முரளிதரன் இருவரையும் பார்த்து மெலிதாய் புன்னகைத்தான். ‘சரி ஜி.எம். சார். நான் இப்பவே போன்ல பேசி தீர்க்கப் பாக்கறேன். முடியலைன்னா காலைல ஃப்ளைட் பிடிச்சி போய்ட்டு வரேன்..’ என்று கூறிவிட்டு சேதுமாதவனைப் பார்த்து, ‘ஞான் வராம் சார். அவ்விடருந்து விளிக்காம்.’ என்று ஒப்புக்குக் கூறிவிட்டு மாடிப் படியில் இறங்கினான்.
அவனுடைய தலை மறையும்வரை காத்திருந்த ஷண்முகசுந்தரம் திரும்பி சேதுமாதவனைப் பார்த்தார்.
‘என்ன மிஸ்டர் சேது, நீங்க பாட்டுக்கு அவர டு அண்ட் ஃப்ரோ ப்ளைட்டுக்கு சம்மதிச்சிட்டீங்களே is he eligible for that?’
ஏற்கனவே ஐந்தாறு பெக்குகளை விழுங்கியிருந்த சேதுமாதவன் அவரைப் பார்த்து அலட்சியத்துடன் சிரித்தார்.
ஷண்முகத்திற்கு கோபம் வந்தது. குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சுன்னு நான் எங்கே சாங்ஷன் பண்ணேன்னு இந்த ஆள் நாளைக்கு கால் மாறிட்டா எச்.ஆர் ஹெட்டுகிட்ட யார் பேசறது?
கோபத்தை அடக்கிக் கொண்டு. ‘என்ன சார்.. நீங்க பாட்டுக்கு சிரிக்கிறீங்க? எச்.ஆர் நம்ம வந்தனா மேடத்துக்கு கீழ வருது. அந்த லேடி நாளைக்கு நம்மள கேக்காமயே இவரோட டி.ஏ. பில்ல ரிஜெக்ட் பண்ணிட்டா?’
சேதுமாதவன் அதற்கும் சிரித்தார்.
இந்தாளுக்கு நான் சொல்றது புரியுதான்னே தெரியலையே என்று உள்ளுக்குள் நொந்து போய் எழுந்து நின்றார் ஷண்முகம்.
‘ஓகே மிஸ்டர் சேது. எனக்கு லேட்டாகுது நான் கிளம்பறேன்.’
சேதுமாதவன் தன் இருக்கையிலிருந்து எழாமலே காலியாகிப் போன தன்னுடைய டம்ளரில் அடுத்த பெக்கை ஊற்றுவதில் குறியாயிருந்தார். அவர் கையிலிருந்த பாட்டில் டம்ளரின் வாய்க்குள் நிற்காமல் இங்கும் அங்குமாக தடுமாறியது.
அதைப் பார்த்தும் பார்க்காததுபோல் திரும்பி கீழே டைனிங் டேபிளில் உணவுப் பாத்திரங்களை தன் முதலாளிக்கும் யாரோ ஒரு விருந்தாளிக்கும் அரேஞ் செய்துக் கொண்டிருப்பதையேப் பார்த்துக் கொண்டு நின்றார்.
‘என்ன சார் ஏதோ கேட்டீங்க, அப்புறம் எழுந்து நின்னுக்கிட்டு போறேங்கறீங்க?’
ஷண்முகம் திரும்பி போதையின் உச்சியிலிருந்த எம்.டியைப் பார்த்தார். சோ.. நிதானத்துலதான் இருக்கான் போலருக்குது.. கேட்டும் கேக்காதமாதிரி இருந்திருக்கான்.
‘நீங்கதான் கேக்காத மாதிரி இருந்தீங்களே சேது.. அதான் இனி என்ன பேசினாலும் உங்களுக்கு கேக்கப் போறதில்லைன்னு நினைச்சி... அத்தோட எனக்கு ஒரு முக்கியமான ப்ரோக்ராம் இருக்கு..’
'ஹே! என்ன முக்கியமான ப்ரோக்ராம் சார்? கொஞ்ச நேரமாச்சும் இருந்துட்டு போங்க. உக்காருங்க சார்.’ சேதுமாதவன் எழுந்திருக்க முடியாமல் எழுந்து நின்று அவருடைய கையைப் பிடித்து இழுத்து மீண்டும் இருக்கையில் அமர்த்தினார்.
‘சார்.. நீங்க யாரு? இப்போதைக்கு இந்த பேங்கோட ஆக்டிங் சேர்மன். திங்கக் கிழமை வந்து அந்த மாதவன் சார்ஜ் எடுக்கற வரைக்கும் நீங்கதான் இந்த பேங்கோட ஹெட்.. நீங்க ஒன்னு சாங்ஷன் பண்ணா அத தட்டிக் கேக்கறதுக்கு வேற யாருக்கு சார் அதிகாரம் இருக்கு? யாரு, அந்த கேடு கெட்ட வந்தனா கேப்பான்னா பாக்கறீங்க? அவள பத்தி நான் சொல்லட்டுமா? வேணாம் நீங்க பெரிய பக்திமான். அந்த மாதிரி வார்த்தைங்கள உங்கக் கிட்ட நான் ஃப்ரீயா சொல்ல முடியாது.. சொல்லவும் மாட்டேன்..’
இதென்னடா பெரிய ரோதனை.. என்று நினைத்தார் ஷண்முகம். இருப்பினும் அவரை விரோதித்துக் கொண்டு செல்லவும் விரும்பவில்லை.. சரி பேசித் தொலைக்கட்டும் என்று நினைத்தார். கைக்கடிகாரம் மணி 9.00 மணி என்றது. இன்னும் அரைமணி நேரம்.. இங்கிருந்து புறப்பட்டாலும் ம்யூசிக் அக்காடமிக்கு மேக்ஸிமம் பதினைஞ்சி நிமிஷம்.. ப்ரோக்ராம் துவங்குறதுக்கு முன்னால போயிரலாம்.
‘அதெல்லாம் இப்ப எதுக்கு சார்? அந்த லேடியோட அதிகாரத்துல வர டிவிஷன் வேலயில சேர்மனேயானாலும் தலையிடறது சரியில்லையே.. அவங்களும் ஜி.எம் ராங்க்ல இருக்கறவங்கதானே..’
அவர் கூறி முடிப்பதற்குள் அட்டகாசமாக வீரப்பா சிரிப்பு சிரித்தவரை ஒருவித அருவறுப்புடன் பார்த்தார் ஷண்முகம்.
‘என்ன சார் நீங்க? சரி.. நீங்க சொல்றா மாதிரி இந்த கல்கத்தா விஷயமும் எச்.ஆர் சம்பந்தப்பட்டதுதானே.. நியாயமா அந்தம்மா இருந்து இத எப்படி சால்வ் பண்றதுன்னு யோசிச்சிருக்கணும் இல்லே?’
ஷண்முகம் திரும்பி அவரைப் பார்த்தார். படுபாவி, ஏழெட்டு பெக் அடிச்சியும் எவ்வளவு சுதாரிப்பா இருக்கான்?
‘என்ன மிஸ்டர் மாதவன், அந்த லேடிக்கு இன்ஃபர்மேஷனே நீங்க கொடுக்கல போலருக்கே. கல்கத்தா ஜோனல் மேனேஜர் உங்கள கூப்டுதானே விஷயமே சொல்லியிருக்கார். அதுக்கப்புறம் நீங்க சொல்லித்தானே எனக்கே தெரிஞ்சது?’
சேதுமாதவன் ஏளனத்துடன் அவரைப் பார்த்தார். இப்ப தெரியுதாடா யார் இந்த பேங்கோட நிஜ சேர்மன்னு.. உன்னால சேர்மன் மாதிரி ஆக்டிங்தான் குடுக்க முடியும்? ஞானாக்கும் நிஜ சேர்மன்.. அந்த சோமசுந்தரம்தான் ஒரு இடியட்.. உன்னப் போயி ப்ரொப்போஸ் பண்ணான்.. அந்த பாமரப் பயு நாடானும் ஆமாம் சாமின்னுட்டான். தெலுங்கனும், தமிழன்களுமா சேர்ந்து என்ன கவுத்துட்டீங்க.
‘அதுலருந்தே உங்களுக்கு தெரிஞ்சிருக்கணுமே சார் அந்தம்மாவ இன்னும் யாரும் ஜி.எம் மா ரிக்கக்னைஸ் பண்ணலைன்னு. சரி, நான் யார் சார்?’
ஷண்முகம் குழப்பத்துடன் அவரைப் பார்த்தார். இந்த ஆளுக்கு போதையில தான் யார்னே மறந்துப் போச்சா? இல்ல, ‘டேய், நான் யாருன்னு உனக்கு தெரியுதா’ங்கறா மாதிரி கேக்கறானா?
‘நீங்க என்ன மிஸ்டர் மாதவன் சொல்றீங்க?’
‘சார் நான் கேட்டதுக்கு ஸ்டெர்ய்ட்டா பதில் சொல்லுங்க? நான் குடிச்சிருக்கேன்னு எதையாச்சும் சொல்லி மழுப்பாதீங்க. சொல்லுங்க நான் யார் இந்த பேங்க்ல..?’
‘நீங்க எம்.டி.’
‘ரைட்.. சேர்மனுக்கு அடுத்தபடியான பொசிஷன்?’
‘யெஸ் யூ ஆர்.’
‘அப்ப எந்த ஜி.எம்க்கு கீழ இருக்கற டிவிஷனா இருந்தா என்ன? அதுவும் என் கீழதான வருது? இப்ப ஆக்டிங் சேர்மனா நீங்க இருக்கீங்க. உங்களுக்கும் அதே அதிகாரம்தானே இருக்கு.’
ஷண்முகம் அவர் கூறியதை மறுத்துப் பேச முடியாமல் வெறுமனே அவரைப் பார்த்தார். இந்த ஆளு சரியான விஷப் பாம்புன்னு சும்மாவா சொல்றாங்க? குடி போதையில இருக்கும்போதே இவ்வளவு ஷார்ப்பா சிந்திக்கற மனுஷன் நிதானமா இருக்கற நேரத்துல இன்னும் எவ்வளவு ஷார்ப்பா இருப்பான்? படிப்புல எப்படியோ, இந்த மாதிரி வேலைக்கு இந்தாளுதான் லாயக்கு.
‘நீங்க சொல்றது சரிதான் மிஸ்டர் சேது.’
‘அப்புறம் என்ன சார்? ஆஃப்டர் ஆல் டு அண்ட் ஃப்ரோ ஃப்ளைட் சார்ஜ்.. இதுக்குப் போய் இப்படி யோசிக்கறீங்க? அவன் எதுக்கு போயிருக்கான்? எவ்வளவு சென்சிட்டிவான விஷயம்? அத மட்டும் அவன் இங்கே இருந்து ஃபோன்ல காண்டாக்டட் பண்ணி அதனாலயே நாளைக்குள்ள முடிக்காம போனா உங்களுக்குத்தான சார் அவமானம்?’
அவர் சாமர்த்தியமாக கத்தியை தன் முதுகில் சொருகுவது தெரிந்தது ஷண்முகத்திற்கு.. இருந்தும் அதை மறுத்துப் பேசாமல் அவர் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தார்.
‘அந்த பெங்காலி பசங்க எப்பவுமே இப்படித்தான். கோபத்துல என்ன செய்றோம் ஏது செய்றோம்னு யோசிக்காம சீஃப் மேனேஜர ஆஃபீஸ்குள்ளேயே வச்சி அடிச்சிட்டானுங்க.. சரி.. அவன்கதான் காலிப் பசங்க.. இந்த சீஃப் மேனேஜர் உங்காளுதானே.. இந்தாளுக்கு புத்தி வேணாம்? போலீஸ்க்கு போறதுக்கு முன்னால உங்க கிட்டயாவது பேசியிருக்க வேணாம்? சரி.. ஏதோ கோபத்துல கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டான். அத உங்களுக்கு ரிப்போர்ட் பண்ணணும்னாவது தெரிய வேணாம்? நல்ல வேளை அந்தாளோட அசிஸ்டெண்ட் என்னை கூப்டு அன்னஃபிஷியலா சொல்லலன்னா? நம்ம யாருக்குமே தெரிஞ்சிருக்காது.. அப்புறம் நாளைக்கு போலீஸ் வந்து யூனியன் ஆளுங்கள விசாரிக்கிறேன் பேர்வழின்னு ஸ்டேஷனுக்கு கூட்டிக்கிட்டு போனா அவ்வளவுதான் பேங்கோட பேரு சந்தி சிரிச்சிரும்.. இத எப்படியாவது சால்வ் பண்ணா போறும்டான்னு நான் தவிச்சிக்கிட்டிருக்கேன் நீங்க என்னடான்னா டி.ஏ. பில்லைப் பத்தி கவலைப் பட்டுக்கிட்டிருக்கீங்க! என்ன சார்?’
மூச்சுவிடாமல் பேசிய சேது மாதவன் டம்ளரில் மீதியாயிருந்ததை ஒரே மடக்கில் குடித்து முடித்து எழுந்து நின்றார்.
ஷண்முகம் அவருடைய பேச்சில் இருந்த உண்மையில் ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருந்தார். அவர் சொல்றது அத்தனையும் நியாயம்தானே.. நமக்கு ஏன் இது புரியாம போச்சி?
‘என்ன ஜி.எம் சார். எங்கயோ முக்கியமான ப்ரோக்ராம் இருக்குன்னு சொன்னீங்க? இப்ப உக்காந்துக்கிட்டிருக்கீங்க?’
தள்ளாடியவாறு தன் முன்னே நின்றவரை அண்ணார்ந்து பார்த்தார் ஷண்முகம். இந்தாளோட உடம்பு தள்ளாடினாலும் மூளை பயங்கர ஸ்டெடியாத்தான் இருக்கு..
‘ஒன்னுமில்லை மிஸ்டர் சேது.. பத்து மணிக்கு ம்யூசிக் அக்காடமியில நம்ம குன்னக்குடியோட ப்ரோக்ராம் அரேஞ்ச் பண்ணியிருக்கோம். ஒரு ஃபண்ட் ரெய்சிங் பங்ஷன்.. ப்ரைவேட் ஆடியன்சுக்கு மாத்திரம். நாந்தான் ஆர்கனைசர்.. அரேஞ்ச்மெண்டெல்லாம் பண்றதுக்கு ஆளுங்க இருந்தாலும் ஆர்கனைசர்ங்கற ரீதியில நானே லேட்டாப் போனா நல்லாருக்காது.. அதான்..’
சேதுமாதவன் அலட்சியத்துடன் சிரித்தார். ‘யார் சார்.. நெத்தியில பெருசா சந்தனத்த பூசிக்கிட்டு முகத்த மங்கி மாதிரி வளைச்சிக்கிட்டு கேமராவையே பார்த்துக்கிட்டு பிடில் வாசிப்பாரே அவரா?’
சட்டென்று பொங்கி வந்த கோபத்தை சிரமப்பட்டு அடக்கினார் ஷண்முகம். கழுதைக்கு தெரியுமாடா கற்பூர வாசனை? குடிகாரப் பய.. என்ன பேச்சு பேசிறான்? சரி. இவன்கிட்ட பேசினா டைம்தான் வேஸ்ட் ஆவும்.. சமாதானமா பேசிட்டு போற வழிய பார்ப்போம்..
‘அவரேதான்.. எங்க ஊர் முருகன் கோயில புதுப்பிக்கிறோம். கோயில் குளம் மராமத்து வேலை நடந்துக்கிட்டிருக்கு. ஃபண்ட்ஸ் கொஞ்சம் ஷார்ட் ஆயிருச்சி. கும்பாபிஷேகம் சிலவு வேற இருக்கு.. அதான்.. இவரோட கச்சேரிய நமக்கு தெரிஞ்ச ஆள் ஒருத்தர் மூலமா ஃபிக்ஸ் பண்ணேன்.. காம்ப்ளிமெண்டரி பாசஸ் மட்டும்தான்.. கணிசமான தொகை கிடைக்கும்னு நினைக்கிறேன்..’
சேதுமாதன் கேலியுடன் அவரைப் பார்த்தார். ‘உங்க ஊர் கோயிலுக்கு நீங்கதான் தர்மகர்த்தாவா சார்?’
ஷண்முகம் இல்லை என்பதுபோல் தலையை அசைத்தார்.
‘சரி சார். இந்த ப்ரோக்ராம்லருந்து சுமாரா எவ்வளவு கலெக்ட் பண்ண முடியும்னு நினைக்கறீங்க?’
‘பத்து, பண்ணெண்டு லட்சம்?’
சேதுமாதவனுடைய உதடுகள் கேலியுடன் வளைந்ததைப் பார்த்த ஷண்முகம் வழக்கத்திற்கு மாறாக எரிச்சலடைந்தார். ‘என்ன சார் ஒரு மாதிரி சிரிக்கிறீங்க? இது தெய்வ காரியம் சார்..’
சேதுமாதவன் தப்பு என்பதுபோல் நக்கலாக தலையில் குட்டிக்கொண்டார். ‘தப்பா நினைச்சிக்காதீங்க ஜி.எம் சார்.. நான் சொல்ல வந்துது என்னன்னா.. நீங்க நினைச்சிருந்தா இந்த அமவுண்ட உங்க சீட்லருந்தே கலெக்ட் பண்ணியிருக்கலாமே..’
ஷண்முகம் குழப்பத்துடன் பார்த்தார். இவன் என்ன லஞ்சம் வாங்கி கோயில் கும்பாபிஷேகத்த நடத்துறதுதானேங்கறானா?
‘என்ன சார் சொல்றீங்க? சீட்லருந்தே கலெக்ட் பண்ணியிருக்கலாம்னா?’
தொடரும்..
சூரியன் 19
சேதுமாதவன் திரும்பி அவரை உற்றுப் பார்த்தார், 'சார் நீங்க பேங்கோட ஆக்டிங் சேர்மன். உங்களுக்குன்னு பெர்சனல் அண்ட் பிசினஸ் ப்ரோமோஷனல் எக்ஸ்பென்ஸ் அண்ட் டிராவலிங் அலவுன்ஸ் செலவுக்கே மாசம் ரெண்டு லட்சம்னு போர்ட் அலாட் பண்ணியிருக்கு. நீங்க சீட்ல உக்கார்ந்து சுமார் எட்டு மாசம் ஆயிருச்சி.. இதுவரைக்கும் நீங்க மொத்தமே ரெண்டு லட்சம் கூட எடுக்கலைன்னு நினைக்கிறேன்.. இன்னும் ரெண்டு நாள்தான் நீங்க சீட்ல இருக்கப் போறீங்க. மாதவன் இந்த வருஷத்துல மீதியிருக்கற மூனு மாசத்துக்குத்தான் சேர்மன்.. அவர் வந்து சார்ஜ் எடுக்கறதுக்குள்ள மீதியா இருக்கற டிஸ்க்ரெஷன் தொகை முழுசும் ட்ரா பண்ணிட வேண்டியதுதானே சார்? அத விட்டுட்டு கச்சேரி கிச்சேரி வச்சிக்கிட்டு பிச்சை எதுக்கு எடுக்கறீங்க?’
இந்தாள்கிட்ட போய் இதச் சொன்னேன் பார். என்ன செருப்பால அடிச்சிக்கணும். பேசாம ஒரு பெர்சனல் ஃபங்க்ஷன்னுட்டு போய்க் கிட்டே இருந்திருக்கணும். இவனும் இவனோட யோசனையும்..
‘அதெல்லாம் நல்லாருக்காது சார்.. அத விடுங்க.. முரளி ·ஃபோன் ஏதாச்சும் பண்ணா எனக்கு இன்·பர்மேஷன் குடுக்கறீங்களா? நான் செல்லை ஆஃப் பண்ணாம வச்சிருக்கேன்.’ என்றவாறு சோபாவிலிருந்து எழுந்து நின்றார் ஷண்முகம்.
சேதுமாதவன் அவர் கையைப் பிடித்து நிறுத்தி அவரை பார்த்தார். ‘என்ன சார் கோச்சுக்கிட்டீங்களா? சரி. அது வேணாம்.. விட்டுருங்க.. அதுக்காகத்தான என்ன விட்டுட்டு உங்கள ஆக்டிங்கா போட்டாங்க.. சரி.. வேற யோசனையிருக்கு.. சொல்லவா?
இன்னும் என்னத்தைய்யா சொல்லப் போற? ஷண்முகம் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இப்போதாவது கிளம்பினால்தான் டைமுக்கு போய் சேரமுடியும். இவன் விடமாட்டான் போலருக்கே.
இருப்பினும், ‘சரி சொல்லுங்க. என்ன சொல்லப் போறீங்க?’ என்றார்.
சேதுமாதவன் தனக்குள்ளேயே பேசிக் கொள்வதுபோல் தெரிந்தது. ‘சார்.. இப்பவே கேஷா உங்களுக்கு எவ்வளவு தேவையோ அத நான் குடுத்துடறேன்.. சாமி காரியம்.. எனக்கும் கொஞ்சம் புண்ணியம் கிடைக்கட்டுமே.. என்ன சொல்றீங்க?’
ஷண்முகம் வியப்புடன் அவரைப் பார்த்தார். என்னது, இவன் குடுக்கறானா? அதுவும் கேஷா? அவரையுமறியாமல் அவருடைய கண்கள் வீட்டை ஒருமுறை சுற்றி வந்தது.. இந்த வீட்டிற்கு அவர் பலமுறை வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் இந்த வீட்டின் பிரம்மாண்டத்தை நினைத்து அவர் வியந்திருக்கிறார். குறைந்தது ஐம்பது லட்சத்தை விழுங்கியிருக்கும் என்று நினைப்பார்.
மிஞ்சிப் போனா இந்த ஆளோட ஆவரேஜ் மாச வருமானம் போன பத்து பதினைஞ்சு வருஷத்துல ஒரு ஐம்பதாயிரம் இருக்குமா? அதுல இவ்வளவு பெரிய பங்களா எப்படி? என்று பல முறை யோசித்திருக்கிறார். இப்ப என்னடான்னா கேஷா பத்து பண்ணெண்டு லட்சம் தரேங்கறான்?
‘என்ன சார் பேச்சையும் காணோம் மூச்சையும் காணோம்?’
ஷண்முகம் அவரை வியப்புடன் பார்த்தார். பய தண்ணியடிச்சிட்டா தமிழ்கூட ரொம்ப சுத்தமா நம்ம ஊர் ஸ்லாங்கோட பேசறான் பார்.
‘இல்ல மிஸ்டர் சேது.. நீங்க எதுக்கு.. எப்படி..’
‘நாந்தான் சொன்னேனே சார்.. புண்ணியம் கிடைக்கட்டுமேன்னு தான்.. அது மட்டுமில்ல சார். வேறொரு விஷயமும் இருக்கு..’
அதான பாத்தேன். என்ன விஷயத்த கேக்கப் போறான்?. உங்க டிஸ்க்ரெஷனரியில இருக்கற மீதிய எனக்கு குடுத்துறுங்கன்னு கேக்கப் போறானா? கேட்டாலும் கேப்பான்.
‘உங்களுக்கு அறுபது வயசுக்கப்புறம் இன்னும் ரெண்டோ மூனோ வருஷம் எக்ஸ்டென்ஷன் குடுக்கப் போறதா போர்ட்ல ஒரு ப்ரொப்போசல் இருக்கு. தெரியுமா உங்களுக்கு?’
முந்தைய சேர்மன் ராகவனுக்கு ஷண்முகசுந்தரத்தின் அபார அறிவிலும், திறமையிலும் அதைவிட அவருடைய நேர்மையிலும் அபிரிதமான மதிப்பு இருந்தது. ஒருமுறை அவர்களிருவரும் தனித்திருந்தபோது , ‘என்ன சார் இது அக்கிரமம். சீனியர் எக்ஸ்யூட்டிவ் லெவல்ல இருக்கறவங்கள்லயே அதிகமான ஏரியாஸ்ல ஒர்க் பண்ணியிருக்கீங்க. உங்க சர்வீஸ்ல இது வரை ஒரு அட்வேர்ஸ் கமெண்ட் கூட இல்ல.. அப்புறம் எதுக்கு சார் உங்கள டி.ஜி.எம் லெவல்லயே போன பத்து வருஷமா வச்சிருக்காங்க? உங்கள விட மூனு நாலு வருஷம் ஜூனியர்ஸ் எல்லாம் உங்களுக்கு மேல இருக்காங்க? வாட் ஆக்சுவலி ஈஸ் தி ப்ராப்ளம்?’ என்றார்.
ஷண்முகம் பதில் கூறாமல் வெறுமனே அமர்ந்திருந்தார்.
‘இல்ல சார். நீங்க சொல்ல மாட்டீங்க. ஆனா நான் சும்மா இருக்கப் போறதில்லை.. இண்டர்வியூவும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம். அடுத்த போர்ட்ல உங்கள க்ரெடிட் ஜி.எம் போஸ்டுக்கு ப்ரொப்போஸ் பண்ணப் போறேன். நீங்க இடையில புகுந்து வேணாம்னு சொல்லாம இருந்தாப் போறும். சோமு சார் கிட்டயும், நாடார் கிட்டயும் முன்னாலயே பேசி நான் சரி பண்ணி வச்சிடறேன். அவங்க ரெண்டு பேருக்குமே உங்க மேல மதிப்பு ஜாஸ்தி சார். நம்ம சி.ஜி.எம். மிஸ்டர் ஃபிலிப் கூட இத சஜ்ஜஸ்ட பண்ணார். அதனாலதான் சொல்றேன். என்ன சொல்றீங்க?’
ஷண்முகம் அவரை அமைதியுடன் பார்த்தார். ‘சார் நான் ரிட்டையர் ஆவறதுக்கு இன்னும் ஒன்பது மாசங்கதான் இருக்கு. இப்ப போயி காண்ட்ரவர்சியலா இப்படி ஒரு ப்ரொமோஷன் தேவையா?’ என்றார்.
ராகவன் அதற்கும் ஒரு பதில் வைத்திருந்தார். ‘உங்கள யார் சார் ரிட்டையர் பண்ண விடப்போறா? சூப்பர் ஆன்யுவேஷன் டேட்டுக்கு முன்னாலயே ஐ வில் கம் அப் வித் அனதர் ப்ரொப்போசல்.’
‘என்னன்னு சார்?’ என்றார் ஷண்முகம் வியப்புடன்.
‘உங்க சர்வீசை இன்னும் மூனு வருஷத்துக்கு எக்ஸ்டெண்ட் பண்றதுக்கு, வேறெதுக்கு?’
அப்போது அவர் மறுத்துக் கூறியும் அடுத்த போர்ட் மீட்டிங்கிலேயே அவரை பொது மேலாளர்களில் ஒருவராக உயர்த்தினர்.
அவர் எதிர்பார்த்திருந்ததுபோல் அது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக வங்கியிலிருந்த யாருமே கருதவில்லை. விஷயம் வெளியில் தெரிவதற்குள் அன்றைய தினமே அவருக்கு ஆயிரத்திற்கும் மேல் வாழ்த்துத் தந்திகளே வந்து குவிந்தன.
‘என்ன ஜி.எம் சார்.. சைலண்டாயிட்டீங்க?’
தான் பொது மேலாளர் பதவிக்கு உயர்வு பெற்ற சமயத்தில் நடந்தவைகளில் மூழ்கியிருந்த ஷண்முகம் திடுக்கிட்டு தன் முன் நின்ற சேதுமாதவனைப் பார்த்தார்.
அவருடைய கேள்வி சட்டென்று நினைவுக்கு வர.., 'ஆமாம் தெரியும். ராகவன் சார் இப்படியொரு ப்ரொப்போசல் நீங்க ரிட்டையர் ஆவறதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னால வைப்பேன்னு சொன்னது நினைவிருக்கு. அதுக்கப்புறம் அவரே போர்ட் கூட ஒத்துப் போக முடியலைன்னுட்டு ரிசைன் பண்ணி போனதுக்கப்புறம் நான் மறந்துட்டேன்.. இப்ப அதுக்கென்ன?’என்றார்.
சேதுமாதவன் தன் எதிரில் நின்றவரைப் பார்த்தார். ஆள் லேசுப்பட்டவன் இல்லை.. சைலண்டா இருக்கறா மாதிரி இருந்துக்கிட்டு எல்லாத்தையும் தெரிஞ்சி வச்சிருக்கான்.. இப்ப மறந்துட்டேன்னு சொல்றதும் வேஷம்தான்.
‘அந்த எக்ஸ்டென்ஷன நீங்க வேணாம்னு சொல்லிறணும்.’
ஷண்முகம் திகைப்புடன் அவரைப் பார்த்தார். இவன் என்ன சொல்ல வரான்? இப்ப எதுக்கு இந்த பேச்சு?
‘புரியலை மிஸ்டர் சேது.. நீங்க என்ன சொல்ல வரீங்க.. ப்ளீஸ் கம் டு தி பாய்ண்ட் ஐ ம் ஆல்ரெடி லேட்..’ என்றார் எரிச்சலுடன்.
சேதுமாதவன் தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு.. ‘டோண்ட் கெட் எக்ஸைட்டட். அதுக்கு நஷ்ட ஈடாத்தான் பத்து லட்சத்த கேஷா குடுக்கறேன்னு சொல்றேன். அத வாங்கிக்கிட்டு நீங்க போயிரணும்.. ஏன்னா என்னோட சர்வீஸ் முடியறதுக்குள்ள நாளைக்கு வர்ற சேர்மனும் ராகவன மாதிரி கோச்சிக்கிட்டு போயிருவார். அந்த நேரத்துல அடுத்த சேர்மன் போஸ்ட்டுக்கு எனக்கு எதிரா யாரும் நிக்கக் கூடாது.. அதுக்குத்தான்.’
அடப்பாவி என்று நினைத்து அவரையே பார்த்தார் ஷண்முகம். அதெப்படி இவ்வளவு கரெக்டா புது சேர்மனும் கோச்சிக்கிட்டு போயிருவார்னு சொல்றான். அப்ப ராகவன் சார் போனதும் இவனோட சகுனி வேலையா? ஆக நான் ரிட்டையர் ஆகி போறதுக்கு இவன் குடுக்கற லஞ்சம் பத்து லட்சம். அத குடுத்துட்டு கடவுள் புண்ணியம் வேற? என்னத்த சொல்றது? எல்லாம் என் நேரம்? இருப்பினும் இவன் தருவதை வேண்டாம் என்று நிராகரித்தால் இவனுடைய முதல் எதிரி நாமாகிவிடுவோம். சரி, பெற்றுக் கொண்டாலும் நாம் வீடு சென்று சேர்வதற்குள்ளேயே நமக்கு வேட்டு வைக்க முயற்சித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்ன செய்யலாம்.. நைசா இந்தாளோட ப்ரொப்போசல பின்னால நிதானமா கன்சிடர் பண்றேன்னு சொல்லிட்டு போயிரணும்..
‘மிஸ்டர் சேது, நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்கிற மாட்டீங்களே..?’
சேதுமாதவன் ஆவலுடன், ‘சொல்லுங்க.’ என்றார். மவனே, நீ மட்டும் இத வாங்கிட்டே.. அடுத்த ·போன் சிபிசிஐடிக்குத்தான்..
‘இத இன்னொரு நாள் சாவகாசமா பேசலாமே..’
சை.. இப்பவும் நழுவப் பாக்கறானே.. ஆளுதான் பாக்கறதுக்கு மாங்கா மடையன் மாதிரி இருக்கான். உள்ள பயங்கர கெட்டியாருப்பான் போலருக்கு.. சரி விட்டுப் பிடிப்போம். இன்னும் முனு மாசம் இருக்கே.. அந்த ராகவன நம்ம தொல்லை தாங்காம ஓடிட்டான்.. மாதவனாயிருந்தா என்ன, எதிர்ல நிக்கற முட்டாப்பய ஷண்முகமா இருந்தா என்ன.. பாத்துக்கலாம்..
‘அப்படீங்கறீங்க? சரி.. நீங்க உங்க ப்ரோக்ராமுக்கு போங்க.. எதாச்சும் ஃபண்ட்ஸ் ஷார்ட்னா எங்கிட்ட கேக்கறதுக்கு தயங்காதீங்க.. சாமி காரியம்.. என்ன சொல்றீங்க?’
அப்பாடா.. என்றிருந்தது ஷண்முகத்திற்கு. அவரைப் பார்த்து நிம்மதியுடன் புன்னகைத்தார். ‘ஓகே மிஸ்டர் சேது.. நான் சொன்னத மறந்துராதீங்க. முரளிக்கிட்ட என் செல்ஃபோன் நம்பர் இருக்கான்னு தெரியலே.. அவன் கூப்டதும் என்னயும் அப்டேட் பண்ணா நல்லாருக்கும். தாங்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்.. ஐ வில் ரிமெம்பர் தட்.’ என்றவாறு சேதுமாதவன் பின் தொடர கடகடவென்று படிகளில் இறங்கி தன் காரை நோக்கி நடந்தார்.
போடா, போ.. ‘ஐ வில் ரிமெம்பர் தட்.’ மாங்காத்தொலி.. தானென்னடா ஓர்மிக்கறது.. ஆக உள்ளது மூனோ, நாலோ மாசம்.. நான் யாருன்னு காமிக்கறேன்.. இந்த கல்கத்தா ப்ராப்ளத்துலயே உன் பேர நாத்திடறேன்.. ‘முரளி ஃபோன் வந்தா அப்டேட் பண்ணுங்க.. பெரிய இவன்.. அப்டேட் பண்ணாதது மட்டுமில்ல ஷண்முகம்.. அந்த ப்ராப்ளத்தை வச்சே உன் ரிட்டயர்மெண்ட்ட முடிச்சிடறேன்.. பாத்துக்கிட்டே இரு..
சை.. இந்தாள்கிட்ட பேசிக்கிட்டிருந்ததுல ஏறுன போதை இறங்கிருச்சி.. என்ற முனகலுடன், ‘டேய் திரு.. நீ மேல போயி அந்த பாட்டில எடுத்துக்கிட்டு வா.. அப்படியே வந்து சாப்பாட்ட எடுத்து வை.. வேற யாருமில்ல நா மட்டுந்தான்.. நாளைக்கு அம்மே வந்துரும்.. அப்புறம் குடிக்க முடியுமோ என்னவோ.. இன்னக்கே குடிச்சி தீர்த்துட்டு போய் படுக்கறேன்.. படுபாவிப் பய.. இன்னைய பொழுதையே கெடுத்துட்டு போய்ட்டான்..’ தட்டுத்தடுமாறி உணவு மேசையை நோக்கி நடந்தார் சேதுமாதவன்..
சுவர்க் கடிகாரம் பத்து முறை அடித்து ஓய்ந்தது..
தொடரும்.
6 comments:
ஜோசப் சார். ரெண்டு அத்தியாயங்களப் போட்டுட்டீங்க போல இருக்கு. சரியாப் பாருங்க.
குடிக்கிறப்பவே இவ்வளவு அரசியல் பண்றானே....குடிக்காம இருந்தா...ஒன்னும் செஞ்சிருக்க மாட்ட்டான்னு தோணுது.
வாங்க ராகவன்,
போன வாரத்துல ரெண்டு நாள் போட முடியாம போனதால இன்னைக்கி ரெண்டு அத்தியாயத்தையும் போட்டுட்டேன்.
சூரியன் 18ன்னு தலைப்புல போடலை.. அதுதான் ஸ்லிப் ஆயிருச்சி..
Sorry Raghavan,
Heading should read சூரியன் 18 & 19.
ரொம்ப சூட போகுதே. வெரி குட். நல்லா இருக்கு.
'ஆ' எல்லாம் காணாம போயிடுச்சே. என்ன பிராப்பளம்?
வாங்க இ.கொத்தனார்,
சாப்டர் 19ல தான் 'ஆ' ப்ராப்ளம் இருக்கும். கன்வர்ட் பண்ணும்போது ஏற்படறதுதான். நான் தான் சரியா பாக்காம போட்டுட்டேன்.
ஏங்க யூஸ்லெஸ்சு இது என்ன கமெண்ட்? ஒன்னும் புரியலை.. திட்டறீங்களா வாழ்த்தறீங்களா?
Post a Comment