இணைப்பு துண்டிக்கப்பட்ட தன்னுடைய செல் ஃபோனையே ஒரு நிமிடம் பார்த்துக்கொண்டிருந்தார் பாபு சுரேஷ்.
சேது மாதவனை எந்த அளவுக்கு நம்பலாம் என்று ஓடியது அவருடைய சிந்தனை.
எதிரே சோபாவில் முந்தைய நாள் இரவு முழுவதும் அழுது, வீங்கி, விகாரமாய் போயிருந்த முகத்துடன் தன் முன்னால் அமர்ந்திருந்த தன் மனைவி சுசீந்தரா என்ற சுசீயைப் பார்த்தார்.
எல்லாம் இவளால் வந்தது என்ற நினைப்பே எரிச்சலைத் தந்தது. சே! என்னுடைய தோல்விக்கெல்லாம் நீதாண்டி காரணம். முத முதல்லா ஒன்ன பொண்ணு பார்த்துட்டு வந்ததுலருந்தே இந்த பொண்ண எனக்கு புடிக்கலைப்பா. என் குணத்துக்கு இந்த பட்டிக்காட்டு பொண்ணு ஒத்தே வராதுன்னு ஒத்த கால்ல நின்னேன். யாராச்சும் கேட்டாத்தானே..
இதுல அம்மா வேற ‘டேய் பாபு.. உன் முரட்டு குணத்துக்கு பூன மாதிரி இருக்கற இவ தான் லாயக்கு. உன் அண்ணாவுக்கு வாய்ச்சா மாதிரி ஒரு அடங்காப் பிடாரிக்கு இவ எவ்வளவோ தேவலை. உனக்கு ஈடா படிச்சிருக்கா.. ஆனாலும் எவ்வளவு பணிவா நடந்துக்கிட்டா அன்னைக்கி? அவ ட்ரெஸ் பண்ணிக்கிட்டிருந்த விதம்தான் கொஞ்சம் பட்டிக்காடுமாதிரி இருந்திச்சி.. இங்க்லீஷ் பேச வரமாட்டேங்குது. சின்ன டவுண்லருந்து வந்தவதானடா.. கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் நீ மாத்திரு.. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?’ என்று அவனை மூளைச் சலவை செய்யறா மாதிரி ஒரு வாரமா பேசி, பேசி ஒத்துக்க வச்சிட்டாங்க.
நான் மாறிருவா, மாறிருவான்னு இருபத்தி அஞ்சி வருஷம் காத்திருந்ததுதான் மிச்சம். இதோ, இப்பவும் அதே மாதிரி, கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தப்ப இருந்தா மாதிரியே தான் இருக்கா..
தமிழத் தவிர இன்னமும் ஒரு வார்த்தை இங்க்லீஷ் வராது, ஒரு பார்ட்டிக்கு கூட்டிக்கிட்டு போக முடியாது, ஏன் ஃபோன் வந்தா ஒழுங்கா எடுத்து பேசவாவது தெரியுமா? வாய் திறந்தா போறும்.. பட்டிக்காட்டுத்தனம் வெளிய வந்துரும்.. உங்கம்மா பொருளாதாரத்துல பி.ஏ பட்டதாரின்னு சொன்னா நம்ப முடியுமாடா ரம்யா என்று பல முறை தன் மகளிடம் கேலியாக கேட்டதுண்டு பாபு.
அப்போதெல்லாம் தன் தாய்க்குப் பரிந்துக்கொண்டு வருவாள் ரம்யா. ‘என்ன டாட் நீங்க? அம்மா மாதிரி ஒருத்தர்மட்டும்தான் உங்களோட குடும்பம் நடத்த முடியும். அத மறந்துராதீங்க. She is such a gem. நீங்க ஆஃபீஸ்லருந்து எந்த மூட்ல வந்தாலும் அத தாங்கிக்கிட்டு எத்தனை வருஷம் உங்க மணம் கோணாம நடந்துக்கிட்டிருக்காங்க? அதுக்கே அவங்களுக்கு நீங்க தாங்ஸ் சொல்லணும்.. எனக்கு தெரிஞ்ச என் ஃப்ரெண்ட்ஸோட அம்மாவையெல்லாம் பார்க்கும்போது எங்கம்மா ஒரு goddess, தெரியுமா டாட்?’ என்பாள்.
‘ஆமா, நீதான் மெச்சிக்கணும்.’ என்று முனுமுனுப்பார் பாபு.
அவர் செய்யாத தகிடுதத்தங்கள் இல்லை. பணம் சேர்க்க வேண்டும். சமுதாயத்தில் ஒரு பெரிய அந்தஸ்த்தில் வர வேண்டும். அது ஒன்றுதான் தன்னுடைய குறிக்கோள் என்று அலைந்தவர்.
அவர் இதுவரை தான் வேலை செய்த எந்த ஊருக்கும் சுசீந்தராவை அழைத்துக்கொண்டு சென்றதே இல்லை. அவர்களுக்கு திருமணம் முடிந்து அடுத்த மூன்றாம் மாதத்திலேயே அவருக்கு மும்பை கிளைக்கு மாற்றலாகிவிட கர்ப்பமாய் இருந்த அவரை சென்னையிலேயே தன் பெற்றோர் பாதுகாப்பில் விட்டு விட்டு போனார்.
ரம்யா பிறந்து ஒரு வருடம் கழித்துதான் தன் தாயின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் மும்பைக்கு அவளை அழைத்துச் சென்றார். ஆனால் ஒரே மாதத்தில் தமிழைத் தவிர வேறெந்த மொழியிலும் பேசத் தெரியாத ஒரு மனைவியை வைத்துக் கொண்டு என்னால் இங்கே குப்பைக் கொட்ட முடியவில்லை. உங்க கூடவே அவ இருக்கட்டும் என்று சென்னைக்கே திருப்பி அனுப்பிவிட்டார்.
அன்று முதல் அவர் துணைப் பொது மேலாளராகப் பதவி உயர்வு பெற்று சென்னைக் கிளைகளுள் ஒன்றிற்கு மாற்றலாகி வரும் வரை அவ்வப்போது சென்னை வந்து தன் மனைவியையும் மகளையும் பார்த்துவிட்டு சென்றதோடு கணவன் – மனைவி நின்றுபோனது.
அது சுசீந்தராவைப் பாதித்ததோ இல்லையோ ரம்யாவின் மனநிலையை வெகுவாகப் பாதித்தது என்பதை அவர் உணரவேயில்லை. அவருக்கு அலுவலக வாழ்க்கையில் கிடைத்த வெற்றியும், அந்தஸ்த்தும், செல்வமும், செல்வாக்குமே அவருக்கு போதுமானதாக இருந்தது.
அதன் விளைவு?
தன் மகளையே அவரால் புரிந்துக்கொள்ள முடிந்ததில்லை..
அவர் பொது மேலாளராக பதவி உயர்வுப் பெற்று அதை தன் மனைவி, மகளுடன் பகிர்ந்துக் கொள்ள இருவருக்கும் பரிசுகள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்த நாளை நினைத்துப் பார்த்தார் பாபு சுரேஷ்.
அவருடைய மனைவி சுசீ அவரையும் அவர் வாங்கி வந்திருந்த பரிசுகளையும் மாறி, மாறி பார்த்துவிட்டு முகத்தில் பெரிதாய் எந்தவித சந்தோஷத்தையும் காட்டாமல் அவர் நீட்டிய பொட்டலத்தைப் பெற்றுக்கொண்டு நகர்ந்தபோது அவர் அதைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. சரியான ஜடம் என்ற முனுமுனுப்போடு நிறுத்திக்கொண்டார்.
ஆனால் நேரம் கழித்து வீடு திரும்பிய ரம்யா அவர் தன்னுடைய பதவி உயர்வை அறிவித்ததும், ‘So what Dad? You’ve got onemore promotion in your career? So what? What is it to me or mummy? I don’t know how mummy feels, but I don’t simply care. It is nothing to me.’ என்று அலட்சியத்துடன் கூறிவிட்டு அவர் நீட்டிய பரிசு பொட்டலத்தை வாங்கி அருகிலிருந்த சோபாவில் வீசிவிட்டு சென்றபோதுதான் தனக்கும் தன் மகளுக்கும் இடையிலிருந்த தூரத்தை உணர்ந்தார்.
இனியும் தாமதிக்க விரும்பாமல் அவளுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயலில் இறங்கினார்.
அவருடைய செல்வம் மற்றும் செல்வாக்கின் ஆழ, அகலத்தை அறிந்திருந்த பலரும் அவருடன் சம்மந்தம் வைத்துக் கொள்ள முன் வர எந்த சிரமமுமில்லாமல் நன்றாக படித்த, நல்ல பதவியிலிருந்த, நல்ல உயரமும், கலரும், அம்சமுமாயிருந்த ஒரு மாப்பிள்ளையைப் பேசி முடித்தார்.
தன் தேர்வுக்கு எந்தவித மறுப்பும் கூறாமல் ரம்யா சம்மதித்தது அவருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ‘என்ன ரம்யா, மாப்பிள்ளைய உனக்குப் புடிச்சிருக்கா இல்ல இதையும் அப்பாவ விட்டுட்டு போனாப் போறுங்கற எண்ணத்துல ஒத்துக்கறயா? அப்பா மேலருக்கற கோபத்துல இதுக்கு ஒத்துக்காதம்மா.. அப்பா ஒனக்கு என்னைக்கும் தீங்கா நினைச்சதுல்ல.. அம்மாவ அப்பாவுக்கு பிடிக்கலைங்கறது உன்னோட கற்பனைம்மா.. ஆனா அம்மாவுக்கு தெரியும் நான் அவளை எவ்வளவுக்கு நேசிக்கறேன்.’ என்று அவர் தன்னுடைய தேர்வைப் பற்றி அவளிடம் கூறியபோது அவள் கூறிய பதிலையும் நினைத்துப் பார்த்தார்.
‘டேட்.. நீங்க என்னைக்கி என்னோட டேஸ்ட் என்ன, என்னோட நீட்ஸ் என்னன்னு கேட்டு செஞ்சிருக்கீங்க? மாசம் ஒரு தரம் ஃபோன்ல பேசறது, ஆறு மாசத்துக்கு ஒரு தரம் ஒரு ரெண்டு, மூனு நாள் விசிட்ல வந்து போறது.. இதுமட்டும் போறாது டாட் ஒரு மகளுக்கு.. நான் உங்களுக்காக ஏங்குனப்போ நீங்க இங்க இல்ல.. இப்ப என்ன விட்டுட்டு போறதுக்காக இந்த மாப்பிள்ளைய ஒத்துக்கிறயா ரம்யான்னு கேக்கறீங்க. நீங்க என்னைக்கிப்பா என்னோட இருந்திருக்கீங்க இப்ப உங்கள விட்டு போணும்னு நா நினைக்கறதுக்கு? When I needed your presence you were not there. Now, I don’t need you dad.. I just don’t need you. அதுக்கும் நீங்க பார்த்த இந்த மாப்பிள்ளைய பண்ணிக்கறேன்னு ஒத்துக்கிட்டதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. எனக்கு மாப்பிள்ளைய ரொம்ப பிடிச்சிருக்கு ரம்யான்னு அம்மா சொன்னாங்க, நானும் சரின்னு ஒத்துக்கிட்டேன்.. அவ்வளவுதான். இதுக்கு மேல கேக்காதீங்க.’
அப்போதும் ரம்யா இப்படி செய்து தன்னைப் பழிவாங்க நினைத்திருந்தாள் என்பதை உணராமலே போனார் பாபு.
சரி. தனக்குத்தான் புரியவில்லை. இவளுக்குமா தெரிந்திருக்காது? இடியட். தன் கூடவே இருந்த மகளோட மனசக்கூட புரிஞ்சிக்க முடியாத இந்த ஜடத்தோட எப்படி நான் இருபத்தஞ்சி வருஷமா வாழ்ந்தேன்..
‘என்னங்க, யார் கிட்ட பேசினீங்க? ரம்யா கிடைப்பாளா மாட்டாளாங்க?’
தன் நினைவுகளில் மூழ்கிப் போயிருந்த பாபு சுரேஷ் திடுக்கிட்டு தன் மனைவியைப் பார்த்தார்.
அவரையுமறியாமல் ஒரு வெறுப்பு அவருடைய அடிவயிற்றிலிருந்து புறப்பட்டு வர, ‘ஆமாண்டி, இப்ப கேளு. புருஷனத்தான் புரிஞ்சிக்க முடியல.. நீ வளர்த்த பொண்ணையுமா புரிஞ்சிக்க முடியாத முட்டாளா இருப்பே.. நாந்தான் வேலை, வேலைன்னு அலைஞ்சேன்.. ரம்யாவோட படிப்பு கெட்டுறக்கூடாது, அவ ஒரே எடத்துல இருந்து படிச்சாத்தான் நல்லதுன்னுதானே எங்க டிரான்ஸ்ஃபர் ஆனாலும் உங்க ரெண்டு பேர மட்டும் இங்கயே விட்டுட்டுப் போனேன். அவ எங்க போறா, என்ன பண்றான்னு ஏதாச்சும் தெரியுமாடி உனக்கு? ஜடம், ஜடம்.. இப்ப அவள எங்கேன்னு போய் தேடுவேன்..’ என்று சீறி விழுந்தார். ‘சம்பந்தி வீட்டுக்கு விவரம் தெரியறதுக்கு முன்னால முழுசா அவள கொண்டு வரணும்தான் உன்ன பொறுத்துக்கிட்டு நிக்கறேன். அவ மட்டும் இன்னைக்கி ராத்திரிக்குள்ள கிடைக்காம போட்டும்.. உன்ன அடிச்சே கொன்னுடறேன்.. போடி எழுந்து.. இனியும் என் முன்னால வந்து நின்னே, உன்ன என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.. கண்ணீர் வடிச்சி என் கழுத்த அறுக்காம எழுந்து போயிரு.. சொல்லிட்டேன்.’
கண்களில் ததும்பி கண்ணீருடன் சிறிது நேரம் தன்னையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு எழுந்து தன் படுக்கையறையை நோக்கி நடந்த தன் மனைவியையே பார்த்தார் பாபு.
சே.. இவ என்ன செய்வா பாவம்.. வாயில்லா பூச்சி.. என்று ஒரு நிமிடம் அவளுக்காகப் பரிதாபப்பட்டவர்.. இருந்தாலும் இவ மட்டும் கொஞ்சம் புத்திசாலியா இருந்திருந்தா இப்படி நடந்திருக்காதே.. போயும், போயும் அந்த ஃப்ராடு சேது மாதவன் கால்ல போய் விழிந்திருக்க வேண்டாமே என்றும் தோன்றியது..
சோபாவில் கிடந்த செல் ஃபோன் சிணுங்க யார் என்று பார்த்தார்..
செல் ஃபோன் திரையில் தெரிந்த முன், பின் தெரியாத எண்ணைப் பார்த்தவர் தயக்கத்துடன், ‘ஹலோ.. ஹ¥ இஸ் திஸ்?’ என்றார்..
தொடரும்..
2 comments:
பிள்ளை வளர்ப்பு என்ன அவ்வளவு எளிதா? ஆறு மாதத்திற்கு ஒருமுறை வந்து பார்ப்பதா? நிச்சயம் இல்லை. அன்பும் ஆதரவும் காட்டி ஊட்டி நல்ல பண்பையும் படிப்பையும் சேர்த்துக் கொடுத்து.....இத்தனையையும் செய்யாமல் பாசமே வா என்றால் ஒன்றும் வராது...பாவம் அவர்...
வாங்க ராகவன்,
மேல் மட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர்-பிள்ளைகள் உறவு இப்படித்தான். பிள்ளைகளுக்கு கை நிறைய பணம் கொடுத்துவிட்டால் போதும். தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால் பணம் பாசத்தைப் பெற்றுத் தராது என்பதை அவர்கள் புரிந்துக் கொள்வதே இல்லை.
Post a Comment