11.1.06

சூரியன் - 3

இடம்: மும்பை ஜூஹு கடற்கரை

அஸ்தமன மஞ்சள் சூரியன் முழுவட்டமாக தூரத்தில் இப்போதோ அப்போதோ என விழ காத்திருந்தான். தொடுவானத்திலிருந்து சேறும் சதுப்புமாயிருந்த கரை மட்டும் நேர்கோடாய் கடலின் குறுக்கே நீஈஈஈண்ட மஞ்சள் ஒற்றையடி பாதை.

தொடுவானம் முழுவதும் மஞ்சள் பூசி குளித்தது போல்.. பார்க்க மிகவும் ரம்மியமாயிருந்தது..

கடற்கரையோ அதற்கு நேர் எதிர். ஒரே குப்பையும் கூளமும்.. பார்க்கவே அருவருப்பாய். சாட் ஐயிட்டங்களை மடித்து கொடுத்த பழைய செய்தித்தாள்கள், எங்கு பார்த்தாலும் சிந்தி சிதறி கிடந்த பேல் பூரி. மசாலாவைப் பூசிக்கொண்டிருந்த அரிசிப் பொறி, காலியானதும் உயரே தூக்கியெறிந்து அவை கீழை விழுவதற்குமுன் கால்பந்தாய் உதைத்து எறியப்பட்ட ஐஸ்க்ரீம் கப்புகள், அருவருப்புடன் முகத்தை சுளித்தாள் மைதிலி.

இந்த மும்பைவாசிகளுக்கு விவஸ்தையே கிடையாது. எங்க வந்து, என்னத்த சாப்பிடறதுங்கற விவஸ்தையே இல்லாம.. வீட்ட மட்டும் சுத்தமா வச்சிக்கிட்டா போறும்கற மனப்பான்மை.. நல்லா, மாடர்னா ட்ரஸ் பண்ணிட்டு வந்தா மட்டும் போறுமாக்கும்? ஸ்டுப்பிட்..

மும்பையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் மைதிலி இன்னும் சென்னை பெண்ணாகவே இருந்தாள். சென்னை மரீனா கடற்கரையை விட்டுவிட்டுப் பார்த்தால் சென்னை கடற்கரை எவ்வளவு க்ளீனா இருக்கும்? பெசண்ட் நகர் பீச்! அத்தோட கம்பேர் பண்ணா இது சரியான கச்சரா.. கக்கூஸ் மாதிரி.. சே.. இந்த ஆளுங்க எப்பத்தான் திருந்தப் போறோங்களோன்னு தெரியலை..

இந்த சீனி வேற. அசிங்கம் பிடிச்ச இந்த பீச்சிக்குத்தான் வரணும்னு பிடிவாதம் பிடிப்பான். அது சரி.. அவன் டேஸ்ட் அப்படி.. சாயம் போன ஜீன்ஸ், பத்து நாளாயிருக்கும் தன்னியில நனைச்சின்னு நினைக்கறா மாதிரி கலர்ல ஒரு டீ ஷர்ட்.. மூனு நாளா வழிக்காத மீசை, தாடி.. மூனு மாசமா திருத்தாத தலை முடி.. ஹிப்பி மாதிரி காதுக்கு கீழ வளர்ந்து.. பார்த்தா ஒரு பேங்கோட சேர்மனாவப் போறவரோட மகன் மாதிரியா இருக்கான்?

இவன் கிட்ட என்னத்த பாத்து மயங்கிப் போய் நிக்கறேன் நான்?

‘என்ன மை..? ஒன்னுமே பேசாம எங்கயோ பாத்துக்கிட்டிருக்கற? Say something man!’

சட்டென்று நினைவுகள் கலைந்தவளாய் திரும்பிப் பார்த்தாள் மைதிலி..

எத்தனை முறை சொன்னாலும் மைதிலி என்ற அழகான பெயரை.. மை.. சாயம்னு அசிங்கமாத்தான் கூப்டுவான்..

‘என்ன கேட்டே?’

தோளைக் குலுக்கிக் கொண்டு முகத்தை சுளித்தான் சீனிவாசன். ‘இல்ல, நான் கேட்டதுக்கு பதிலையே காணோமே..?’

மைதிலிக்கு புரியவில்லை.. ‘புரியலை?’

சீனி அலுப்புடன் பார்த்தான். ‘நான் சென்னைக்கு போமாட்டேன்னு சொன்னேனே.. அதப் பத்தி.’

இப்போது மைதிலி அலுத்துக்கொண்டாள். ‘உன் ஐடியாவுக்கு நா ஏற்கனவே மறுப்பு சொல்லியாச்சி. சும்மா, சும்மா கேட்டா?’

‘நீ என்ன சொன்னே?’

மைதிலி அலுப்புடன் கடலையே பார்த்துக்கொண்டிருந்தாள். சற்று முன் வரை விழப்போகிறேன் என்று பயமுறுத்திக் கொண்டிருந்த மஞ்சள் வட்டத்தை சுத்தமாய் காணோம். ‘நான் ஒரு நிமிஷம்தானே சீனி பக்கம் பார்த்தேன். அதுக்குள்ள கோச்சிக்கிட்டு விழுந்துட்டியா?’ என்று முனுமுனுத்தாள்.


‘என்னத்த மை.. முனகுற? யார்கிட்ட பேசின இப்ப? உன்கிட்டவேவா?’

'ஆமா.’

‘என்னன்னு?’

‘இந்த மர மண்டைக்கி எத்தன தரம் சொல்றதுன்னு.’

‘யார் மரமண்டை? நானா?’

மைதிலிக்கு சிரிப்பு வந்தது. மரமண்டைன்னு சொன்னா மாத்தரம் கோச்சிக்கறான். ஒரு விஷயத்த புரிஞ்சிக்கறதுக்கு பத்து தரம் சொல்ல வேண்டியிருக்கு.. சரியா கூமுட்டை.. மாதவன் அங்கிளுக்கும் சரோ ஆன்டிக்கும் பொறந்த பையனா நீ? நம்பவே முடியலைடா.. சொன்னா கோபம் மட்டும் மூக்கு மேல வந்துரும்.

‘ஏய் மை.. என்னாச்சி? மறுபடியும் சைலண்டாயிட்டே?’

மைதிலி ஒரு அலுப்பு பெருமூச்சுடன் திரும்பி அவனைப் பார்த்தாள். ‘சரி, மறுபடியும் கேக்கறேன். உனக்கு ஏன் சென்னைக்கு அப்பா, அம்மா கூட போக பிடிக்கலை? ஒரு ப்ளாசிபிளான காரணம் இருக்கா? இருந்தா சொல்லு. கேக்கறேன்.’

சீனிவாசன் கையிலிருந்த ஐஸ்க்ரீம் கப்பை மேலே தூக்கி போட்டு அது கீழே விழ வலதுகையால் டென்னிஸ் வீரனைப் போல ஓங்கி அடித்தான். அது நேரே பறந்து போய் ஜாகிங் சென்று கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணின் பின்புறத்தை தாக்க அவள் நின்று திரும்பி ஒரு முறை முறைத்தாள். பிறகு மைதிலியின் அழகிய சிரிப்பால் சமாதானமாகி தன் ஓட்டத்தை தொடர்ந்தாள்..

‘சீனி.. உங்கிட்ட எத்தன தரம் சொல்லிருக்கேன். இந்த மாதிரி லிட்டர் பண்றது நேக்கு பிடிக்காதுன்னு?’

‘சாரி மை.. அப்பப்ப நீ சொல்றா மாதிரி எனக்குள்ளருக்கற சைல்ட் வெளிய வந்துருது.. என்ன பண்ண சொல்ற?’

குழந்தைத் தனமான அவனுடைய செயலும் அதற்கு அவனளித்த விளக்கமும் சிரிப்பை வரவழைத்தாலும் தான் சிரித்தால் அவனுடன் பேச வந்த விஷயம் கெட்டுவிடும் என்று நினைத்தாள் மைதிலி.

‘சரி சரி.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. Why don’t you want to go to Chennai?’

‘It is so straight man.”

மைதிலி ஒன்றும் புரியாமல் பார்த்தாள். ‘நீ என்ன சொல்ற?’

‘உனக்கு சொன்னா புரியாது. அங்க எல்லாரும் ரொம்ப சீரியசான ஆளுங்க.. ராத்திரி ஒம்போது மணியானா லைட்ட அனைச்சிட்டு தூங்கற ஜாதி....’

‘சோ?’

‘என்ன அவ்வளவு ஈசியா சொல்லிட்டே? இந்த மாதிரி ஒரு அழகான பொண்ணு கூட சாயந்திரம் ஏழு, ஏழரை மணிக்கு நிம்மதியா பீச்சில ஒக்காந்து பேசக்கூட முடியாது.. தெரியுமா?’

மைதிலிக்கு லேசாய் புரிந்தது. அவளும் கேள்விப் பட்டிருக்கிறாள். அவளுடைய அம்மாவுடைய குடும்பம் முழுவதும் காலம் காலமாக சென்னை திருவல்லிக்கேணியில்தான் வாசம். இரண்டொரு முறை மார்கழி மாச ம்யூசிக் சீசனுக்காக தன் பெற்றோருடன் சென்றிருக்கிறாள்.

பட்டுப் புடவையும், தலை நிறைய பூவும், கழுத்து நிறைய தங்க நகைகளும், வைர மூக்குத்தியும்.. இதை விட்டால் பெண்களுக்கு வேறு விஷயமே இல்லை என்பதுபோல் வித்வான்களின் கச்சேரிக்கு இணையாக பெண்களின் அரட்டைக் கச்சேரி நடப்பதைப் பார்த்து சலித்து போயிருக்கிறாள்.

‘சரி ஒத்துக்கறேன். ஆனா அங்கிளும் ஆன்டியும் போனதுக்கப்புறம் நீ எங்க தங்கறதா உத்தேசம்? இப்ப இருக்கற வீடு பாங்கோடதுன்னு தானே சொல்லிருக்கே?’

சீனிவாசன் விஷமத்துடன் அவளையே பார்த்தான். ‘அதான் நீ இருக்கியே?’

மைதிலிக்கு எரிச்சல் வந்தது. ‘என்னது? நான் இருக்கேனா? என் ஃப்ளாட்ல வந்து தங்கறேங்கறயா? எங்காத்துல கொன்னே போட்றுவா.’

சீனிவாசன் சிரித்தான். ‘ஏய் Don’t get upset man. I won’t put you in distress. No way. நான் சொல்ல வந்தது வேற.’

மைதிலி குழப்பத்துடன் பார்த்தாள். ‘சரி நீ என்னதான் சொல்ல வரே.. சொல்லேன்.. இன்னைக்கி ஆத்துக்கு சீக்கிரம் வரேன்னு சொல்லியிருக்கேன். சீக்கிரம் சொல்லு..’

சீனிவாசன் பதில் சொல்லாமல் அவளுடைய முகத்தையே பார்த்தான். ‘ஏய்.. என்ன பொண்ணு, கிண்ணு பாக்க வராங்களா?’

மைதிலி ஒரு பிடி கடல் மணலையெடுத்து அவன் மேல் எறிய அவன் லாவகமாக ஒதுங்கி தப்பித்துக் கொண்டு வாய் விட்டு சிரித்தான். கடல் மணலில் ஓடி விளையாடிக்கொண்டிருந்த வாண்டுகள் சில அவர்களிருவரையும் பார்த்து சிரித்தன.

மைதிலி அவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு சீனிவாசனைப் பார்த்தாள். ‘சீனி, விளையாடத. பி சீரியஸ். முதல்ல உங்கப்பா இதுக்கு சம்மதிக்கணும். அப்படியே சம்மதிச்சாலும் நீ இங்க எங்க தங்கறதா உத்தேசம்? அதச் சொல்லு.’

சீனிவாசன் சிறிது நேரம் பதில் பேசாமல் ஓடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். இந்த வயசுலயே நின்னுட்டிருந்தா லைஃப் எவ்வளவு ஈசியா இருக்கும்? I really envy them..

திரும்பி மைதிலியைப் பார்த்தான். ‘What does she want from me? Love? Life? Am I capable of giving her any of these things?’

‘என்ன சீனி நா கேட்டுக்கிட்டே இருக்கேன்.. நீ சும்மா பாத்துக்கிட்டே இருக்கே?’

‘Shall I ask you one thing மை..’

‘என்னத்த புதுசா கேக்க போற? மை.. என் கிட்ட நீ என்னத்த எதிர்பாக்கறே? இதான? இதையே நீ எத்தன தடவை தான் கேப்பே..?’

சீனிவாசன் சட்டென்று கண்களை இறுக மூடிக்கொண்டு கடல் மணலில் அப்படியே பின்பக்கமாய் சரிந்து படுத்துக் கொண்டான்.

நொடிகள், நிமிடங்களாக அவனிடமிருந்து பதில் வராததால் மைதிலி எழுந்து நின்று தன் கால்சட்டை பின்புறத்திலிருந்த கடல் மணலை தட்டி விட்டுவிட்டு அவனை குனிந்து பார்த்தாள்.

‘சாரி சீனி.. எனக்கு லேட்டாயிருச்சி.. நீ வேணும்னா இங்கயே கூட படுத்து தூங்கிருவே.. என்னால முடியாது.. நாளைக்காவது நான் கேட்டதுக்கு பதில சொல்லு.. குட் நைட்.. நா போறேன்.. நாளைக்கு பாக்கலாம்..’

அவனுடைய பதிலுக்கு காத்திராமல் அவள் குனிந்து தன் கைப்பையை எடுத்துக்கொண்டு நூறடி தூரத்திலிருந்த டாக்சி ஸ்டாண்டை நோக்கி நடந்தாள்..

சீனிவாசன் அவள் செல்வதை சட்டை செய்யாமல் படுத்தபடியே கண்களைத் திறந்து நீலமாய் மாறிக்கொண்டிருந்த வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்,. கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரை பொருட்படுத்தாமல்..I can't just leave you man, why don't you understand that...?

தொடரும்

9 comments:

Premalatha said...

I have featured you in Desipundit

G.Ragavan said...

என்னங்க இது.....இந்த சீனிய ஒரு மாதிரி ஃபங்க்கின்னு நெனச்சா...இவ்வளவு செண்ட்டியா ஆயிட்டான்.....அது சரி. இந்தச் சீனி என்ன பண்றான்? வேலை கீல பாக்குறானா? இல்ல படிக்குறானா?

இலவசக்கொத்தனார் said...

விறுவிறுப்பா போன ஒரு வங்கி கதையில திடீருன்னு தமிழ் சினிமா மாதிரி ஒரு காதல் பிரேக் போட்டுட்டீங்க. விட்டா நியூசிலாந்து போய் டூயட் பாடுவாங்க போலிருக்கே. வேணாம் வாத்தியாரே, நாம நம்ம வழியிலயே போவோம். வாங்க வங்கிக்குள்ளே.

பழூர் கார்த்தி said...

என்னங்க ஜோசப், தீடீர்னு காதல் ரூட்ல இறங்கிட்டீங்க.. பரவால்ல.. நல்லாத்தேன் இருக்கு.. ஆமா இந்த சீனுப்பய கேரக்டரையே புரிஞ்சுக்க முடியுலயே.. ஏன் அழுவுறான் ??

***

உங்க காதல் எபிஸோடுகளுக்கு, காதல் கவிதைகள் வேண்டுமானால் என்னிடம் சொல்லுங்கள்.. ஹி..ஹி...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க பிரேமலதா,

Thank you so much.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

இந்த சீனிய ஒரு மாதிரி ஃபங்க்கின்னு நெனச்சா...இவ்வளவு செண்ட்டியா ஆயிட்டான்//

ராகவன் உங்க ஸ்பெஷாலிட்டியே இப்படி கரெக்டா அப்சர்வ் பண்றதுதான்.

நான் நிஜ வாழ்க்கையில் பார்த்த ஒரு காரெக்டரின் பிரதிபலிப்புதான் இந்த சீனி. இவர் யாராலும் புரிந்துக்கொள்ள முடியாத ஒருவர். அதற்கு காரணங்கள் இருக்கு.. பின்னால சொல்றேன்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஈ.கொத்தனார்,

உங்க அவசரம் புரியுது. ஆனா வங்கி சமாச்சாரங்கள மாத்திரம் எழுதுனா எல்லாருக்கும் போரடிக்காம இருக்கணுமே.. அதுவுமில்லாம ஒரு பேங்குனா அதுல எத்தன பேரு வேலை செய்வாங்க.. அவங்களுக்கும் ஒரு பின்னணி இருக்கும் இல்ல. இந்த சீனியோட வாழ்க்கை நம்ம மெயின் கதாநாயகனோட பின்னணியாச்சே..
அதான்..

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க சோ. பையன்,

உங்க காதல் எபிஸோடுகளுக்கு, காதல் கவிதைகள் வேண்டுமானால் என்னிடம் சொல்லுங்கள்.. ஹி..ஹி... //

நிச்சயமாங்க.. இன்னொரு காதல் ஜோடி அடுத்த வாரத்துல அறிமுகமாகும். என்னுடைய Intro பதிவ பார்த்தீங்கனா தெரியும்.. காதலிச்சி பிரிஞ்சி போற ஜோடி.. அதுக்கு ஒரு கவிதைய எழுதி உங்க பின்னூட்டத்துல போட்டாலும் சரி.. இல்ல எனக்கு மெய்ல் பண்ணீங்கன்னா அத உங்க பேரோட என் பதிவில போட்டுடறேன்.. என்ன சரிதானே.. எனக்கு கவிதையெல்லாம் எழுத வராது..

டிபிஆர்.ஜோசப் said...

சோ.பையன்!

ஆமா இந்த சீனுப்பய கேரக்டரையே புரிஞ்சுக்க முடியுலயே.. ஏன் அழுவுறான் ??//

ராகவனுக்கு கொடுத்த பதிலை படிங்க.