சில்லென்ற மழைச் சாரல் முகத்தில் அடிப்பதை உணர்ந்த வந்தனா சிலிர்ப்புடன் தன்னுடைய நினைவுகளிலிருந்து திரும்பினாள்..
மழைச்சாரல் முகத்தில் விழுவதும் சுகமாய்த்தான் இருந்தது. கடந்த கால நினைவுகள் அவளுடைய மனதை மேலும் சோர்வடையச் செய்தாலும் முகத்தில் பட்ட காற்றும் சாரலும் ஒருவித இன்பத்தை அளிக்க அங்கேயே சிறிது நேரம் நின்று அந்த இன்பத்தை அனுபவித்தாள்.
மழைச்சாரல் சற்று வலுக்கவே ஜன்னலை மூடிவிட்டு குளியலறைக்குள் சென்று ஹீட்டரை ஆன் செய்துவிட்டு சிறிது நேரம் காத்திருந்தாள்.
உடலும் மனமும் சோர்ந்திருந்த வேளைகளில் இழந்திருந்த மனவலிமையை மீண்டும் பெற ஆசைதீர குளிப்பது அவளுடைய வழக்கம். இன்றும் நேரம் போவதே தெரியாமல் பூவாய் கொட்டிய வெதுவெதுப்பான நீரினடியில் நின்றாள்.
குளித்து முடித்து படுக்கையறைக்கு திரும்பிய வந்தனாவின் பார்வை மேசை மேலிருந்த கடிகாரத்தில் விழ அதிர்ந்து போனாள். மணி அதிகாலை இரண்டு என்றது. ‘அடேயப்பா.. இவ்வளவு நேரமா குளிச்சிருக்கேன்? டாங்குல தண்ணி தீந்திருச்சின்னு காலைல செக்கரட்டரி வாட்ச்மேன் கிட்ட சத்தம் போடாம இருக்கணும்.’
சென்னையைப் பொறுத்தவரை தண்ணீர் பஞ்சம் யாராலும் தீர்க்கப்பட முடியாத பிரச்சினை. அது பணக்காரன், ஏழை என்று பாகுபாடில்லாமல் எல்லா குடியிருப்புகளையும் பாதித்தது. ஒரு நடுத்தர குடியிருப்பில் மாத வாடகையாய் வசூலிக்கப்படும் தொகையை அவள் பராமரிப்புக்கு மட்டுமே கொடுத்தாலும் தண்ணீர் கிடைப்பதென்னவோ ரேஷனில்தான். தனியாளாய் இருந்ததால் அவளை அது அத்தனை பாதிக்கவில்லை.
பூத்துவாலையால் தவலையைத் துவட்டியவாறே அறையின் ஒரு மூலையிலிருந்த டிரஸ்சிங் மேசையின் முன் அமர்ந்து எதிரே இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தாள்.
அடர்த்தியாய் நீண்டு வளர்ந்து இடுப்பிற்கும் கீழே தொங்கிய தலை முடி அவளுடைய தாயின் சீதனம். அவளுடைய பொன் நிற மேனி அப்பாவுடையது.. குட்டையென்று சொல்ல முடியாத உயரம்.. தீர்க்கமான ஆனால் அழகான அடர்த்தியான புருவங்களுக்கு கீழ் அழகான கண்கள், வளைவில்லாத நாசி.. ‘உங்களுக்கு வெள்ளை ஒற்றைக் கல் மூக்குத்தி சூப்பரா இருக்கு மேடம்.’ அழகான செந்நிற குவிந்த உதடுகள்.. பச்சரிசியாய் ‘எப்பவும் நீங்க சிரிச்சிக்கிட்டே இருங்க மேடம்.’ என்று சொல்லத் தூண்டும் ஒரே சீரான பற்கள்.. ‘56 வயசா உங்களுக்கா? என்ன மேடம் விளையாடறீங்களா? எல்லாரும் வயச குறைச்சி சொல்லித்தான் பார்த்திருக்கோம்.. நீங்க என்னடான்னா?’ என்று பார்ப்போர் முகஸ்துதிக்கோ.. இல்லையோ.. சொல்லத் தூண்டும் வாளிப்பான உடல்கட்டு..
‘என்ன இருந்து என்ன பிரயோசனம் அக்கா? ஒரு ஆம்பிளைய வளைச்சிப் போட தெரியாம.. நா மட்டும் உங்கள மாதிரி இருந்தா ஒருத்தருக்கு ஒம்போது பேர வளைச்சிப் போட்டிருப்பேன்..’ வந்தனாவைக் கண்டு கொஞ்சமும் பயப்படாமல் வாயடிக்கும் தன் குட்டித் தங்கையின் வார்த்தைகள் நினைவில் வர அவளையுமறியாமல் அவளுடைய உதடுகளில் தவழ்ந்தது ஒரு அழகிய புன்னகை..
‘அவ சொன்னது சரிதானோ? என்னால மோகனை வளைச்சித்தான் போட முடியலை..’
மோகனும் அவளும் சென்னை சட்டக் கல்லூரியின் மாலை வகுப்புகளில்தான் முதன் முதலில் சந்தித்தார்கள். ஆசிரியர், மாணவி என்ற உறவில்..
மோகன் அவளைவிட ஐந்து வயதுதான் பெரியவன். எம்.எல் முடித்துவிட்டு அப்போதுதான் சட்டக் கல்லூரியில் இளநிலை ஆசிரியராக சேர்ந்திருந்தான். இருப்பினும் அவள் பார்த்த எல்லா ஆசிரியர்களையும் விட, ஏன் சில விரிவுரையாளர்கள¨யும் விட, அவனுடைய பயிற்றுவிக்கும் முறையில் ஒரு தனித்தன்மை இருந்தது. அவள் மட்டுமல்ல அவளுடைய சக மாணவ, மாணவிகளும் அவனிடம் மயங்கித்தான் போயிருந்தார்கள்.
வந்தனாவின் அபிரிதமான அழகும், புத்திக் கூர்மையும் எப்படியாவது படித்து பட்டம் பெற வேண்டும் என்ற அவளுடைய வெறித்தனமான குணமும் அவனையும் கவர்ந்தது.. சில நேரங்களில் அவளுடைய சாதுரியமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறவும் செய்திருக்கிறான். அப்போதெல்லாம் ‘சரியான அதிகப்பிரசங்கியா இருக்காளே’ என்று தோன்றினாலும் அன்று இரவே கல்லூரி நூலகத்தில் அமர்ந்து தேடிப் பிடித்து படித்துவிட்டு அடுத்த நாள் வகுப்பில் அவளுடைய சந்தேகங்களை தீர்த்து வைப்பான்.
வந்தனாவுக்கு அவனிடமிருந்த, ஒரு ஆசிரியருக்கு தேவையான அந்த அக்கறை, பொறுப்பு, பொறுமை எல்லாமே பிடித்திருந்தது. அடுத்து ஐந்தாறு மாதங்களில் தன்னையுமறியாமல் தன் மனதை அவனிடம் பறிகொடுத்து நின்றாள்.
அலுவலகத்தில் சக, மற்றும் உயரதிகாரிகளிடத்தில் நாள்தோறும் அவமானப்பட்டு நிற்கும் போதெல்லாம் தன்னிடம் பயிலும் பல மாணவிகளுள் ஒருத்திதானே என்று நினைக்காமல் அவளை தனக்கு சரிசமமாக பாவித்த அவனுடைய பெருந்தன்மை அவளை மிகவும் ஈர்த்தது.
அலுவலக வேலை நேரம் போக மாலையில் தன்னுடைய மேற்படிப்பைத் தொடர வங்கித் தலைவரிடம் நேரடியாக எழுத்து மூலமாக அனுமதி பெற்றிருந்தும் அவளைவிட இரண்டு வயதே மூத்திருந்த அவளுடைய மேலதிகாரி வேண்டுமென்றே அவளுடைய படிப்புக்கு உலை வைக்கும் நோக்கத்தில் பல நாட்களில் மாலை ஐந்து மணி வரை காத்திருந்து மற்றவர் செய்ய வேண்டிய அலுவலையும் அவள் தலைமேல் சுமத்துவது வழக்கம். அப்போதெல்லாம் வகுப்பில் கலந்துக் கொள்ள முடியாமல் போனதுண்டு.
இருப்பினும் அவள் இல்லாத நாட்களில் எடுக்கப்பட்ட பாடங்களைக் குறித்து வகுப்பு நேரம் முடிந்தவுடன், ‘சார் இஃப் யூ டோண்ட் மைண்ட்..’ என்று தயக்கத்துடன் மோகனை நெருங்குவாள். அவனும் வேலைப் பளுவைப் பாராமல் பொறுமையாய் அவளுடைய கேள்விகளுக்கெல்லாம் பதிலளிப்பான்.
அவ்வாறு அவர்கள் தனித்திருந்த சமயங்களிலெல்லாம் அவளுடைய மனது அடித்துக் கொள்ளும். அவனுடைய நெருக்கம் கேட்க வந்ததை கேட்க விடாது அலைக்கழிக்கும். உதடுகள் கட்டுப்பாடின்றி நடுங்கும், வார்த்தை தடுமாறும்.. கஷ்டப்பட்டு தன்னுடைய உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வாள்.
தன்னைப் போலவே அவனும் தன்னைப் பற்றி நினைக்கிறானா என்பது தெரியாமல் நாள்தோறும் படுக்கச் செல்லும் நேரங்களில் தவிப்பாள். இப்படி பல ராத்திரிகளில் தன்னுடைய உணர்வுகளை யாரிடம் பகிர்ந்துக் கொள்வது என தெரியாமல் கொட்ட கொட்ட விழித்திருந்ததுண்டு..
இப்படியே நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி அவளுடைய பட்டப் படிப்பு முடிவடையுந் தருவாயில் ஒரு நாள் மாலை வகுப்பு நேரத்திற்குப் பிறகு மோகன் அவளிடம் வந்து புன்சிரிப்புடன் நீட்டிய அவனுடைய திருமண அழைப்பிதழ் அவளை முற்றிலுமாக நிலைகுலைய வைத்தது..
ஆக, ‘நான் மட்டும்தான் அவருடைய அக்கறையை தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கேன் போலருக்கு..’ என்று நினைப்புடன் சட்டென்று கலங்கி நின்ற கண்களுடன் அவனையும் அவன் நீட்டிய அழைப்பிதழையும் மாறி, மாறி பார்த்தாள்.
மோகனும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். பிறகு அழைப்பிதழை அவளுடைய கையில் திணித்துவிட்டு.. ‘உங்க ரியாக்ஷ்னை என்னால புரிஞ்சிக்க முடியல வந்தனா... நானும் நீங்களா சொல்வீங்க, சொல்வீங்கன்னு இந்த மூனு வருஷமா காத்திருந்தேன்.. உங்க குடும்ப சூழ்நிலை எனக்கு தெரியும்கறதுனால நான் இன்னமும் கூட காத்திருக்க தயாராயிருந்தேன்.. ஆனா வீட்ல அம்மாவுக்கு என்ன விட்டா வேற யாருமில்லேங்கறதையும் உங்க கிட்ட சொல்லியிருக்கேன்.. நான் உங்கள, உங்க உணர்ச்சிய புரிஞ்சிக்கிட்ட அளவுக்கு நீங்க என்னை புரிஞ்சிக்கலையோன்னு பல நேரங்கள்லயும் எனக்கு தோனியிருக்கு.. அதான் இன்னமும் காத்திருந்து அம்மாவ வேதனைப் படுத்த வேணாம்னு அம்மா பார்த்த இந்த பொண்ணையே பண்ணிக்கலாம்னு.. இதோ, இப்ப கண்கலங்கி நிக்கற உங்கள் பார்த்ததும் நானும் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்னோன்னு தோனுது வந்தனா.. ஐ ஆம் சாரி. பட் நவ் இட் ஈஸ் டூ லேட்..’
மேலே தொடர முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்ற மோகனை அவன் சென்று மறையும் வரைப் பார்த்துக் கொண்டே நிற்பதைத் தவிர வேறொன்றும் செய்யத் தோனாமல் அன்று நின்றது இப்போதும் தன் கண் முன்னே தெளிவாய் பார்த்தாள் வந்தனா..
இப்போ மோகன் எங்க இருப்பார்? இதே சென்னையிலா? இல்ல வேற எங்கயாவதா?
ஊர் ஊராய் நாடோடி போல் அலைய வைத்த கிளை மேலாளர் பதவியை அவள் நாடி பெற்றதே மோகனிடமிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடுதான். சுமார் பதினைந்து ஆண்டுகள் தன் தாயின் துணையுடன் நாடு முழுவதும் சுற்றியலைந்து தன்னுடைய நாற்பத்தைந்தாவது வயதில் சென்னை தலைமையலுவலகத்திற்கு துணை பொது மேலாளராய் வந்த சேர்ந்த போது மீண்டும் அவனுடைய நினைவுகள் திரும்பி வர அவனைக் கண்டுபிடித்து என்னாகப் போகிறது என்று வாளாவிருந்துவிட்டாள்.
சென்னையை வந்து சேர்ந்தவுடனே கட்டி முடிக்கப்படாதிருந்த இந்த பலமாடி கட்டடத்தில் தனக்கென ஒரு குடியிருப்பை வாங்கி தன் தாயுடன் குடியேறினாள். அடுத்த இரண்டாண்டுகளில் நோய்வாய் பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அவளுடைய தாய் மரித்தபோது மனமுடைந்து போனாள்.
இருபதாண்டுகளுக்குப் பிறகு தன் தாயின் மரணத்திற்கு கொள்ளிப் போட வந்திருந்த தன் சகோதரனை நிமிர்ந்தும் பாராமல் வைராக்கியத்துடன் அவள் நின்ற போது தன்னால் வளர்த்து ஆளாக்கப்பட்ட தங்கைகளும் அவளைப் புரிந்துக் கொள்ளாமல் தங்கள் சகோதரனுடன் சேர்ந்துக் கொள்ள எல்லோருமிருந்தும் யாருமில்லாத அனாதையாகிப் போனாள்.
அடுத்த இரண்டாண்டுகளில் அவளாக வலிய சென்று தன் தங்கைகளிடம் மட்டும் சமாதானமாக, அந்த ஆண்டிலிருந்து தங்கள் குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்கு அவளுடன் வந்து தங்கியிருந்து செல்ல ஆரம்பித்தனர்.
சென்னைக்கு மாற்றலாகி வந்தபோது துணைப் பொது மேலாளர் பதவியிலிருந்த அவள் இந்த பத்தாண்டுகளில் பொது மேலாளராக உயர்வு பெற்று வங்கியிலிருந்த இரண்டு பொது மேலாளர்களில் ஒருவரானாள்..
மணிக்கொருதரம் இசையுடன் ஒலியெழுப்பும் கடிகாரத்தின் இன்னிசை காதில் விழ நினைவுகள் கலைந்து மணியைப் பார்த்தாள். அதிகாலை மணி மூன்று!
அவளையுமறியாமல் இத்தனை நேரம் கையில் பிடித்திருந்த சீப்பை டிர்ஸ்சிங் மேசையில் வைத்துவிட்டு மரத்துப் போயிருந்த விரல்களை நெட்டி முறித்துவிட்டுக் கொண்டு ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்து நின்றாள். விளக்குகளை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்து உடனே உறங்கிப் போனாள்..
தொடரும்..
8 comments:
மோகனோட மோகன ராகம் பாடி இன்பமா இருக்க வேண்டிய வந்தனாவோட வாழ்க்கைல சந்தோஷமே வந்தனம் போட்டிருச்சே!
வந்தனா, வருந்ததே. கடவுள் துணையிருப்பார். ஒரு குறையுமின்றிக் காப்பார்.
அது சரி...மோகன சுந்தரம் தானே ஜோசப் சார்.
வாங்க ராகவன்,
சந்தோஷமே வந்தனம் போட்டிருச்சே!//
என்ன பண்றது? அவங்க தலையெழுத்து.
எவ்வளவுதான் பணம் இருந்தாலும் புருஷன் பிள்ளைங்க்கன்னு இருக்கறத போல ஆகுமா?
மோகன சுந்தரம் தானே ஜோசப் சார்//
என்ன சொல்றீங்க ராகவன்?
ஏற்கனவே சிஜிஎம். பிலிப் சுந்தரம், ஜிஎம். சண்முக சுந்தரம்னு ரெண்டு சுந்தரமும், சேர்மன் எம்.ஆர். மாதவன் எம்டி சேதுமாதவன்னு ரெண்டு மாதவனும் கதையில இருக்காங்க.. அது ஒரு காரணமாத்தான் வச்சிருக்கேன்.. அது இருக்கட்டும் ..
இது யாரு மோகன சுந்தரம்.. இவர் வெறும் மோகன் தான்.. நாங்க எங்கயாச்சும் தப்பா எழுதியிருக்கேனா.. ரெண்டுதரம் படிச்சிட்டேனே..
// இது யாரு மோகன சுந்தரம்.. இவர் வெறும் மோகன் தான்.. நாங்க எங்கயாச்சும் தப்பா எழுதியிருக்கேனா.. ரெண்டுதரம் படிச்சிட்டேனே.. //
நாந்தான் தப்பாப் போட்டுட்டேன். ஒரு சின்னப் பேர்க் குழப்பம். அவ்வளவுதான்.
அவன் வெறும் மோகனா! சரி இருக்கட்டும். வந்தனாவுக்கும் அவன் வெறும் மோகன் தானே!
வாங்க ராகவன்,
பரவால்லை.. நெறைய கேரக்டர்கள் இருக்கறதுனால நிச்சயம் குழப்பம் வரும். நானே குழம்பி போயிருக்கேன் சில சமயத்துல.. நல்லவேளை கதைச்சுருக்கம் ஒரு மாதிரியா எழுது வச்சிருக்கேன்.
இந்த மோகன் அவ்வளவு ஈசியா போகப் போறதில்லை. ஒரு முக்கியமான ரோல் அவருக்கு இருக்கு.. கொஞ்சம் பின்னால..
மாதவன் சேர்மனா பதவி ஏத்துக்கிட்டதுக்கப்புறம்தான் கதையில சூடேறும்.. கொஞ்சம் டெக்னிக்கலா போயி போர் அடிச்சாலும் அடிக்கும்..
வந்தனாவின் வாழ்க்கையில் இத்தனை சோகங்களா ??? மறுபடியும் மோகன் இவர் வாழ்க்கையில் தென்படுவாரா ?? காத்திருக்கிறேன் ஜோசப்...
வாங்க சோ.பையன்,
மோகன் நிச்சயமா வருவார்.. ஆனா அதனால வந்தனாவின் வாழ்க்கையில் வசந்தம் வருமா?
பொறுத்திருந்துதான் பாக்கணும்..
Post a Comment