17.2.06

சூரியன் 26

பிலிப் சுந்தரம் வார நாட்களில் காலையில் எழுந்தவுடன் ஒரு பாட்டில் நிறைய மினரல் வாட்டரைக் குடித்துவிட்டு தன் குடியிருப்புக்கு அருகிலிருந்த க்ளப்பில் இருந்த உள்ளரங்கிற்குச் சென்று பேட்மிண்டன் விளையாடிவிட்டுத்தான் மற்ற வேலைகளைப் பார்ப்பார்.

ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளில் அதற்கும் விடுமுறை..

ஞாயிறு காலையில் தேவாலயத்துக்கு செல்வதுதான் அவருக்கிருந்த முக்கியமான வேலை..

அதுவும் கடந்த மூன்று மாதங்களாக அவர் இணைந்திருந்த தேவாலயத்தின் நிர்வாக குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிறகு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாடு முடிந்தவுடன் வீடு திரும்பவும் முடியவில்லை.

அன்று ஆலயத்தின் நிர்வாகக் குழுவின் வருடாந்தர கூட்டம் நடைபெற இருந்ததால் படுக்கையிலிருந்து எழுந்தவுடனே அக்கூட்டத்தின் தலைவர் என்ற முறையில் அவர் அன்று ஆற்றவிருந்த, நேற்று நள்ளிரவு வரை விழித்திருந்து தயாரித்து தன்னுடைய லாப்டாப் கணினியில் சேமித்து வைத்திருந்த,  உரையின் வடிவத்தை மீண்டும் ஒருமுறை எடுத்து வாசித்துப் பார்த்தார்.

உரையின் கோப்பில் தனக்கு திருப்தியில்லாத பகுதிகளை மாற்றியமைத்துவிட்டு ஒரு இறுதிப் பிரதியின் நகலை (Print) எடுத்தார். மீண்டும் ஒரு முறை துவக்கத்திலிருந்து இறுதிவரை வாசித்துப் பார்த்தார். ‘குட்..’ என்று தன்னைத்தானே பாராட்டிக்கொண்டார். மடித்து தேவாலயத்துக்கு அன்று அணிவதாய் தீர்மானித்திருந்த சஃபாரி சர்ட் பாக்கெட்டில் வைத்தார்.

அவருடைய மனைவி ராஜம்மாவுக்கு பிடித்த கலர் என்பதாலேயே ஞாயிற்றுக் கிழமைகளில் அணிவதற்கென அவர் வைத்திருந்த  எல்லா சஃபாரி சூட்டும் டார்க் மெரூன் நிறத்தில்தான் இருந்தன. அதை அணிந்துக்கொண்டு அவருடைய குடியிருப்பிலிருந்து வெளியேறி லிஃப்டில் ஏறும்போதே, ‘என்ன சார் சர்ச்சுக்கு கிளம்பிட்டீங்களா?’ என்பான் லிஃப்ட் ப்பரேட்டர். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கேட்கப்படும் இந்த கேள்விக்கு எப்போதும் போல் அன்றும் ஆமாம் என்பதுபோல் புன்னகைத்தார் பிலிப்.

ராஜம்மாள் மரித்தபோது அவருக்கு வயது 53. கணவன் மனைவி என்ற உறவுக்கப்பால் ஒரு நல்ல நண்பர்களாகவே அவர்கள் வாழ்ந்தார்கள் என்றால் மிகையாகாது.

அதனால்தானோ என்னவோ அவர்களுக்கு பிள்ளை பாக்கியத்தை கொடுக்காமலே ஏமாற்றிவிட்டார் இறைவன்.

ஆனால் அதற்காக அவரோ, அவருடைய மனைவியோ ஒருநாளும் இறைவனை நிந்தித்ததில்லை. அதுவே இறைவனுடைய சித்தமாயிருந்தால் அதற்கு பணிவதே நல்லது என்று இருவரும் ஒரு மனதாய் தீர்மானித்து தங்களுக்குத் தெரிந்த குழந்தை காப்பக மையங்களில் தங்களுக்கு ஒரு குழந்தையைத் தேட துவங்கினார்கள். பல மாதங்கள் அலைந்தும் அவர்களுக்குப் பிடித்த குழந்தை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்த நேரம்..

அவருடைய வங்கியின் சென்னைக் கிளைகளில் ஒன்றில் அவர் மேலாளராய் இருந்த சமயம் அது.

அவருடைய கிளை வாடிக்கையாளர்களில் ஒருவர் தன் மனைவி, மற்றும் குழந்தையுடன் சென்னையிலிருந்து தன்னுடைய சொந்த ஊர் சென்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் விபத்தைச் சந்திக்க  கணவன் மனைவி இருவரும் விபத்து நடந்த இடத்திலேயே மரித்தனர்.  அனாதையாய் விடப்பட்ட பெண் குழந்தையை அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

அக்குழந்தையை மட்டுமல்லாமல் குழந்தையுடன் அனாதையாய் கவனிக்க ஆளில்லாது தனித்து விடப்பட்ட அதன் எழுபது வயது பாட்டியையும் தத்தெடுத்துக்கொண்டனர் பிலிப் சுந்தரம், ராஜம்மாள் தம்பதியர்!

பாட்டியும், குழந்தையும் கூட கிறீஸ்துவ குடும்பத்தைச் சார்ந்தவர்களானது அவர்களுக்கு மிகவும் வசதியாகப் போனது. ஆனால் கிறீஸ்துவர்கள் குழந்தைகளைத் தத்தெடுக்க இந்தியாவில் அமுலில் இருந்த சட்டத்தில் இடமில்லை. இந்திய கிறிஸ்துவ தத்தெடுப்பு நியதியின்படி குழந்தைக்கு காப்பளாராக (Guardian) மட்டுமே அவரால் இருக்க முடிந்தது. இந்து பெற்றோர்களுக்கு அத்தகைய உரிமை அளிக்கப்படும்போது கிறீஸ்துவர்களுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்பது அந்த நியதியை வகுத்தவர்களுக்கே வெளிச்சம்!

ஒரு தத்துக் குழந்தைக்குரிய எந்த உரிமைகளையும் அக்குழந்தைக்கு அவர்களால் அளிக்க முடியாமற் போனாலும் பிலிப்பும் ராஜம்மாளும் அதன் சொந்த பெற்றோர்களைப் போலவே நடந்துக் கொண்டனர். குழந்தையின் பிறப்பு சான்றிதழில் இருந்த எஸ்தர் என்ற பெயரையே கூறி அழைத்தனர்.

சட்டத்தின் நிர்பந்தம் காரணமாக எஸ்தர் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய நேரம் வந்தபோது தான் அவளுடைய காப்பாளர் மட்டுமே என்று அறிவிக்க வேண்டி வந்தது..

மூன்று வயதே நிறைந்திருந்த எஸ்தருக்கு அதன் பொருள் விளங்காவிடினும் அவள் சேர்க்கப்பட்ட பள்ளித் தலைவரின் பொறுப்பற்ற நடத்தையால் அவ்விஷயம் வெகு சீக்கிரமே அவள் படித்த வகுப்பிலிருந்த எல்லா குழந்தைகளுக்கும் தெரிந்துப் போனது..

‘ஏய் இது உங்கப்பா இல்லையா? நீ கடவுளோட கொளந்தையாமே? எங்கம்மா சொன்னாங்க. நீ கடவுள பாத்திருக்கியா..?’ என்று மழலையில் அவள் கேட்கப்பட்டபோது ஒன்றும் விளங்காமல் வீட்டையடைந்ததும், ‘அம்மா நான் கடவுளோட குழந்தையாம்மா? அப்ப நீங்க என் அம்மா இல்லையா?’ என்று எஸ்தர் கேட்டபோது, ‘என்னங்க இது விபரீதம்?’ என்று பிலிப்பைப் பார்த்தாள் ராஜம்மாள்.

அவர் மேலாளர் பதவியில் ஊர் ஊராக மாறி செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் எஸ்தரை ஒவ்வொரு பள்ளியிலும் சேர்க்கும்போதும் ‘நான் இவளுடைய தந்தையில்லை. வெறும் காப்பாளர்தான்’ என்பதை மீண்டும், மீண்டும் கூறவேண்டிய தன்னுடயை துர்பாக்கியத்தை எண்ணி பிலிப் வேதனையடையாத நாளே இல்லை..

அப்போதெல்லாம் ‘நம்ம கையில என்னங்க இருக்கு.. கர்த்தர் பார்த்துக்குவார்.. நீங்க விசனப்பட்டு நிக்கறது பார்த்துட்டு எஸ்தரும் கலங்கிப் போறாங்க..’ என்பாள் ராஜம்மாள்.

எஸ்தருடைய பாட்டியும் அவர்களைப் போன்ற குணநலன்களைக் கொண்டிருந்ததால் அவரை தங்களுடைய சொந்த தாயாகவே கருதி நடத்தினார் பிலிப். ஆயினும் தன்னுடைய ஒரே மகனை விபத்தில் பறிகொடுத்த வேதனையை மறக்க முடியாமல் தவித்த அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே மரணமடைய எஸ்தருக்கு பிலிப், ராஜம்மாள் மட்டுமே உறவு என்றாகியது.

ராஜம்மாளுக்கு சிறுவயது முதலே ஆஸ்துமா இருந்தது என்று தெரிந்துதான் அவளை மனமுவந்து திருமணம் செய்துக்கொண்டார் பிலிப். ‘ஆஸ்துமா கூடப் பிறந்த சகோதரி மாதிரிங்க.. நா சாகற வரைக்கும் கூடவே வரும்.’ என்று அவளை பெண்பார்க்க சென்ற இடத்தில் அவள் வெளிப்படையாக கூறியது அவரை மிகவும் கவர்ந்தது. ‘உன்ன நான் கல்யாணம் பண்ணதே உன்னுடைய அந்த குணத்துக்காகத்தான் ராஜம்.’ என்பார் பிலிப்.

அவர் வட இந்தியாவில் பணிபுரிய வேண்டி வந்தபோது அப்பகுதிகளில் நிலவிய கடுங்குளிரில் ராஜம்மாளின் ஆஸ்துமாவின் தீவிரம் அதிகரிக்கவே அவளையும் பதினைந்து வயது நிரம்பியிருந்த எஸ்தரையும் சென்னையிலேயே நிரந்தரமாக தங்க வைக்க முடிவு செய்து நடுத்தரக் குடும்பத்தினர் வசித்து வந்த சென்னை புரசைவாக்கம் பகுதியில் இருந்த குடியிருப்பு ஒன்றை வாங்கி அவர்களை குடியமர்த்தினார்.

‘அப்பா எப்படியாச்சும் மாசம் ஒரு தடவை வருவேன் எஸ்தர். நான் இல்லாதப்போ நீதான் அம்மாவ பாத்துக்கணும்’ என்றபோதெல்லாம், ‘அத நீங்க வேற சொல்லணுமாப்பா..?’ என்பாள் எஸ்தர்.

தன்னுடைய வேலையில் அவர் காட்டிய நேர்மையும், திறமையும் அவரை படிப்படியாக உயர்த்த அவருடைய 53வது வயதில் அவருடைய வங்கியின் பொது மேலாளர்களில் ஒருவராக பதவி உயர்வுப் பெற்றதும் சென்னையிலிருந்த தலைமையலுவலகத்திலேயே பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.

பதவி உயர்வில் கிடைத்த மகிழ்ச்சியை விட இனி பணியிலிருந்து ஓய்வு பெறும்வரை தன் மனைவி, மகளுடன் வசிக்கலாமே என்பதில்தான் அதிகம் மகிழ்ந்தார் பிலிப்.

அவருடைய மகிழ்ச்சி கடவுளுக்கே பொறுக்கவில்லை போலிருக்கிறது. அடுத்த ஆறு மாதத்திலேயே ஆஸ்துமா தீவிரமாகி சென்னையில் மிகவும் பிரபலமடைந்திருந்த மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனளிக்காமல் மரித்துப்போனார் ராஜம்மாள்.

எஸ்தருக்கு அப்போது 23 வயது. கல்லூரி இறுதியாண்டு. தன் வயதொத்த தோழிகளுக்கு அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, சித்தி, சித்தப்பா என்று சுற்றமும், சொந்தமும் இருந்தபோது தனக்கு மட்டும்..

‘அம்மா சின்ன வயசுல இறந்துட்டாங்க .. இப்போ.. வளர்ப்புத்தாய்னு இருந்த இவங்களையும் பறி கொடுதுட்டேன்.. எனக்கு மட்டும் ஏம்பா இப்படி?’ என்று கலங்கி நின்ற கண்களுடன் தோளுக்கிணையாக வளர்ந்து நின்ற எஸ்தரின் குழந்தை முகத்தை தன் மார்பில் அணைத்துக் கொண்டு செய்வதறியாமல் நின்றார் பிலிப்.

இருபத்தேழு காலம் தன் நிழலாய், துணையாய், தோழியாய் இருந்த மனைவியை இழந்ததும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பில்லாததுபோல் தோன்றியது அவருக்கு..

வேலையை விட்டு விட்டு வேத போதகத்தில் முழுவீச்சாய் ஈடுபட்டாலென்ன என்றும் நினைத்தார்.

‘No, Mr. Philip, It is simply not fair to your Wife. Not only that, the Organisation needs your expertise. You are a GM now. You have a lot to do. Think about your daughter too. You haven’t married her off yet.’ என்று அவருடைய வங்கித் தலைவர் அளித்த அறிவுரைதான் அவரை இந்த விபரீத முடிவுக்கு செல்வதை தடுத்து நிறுத்தியது.

எஸ்தருடைய திருமணம் தாயை இழந்த அவளுடைய வேதனையை குறைக்க உதவும் அருமருந்து என்பதை உணர்ந்து முழு வீச்சாக அவளுக்கு ஒரு தகுந்த துணையை தேட துவங்கினார். எஸ்தருக்கும் தனக்கும் இருந்த உறவை புரிய வைத்து, அவளுடைய அழகுக்கும், படிப்புக்கும் ஏற்ற ஒருவனை தேர்ந்தெடுப்பது  அவர் நினைத்ததை விடவும் மிகவும் கடினமாக இருந்தது..

நல்ல வேளை, அவர் அங்கத்தினராயிருந்த தேவாலயத்திலேயே திருமண மையம் ஒன்று சிறப்புடன் செயலாற்றி வந்ததால் அவர்களிடமிருந்த கோப்புகளிலிருந்த மணமகன்களில் தகுந்ததாய் ஒருவரை மிகுந்த சிரமத்திற்குப்பிறகு தேர்ந்தெடுக்க முடிந்தது..

சென்னையிலேயே அவரும் பணியாற்றி வந்ததால் எஸ்தருக்கும் தன் தந்தையை விட்டு பிரிய வேண்டிய தேவையிருக்காதே என்ற ஒரே காரணத்திற்காக சம்மதிக்க திருமணத்தை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார் பிலிப்.

எஸ்தரின் துரதிர்ஷ்டம், திருமணமான மூன்றாம் மாதத்திலேயே மாப்பிள்ளைக்கு சிறப்பானதொரு வேலை அமெரிக்காவில் கிடைத்தது.. ‘என்னப்பா இது? நான் எதுக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்னுதான் உங்களுக்கு தெரியுமே.. இப்போ திடீர்னு அமெரிக்காவுல வேல கிடைச்சிருக்கு வா போலாம்னா.. நா எப்படி உங்கள விட்டுட்டு போறது? அவர் மட்டும் வேணுன்னா போட்டும். நா உங்களோடதான் இருப்பேன்.’ என்று அடம்பிடித்த மகளை சமாதானப்படுத்தி வழியனுப்பி வைத்தார்..

***

‘என்ன சார் என்னமோ யோசனையில இருக்கீங்க போலருக்கு.. பத்தாவது மாடியிலருந்து கீழ வர்றதுக்குள்ளயே ஃப்ளாஷ் பேக்கா சார்..’ என்ற லிஃப்ட் ஆப்பரேட்டரின் குரல் அவருடைய நினைவுகளைக் கலைக்க பிலிப் சுந்தரம் லிஃப்டிலிருந்து வெளியேறி தன் காரை நோக்கி நடந்தார்..

தொடரும்..









4 comments:

G.Ragavan said...

பெற்றால்தான் பிள்ளையா! அன்பு வாழ வைக்கும். நிச்சயமக. ஃபிலிப்பின் நிலையை நினைத்தால் கஷ்ட்டமாக இருக்கிறது.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

பெற்றால்தான் பிள்ளையா! அன்பு வாழ வைக்கும். //

நீங்க சொன்னது ரொம்ப சரி. வளர்ப்பு பிள்ளைகளிடம் உள்ள பாசம் பெற்ற பிள்ளைகளுடைய பாசத்தை விட சற்று மேலானது, ஆழமானது. இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை.

இலவசக்கொத்தனார் said...

கதைக்கு நடுவே சட்டத்திலிருக்கும் குறைகள் பற்றியும் கூறி உபயோகமான தகவல்களையும் தருகிறீர்களே. நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க இ.கொத்தனார்.

நன்றி.