சூரியன் – 2
‘உங்கள கூப்பிடலை சார்.’ என்று பதிலளிக்க வந்த நாவை கடித்துக்கொண்டு, ‘ஈஸ் இட்? நோ ப்ராப்ளம் சேது சார். நான் போய்ட்டு வந்து சொல்றேன்.’ என்று அவருடைய பதிலுக்கு காத்திராமல் வெளியேறினார்.
‘அப்பாடா, இப்போதைக்கு ப்ராப்ளம் சால்வ்டு. போய்ட்டு வந்து பார்த்துக்கலாம்.’ என்று நிம்மதியுடன் அன்றிரவே புறப்பட்டு மும்பை சென்று அடுத்த நாள் ரிசர்வ் வங்கி அதிகாரியின் முன் ஆஜரானார்.
வங்கியின் தற்போதைய நிதி நிலையைக் குறித்தும், முந்தைய சேர்மன் பதவி விலகிய காரணத்தைக் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தன்னால் இயன்றவரை உண்மையான பதில்களை அளித்தார்.
‘மிஸ்டர் சுந்தரம். லெட் மி ஸ்க் யூ ஒன் டைரக்ட் கொஸ்ச்சன். ஐ நீட் அ டைரக்ட் ஆன்சர்.’ என்ற அதிகாரியை தயக்கத்துடன் பார்த்தார் சுந்தரம்.
‘ஐ வில் ட்ரை.’ என்றார்.
‘மிஸ்டர் மாதவனைப் பற்றி என்ன நினக்கிறீங்க?’
‘யூ மீன் அவர் எம்.டி?’
‘நோ.. சேர்மன் பேனல்லருக்கற மிஸ்டர் எம்.ஆர். மாதவன்.’
சுந்தரம் சங்கடத்துடன் நெளிந்தார். எம்.ஆர் மாதவன் அவருடைய வங்கியில் முப்பது வருடங்களுக்கு முன்பு குமாஸ்தாவாக நுழைந்தவர் என்பது அவருக்கு முதலில் தெரியாது. அவருடைய பெயரை அடுத்த சேர்மன் பதவிக்கு போர்ட் ஷார்ட் லிஸ்ட் செய்திருந்த விவரத்தை ரகசியமாக கேள்விப் பட்ட முந்தைய சேர்மனின் காரியதரிசிதான் அவரைப் பற்றிய பழைய கோப்புகளைக் கொண்டு வந்து ‘இதப் படிச்சி பாருங்க சார்’ என்று கொடுத்தார்.
அவர் வங்கியிலிருந்து பதவி விலகிய சமயத்தில் முதன்மை மேலாளர் (Chief Manager) பதவியிலிருந்ததையும் ஒரு சங்கடமான சூழ்நிலையில்தான் வங்கியிலிருந்து விலகி வேறொரு வங்கியில் துணைப் பொது மேலாளராக சேர்ந்ததையும் அறிந்துக் கொண்டார். அந்த சங்கடமான சூழ்நிலை ரிசர்வ் வங்கி விசாரணையில் வெளிவந்திருக்கும் என்று அவருக்கு இப்போது தோன்றியது.
இருப்பினும் நமக்கேன் வம்பு என்று நினைத்தார். ‘அவர் பேனல்ல இருக்கிறார்ங்கறத தவிர வேறொன்றும் எனக்கு தெரியாது.’ என்றார் உண்மைக்கு புறம்பாக.
எதிரிலிருந்த அதிகாரியின் புருவங்கள் வியப்பில் உயர்ந்தன. He is the CGM of the Bank. He says he doesn’t know anything about a person who is in the short listed panel of his own Board! How far could he be believed? என்று ஓடியது அவரது சிந்தனை.
எதிரே இருந்தவரை சந்தேகத்துடன் பார்த்தார்.
‘அவர் உங்களுடைய வங்கியிலிருந்துதான் பத்தாண்டுகளுக்கு முன்பு விலகினார் இல்லையா?’
‘யு ஆர் ரைட் சார்.’ சுந்தரத்திற்கு அவர் எங்கு வருகிறார் என்று புரிந்தது.
‘உங்க பேங்க்ல அவரப் பத்திய கோப்புகள் இன்னும் இருக்கணுமே.’
‘இருக்கலாம். ஆனால் அதை இன்னும் நான் பார்க்கவில்லை.’
‘ஏன்? உங்களுக்கு விருப்பமில்லாததாலா அல்லது அக்கறையில்லாததாலா?’
தான் சிக்கலில் மாட்டிக்கொள்ளப் போவது உறுதி என்று தோன்றியது அவருக்கு. ‘தோன்றவில்லை சார்.’ என்றார் ஜாக்கிரதையாக.
‘சரி போகட்டும். அவருடைய தற்போதைய வங்கியில் அவரைப் பற்றி என்ன கூறுகிறார்கள். அதாவது தெரிந்து வைத்திருக்கிறீர்களா?’
அதையும் தெரிந்துதான் வைத்திருந்தார் சுந்தரம். கேட்டவரை அவரைப் பற்றி நல்லதாய் ஒன்றும் கேள்விப்படவில்லை. ஆனால் மத்திய அரசில் நிதியமைச்சர் அலுவலகத்தில் மிகுந்த செல்வாக்குடையவர் என்று மட்டும் தெரிந்தது. அந்த தகுதி ஒன்றே போதாதா என்ன? என்று நினைத்தார்.
எதிரிலிருந்த அதிகாரியைப் பார்த்தார். ‘இல்லை.’ என்று தலையசைத்தார்.
அவருடைய குரலில் இருந்த எரிச்சல் அவருடைய அடுத்த கேள்வியில் தெறித்தது.
‘மிஸ்டர் பிலிப் சுந்தரம். I am disappointed with you. It is time that you looked outside your cabin. As a CGM one doesn’t normally confine oneself to his role alone. You may go.’ என்றவர், விட்டால் போதும் என்று வெளியேற நினைத்த சுந்தரத்தை நடுத்து நிறுத்தினார். ‘I need not tell you this. Whatever transpired in this room should remain only between the two of us. Is that clear?’
‘Yes sir.’
இரண்டு வாரங்கள் கழித்து ரிசர்வ் வங்கியிலிருந்து வந்த ரகசிய உத்தரவைக் கண்டதும் இத்தனை தயக்கங்களுடன் எப்படி அவர்களால் மாதவனையே அடுத்த சேர்மனாக அதுவும் போர்ட் பரிந்துரைத்த இரண்டு வருட கால அளவிற்கு மாறாக எடுத்தவுடனே நான்கு வருடங்களுக்கு நியமிக்க முடிந்தது! என்று வியந்துபோனார் சுந்தரம்.
‘என்ன வே சப்தத்தையே காணோம். எத்தன மணி நேரம் இந்த ஃபோன்ல நா தொங்கறது. அங்கன இருக்கீராய்யா?’
செவியிலறைந்த நாடாரின் குரல் கேட்டு அதிர்ந்த சுந்தரம் தன் நினைவுகளிலிருந்து மீண்டார்.
‘என்ன சார்?’ என்றார்.
‘நாசமா போச்சி. இன்னைக்கி என்னாச்சி சுந்தரம் உங்களுக்கு? அந்த மாதவன ஏன் நாலு வருஷத்துக்கு வச்சிருக்காங்கன்னு விசாரிச்சீங்களான்னு கேட்டேன். பதிலே சொல்லாம என்ன ரெண்டு மூனு நிமிஷம் தொங்க வச்சிட்டு எந்த உலகத்துக்கு போயிட்டீங்க?’
‘சாரி சார். அப்படி விசாரிக்கறது நல்லாயிருக்காது சார்.’
‘அட என்னய்யா சி.ஜி.எம் நீரு? இதையெல்லாம் காதும் காதும் வச்சா மாதிரி கேட்டு தெரிஞ்சிக்க வேணாமா? உங்க கூட பேசி எனக்கு நேரம் போனதுதான் மிச்சம். போயி தனியா பொங்கி சாப்டுட்டு தூங்கும்.. இப்படியே போனா சி.ஜி.எம்மாவே ரிடையர்ட் ஆயிர வேண்டியதுதான். வச்சிடறேன்.’
அப்பாடா விட்டது தொல்லை என்ற நினைப்பில் இணைப்பைத் துண்டிக்கவிருந்த சுந்தரத்தை, ‘உம்ம மொபைல்ல ஆஃப் பண்ணிராதேயும். ராத்திரி எந்த நேரத்துலயும் தேவைப்பட்டா கூப்பிடுவேன். இன்னைக்கி இதப் பத்தி எங்களுக்குள்ள பேசப்போறோம்னு தெரியுமில்லய்யா.’ என்ற நாடாரின் குரல் ‘இன்னும் உம்மை விடவில்லை’ என்று எச்சரித்தது.
மனதில் எழுந்த சோர்வுடன் இணைப்பைத் துண்டித்துவிட்டு தன் மேசையின் மேல் வெள்ளி சட்டத்திற்குள் முடங்கிப் போயிருந்த தன் மனைவியின் முகத்தைப் பார்த்தார். ‘நீ போய் சேர்ந்ததிலிருந்தே இந்த சீட்ல எனக்கு எந்தவித ஒட்டுதலும் இல்லாம போயிருச்சிடி.. பேசாம போறும்னு விட்டுட்டு வேதம் போதிக்க போயிரலாமான்னு தோனுது.’ என்று முனகியவாறே தன் மனையின் புகைப்படத்துக்கருகில் திருமண கோலத்தில் இருந்த தன் வளர்ப்பு மகள், மருமகன் இருவரின் புகைப்படத்தை பாசத்துடன் வருடினார். ‘பேசாம கொஞ்ச நாளைக்கு உங்கூட வந்து இருக்கலாம்னு பாக்கறேன். வரட்டுமாப்பா?’ என்றார்.
பிறகு எழுந்து தன் முன்னே இருந்த லாப் டாப்பை அணைத்து ரீ சார்ஜர் கேபிளுடன் அதனுடைய பையில் வைத்து மூடி கையில் பிடித்துக் கொண்டார். அறை விளக்கை அணைத்துவிட்டு அறையைப் பூட்டிக்கொண்டு வெளியேறினார்.
வங்கியின் கீழ்தளத்திலிருந்த கார் பார்க்கிற்கு லிஃப்ட் மூலம் இறங்கினார். சனிக்கிழமைகளில் அலுவலகம் அரைநாள் என்பதால் பகல் இரண்டு மணிக்கே தன்னுடைய வாகன ஓட்டுனரை அனுப்பிவிடுவது வழக்கம். சனி, ஞாயிறுகளில் அவர்தான் அவருக்கு ஓட்டுனர்.
காரில் ஏறிக்கொண்டு அவருக்கென கேட்டைத் திறந்து வைத்த காவலாளியை நோக்கி உதட்டில் புன்னகையுடன் தன் வலது கரத்தால் சல்யூட் வைத்துவிட்டு வெளியேறினார்.
அவருடைய வாகனம் வெளியேறியதும் கேட்டை மூடிய காவலாளியின் முகத்தில் அவனையுமறியாமல் சந்தோஷம் தென்பட்டது.
‘சுந்தரம் சார் எங்க அந்த சேது சார் எங்க? இவருக்கு போயி இப்படி தனியா ஒரு வாழ்க்கை.. பாவம் மனுஷன்.. வீட்ல போறதுக்கும் ஒரு காரணம் வேணுமில்ல.. எல்லாம் தலைவிதி. சரி. ஆண்டிக்கு எதுக்கு அம்பார கதை? நம்ம பொளப்பே இங்க நாறுது..’ என்று முனகியவாறு தன்னுடைய சிறு மர அறையை நோக்கி நடந்தான் காவலாளி முருகைய்யன்.
***
மாணிக்கம் நாடாரின் சொகுசு கார் அந்த பிரம்மாண்ட பங்களாவில் நுழைந்த போது காரில் இருந்த ரேடியம் டிஜிட்டல் கடிகாரத்தில் இரவு மணி 11.00ஐ கடந்திருந்தது.
ஆனால், சென்னை-மகாபலிபுரம் சாலையில் அடர்ந்து வளர்ந்திருந்த் சவுக்கு மர தோப்பிற்குள்ளே இருந்த அந்த பிரம்மாண்ட மாளிகையின் எல்லா விளக்குகளும் எரிய ஜகஜ்ஜோதியாக காட்சியளித்தது.
போர்ட்டிகோ என்ற பெயரில் பரந்து விரிந்து கிடந்த அந்த வளாகத்தில் அணிவகுத்து நின்ற சொகுசு கார்களைப் பார்த்த நாடார் முகம் சுளித்தார், ‘ஏம்லே டிரைவரு, இன்னைக்கிம் நீ தான் கடைசி போலருக்கு? என்னைக்கிய்யா என்ன மொதல்ல கொண்டு சேக்க போற? நீயும் உன் டிரைவிங்கும்.. சரி, சரி வந்து கதவ தெற, என்ன எளவுக்கு இது நா தொறந்தா தொறக்க மாட்டேங்குது? ஒனக்கு சரியாத்தான்யா பேரு வச்சிருக்கான் உங்கப்பன். என்ன மந்திரம் பண்றியோ நீ கைய வச்சாத்தான் தொறக்குது.. வா, வா. அந்த நாதாரிப்பயக மூஞ்சில முளிக்கணும்னு நெனச்சாவே குமட்டிக்கிட்டு வருது.. இன்னைக்கி குடிச்சிப்புட்டு என்னத்தையெல்லாம் ஒளறப் போறானுவளோ.. எல்லாம் தலையெளுத்து. காசையும் போட்டுப்புட்டு.. என்ன எளவோ போ.. ’
அடக்க மாட்டாமல் வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்ட ஓட்டுனர் மந்திரசாமி காரிலிருந்து இறங்கி ஓடிச் சென்று பின் கதவைத் திறக்க, இறங்கி தனக்குள்ளேயே முனகிக்கொண்டு சென்ற தன் முதலாளியையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டு நின்றான்.
தொடரும்..
5 comments:
ரொம்பவே நல்லா ஆரம்பிச்சிருக்கீங்க. சிறிது காலம் ஒரு வங்கியில் பணிபுரிந்ததால், சுவாரசியம் சற்று கூடுதலாகவே.
திரும்பி பார்க்கிறேன், மற்றும் வேறு பல பதிவுகளை இங்கு போடுவதாக இருந்தால், ஸூரியனுக்காக ஒரு தனிப்பதிவு தொடங்கலாமே.
ராஜேஷ்
வாங்க ராஜேஷ்,
இந்த பதிவில என்னுடைய கற்பனை கதைகள் மட்டுமே போடுவது வழக்கம்.
இன்னைக்கி திரும்பிப் பார்க்கிறேன் பதிவ இதுல போட்டது ஒரு ஓவர்சைட், தப்பு. அவ்வளவுதான்.
இன்னைக்கே டெலீட் பண்ணிருவேன்.
வங்கியின் பொறுப்புகளும் தகவல்களும் கொஞ்சம் புதிதாக இருந்தாலும் கதையைச் சுளுவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. உங்கள் பலமே மனிதர்களின் குணச்சித்திரங்களைக் கையாளுவதுதான். அதை மீண்டும் நீரூபித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றுதான் இப்பொழுது சொல்லத் தோன்றுகின்றது. தொடர்ந்து ஒளிரட்டும் இந்தச் சூரியன்.
வாங்க அமைதி விரும்பி..
அடடா உங்க புனைப் பெயர் அருமையா இருக்குங்க.
வெறும் ஆஃபீஸ் விஷயம்தான் எழுதியிருக்கேன். அதுவே சுவாரஸ்யமா இருக்கா? பரவால்லை..
உங்களுக்கு நன்றி.
வாங்க ராகவன்,
வங்கியின் பொறுப்புகளும் தகவல்களும் கொஞ்சம் புதிதாக இருந்தாலும் கதையைச் சுளுவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. //
அது போதும்.. வங்கிகளுடைய செயலபாடுகளை எல்லோருக்கும் புரியறா மாதிரி எழுதணும்னுதான் முயற்சி பண்றேன்.
இனியும் முயற்சி பண்ணனும். இல்லன்னா ரெண்டு மூனு எபிசோடுக்கப்புறம் படிக்கறவங்களோட இண்ட்ரஸ்ட் போயிரும்.
Post a Comment