அடுத்த இரண்டு நாட்களில் தாமாகவே முன்வந்து தன் ஊழியர்களில் வயதில் மூத்தவர் மூவரை அழைத்து தான் செயல்படுத்த நினைத்திருந்த சலுகைகளை அறிவித்தார்.
தன்னிடம் இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்கு கூடுதலாக பணியாற்றிய நிரந்தர ஊழியர்களுக்கு தினம் பன்னிரண்டு மணி நேர வேலை, அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஓவர்டைம், வருடத்திற்கு இரண்டு செட் சீருடை, செருப்பு, டவல் மற்றும் மாதம் இரண்டு சோப்பு, வருடத்திற்கு ஒரு வார சம்பளத்துடனான விடுமுறை என அவர் அறிவித்தபோது ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஊழியர்களைத் தூண்டிவிட்டவர்கள் அவருடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையைக் கண்டு அசந்துபோனார்கள். ஆனாலும் அவர்களுடைய அடுத்த அஸ்தரத்தை வீச தயாரானார்கள்.
மாணிக்கம் நாடாருடைய உணவகங்கள் பிரபலமடைய முக்கிய காரணம் அவருடைய சுவை மிகுந்த உணவு பண்டங்கள்தான் என்பது மதுரையிலிருந்த எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதற்கு காரணகர்த்தா அவருடைய சமையலறை நாயகராயிருந்த ரத்தினவேல் என்பது அவருடைய பழைய சகாக்களுக்கு நன்றாகத் தெரியும்.
அவரை மாணிக்கத்திடமிருந்து பிரித்துவிட்டால் போதும், அவருடைய உணவகங்கள் படுத்துவிடும் என்பது அவர்களுடைய எண்ணம்.
அதையும் தன் சாதுரியத்தால் முன்கூட்டியே அறிந்த மாணிக்கம் நாடார் அடுத்த நாளே ரத்தினவேலை அழைத்து அவருக்கு தன்னுடைய உணவகத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் நான்கில் ஒரு பங்கை அளிப்பதாக வாக்களித்தார்.
ரத்தினவேல் சொல்வதறியாது திகைத்து நின்றபோது அவரை தரவாய் அணைத்துக்கொண்ட மாணிக்கம், ‘டேய் ரத்தினம், நீ எத்தனை நாளைக்குத்தான் எங்கிட்ட வேலைக்காரனா கைகட்டி நிக்கப்போற? இன்னையிலருந்து கிடைக்கற லாபத்துல கால் பங்க உன்னோட கணக்குல சேர்த்துறப் போறன். ரெண்டு வருஷம்.. அதுக்கப்புறம் நீயும் நானும் மூனுக்கு ஒன்னுங்கற விகிதத்துல நம்ம பிசினஸ்ல பார்ட்னர்ஸ், அதாண்டா பங்காளிங்க. என்ன சொல்றே?’ என்றார்.
ரத்தினவேலுக்கு கரும்பு தின்ன கூலியா என்று தோன்ற உடனே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.
பிறருடைய துர்போதனையால் ரத்தினவேலுவின் மனம் மாறிவிடக்கூடும் என்று அஞ்சிய மாணிக்க நாடார் அடுத்த சில வாரங்களிலேயே மாணிக்கம் & ரத்தினவேல் என்ற கூட்டு ஃபர்மை ஸ்தாபித்து மதுரையில் அவருக்குத் தெரிந்த வக்கீல் ஒருவரைப் பிடித்து ஒரு ஒப்பந்தத்தையும் தயாரித்து நல்ல நாள் பார்த்து அதில் ரத்தினவேலுவைக் கையொப்பமிட வைத்தார்.
அவ்விருவரை மட்டும் கொண்டு துவங்கப்பட்ட அந்த ஸ்தாபனம் இன்று வளர்ந்து ஒரு ஆலமரத்தைப் போல் படர்ந்து விரிந்து உலகெங்கும் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் ஃபிராஞ்சைசி என்ற அமைப்புகளுடன்...
இதை வளர்க்க அவர் எத்தனை பாடுபட்டிருப்பார்? ராப்பகலாக, ஊண் உறக்கமின்றி, பலரிடம் பல்லிளித்து, சிலரை மிரட்டி, பலரிடம் குணிந்து, சிலரை காலில் போட்டு மிதித்து, பலரிடம் ‘கொடுத்து’, சிலரிடம் ‘பெற்று’.. அவர் செய்யாத தில்லுமுல்லுகளும் இல்லை நற்செயல்களும் இல்லை..
நாலு பேருக்கு வயிறார சோறு போடற தொழில்டா இது.. ஒன்னு ரெண்டு தப்புத்தண்டா பண்ணா தப்பேயில்லை.. என்பார்..
கொடுக்கறவனுக்கு கொடுத்து, ஏமாந்தவன்கிட்டருந்து சுருட்டுனாத்தான் வியாபாரத்துல முன்னுக்கு வரமுடியும் என்பது அவராக ஏற்படுத்திக்கொண்ட நியதி இல்லை.. வழிவழியாக வர்த்தகம் செய்யும் எவரும் கடைப்பிடித்து வந்ததுதான்..
செய்யும் தொழிலே தெய்வம்.. என்பதை மட்டும் மறக்காமலிருந்த நாடார் அதை வளர்க்க என்ன செய்யவும், எத்தனை கீழே இறங்கிவரவும் தயாராயிருந்தார்.
மதுரையில் மட்டும் பெற்ற வெற்றி அவரை திருப்தியடைய செய்யவில்லை..
ரத்தினவேலுவுடன் கூட்டு வர்த்தகம் என்று ஆரம்பித்த அடுத்த சில ஆண்டுகளிலேயே அவருடைய உணவகம் திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, சேலம் என்று விரிவடைய சென்னையில் கால் பதிக்க நேரம் பார்த்து காத்திருந்தார் மாணிக்க நாடார்.
அவர் கிளைகள் துவங்கிய ஒவ்வொரு நகருக்கும் தேவையான பணியாட்களை தன்னுடைய நாடார் சமூகத்திலிருந்தே தேர்ந்தெடுப்பதில் குறியாயிருந்தார். அயாரா உழைப்புக்கும், பணிவுக்கும், நண்றியுணர்வுக்கும் புகழ்பெற்ற அச்சமூகத்தைச் சார்ந்த பணியாட்கள் அவருக்கு விசுவாசத்துடன் பணிபுரிய அவரும் அவர்களுடைய தேவைகளை நன்றியுடன் பூர்த்திச் செய்ய தவறியதில்லை..
தன்னிடம் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் பி.எஃப், காப்பீடு என்பதுடன் நின்றுவிடாமல் நாளடைவில் ஊக்கத்தொகை என்ற பெயரில் தன்னுடைய நிறுவனத்தின் லாபத்தில் பங்கு என்ற சலுகையையும் முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை அவரையே சாரும்..
அத்துடன் மதுரையில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட கிளைகளுக்கும் பொதுவான சமையலறை என்ற அமைப்பை ஏற்படுத்தி நகரில் இருந்த தன்னுடைய எல்லா கிளைகளிலும் ஒரே அளவான தரத்தில் உணவுப் பண்டங்கள் கிடைக்கும் ஏற்பாட்டை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவரும் அவரே..
சிறு நகரங்களில் அவர் அடைந்த வெற்றியை சென்னையிலும் ஒரே நேரத்தில் ஐந்து கிளைகளை சென்னையில் வெவ்வேறு முக்கிய இடங்களில் திறந்து பரபரப்பை ஏற்படுத்தி அதே தொழிலில் இருந்த அவருடைய போட்டியாளர்களைக் கலங்கடித்தவரும் நாடார்தான்.
தமிழ் நாட்டில் தான் செய்த புரட்சியில் திருப்தியடையாத நாடார் திருவனந்தபுரம், கொச்சி, நெல்லூர், ஹைதராபாத், பெங்களூர், மைசூர், ஏன் மும்பையில் செம்பூர், மாத்துங்கா, தாதர், போன்ற தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் அண்டை மாநிலங்களிலும் படையெடுத்து வெற்றிக் கொடி நாட்டிய சரித்திரம் இன்றுவரை வேறெவராலும் சாதிக்கமுடியாத சாதனை என்றாலும் மிகையாகாது.
மாணிக்கம் & ரத்தினவேல் என்ற கூட்டு ஸ்தாபனத்தை ஒரு பிரைவேட் லிமிட்டெட் கம்பெனியாக மாற்றினால்தான் பலரிடமிருந்தும் முதலீட்டைப் பெறமுடியும் என்பதை உணர்ந்த மாணிக்கம் சென்னையில் அப்போதுதான் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலைத் துவங்கியிருந்த மோகன் என்ற முப்பது வயதே நிரம்பியிருந்த வழக்கறிஞருடைய உதவியை நாடினார்.
அவருடைய பரிந்துரைப்படி நிறுவனத்திற்குத் தேவையான வரைமுறைகளைக் கொண்ட ஆதாரங்களைத் தயாரித்து பதிவு செய்ததுடன் நிறுவனத்தின் பெயரையும் ‘நியூ இந்தியா பவன்’ என்று உலகெங்கும் உள்ள இந்திய மக்களைக் கவரும் வகையில் மாற்றியமைத்தார்.
அன்று முதல் இன்றுவரை அவருடைய சட்ட ஆலோசகராக இருந்து வரும் மோகனுடைய ஆலோசனையின் பேரில்தான் சென்னையில் பதிவு அலுவலகத்தைக் கொண்டு இயங்கிவந்த ஒரு தனியார் வங்கியின் பங்குகளை சந்தையில் வாங்கினார் நாடார். அத்துடன் அவ்வருட இறுதியில் நடந்த வங்கி பங்குதாரர்கள் கூட்டத்தில் பங்கு கொண்டு அவரை பேசவைத்து மற்ற பங்குதாரர்கள் மத்தியில் அவருடைய பெயரை பிரபலமடைய வைத்ததும் மோகனின் ஆலோசனைதான்.
அதற்கடுத்த ஆண்டிலேயே மோகனுடைய வாடிக்கையாளர்களில் ஒருவர் வங்கியின் இயக்குனராகவிருந்து ஏழாண்டு கால நியதிக்குப் பிறகு ஓய்வுப் பெற்றபோது அவர் பெயரிலிருந்த பங்குகளில் ஒரு கணிசமான பகுதியை மாணிக்கம் நாடாருக்கு விற்க வைத்து அடுத்த பங்குதாரர்கள் கூட்டத்தில் நாடாரை அப்பதவிக்கு தேர்ந்தெடுக்க வைத்ததும் மோகன்தான்.
தொடரும்..
2 comments:
அடேங்கப்பா....வளர்ச்சி பெரும் வளர்ச்சிதான். வாழ்க வளர்க. ஒரு தொழில் வளர்ந்தால் அதனைச் சார்ந்து பல தொழில்கள் வளரும். ஆகையால் தொழில் வளர்ச்சி நன்றே.
நீங்க சொல்ற மாதிரி வளர்ச்சி நிஜத்திலும் பாக்குறோமே. ஆனா குறிப்பிடும் சமூகந்தான் வேற. மத்தபடி எல்லாம் பக்கத்தூருகதான்.
வாங்க ராகவன்,
இந்த நாடார் நிஜ வாழ்க்கையில் நாம் காணும் மனிதர்களின் நிழல்தான். இது போன்ற பல வளர்ச்சிகளை நான் சென்னையிலேயே கண்டிருக்கிறேன். பாண்டிபஜார், ரங்கநாதன் தெருவிலுள்ள கடைகளின் கடந்த பத்தாண்டு கால வளர்ச்சியைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது..
Post a Comment