3.3.06

சூரியன் 34

ராணியை அவர் முதன் முதலில் பார்த்தவுடனே ஏன் என்று விளங்காமல் பிடித்துப் போனது. அதற்கு ராணியின் அமைதியான, அழகான கண்கள் காரணமாயிருந்திருக்கலாம். அத்தனை அமைதியாய் அவர்முன் காட்சியளித்தார் ராணி..

ராணியைப் பார்த்து சம்மதம் தெரிவித்துவிட்டு வீடு திரும்பிய மாணிக்கவேல் தன் விருப்பத்தைத் தன் தந்தையிடம் முதலில் தெரிவித்தார்.

அவர் கூறி முடிக்கும்வரை பொறுமையாய் செவிமடுத்த ஆறுமுகச்சாமி தன் மகனை சிறிது நேரம் ஆழமாய் பார்த்தார். இவனை தன் மகனாய் பெற தான் எத்தனை பாக்கியம் செய்திருக்கவேண்டும் என்று நினைத்தார்..

ஆனாலும் பழமையில் ஊறிப்போயிருந்த அவருடைய உள்ளம் இது எப்படி நடைமுறைக்கு ஒத்துவரும், தன்னுடைய மற்ற மகன்களும் மருமகள்களும் ஒத்துக்கொள்வார்களா? இத்திருமணத்தால் மாணிக்கவேல் தனிமைப்படுத்தப்பட்டு விடுவானோ என்றெல்லாம் அவருடைய சிந்தனை சென்றது..

‘என்னப்பா யோசிக்கறீங்க? அண்ணன்க என்ன சொல்லுவாங்களோன்னு யோசிக்கறீங்களாப்பா?’ என்ற தன் மகனைப் பார்த்து ஆமாம் என்று தலையசைத்தார்.

மாணிக்கவேல் ஒரு சிறு புன்னகையுடன், ‘அப்பா.. இதுதான் என்னுடைய விருப்பம். இதற்கு உங்களுடையவும் அம்மாவுடையவும் அனுமதிதான் எனக்கு முக்கியம். அம்மா இப்ப இருக்கற நிலையில ராணி மாதிரியான ஒரு அபலைப் பெண்தான் ஏற்றவள்னு நான் நினைக்கிறேன். இத ஏத்துக்கிட்டு என் கல்யாணத்துல சந்தோஷமா கலந்துக்கறது அண்ணன்க ரெண்டு பேரும் வந்தா சந்தோஷம். இல்லேன்னா எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லேப்பா.. நீங்க என்ன நினைக்கிறீங்கங்கறத தெரிஞ்சிக்கிட்டு  நான் அம்மாக்கிட்ட பேசலாம்னு நினைக்கிறேன்.’ என்றார் மாணிக்கவேல்.

‘எனக்கு உன்னுடைய முடிவுல பூரண சம்மதம் வேலு.. அம்மாவும் இப்ப இருக்கற நிலமையில இத ஏத்துக்காம இருக்கறதுக்கு வழியே இல்ல.. அதுவுமில்லாம அவ என்னோட விருப்பத்துக்கு எதிரா என்னைக்கிப்பா பேசியிருக்கா?’

மாணிக்கவேல் தன் தந்தையின் தளர்ந்த தோளை ஆதரவாய் தொட்டார். ஆறுமுகச்சாமி அப்படியே தன் மகனுடைய கரத்தில் தன் தலையை சாய்த்துக்கொள்ள சிறிது நேரம் மாணிக்கவேல் என்ன பேசுவதென தெரியாமல் திகைத்து நின்றார்.

அடுத்த சில நிமிடங்கள் அங்கே சங்கடமான அமைதி நிலவியது..

பிறகு சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்த ஆறுமுகச்சாமி தன் மகனின் கரத்தைப் பற்றி படுக்கையிலிருந்த தன் மனைவியிடம் அழைத்துச் சென்றார்.

அவர்கள் இருவரும் தன்னை நோக்கி வருவதைப் பார்த்த மாணிக்கவேலின் தாய் படுக்கையிலிருந்து எழ முயன்று முடியாமல் ஆயாசத்துடன் மீண்டும் படுக்கையில்  விழுந்தாள்.

அதைப் பார்த்த மாணிக்கவேல் விரைந்துச் சென்று தன் தாயைத் தாங்கிப் பிடித்து கட்டிலின் தலைமாட்டில் தலையணைகளை வைத்து உட்கார வைத்தார்.

‘நம்ம வேல் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு சம்மதிச்சிட்டான்மா.. அவனே ஒரு பொண்ணையும் பார்த்துட்டு வந்து நிக்கறான். பொண்ணு வேற யாருமில்லே நம்ம வீட்டு பக்கத்துலருக்கற கன்னியாஸ்திரீங்க மடத்துலருக்கற பொண்ணாம்.. அப்பா, அம்மான்னு யாருமில்ல.. நம்ம மத்த மருமகள்ங்கள மாதிரி இல்லாம நம்ம வீட்டோடயே இருப்பான்னு நினைச்சி வேல் இப்படி முடிவெடுத்திருக்கிறான். எனக்கும் அது சரிதான்னு படுது.. நீதான் உன் முடிவ சொல்லணும்.. என்னம்மா?’ என்றார் ஆறுமுகச்சாமி..

அவர் பேசி முடித்தும் சில நிமிடங்கள் ஒன்றும் பதில் கூறாமல் வியப்புடன் தன்னையே தன் தாய் பார்ப்பதை உணர்ந்த மாணிக்கவேல், ‘என்னம்மா யோசிக்கிறீங்க?’ என்றார் மிருதுவாக..

கண்களில் பொங்கி வந்த கண்ணீரை கட்டுப்படுத்தமுடியாமல் தன் தாய் திணறுவதைக் கண்டவர் கட்டிலுக்கருகில் மண்டியிட்டு அவளுடயை மெலிந்த கரங்களைப் பற்றிக்கொண்டு, ‘என்னம்மா.. உங்களுக்கு விருப்பமில்லையா?’ என்றார்.

‘இல்லடா வேலு.. நீ என் பிள்ளைதானான்னு நினைச்சிப் பார்த்தேன். இது சந்தோஷத்துல வந்த கண்ணீர்டா மகனே.. எனக்கு இதுல பூரண சம்மதம்.. அதுவுமில்லாம உங்கப்பா சரின்னு சொன்னதுக்கப்புறம் நான் என்னைக்கிடா முடியாதுன்னு சொல்லியிருக்கேன்? எல்லாத்துக்கும் மேல நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சதே எனக்கு போறும்னு இருக்குடா.. அத்தோட ஒரு அபலைப் பொண்ணுக்கு வாழ்க்கை குடுக்கணும்னு நினைச்ச பாரு.. அத நான் எப்படிடா ஏத்துக்காம இருப்பேன்? நானும் அதுமாதிரி ஒருத்திதானேடா.. அத நினைச்சேன், கண்ணு கலங்கிருச்சி.. ஆனா உன் அண்ணன்மார்ங்க... ஏங்க, நீங்க அத யோசிச்சி பார்த்தீங்களா? வேலுவோட இந்த முடிவுக்கு அவனுங்க ஒத்துக்குவாங்களாங்க?’

ஆறுமுகச்சாமி தன் மகனைப் பார்த்தார்.

மாணிக்கவேல்.. ‘நீங்க எதப்பத்தியும் கவலைப்படாதீங்கம்மா.. அப்பாவையும் கூட்டிக்கிட்டு போய் எல்லாரையும் கூப்பிடறேன்.. வந்தா சந்தோஷம்.. இல்லன்னா நீங்க, நான், தம்பிங்க.. அதுபோதும்..’ என்றார் தன் தாய், தந்தை இருவரையும் பார்த்து..

சிறிது நேரம் வரை ஒன்றும் கூறாமல் இருந்த தன் தாய் ஆயாசத்துடன் கண்களை மூடிக்கொண்டு படுக்கையில் சரிவதைப் பார்த்த மாணிக்கவேல் தன் தந்தையை ஆதரவாய் தொட்டுவிட்டு அறையை விட்டு வெளியேறினார்..

***

தன் மேல் சட்டைப்பையிலிருந்த செல் ஃபோன் சிணுங்குவதைக் கேட்டு தன் நினைவுகளிலிருந்து திரும்பிய மாணிக்கவேல் எடுத்துப் பார்த்தார்..

தன்னுடைய வீட்டுத் தொலைப்பேசி எண் தெரியவே, எடுத்து, ‘என்னடா சந்தோஷ்.. என்ன விஷயம்?’ என்றார்.

அடுத்த நொடியே அவருடைய முகம் கல்லாய் உறைந்துப் போனது.. ‘டேய்.. நீ.. நீ...’

மேலே பேச முடியாமல், நடை தடுமாற.. சாலையோரத்திற்குச் சென்று நடைபாதையில் சரிந்து அமர்ந்தார்..

‘டாட்.. டாட்.. ப்ளீஸ் ஆன்சர் மீ..’ என்று அலறும் செல் ஃபோனையே பார்த்தார் பதிலளிக்க முடியாமல்..

‘ஏங்க ஒரு ராத்திரி வெறு வயித்தோட படுத்தா செத்தா போயிடுவார்?’

தன் மனைவியின் வார்த்தைகள் அசரீரி போல அவருடைய செவிகளில் ஒலிக்க வெறுமையாய் தன் எதிரே தெரிந்த சாலையைப் பார்த்தார் மாணிக்கவேல்..

அவரை அப்பகுதியில் தினமும் பார்த்து பழக்கப்பட்டுப் போன சிலர் அவர் நடைபாதையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து திகைத்து அவரை சுற்றி ஒரு சிறு கூட்டமாக நின்றனர்.

அதில் ஒருவர், ‘மிஸ்டர் மாணிக்கம்.. என்னாச்சி சார்.. ஒடம்புக்கு முடியலையா? டு யு நீட் எனி ஹெல்ப்..?’ என, நடுங்கும் உதடுகளுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தார். ஆமாம் என்று தலையசைத்தார்.. ‘யெஸ் சார்.. I need to reach home.. please get me a vehicle.. please..’

அவர் மேலே பேசமுடியாமல் கண்கள் கலங்கி தலை குனிந்து அமர்ந்திருக்க திகைத்துப் போன நண்பர்கள் கூட்டம் சட்டென்று விலகி வழியில் சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஷா ஒன்றை நிறுத்தியது..

எதிர் திசையில் சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ வட்டமடித்து வந்து அவர்கள் முன் நிற்க மாணிக்கவேல் ஏறிக்கொண்டார். அவரை விசாரித்தவரும் வாகனத்தில் ஏறிக்கொண்டு, 'ஆதி நகர் போப்பா.. சீக்கிரம்.’ என ஆட்டோ சீறிக்கொண்டு விரைந்தது..

***






4 comments:

G.Ragavan said...

ம்ம்ம்ம்ம்....என்ன சார் இது.....ஒரு வாய்ச் சாப்பாடு...யாரோ வெளி ஆளுக்கா.....பல சமயங்கள்ள நல்லது எது கெட்டது எதுன்னே புரியறதில்லை. புரியறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சி போயிருது...........

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

பல சமயங்கள்ள நல்லது எது கெட்டது எதுன்னே புரியறதில்லை//

ரொம்ப கரெக்ட்.. அப்படி இருக்கறவரைக்கும்தான் லைஃப்ல ஒரு த்ரில் இருக்கும்

G.Ragavan said...

// // பல சமயங்கள்ள நல்லது எது கெட்டது எதுன்னே புரியறதில்லை//

ரொம்ப கரெக்ட்.. அப்படி இருக்கறவரைக்கும்தான் லைஃப்ல ஒரு த்ரில் இருக்கும் //

சார் நீங்க சொல்றதப் படிச்சா எனக்கு ஜெயகாந்தன் கருத்துதான் நினைவுக்கு வருது.

டிபிஆர்.ஜோசப் said...

நீங்க சொல்றதப் படிச்சா எனக்கு ஜெயகாந்தன் கருத்துதான் நினைவுக்கு வருது.//

அதென்ன கருத்து ராகவன்?