நேரத்திலும் பரபரப்பாக இருந்தது அண்ணா சாலை. விமானதளத்திற்கு செல்லும் வழியில் இருந்த பணக்காரத்தனமான குடியிருப்பில் இருந்த இந்த மூன்று படுக்கையறை வீட்டை (Flat) அவள் பத்து வருடங்களுக்கு முன் வாங்கிய குடி வந்தபோது வங்கியிலிருந்த சக அதிகாரிகளில் சிலர் அவளைப் பார்த்து கேலியுடன், ‘என்ன மேடம், தனி ஆளான உங்களுக்கு எதுக்கு மூனு பெட்ரூம் ஃப்ளாட்?’ என்றனர்.
அப்போதெல்லாம் சட்டென்று கோபம் வந்துவிடும் அவளுக்கு. எதிரிலிருப்பவர்களை கழுத்தை நெறித்து விடலாமா என்பதுபோல் பார்ப்பாள். கோபத்தில் சிவந்து நிற்கும் அவளுடைய கண்களைப் பார்த்ததும் வாயை மூடிக்கொண்டு சென்று விடுவார்கள்.
வந்தனாவின் இரு இளைய சகோதரிகளும் அவர்களுடைய குழந்தைகளுடன் கோடை விடுமுறைகளில் வந்திருக்கும் நேரங்களில் குழந்தைகளின் அட்டகாசங்களுடன் அவளுடைய வீடு நிறைந்து ஒரே களேபராமாயிருக்கும். அதற்காகவே மூன்று படுக்கையறைகளுடன் குடிய குடியிருப்பை வாங்கி ஆண்டின் மீதமுள்ள பத்து மாதங்களும் அந்த இரண்டு மாதங்களுக்காக காத்துக் கிடப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.
ஜன்னலுக்கு வெளியே இருண்ட வானத்தில் இறைந்துக் கிடந்த நட்சத்திர கூட்டத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். நட்சத்திர கூட்டங்களிலிருந்து தள்ளி தனியாய் தூரத்தில் ஒற்றையாய் நின்ற நட்சத்திரம் மற்ற நட்சத்திரங்களைவிட பிரகாசமாய் தெரிந்தது..
'அதுவும் நானும் ஒன்றுதான்.' உதடுகளில் படர்ந்த வறண்ட புன்னகையுடன் நினைத்தாள் வந்தனா.
பதினெட்டாவது வயதில் தந்தையை இரண்டு நாள் விஷக் காய்ச்சலில் இழந்தபோது அவளும் அவளுடைய தாய், தங்கைகளுடன் அவளும் அப்படித்தான் நின்றாள். அவளைவிட ஐந்து வயதான மூத்த சகோதரனின் திருமணம் முடிந்த மூன்றாவது மாதம்.
‘உங்கப்பாவுக்கப்புறம் நீதானடா இந்த குடும்பத்துக்கு தலைவங்கற ஸ்தானத்துல இருக்கே. நீயும் இப்படி என்னையும் உன் தங்கைகளையும் தவிக்க விட்டுட்டு உன் பெஞ்சாதி பேச்சை கேட்டுக்கிட்டு தனியா போறேங்கறியே இது உனக்கே நல்லாருக்கா? வந்தனா படிச்சி முடிச்சி ஒரு வேலைக்கு போற வரைக்குமாவது எங்களோடயே இருடா..’என்று காலைப் பிடிக்காத குறையாக எத்தனை கெஞ்சியும் தன் தாயின் கெஞ்சலை உதாசீனப்படுத்திவிட்டு தன்னுடைய புது மனைவியுடன் சென்ற அண்ணனை இன்றுவரை அவள் மன்னிக்கவேயில்லை.
வந்தனாவின் தந்தை முன் யோசனையுடன் செய்து வைத்திருந்த இன்சூரன்ஸ் பாலிசியிலிருந்து கிடைத்த ரூ.50000/-த்தை வைத்துக்கொண்டு நால்வரடங்கிய குடும்பத்தை நடத்தியதுடன் தன்னுடைய மூன்று வருட இளநிலை பட்டத்தையும் முடித்தாள். அவளுடைய தாயார் வீட்டிலிருந்தே அப்பளம், வடாம், வற்றல் என செய்து வீடு வீடாய் ஏறி இறங்கி விற்று கொண்டு வந்த தொகையும் அந்த குடும்பத்தின் அன்றாட செலவை சரிகட்ட உதவியது.
இளநிலை படிப்பை அவள் முடிக்கவும் அவளுடைய இரண்டு தங்கைகளும் ஒருவர் பின் ஒருவராய் பள்ளிப் படிப்பை முடிக்கவும் சரியாக இருந்தது. மேலே படிக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை மூட்டைக் கட்டிவிட்டு வீட்டு உபயோக பொருட்களை விற்கும் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலைக்குச் சேர்ந்தாள். அவளுடைய அழகும் பேச்சுத் திறனும் அவளுடைய வேலையில் அவளுக்கு தேவைக்கும் அதிகமாகவே ஊதியம் கிடைக்க வழி செய்தது.
அலுவலக வேலையினூடே மாலை நேரங்களில் தன்னுடைய முதுகலை படிப்பை சென்னையில் அப்போதுதான் துவக்கப்பட்ட அஞ்சல்வழி பல்கழைகத்தில் சேர்ந்து தொடர்ந்தாள். அடுத்த இரண்டாண்டுகளில் குடும்பத்தின் நிதி நிலமை ஓரளவுக்கு சீரானது. வந்தனா முதுகலைப் படிப்பில் அஞ்சல்வழி பல்கலைக் கழகத்திலேயே முதலாவதாக வரவே செய்தித் தாள்களில் எல்லாம் அவளுடைய புகைப்படம் வெளிவர பிரபலமானாள்.
அவளுடைய புகைப்படத்தை செய்தித்தாளில் காண நேர்ந்த சென்னையில் தலைமையலுவலகத்தை கொண்டிருந்த வங்கிகள் ஒன்றின் தலைவர் வழக்கத்திற்கு மாறாக வந்தனாவை நேர்காணலுக்கு அழைக்க முதல் சந்திப்பிலேயே தன்னுடைய அபூர்வ புத்திக் கூர்மையால் அவரைக் கவர்ந்து வங்கியில் பயிற்சி இளநிலை அதிகாரியாக வங்கியில் நுழைந்தாள்.
அவள் வங்கியில் சேர்ந்த சமயத்தில் அங்கிருந்த அதிகாரிகளுள் வந்தனா மட்டுமே பெண். அதுவும் வங்கியின் வழக்கமான தேர்வு நியதிகளை மீறி நேரடியாக வங்கித் தலைவராலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவள். பொறாமைக்கு கேட்க வேண்டுமா?
அவள் பணியில் சேர்ந்து அடுத்த பத்து வருடங்களில், அதாவது அவள் ஒரு கிளையின் மேலாளராக பதவி உயர்வு பெறும் வரை அவள் படாத அவமானங்களே இல்லை எனலாம். அவளுக்கு மேலிருந்த அதிகாரிகள், அவளுடன் சக அதிகாரிகளாக இருந்தவர்கள், அவளுக்கு கீழ் பணிபுரிந்த ஊழியர்கள் என எல்லோரும் அவளை ஒரு காட்சிப் பொருளாகவே பார்த்தனர்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் நீ ஒரு பெண். ஆண்களின் அதிகார வட்டத்துக்குள் நுழைய லாயக்கில்லாதவள் என்று தன்னை அச்சுறுத்திய ஆண் வர்க்கம் முழுவதையுமே தன் ஒட்டுமொத்த எதிரிகளாய் நினைத்தாள் வந்தனா.
அவர்களை தன்னுடைய அறிவுத் திறனால் வெற்றிக் கொள்ள முயன்று தோற்றுப் போன வந்தனா ஒரு முடிவுக்கு வந்தாள்.
அவர்களை ஜப்பானிய முறையில் தோற்கடிப்பது ஒன்றுதான் ஒரே வழி என்று உணர்ந்தாள்.
இரண்டாம் உலக யுத்தத்தில் முழுவதுமாய் தோற்கடிக்கப்பட்டு அவமானப்பட்டு ஹிரோஷிமோ, நாகசாக்கி என்ற இரு பெரு நகரங்களும் அமெரிக்கர்களால் நிர்மூலமாக்கப் பட்ட அதே நாள் நள்ளிரவில் ஜப்பான் தலைநகரான டோக்கியோ நகரத்தில் ரகசியமாக கூடிய ஜப்பானுடைய தொழிலதிபர்கள் ஒரு ரகசிய முடிவுக்கு வந்தார்களாம். அதாவது அடுத்து வரும் ஐம்பது ஆண்டுகளில் தங்களுடைய அபூர்வ புத்தி கூர்மையாலும் அயரா உழைப்பினாலும் உலகின் பிற நாடுகள் நினைத்துப் பார்க்கவும் முடியாத அளவுக்கு பொருளாதார்த்தில் முன்னேறுவது எனவும் தங்களை அணுவின் கொடூர அழிவுக்கு ஆளாக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளை தங்களுடைய நாட்டின் பொருளாதார அதிகாரத்தால் அடக்கியாளுவது எனவும் சபதமெடுத்து பிரிந்ததாம் அந்த குழு.
வந்தனாவுக்கு தானும் அதேபோல் செய்தாலென்ன யோசித்தாள்.
அன்றிலிருந்து இரவு பகல் பாராமல் ஒரே குறிக்கோளுடன் படிக்க ஆரம்பித்தாள். அவளுடைய வயதையொத்த பெண்கள் விதவிதமான உடைகள், அழகு சாதனங்கள், நகைகள் என அலைந்த காலத்தில் படிப்பு, படிப்பு, படிப்பு என ஒரே கருத்தாய் படிக்க ஆரம்பித்த அடுத்த எட்டாண்டுகளில் பைனான்ஸ் பிரிவில் எம்.பி.ஏ, சட்டத்தில் எல்.எல்.பி என இரு நேர் எதிர் பிரிவுகளில் பட்டங்களைப் பெற்றதுடன் வங்கித் துறையினருக்கு பிரத்தியேகமாக நடத்தப்பட்ட CAIIB, AIIB (London) என்ற பட்டங்களையும் பெற்று அவளுடைய சக அதிகாரிகள் மட்டுமல்லாமல் உயர் அதிகாரிகளையும் விடவும் அதிகம் படித்தவள் என்ற பெருமையைப் பெற்றாள். அவளுடைய படிப்பைக் கண்டு அசராதவர்களை தன்னுடைய வாளிப்பான உடலழகால் வீழ்த்தவும் தயங்கவில்லை வந்தனா.
முதுகலைப் பட்டத்துடன் இளநிலை அதிகாரியாக பணியில் சேர்ந்த வந்தனா CAIIB மற்றும் AIIB (London) முடித்தவுடன் அடுத்த நிலைக்கும் எம்.பி.ஏ முடித்தவுடன் கிளை மேலாளர் நிலைக்கும், சட்டப் படிப்பு முடிந்தவுடன் உயர் மேலாளர் நிலைக்கும் பதவி உயர்வு பெற்றாள். அவளுடைய அழகும், வாளிப்பான உடலமைப்பும் சாதுரியமான பேச்சும் அவளுடைய கிளை வாடிக்கையாளர்களையும் கவர்ந்திழுக்க வங்கி வர்த்தகத்தை விரிவாக்குவதிலும் கைதேர்ந்தவளாக ஜொலித்தாள்.
இதற்கிடையில் திருமண வயதை எட்டியிருந்த தன்னுடைய இரு தங்கைகளையும் தன் தாயின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நல்ல பதவிகளிலிருந்த மாப்பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைத்தாள்.
அவர்களிருவருடைய திருமணமும் முடிந்து தங்கள், தங்கள் புகுந்த வீடுகளுக்கு வழியனுப்பி வைத்த போது வந்தனாவுக்கு வயது 30ஐ கடந்திருந்தது.
தன்னுடைய நிலையை கவலையுடன் பார்த்த தாயுடன் தனித்து நின்றபோதும் வீணாய் போன தன்னுடைய இளமையை நினைத்து வருந்தவில்லை அவள். மாறாக தான் இதுவரை சாதித்த வெற்றிகளை நினைத்து சந்தோஷமே அடைந்தாள்..
ஆனால் அடுத்த சில வருடங்களில் அவளுடைய தாயும் மரிக்க முதன் முறையாய் உலகத்தின் தனியாய் விடப்பட்டதைப் போல் உணர்ந்தாள் வந்தனா..
6 comments:
முருகா! வந்தனாவின் தனிமையைப் போக்குவாய். பாவம் அவள். உடலாலும் உள்ளத்தாலும் அவள் தனிமை மறைந்து போகட்டும். நீடு வாழட்டும்.
புது சேர்மன் குடும்பம் இல்லாமல் வரப்போகிறார். இங்கே இந்தம்மா தனிமையில். தமிழ் சீரியல் வாசனை அடிக்குதே.
வாங்க ராகவன்,
வந்தனாவைப் போல நிறைய பேர் இருக்காங்க ராகவன்..
பணமும், பதவியும் தனிமைக்கு துணையாய் வராதே...
வாங்க இ.கொத்தனார்,
புது சேர்மன் குடும்பம் இல்லாமல் வரப்போகிறார். இங்கே இந்தம்மா தனிமையில்.//
அப்படியா? பாக்கலாம்.
// பணமும், பதவியும் தனிமைக்கு துணையாய் வராதே //
உண்மை. வந்தனா தனது கடமைகளை முடித்து விட்ட பிறகாவது யாரையாவது திருமணம் செய்து கொண்டிருக்கலாம்... தனியே வாழ்வில் எதிர்நீச்சல் போடுவது பாரட்டப்பட வேண்டியதே...
வாங்க சோ.பையன்..
வந்தனா திருமணம் புரிந்துக் கொள்ளாமல் போனதற்கு வேறொரு காரணமும் உண்டு.. அதை நாளைக்கு பாருங்கள்..
Post a Comment