பாபு சுரேஷ்: இவரும் பொது மேலாளர்தான். வங்கியிலேயே பெரிய கிளையின் மேலாளர். வயது 59. சுருங்கக் கூறினால் சரியான 420
***
பாபு கிளையிலிருந்து வெளியேறியபோது மாலை மணி ஏழு.
சனிக்கிழமைகளில் சாதாரணமாக சரியாக இரண்டு மணிக்கே இறங்கி விடுவது வழக்கம். ஆனால் இன்று அப்படி செய்ய முடியவில்லை..
சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அவர் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. எல்லாம் அந்த தொழிற்சங்கத் தலைவர் முரளிதரனுடைய வேலை.
சென்னையிலிருந்த சகல கிளைகளிலுமுள்ள அவனுடைய தொழிற்சங்க சகாக்களை சரியாக பகல் இரண்டு மணிக்கு வரச்சொல்லி இருக்கிறான் என்பது அவருக்கு தெரியாமல் போய்விட்டது.
பாபு தன்னுடைய மேசையை ஒதுங்க வைத்துவிட்டு லாப்டாப் பையைக் கையில் பிடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேற முயன்றபோது கிளைக் கதவுகளைத் திறந்துக் கொண்டு திமுதிமுவென்று அத்துமீறி கிளைக்குள் நுழைந்து கும்பல் அவரை அறையிலிருந்து வெளியேற விடாமல் வாயிலை அடைத்துக் கொண்டு நிற்க..
என்ன காரணம் என்று விளங்காமல் அவன் திகைத்து நின்றார்.
‘என்ன ஜி.எம். சார், இதை கொஞ்சமும் எதிர்ப்பார்க்கல இல்ல?’ என்ற முரளிதரனைப் பார்த்து ‘என்ன?’ என்பது போல் முறைத்தார்.
‘கழிஞ்ச ஆய்ச்ச நிங்கள்ட பியூன் ஒருத்தன் ட்ரெய்ன்ல அடிப்பட்டு மரிச்சில்லே..?’
ஓ! அதான் காரணமா? இப்ப இந்த முட்டாளுங்கக் கிட்டருந்து எப்படி தப்பிக்கறது? டாக்டர (சோமசுந்தரம். வங்கியின் இயக்குனர்களில் மிகவும் சீனியரானவர்) வேற வந்து பாக்கறேன்னு சொல்லிட்டேனே? இப்ப என்ன பண்றது? கோபப்பட்டா காரியம் கெட்டுரும்.. சமாதானமா போறதுதான் ஒரே வழி..
‘எந்தா சாரே.. மறந்துட்டீங்களா?’
அறை முழுவதும் அடைத்துக் கொண்டு நின்றிருந்த ஆட்களை ஒரு நிமிடம் பார்த்தார். அவருடைய கிளையில் பணிபுரிந்த எந்த அதிகாரியும் கூட்டத்தில் இல்லை என்பது புரிந்தது. அவர்கள் அனைவரும் வேறொரு சங்கத்தைச் சார்ந்தவர்கள் என்பது ஒன்று.
இரண்டாவது, பாபுவை முறைத்துக் கொண்டால் அவருக்கு கீழே தொடர்ந்து வேலை செய்ய முடியாது என்று அக்கிளையிலிருந்த எல்லோருக்கும் தெரியும் என்பதும் பாபுவுக்கு தெரியும்.
இருப்பினும் அவர்களில் யாரோ ஒருவன்தான் முரளியை தூண்டிவிட்டு அழைத்திருக்க வேண்டும் என்று நினைத்தார். யாராயிருக்கும்? யாராயிருந்தாலும் சரி.. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள கண்டுபிடித்து தண்ணியில்லாத காட்டுக்கு தூக்கியடிக்கலே என் பேரு பாபு சுரேஷ் இல்ல..
‘என்ன சார், ஒன்னும் பேசாம இருந்தா.. சும்மா போயிருவோம்னு நினைக்காதீங்க.. அந்த பியூன் செத்ததுக்கு நீங்கதான் காரணம். நீங்க சொல்லித்தானே அவர் வேல நேரத்துக்கப்புறம் அங்க போவேண்டி வந்தது? அதனால் அவரோட குடும்பத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு என்ன செய்யப் போறீங்க? சொல்லுங்க சார்.. இன்னைக்கி நீங்க ஒரு பதில் சொல்லித்தான் ஆவணும். அதுவரைக்கும் நீங்க வெளிய போமுடியாது.. எத்தனை நேரமானாலும் சரி..’
பொங்கியெழுந்த கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார். ‘இங்க பாருங்க முரளிதரன். மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடாதீங்க. அவன போயி ட்ரெயினுக்கு முன்னால நானா விழச் சொன்னேன்? அது அவன் தலையெழுத்து.. எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. பேசாம கலைஞ்சி போயிருங்க.. திங்கக்கிழமை புது சேர்மன் ஜாய்ன் பண்ற நேரத்துல அனாவசியமா பிரச்சினைய கிளப்பாதீங்க. சொல்லிட்டேன்.’
முரளி கோபத்துடன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு முன்னே வந்து முறைத்தான். ‘கலைஞ்சி போவணுமா? நாங்களா? இல்லன்னா என்ன சார் செய்வீங்க? என்ன பூச்சாண்டி காட்டறீங்களா? அதுக்கொன்னும் பேடிக்கிறவனல்லா ஈ முரளிதரன் நாயர், பறைஞ்சேக்காம்.’
இவர்களிடம் இப்படி பேசினால் சரிவராது போல் தெரிகிறது.. தற்போதைக்கு பணிந்து போவதுபோல் நடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.. கண்கள் சிவக்க தன்னைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்ற முரளிதரனைப் பார்த்து புன்னகைத்தார்.
‘சரி, முரளி. இப்ப நான் என்ன செய்யணும், அதச் சொல்லுங்க.’
முரளிதரனுடைய இதழ்களிலும் ஒரு குரூர புன்னகை மலர்ந்தது. காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு தன் பின்னால் நின்ற தோழர்களைப் பார்த்தார்.
‘அப்படி வாங்க சார் வழிக்கு. நீங்க என்ன செய்யணும்னு நா சொல்றன்.. அதுக்கு நீங்க ஒத்துக்கிட்டா இப்பவே கலைஞ்சி போயிடறோம். இல்லன்னா.. எத்தனை நேரமானாலும் இங்கருந்து போற ஐடியா இல்லை.. என்ன சார், பறஞ்சோட்டே?’
இடைக்கிடையில் மலையாளத்தில் பேசுவது வேறு அவருக்கு எரிச்சலை மூட்டியது. ஊர் விட்டு ஊர் வந்து பொளைக்க வந்த பயல், என்ன ஆட்டம் போடறான்? எல்லாம் அந்த எம்.டி. மாதவனோட குடுக்கற எடம். புது சேர்மன் வந்து சார்ஜ் எடுக்கட்டும்.. வச்சிக்கறேன்.. இன்னைக்கி டாக்டர பாக்கும்போதும் இவனப் பத்தி மறக்காம சொல்லணும். ராஸ்கல், இர்றா, ஒன்ன வச்சிக்கறேன்..
‘என்னா சார்.. என்ன சொல்லி தப்பிச்சிக்கலாம்னு பாக்கறாப்பல இருக்கு?’
‘ஒன்னுமில்ல.. சொல்லுங்க முரளி.’
‘முதல்ல அந்த குடும்பத்துக்கு பேங்கலருந்து காம்பன்சேஷனா குறைஞ்சது ஒரு லட்சம் வாங்கித் தரணும்..’
‘சரி..’ என்கிட்டருந்து கேக்காம விட்டானே.
‘அப்படி பேங்க்லருந்து கிடைக்கலைனா உங்க கையிலருந்து தரணும்..’
வச்சானே ஆப்பு! சரின்னு சொல்லி வைப்போம். இளிச்ச வாயன் கஸ்டமர் எவன் தலையிலயாவது கட்டிரலாம்.
‘சரி’
முரளிதரன் அவரை நம்பாமல் சந்தேகத்துடன் பார்த்தான். ‘எந்தா சாரே பறஞ்சே?’
பாபு ஒரு கள்ள சிரிப்புடன் அவனைப் பார்த்தார். டேய் நீ தடுக்குல பாஞ்சா நா கோலத்துலயே பாய்றவண்டா..
‘சரின்னு சொன்னேன். நீங்க மேல சொல்லுங்க..’
முரளிதரன் அப்போதும் நம்பாமல் தன் சகாக்களைப் பார்த்தான். ‘நீங்க மேல சொல்லுங்க தலைவரே..’ என்பதுபோல் அவர்களில் பெரும்பாலோனோர் தலையசைக்க முரளி மேலே தொடர்ந்தான்.
‘அவருக்கு ஒரு மூத்த மகன் இருக்கான். பதினெட்டு வயசாவறதுக்கு இன்னும் மூனு மாசந்தான் இருக்கு. பதினெட்டு வயசு ஆனதும் அவனுக்கு பேங்குல ஒரு பியூன் வேலைக் கொடுக்கறதுக்கு நீங்க ஏற்பாடு பண்ணனும்..
இன்னும் மூனு மாசம் இருக்கில்லே.. அதுக்குள்ள என்னென்ன நடக்குமோ யாருக்கு தெரியும். சரின்னு சொல்லி வைப்போம்..
‘சரி’ என்பதுபோல் தலையை ட்டினார். ‘புது சேர்மன் சார்ஜ் எடுத்ததும் நானே பேசி வேண்டியதை செய்யறேன். இன்னும் ஏதாவது இருக்கா? நான் போலாமா?’
முரளி ஏளனத்துடன் சிரித்தான். ‘என்னா சார் இத்தற தெறக்கு? யாரையாச்சும் மணியடிக்கான் போணுமா?’
பாபு அவனை எரித்துவிடுவதுபோல் பார்த்தார். ‘இங்க பாருங்க முரளி.. தேவையில்லாம பேச வேணாம். நீங்க என்ன பேச வந்தீங்களோ அத மட்டும் பேசினாப் போறும்.. அனாவசியமா என் கோபத்த கிளறாதீங்க, சொல்லிட்டேன்..’
முரளியின் கேலிச் சிரிப்பு இன்னும் அதிகமானது.. சுற்றிலுமிருந்த தன்னுடைய சகாக்களைப் பார்த்து கண்ணடித்தான். அவர்களுள் ஒருவன் முரளியின் காதில் கிசுகிசுத்தான். ‘தலைவரே எதுக்கு இந்த வீண் பேச்சு.. பேசாம நாம வந்த வேலைய பார்ப்போம்.. கடைசியா நாம போட நினைச்ச குண்ட தூக்கி போடுங்க.. அந்தாளு ஆடிப் போயிருவான், பாருங்க.’
அதுவும் சரிதான் என்பதுபோல் தலையை ஆட்டிய முரளிதரன் தனக்கு முன் அகங்காரத்துடன் இருக்கையில் அமர்ந்திருந்த பாபு சுரேஷைப் பார்த்தான். ‘எடா கருங்காலி.. இப்ப நோக்கிக்கோ..’ என்று மனதுக்குள் கறுவினான்.
‘சார் பறஞ்சது சரியா.. அனாவசியமான பேச்செல்லாம் எதுக்கு. கடைசியா சார் இத செஞ்சிட்டா போறும்.. இப்பவே போயிடறோம்..’
பாபு தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மாலை நான்கு மணியாகியிருந்தது. இந்த தடிப் பசங்க வந்து ரெண்டு மணி நேரமாயிருச்சா? இந்த கலாட்டாவுல சாப்பிடக்கூட இல்லை.. இனியும் என்னத்த கேக்க போறாங்கன்னு தெரியலையே.. சை.. இன்னைக்கி யார் முகத்துல முளிச்சேன்.. டாக்டர கூப்டு லேட்டாகும்னு சொல்லவும் முடியல.. அந்தாளு என்ன நெனச்சிக்குவாரோ தெரியலையே.. இந்த பிராஞ்சிலருந்து மறுபடியும் ஹெட் ஆபீசஸ்ல போடச் சொல்லி சேர்மன் கிட்ட சொல்ல சொல்லலாம்னு பார்த்தா நடக்காது போலருக்குதே.. இன்னைக்கி பாக்கலேன்னா அப்புறம் ஒரு வாரத்துக்கு பாக்க முடியாதே..
நிமிர்ந்து தன் முன்னால் நின்ற கும்பலைப் பார்த்தார். முரளி நின்றிருந்த கோலமே அவருடைய கோபத்தை அதிகரித்தது. பேங்க்ல வேல செய்யறமாதிரியா இருக்கான்? பொறுக்கிப் பய மாதிரி.. காலர்ல கைக் குட்டைய வச்சிக்கிட்டு சரியான ஃபேக்டரி ஒர்க்கர் மாதிரி.. ‘சொல்லுங்க முரளி. என்ன கேக்கப் போறீங்க? I am listening.’ என்றார் கோபத்தை அடக்கிக் கொண்டு..
முரளி மீண்டும் கேலியாக சிரித்தான். ‘ஒன்னுமில்ல சாரே.. நீங்க அவங்க ஃபேமிலிய வீட்ல போயி பாக்கணும். அவரோட வொய்ஃப் கிட்ட உங்க ஹஸ்பெண்ட ஆவடி ஆர்மி கேண்டீன்லருந்து வெளிநாட்டு சரக்கு வாங்க அனுப்பிச்சது நாந்தான். அதனால அவரோட சாவுக்கு நாந்தான் காரணம்னு சொல்லி ஒரு மன்னிப்பு கடிதத்த உங்க கைப்பட எழுதி கொடுக்கணும். அவ்வளவுதான்.’
பாபு தன் காதுகளை நம்ப முடியாமல் முரளியையும் அவனுக்குப் பின்னால் கேலி புன்னகையுடன் நின்றிருந்த கும்பலையும் பார்த்தார்.
என்ன தைரியம் இவனுக்கு? என்ன நினைச்சிக்கிட்டிருக்கான் மனசுல? அப்படியொரு கடிதம் எழுதிக் குடுக்கறதுக்கு நான் என்ன முட்டாளா? அத வச்சிக்கிட்டே இந்த பயலுங்க ப்ளாக் மெய்ல் பண்ண மாட்டான்கன்னு என்ன நிச்சயம்? அதுவும் புது சேர்மன்கிட்ட அந்த லெட்டர காட்னா என்ன ஆவறது? H.O.வுக்கு போறத மறக்கறது மட்டுமில்லாம ஒரு வேளை பணி இடைநீக்கம் செய்யவும் வாய்ப்பிருக்கிறதே.. இதற்கு பின்னால் யாரோ இருக்க வேண்டும்.. ஒருவேளை அந்த ராட்சசி வந்தனாவா இருக்குமோ.. இருக்கும்..
இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எப்படி தப்புவது என்று யோசிக்கலானார் பாபு..
தொடரும்
5 comments:
அட சினிமா பாக்குற மாதிரி இருக்குங்க....நீங்க டீவிக்குப் போகனுமுன்னு சொல்லீட்டிருந்தோம் நானும் துளசி டீச்சரும். இப்ப நேரடியாவே நீங்க சினிமாவுக்குப் போயிரலாம். சினிமாவுக்கு ஏத்த கதைதான். இதுல மணம், நிறம், திடம் எல்லாமே இருக்கு.
வாங்க ராகவன்,
தமிழ்மண அங்கத்தினர்கள் எல்லாருமா சேர்ந்து ப்ரொட்யூஸ் பண்ணிரலாமா? ஆளுக்கு ஒரு லட்சம் போட்டா போறும்..
நல்லா ஒட்னா லாபத்த பங்கு போட்டுக்கலாம் இல்லன்னா துண்ட காணம் துணிய காணம்னு ஓடிரலாம்..
என்ன சொல்றீங்க :-()
அருமையான திருப்பங்களுடன் கதை நகர்கிறது.
அருமையான திருப்பங்களுடன் கதை நகர்கிறது.
நன்றி அனுசுயா
Post a Comment