2.3.06

சூரியன் 33

பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அவருடைய பிள்ளைகள் இருவருடனும் அவரும் சேர்ந்து படிக்கத் துவங்கினார்..

இயல்பாகவே மாணிக்கவேலுவுக்கிருந்த புத்திக் கூர்மையும், அபார நினைவாற்றலும் மிக எளிதாகவும், சிறப்பாகவும் அடுத்த மூன்று வருடத்தில் வணிகத்தில் இளநிலை பட்டத்தைப் பெற முடிந்தது.

அவருடைய விடா முயற்சியும், சட்டென்று பிரச்சினையைப் புரிந்துக்கொண்டு முடிவெடுக்கும் திறனும் அவர் பட்டதாரியான அதே வருடம் குமாஸ்தா பதவியிலிருந்து கடை நிலை அதிகாரியாக பதவி உயர்வு பெற உதவியது.

அதுமுதல் அவருடைய அலுவலக வாழ்க்கையில் வசந்தம் வீசத் துவங்கிமிகையாகாது..

அடுத்த பத்து வருடங்களில், அதாவது அவர் நாற்பத்தைந்தாவது வயதை எட்டிப் பிடித்த வருடம் முதன்மை மேலாளராக பதவி உயர்வு பெற்று சென்னையிலிருந்த மிகப் பெரிய கிளைகளுள் ஒன்றான பல்லாவரம் கிளைக்கு மேலாளராக நியமிக்கப்பட்டார்.

அலுவலக வாழ்க்கையில் அவர் பெற்ற வெற்றிகள்தான் அவருடைய குடும்ப வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட தோல்விகளை ஈடுகட்டியது..

‘என்ன மிஸ்டர் மாணிக்கம்.. குட் மார்னிங். விஷ் பண்ணியும் கண்டுக்காம போறீங்க?’

பழைய சிந்தனைகளில் மூழ்கிப் போயிருந்த மாணிக்கவேல் திடுக்கிட்டு தனக்கு முன்னால் நின்றிருந்தவரைப் பார்த்தார்.

அவருடைய மிகப்பெரிய வாடிக்கையாளர்களுள் ஒருவர் புன்னகையுடன் எதிரில்!

மாணிக்கவேல் சுதாரித்துக்கொண்டு தன்னை நோக்கி நீண்டிருந்த அவருடைய கரத்தைப் பற்றி குலுக்கினார். ‘சாரி மிஸ்டர் பாபு.. நான் நடக்கறதுலயே concentrate பண்ணிக்கிட்டு... உங்கள கவனிக்கவே இல்லை.. சாரி..’

‘இட் ஈஸ் ஓக்கே சார்.. நானும் சில நேரத்தில் அப்படித்தான். ஆஃபீஸ்லருக்கற பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் தீர்வு கிடைக்கறது இந்த மார்னிங் வாக் சமயத்துலதான். அதையே யோசிச்சிக்கிட்டு நடக்கறப்போ எதிர்ல யார் வந்தாலும் தெரியவே தெரியாது.’

மாணிக்க வேல் அவரையே வியப்புடன் பார்த்தார். ‘நீ சொல்ல வந்து மறைச்சதே இவர் எப்படி சொல்லிட்டார் பார்த்தியா?’ என்றது அவருடைய உள் மனசு.

‘நானும் அப்படித்தான் சார். பிராஞ்சுலருக்கற ப்ராப்ளத்தை நினைச்சுக்கிட்டுத்தான் நடந்துக்கிட்டிருந்தேன்.. அதான் உங்கள கவனிக்கவில்லை.’ என்றார். ‘டேய் பொய் சொல்லாதே’ என்றது மனசு மீண்டும். தன்னையுமறியாமல் வந்து விழுந்த ஒரு தேவையில்லாத பொய்யை நினைத்து ஒரு குற்ற உணர்வுடன் அவரைப் பார்த்தார்.

அவருடைய பார்வையைத் தவறாகப் புரிந்துக் கொண்டார் அவருடைய நண்பர். ‘அதனாலென்ன சார்.. இது நம்மளப் போல பிரச்சினைகள் நிறைஞ்ச போஸ்ட்லருக்கற எல்லோருக்குமே ஏற்படுறதுதான்.. அதுல கில்டியா ஃபீல் பண்றதுக்கு ஒன்னுமே இல்லை.. அப்புறம் சார்.. பிசினஸ்லாம் எப்படியிருக்கு?’

இவர்கிட்ட இன்னமும் பேசிக்கிட்டிருந்தா என்னென்ன பொய் சொல்ல வேண்டியிருக்குமோ என்ற நினைப்பில் பொத்தாம் பொதுவாய், ‘பரவாயில்லை சார்.. ஏதோ போய்க்கிட்டிருக்கு..’ என்று கூறிவிட்டு விடை பெற்று தான் யோசித்துக்கொண்டே தன்னுடைய வழக்கமான ஐந்து கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து வந்துவிட்டதை உணர்ந்து, ‘சரி சார். அப்புறம் மீட் பண்ணலாம்’ என்று விடைபெற்று வீடு நோக்கி திரும்பி நடையிலிருந்த வேகத்தைக் கூட்டினார்..

மீண்டும் அவருடைய மனசு வேதாளம் ஏறியது..

அவருடைய குடும்ப வாழ்க்கை...

மாணிக்கவேலின் மூத்த சகோதரர்கள் இருவருக்கும் இள வயதிலேயே திருமணத்தை முடிந்தது. இருவருக்குமே சொந்தத்திலிருந்துதான் பெண் எடுத்தார் ஆறுமுகச்சாமி.

ஆனால் அவருக்கு வந்த இரு மருமகள்களுமே குடும்பத்தோடு ஒட்டாமல்போனதுதான் துரதிர்ஷ்டம்..

எல்லாம் நம் தலையெழுத்து என்று நொந்துக்கொண்ட கணவனை எப்படி தேற்றுவதென தெரியாமல் தவித்து நின்ற தன் தாயைப் பார்த்து வேதனையடையத்தான் முடிந்தது மாணிக்கவேலுவால்.

அவருடைய இரண்டாவது மூத்த சகோதரருக்கு திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்த அடுத்த மாதமே ‘நீங்க தனிக்குடித்தனம் போனாத்தான் நா திரும்பி வருவேன். அதுவரைக்கும் நான் எங்கப்பா அம்மா வீட்லயே இருந்துக்கறேன். நா உங்களுக்குத்தான் வாக்கப்பட்டு வந்தேன். இவ்வளவு பெரிய குடும்பத்துக்கு வடிச்சுக் கொட்ட முடியாமத்தானே உங்க அண்ணி தனியாப் போய்ட்டாங்க. நா மட்டும் என்ன போக்கத்த சிறுக்கின்னு நினைச்சிட்டாரா உங்கப்பா?’ என்று கோபித்துக்கொண்ட மனைவியை சந்தோஷப்படுத்த தன் அண்ணன் சென்ற பாதையிலேயே அவரும் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றார்.

மாணிக்கவேல் அப்போதுதான் வங்கியில் வேலைக்கு சேர்ந்திருந்தார். இனியும் பணி நிரந்தரம் ஆகவில்லை. ஊதியமும் மிகச் சொற்பம்தான்.

ஆனாலும் தன் மூத்த சகோதரர்கள் பிரிந்து சென்றதை நினைத்து மனமொடிந்து நின்ற தன் தந்தைக்கு, ‘ஒன்னுத்தையும் நினைச்சி கவலைப்படாதீங்கப்பா.. பழைய மாதிரி இனியும் ஒழைச்சி காசு சம்பாதிக்க முடியலையேன்னும் கவலைப் படாதீங்க. நான் இருக்கேன்.. பேங்க் வேல முடிஞ்சதும் நேரா கடைக்கி வரேம்பா.. உங்களுக்கு கை கொடுத்த தையல்வேலைய நா பாக்கறேன்.. சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் என்னோட முதல் வேலை இதுதான்..’ என்று ஆறுதலாய் பேசினார்.

அன்றுமுதல் அதை நடைமுறைப்படுத்தவும் செய்தார்.

எதையுமே கண் பார்த்து கை செய்யணும் வேலு என்று தந்தையால் அறிவுறுத்தப்பட்டவர் அவர். அத்துடன் எதையும் முயற்சி செய்தால் கற்றுக்கொள்ளலாம் என்று இயல்பாகவே அவருக்கு இருந்த ஆர்வம் தையல் தொழிலும் அவரைப் பிரகாசிக்க வைத்தது. ஒரு தையல் மிஷினுடன் அவருடைய தந்தைத் துவக்கி வைத்த தொழில் மாணிக்கவேலின் அபாரத்திறமையால் மேன்மேலும் வளர்ந்து அவருடைய தந்தையும் எதிர்பார்க்காத விதத்தில் வருமானத்தை அள்ளிக் கொடுத்தது..

‘நீ பேங்குல வேல பார்த்ததும் போறும் வேலு... பேசாம அத விட்டுட்டு இதைய பாரேன்.’ என்று அவருடைய தந்தை  அறிவுறுத்தியபோது, ‘இல்லப்பா. இந்த தொழில் எனக்கு ஒரு பொழுது போக்காத்தான் இருக்கும். என்னை என் போக்கிலேயே விட்டுருங்க. என் தம்பிங்களைக் கூட இதுல நான் சேர்த்துக்க மாட்டேன்.’ என்று கண்டிப்புடன் அதே சமயத்தில் பணிவுடன் மறுத்தார் மாணிக்கவேல்.

‘அவன் சொல்றது சரிதாங்க.. இந்த தொழில் நம்மளோடயே போட்டும்..’ என்று மகனுடைய முடிவுக்கு துணையாய் அவருடைய தாயும் வந்தது அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது..

தையல் தொழிலில் வந்த அபிரிதமான வருமானம் அவருடைய இரு தம்பிகளையும் சிறப்பாகப் படிக்க வைத்து ஒரு நல்ல வேலையையும் தேடிக்கொடுத்து பிறகு நல்லபடியாய் திருமணம் செய்து வைக்கவும் முடிந்தது அவரால்.

‘டேய் உனக்கென்ன பைத்தியமா? பெரியவன் நீ இருக்கும்போது உன் தம்பிங்களுக்கு என்னடா கல்யாணத்துக்கு அவசரம்? ஏதோ தம்பிங்க ரெண்டு பேரும் படிச்சி முடிச்சி ஒரு வேலைக்கு போட்டும்பான்னே. சரி நல்லதுதானேன்னு நானும் சும்மா இருந்தேன். இப்போ அவன்களுக்கு கல்யாணம்னு நிக்கறே. அப்போ உன் கல்யாணம்?’ என்று தந்தையும் நோய்வாய்பட்டு படுக்கையாய் போன அவருடைய தாயும் கேட்டபோது, ‘அப்பா, அம்மா இப்ப இருக்கற நிலமையில என்னால கல்யாணத்தப் பத்தி கனவுலகூட நினைக்க முடியாது. அதுக்காக தம்பிங்க கல்யாணத்தை தள்ளிப் போட வேணாம்.. அது முதல்ல நடக்கட்டும். ரெண்டு பேருக்கும் ஒரே பந்தல்ல முடிச்சி கல்யாணம் முடிஞ்ச கையோட தனியா குடித்தனமும் வச்சிருவோம். மறுபடியும் இந்த வீட்டுல சண்டை சச்சரவ பாக்க அம்மாவுக்கு தெம்பில்ல.. என் கல்யாணத்தப் பத்தி எனக்கு சில கொள்கைல்லாம் இருக்குப்பா.. அதுக்கு இன்னம் நேரம் வரலை..’ என்று வாதாடியதை இப்போது நினைத்துப் பார்த்தார் மாணிக்கவேல்..

அவருடைய கொள்கையில் எத்தனை உறுதியாய் நின்று ராணியைத் திருமணம் செய்தார்!

அவர் குடியிருந்த வீட்டின் மிக அருகிலேயே ஒரு கத்தோலிக்க கிறீஸ்துவர்களின் தேவாலயமும், கன்னியர்களால் நடத்தப்பட்டு வந்த அனாதை சிறுவர்கள் மற்றும் அபலைப் பெண்களின் இல்லமும்  இருந்தன.

கிறிஸ்துவ மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளும், அவர்களுடைய போதனைகளையும், தேவாலயத்தில் அவ்வப்போது நடைபெற்ற வழிபாடுகளில் பாடப்படும் கீதங்களையும் ஒலிபெருக்கி வாயிலாக கேட்டு அவருக்கு அம்மதத்தின்பால் ஈடுபாடு ஏற்பட்டது..

அதன் காரணமாக அவராகவே முன்வந்து அத்தேவாலயத்தின் குருவானவரை ஒரு முறை சந்தித்து தன்னை அவருக்கு அறிமுகப்படுத்திக்கொண்டார். நாளடைவில் இருவருக்கும் இடையில் இருந்த நட்பு நெருக்கமடைய மாணிக்கவேல் தன் மனதிலிருந்ததை ஒரு நாள் தெரிவித்தார்.

‘நான் மனசுல நினைச்சிக்கிட்டிருக்கறது நடக்கறது உங்க கைலதான் இருக்கு ஃபாதர். எனக்கு வேண்டியது ஒரு நல்ல கிறிஸ்துவக் குடும்பத்துல வளர்க்கப்பட்ட பெண்.. அவர் விதவையாயிருந்தாலும் பரவாயில்லை.. ஏன்னா எனக்கு இப்பவே முப்பந்தஞ்சு வயசாவுது..’

பாதிரியாருடைய பார்வையில் தெரிந்த தர்மசங்கடம் அவருக்கு தெரிந்தது. ‘வேணும்னா நான் உங்க மதத்துக்கு மாறவும் தயாராயிருக்கேன் ஃபாதர்.’ என்றார்.

‘இல்லை மை சன். அதுவல்ல என் சங்கடம். நீங்க சொன்னீங்களே ஒரு நல்ல கிறிஸ்துவக் குடும்பத்துல வளர்க்கப்பட்ட பெண் என்று.. அதை நினைத்துத்தான் சங்கடப்படுகிறேன்.. இன்றைய டம்பர உலகில் கிறிஸ்துவக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு பெற்றோர்கள் இருந்தாலும் பிள்ளைகளை யார் அதன்படி வளர்க்கிறார்கள்? அதனால் நான் ஒன்னு சொல்றேன்.நல்லா யோசிச்சி பார்த்து பதில் சொன்னா போறும்.'

'என்ன ஃபாதர்? எதுவாருந்தாலும் தைரியமா சொல்லுங்க?'

பாதிரியார் சிறிது நேர தயக்கத்திற்குப் பிறகு.. 'நம்ம காம்பவுண்டிலேயே கன்னியாஸ்திரிங்க நடத்தற அனாதை மற்றும் அபலைப் பெண்களுடைய இல்லம் இருக்கு.. அதுல கல்யாண வயசுல ரெண்டு மூனு பெண்கள் இருக்காங்கன்னு நினைக்கிறேன். அவங்க ஒன்னு தங்களுடைய பெற்றோர்களை இழந்தவர்களாக இருக்கணும்.. இல்லன்னா திருமணம் முடிந்து கணவர்களை இழந்தவர்களாக இருக்கணும்.. என்ன சொல்றீங்க மாணிக்கம்?'

அதில் அவருக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இருக்கவே, 'ஓக்கே ஃபாதர். எனக்கு ஆட்சேபனையில்லை' என்றார்.

ராணியை அவர் முதன் முதலில் பார்த்தவுடனே ஏன் என்று விளங்காமல் பிடித்துப் போனது. அதற்கு ராணியின் அமைதியான, அழகான கண்கள் காரணமாயிருந்திருக்கலாம். அத்தனை அமைதியாய் அவர்முன் காட்சியளித்தாள் ராணி..

எத்தனை கைதேர்ந்த நடிகையாய் இருந்திருக்கிறாள் அவள்!

இப்போது நினைத்தாலும் நெஞ்சு வேதனையால் நிரம்பியது அவருக்கு..

தொடரும்...


8 comments:

dondu(#11168674346665545885) said...

உங்கள் கேரக்டர்களிலேயே எனக்கு பிடித்தவர் மாணிக்கவேலர் அவர்கள்தான்.

அடாவடி செய்பவர்களை அதட்டி அடக்குவதும் நல்லவர்கள் செய்ய வேண்டிய காரியம் என்பதை உணர்ந்து அவர் தன் அடங்காப்பிடாரி மனைவியை உறுதியாக அடக்குவது போன்று ஒரு சீன் வந்தால்கூட மனம் நிறைவாகவே இருக்கும்.

அதுவும் அருமைத் தந்தையையே மட்டம் தட்டும் மனைவியை விட்டுவைப்பது மனத்தை உறுத்துகிறது. செவுள்ளே ஒண்ணு போடவேண்டாமா?

எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கையில் இருக்கும்போதே தேவையற்றப் பொறுமையைக் காண்பிப்பது மனதிற்கு ஆயாசமாக இருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க டோண்டு சார்,

எனக்கு பிடித்தவர் மாணிக்கவேலர் அவர்கள்தான். //

எனக்கும்தான்.

செவுள்ளே ஒண்ணு போடவேண்டாமா? //

நம்ம காலத்துக்கு வேணும்னா இது தீர்வையா இருந்திருக்கலாம்.

இளைய தலைமுறை திருமணங்களில் இது நிச்சயம் பிரச்சினையை அதிகரிக்குமே தவிர குறைக்காது என்பது என் அபிப்ராயம்.

கணவனே கண்கண்ட தெய்வம்.. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதெல்லாம் இப்போதைய தலைமுறைக்கு பொருந்தாது சார்..

Karthik Jayanth said...

வலைபதிவுகளில் வயதில் மூத்தவர்கள் என்ற முறையில் எனக்கு எல்லோர்மீதும் மரியாதை உண்டு.

// செவுள்ளே ஒண்ணு போடவேண்டாமா? // Dondu sir said

இந்த உரிமையை தந்தது எது ?, மனைவி தானே என்ற பட்டமா ?, கணவனின் எண்ணத்திலே சிந்திக்கவில்லை / செயல்படவில்லை என்ற அயர்ச்சியா ? போட்டால் எல்லாம் சரியாகிவிடுமா ? அதே மாதிரி மனைவி எனப்பட்டவள் கணவன் தானே என்று போட்டால் / தொடர்ந்து போட்டால் ஒத்துகொள்வீர்களா ?

யாருக்கும் மனைவி எனப்பட்டவள் உடன் பதினாரும் பெத்து பெறு வாழ்வு வாழ வேண்டும் என்று இறை/ அரசாங்க கட்டளை இல்லை என்ற நிலையில் அவரவர் வழியில் போகவேண்டியதுதானே ?[அப்படி செய்ய சமுதாய மருவாதி ஒத்துகாதோ ..]

என்னைபொறுத்தவரையில் பேச்சு இல்லை வீச்சு, இதுக்கு களங்கள் வேறு.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கார்த்திக்,

சும்மா பொரிஞ்சி தள்ளிட்டீங்க..

சில சமயம் கதைகள்ல வர்ற சில பாத்திரங்களோட நாமளும் ஒன்றிச்சிப்போயி அவங்க சைட்ல சேர்ந்துக்கிட்டு உணர்ச்சிவசப்பட்டு போயிடறோம்..

அந்த ஒன்றிப்பின் காரணமாக அவர் ஏன் இப்படி செய்திருக்கக்கூடாது என்று நினைக்கிறோம்.

அப்படித்தான் டோண்டு சாரும்.. ஆனால் நிஜ வாழ்க்கையில் அந்த சூழ்நிலையில் அவரே இப்படி செய்திருப்பாரா என்றால் அது சந்தேகமே..

என்ன டோண்டு சார்?

dondu(#11168674346665545885) said...

சரி செவுள்ளே ஒண்ணு போடவேண்டாம். ஆனால் அப்பாவுக்கான மரியாதை தராத மனைவியிடம் உறுதியாகத்தான் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதுபோய்த்தான் மாணிக்கவேலர் அவதிப்படுகிறார் என நினைக்கிறேன். இக்கதையில் கூறப்பட்டப் பின்புலனை வைத்துத்தான் எதிர்வினை கொடுத்தேன்.

At times you have to call a spade a spade.

அப்படி அந்த மனைவி பெண்ணுரிமை என்று பூச்சாண்டி காட்டினால் மணவாழ்க்கையிலிருந்தே சுதந்திரத்தைக் கொடுத்து வெளியே அனுப்பிவிட வேண்டியதுதான். அந்த நிலைமையை முதலிலேயே வெளிப்படையாகக் காட்டியிருக்கவேண்டும் மாணிக்கவேலர் அவர்கள். ஒரே ஒருமுறை காட்டவேண்டியக் கடுமையைக் கூடக் காட்டாமல் விட்டுவிடுவது தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போலாகும்.

அடாவடி செய்பவர்களை விட அவர்களை சகித்துக் கொள்பவர்களே அதிகம் தவறு செய்கிறார்கள் என்பேன் நான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின் குறிப்பு: நான் அந்த நிலையில் எப்போதுமே இருந்ததில்லை. என் வீட்டம்மா என் அப்பாவின் தங்கையின் மகள். எங்கள் இருவருக்கும் மன வேறுபாடு வந்தால் என் அப்பா தன் மருமகளுக்கு பரிந்து கொண்டுவந்து என்னை அடக்க, என் அத்தையோ தன் மருமகனுக்கு பரிந்து தன் மகளை அடக்குவார். ஒரே தமாஷ்தான் போங்கள். என் அப்பாவிடம் பேசும்போது ஏதேனும் கருத்து வேறுபாடு வந்தால் என் வீட்டம்மா மாமனாருக்காக சீறி வருவார்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க டோண்டு சார்,

அடாவடி செய்பவர்களை விட அவர்களை சகித்துக் கொள்பவர்களே அதிகம் தவறு செய்கிறார்கள் என்பேன் நான்.//

நீங்கள் கூறுவதை ஒத்துக்கொள்கிறேன்.

ஆனால் சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களை எதிர்கொள்வது வேறு. அதே கண்ணோட்டத்தில் என் குடும்பத்தில நடப்பவற்றை எதிர்கொள்வதென்பது சாத்தியாமா என்று பார்க்கவேண்டும்..

அது அவரவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது..

மணவாழ்க்கையிலிருந்தே சுதந்திரத்தைக் கொடுத்து வெளியே அனுப்பிவிட வேண்டியதுதான்//

கத்தோலிக்கர்களின் திருமணத்தில் அதற்கு வாய்ப்பில்லை.. மாணிக்கவேல் இதை எப்படி கையாள்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..

Karthik Jayanth said...

//சில சமயம் கதைகள்ல வர்ற சில பாத்திரங்களோட நாமளும் ஒன்றிச்சிப்போயி அவங்க சைட்ல சேர்ந்துக்கிட்டு உணர்ச்சிவசப்பட்டு போயிடறோம்..// Joseph sir said

கரெக்ட் சார். ஆனால் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர் என்ற முறையில் டோண்டு சாரிடம் இருந்து "கை நீட்டுதல்" போன்ற கருத்துகளை / வார்த்தை பிரயோகத்தை எதிர்பார்க்கவில்லை.

//ஆனால் அப்பாவுக்கான மரியாதை தராத மனைவியிடம் உறுதியாகத்தான் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதுபோய்த்தான் மாணிக்கவேலர் அவதிப்படுகிறார் என நினைக்கிறேன் ..

அந்த நிலைமையை முதலிலேயே வெளிப்படையாகக் காட்டியிருக்கவேண்டும் மாணிக்கவேலர் அவர்கள் // Dondu sir said

மாணிக்கவேலர் [கதையின் பின்புலத்தை வைத்து பார்க்கும் போது] கூட்டுகுடும்பமாக இருக்க ஆசைபடுகிறார் என எண்ணுகிறேன்.முதலில் பெண் பார்க்கும் போதே மாணிக்கவேலர் தனது எதிர்பார்ப்பு, ஆசையை தெளிவாக கூறி இருப்பார் என்று நம்புகிறேன். இதுதவிற ஆதரவட்ற பெண் அந்த சுழ்நிலையில் இருந்து வெளியேரும் போது, சிறிது அதிகசுகந்திரமாக செயல்படுவது இயல்பு. ஆனால் இந்த விளக்கங்கள் கதையின் களத்திற்க்கு அப்பாற்பட்டவை. I believe these are just intra about characters in the story, so..

//அடாவடி செய்பவர்களை விட அவர்களை சகித்துக் கொள்பவர்களே அதிகம் தவறு செய்கிறார்கள் என்பேன் நான். // Dondu sir said

இது பேச்சு. ஆனால் சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களை எதிர்கொள்வது வேறு. அதே கண்ணோட்டத்தில் குடும்பத்தில நடப்பவற்றை எதிர்கொள்வதென்பது சாத்தியம் இல்லை, என்பது எனது கருத்து.

//அந்த மனைவி பெண்ணுரிமை என்று பூச்சாண்டி காட்டினால் .. //Dondu sir said

இதில் பெண்ணுரிமை என்ற பேச்சே இல்லை.

"மனைவியிடம் கை நீட்டுதல்" இது சமுதயாத்தின் மேல் எனக்கு உள்ள கோபத்தின் வெளிபாடே.
ஜோஸப் & டோண்டு சார் உங்களின் அனுபவ அறிவு கூட எனது வயது இல்லை. நான் உங்களின் மனம் புண்படும்படி ஏதாவது சொல்லியிருந்தால் பொறுதருள வேண்டுகிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கார்த்திக்,

உங்களுடைய கடைசி பின்னூட்டத்தை படிக்கும்போது உங்களுடைய தெளிவான பார்வ நன்றாக புரிகிறது.

உங்களுடைய கருத்துக்கள் என்னையோ அல்லது டோண்டு சாரையோ நிச்சயம் புண்படுத்துவதாக இல்லை..

இது போன்ற விவாதங்கள் நல்லதுதான்.

வாழ்த்துக்கள்.