17.3.06

சூரியன் 43

எஸ்.பி. தனபால் சாமியின் காவல்துறை வாகனம் தூரத்தில் வருவதைப் பார்த்ததுமே வாசலில் அமர்ந்திருந்த கான்ஸ்டபிள் எழுந்து கேட்டைத் திறந்துவிட்டு விறைப்புடன் சல்யூட் வைத்தார்.

வாகனம் கேட்டைக் கடந்து போர்ட்டிக்கோவில் சென்று நின்ற தோரணையே எஸ்.பியின் இன்றைய ‘மூட்’ சரியில்லை என்பதை அவருக்கு உணர்த்தியது..

‘நம்மக்கிட்ட பாயாம இருந்தா சரி.’ என்ற முனுமுனுப்புடன் கேட்டை மூடிவிட்டு சாலையைப் பார்த்து திரும்பி நின்றுக்கொண்டார்.

எஸ்.பி வாகனத்திலிருந்து இறங்கி கதவை அறைந்து சாத்தும் சப்தம் சமையலறையில் காப்பி தயாரித்துக்கொண்டிருந்த புவனாவிற்கு கேட்டது..

மனப்பாடம் செய்து வைத்திருந்த வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டு சதி செய்து விடுமோ என்ற அச்சத்துடன் நடுங்கும் கைகளில் காப்பி கோப்பையை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு விரைந்தாள்..

‘வாங்கப்பா.. டூர்லாம் எப்படி இருந்திச்சி..’ என்ற மகளை தன்னுடைய போலீஸ் கண்களால் ஆராய்ந்தார் எஸ்.பி.

புவனா அவருடைய பார்வையத் தவிர்த்து தன் கையிலிருந்த காப்பி கோப்பையை கவனத்துடன் குறுமேசையில் வைத்துவிட்டு அவரை தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.

‘என்னம்மா எப்படி தனியா இருந்தேன்னு கேக்க மாட்டேன். ஏன்னா உன்ன தனியா விட்டுட்டு போறது ஃபர்ஸ்ட் டைம் இல்லையே..’ என்று உரக்க சிரித்தவாறு சோபாவில் அமர்ந்த எஸ்.பி குறுமேசையிலிருந்த காப்பி கோப்பையை எடுத்து உறிஞ்சினார்.

சட்டென்று அவர் முகம் போன போக்கைப் பார்த்து நாக்கைக் கடித்துக்கொண்டாள் புவனா. ‘ஜீனி போடலைப்பா.’ என்றவாறு சமையலறையை நோக்கி ஓடிய தன் மகளைப் பார்த்தார் எஸ்.பி.

என்னத்தையோ செஞ்சிட்டு முளிக்கிறாப்பல இருக்கே.. என்றவாறு ஹாலைச் சுற்றி நோட்டம் விட்டார். அந்த பொண்ணு வீட்ட விட்டு போனது இவளுக்கு தெரிஞ்சிருக்குமோ.. இருக்கும்.. அவளா சொல்றாளான்னு பார்ப்போம்..

சமையலறையிலிருந்து ஓட்டமும் நடையுமாய் வந்த புவனா நடுங்கும் கைகளுடன் பாத்திரத்திலிருந்த சர்க்கரையை காப்பியில் கலக்குவதை கவனித்த எஸ்.பி.. ‘சோ.. நாம நினைச்சது சரிதான்.. இவளுக்கு தெரிஞ்சிருக்கு..’ என்ற முடிவுக்கு வந்தார்.

காப்பியை உறிஞ்சியவாறே தன் மகளை நோட்டம் விட்டார். ‘என்ன புவனா.. ஏதோ அப்பா கிட்ட சொல்ல வரா மாதிரி தெரியுதே.. என்னன்னு சொல்லும்மா.’ என்றார்.

புவனா அவரைப் பார்த்துவிட்டு அடுத்த நொடியே மாடியைப் பார்ப்பதைப் பார்த்தார். What does it mean? Somebody is there... அந்த பொண்ணா இருக்குமோ?

‘என்னம்மா மாடிய பாக்கறே? யாராச்சும் விருந்தாளி வந்திருக்காங்களா என்ன?’

புவனா அச்சத்துடன் தன் தந்தையைப் பார்த்தாள். ‘ஆமாப்பா. என் ஃப்ரெண்ட் ரம்யாதாம்பா..’

தனபால் சாமிக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. யெஸ்.. அதான் அந்த பொண்ணோட பேரு.. ரம்யா..

‘ரம்யாவா? எங்க? மாடியிலயா?’

‘ஆமாப்பா..’

அவருடைய புருவங்கள் உயர்ந்தன. அவருடைய போலீஸ் கண்கள் சந்தேகத்துடன் தன்னை ஊடுருவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மாடியைப் பார்த்தாள் புவனா. ‘ஏய் ரம்யா? அங்க என்ன பண்றே? அப்பா வந்துட்டார். வா.’

எஸ்.பி யின் பார்வை மாடிக்குத் தாவியது. புவனாவின் குரலுக்கே காத்திருந்ததுபோல் படுக்கையறையிலிருந்து வெளியே வந்த ரம்யா ஒரு சிறு புன்னகையுடன் மாடிப்படியில் இறங்கி வருவதைப் பார்த்த எஸ்.பியின் உதடுகளில் அவரையுமறியாமல் ஒரு புன்னகை தவழ்ந்தது. இந்த காலத்து குட்டிகளுக்குத்தான் என்ன நெஞ்சழுத்தம்! அங்க என்னடான்னா இவளோட அப்பா போலீசுக்கு போனா கேவலம்னு நினைச்சி பொண்ணோட  போட்டோவ அடியாள்ங்க கிட்ட குடுத்து தேடிக்கிட்டிருக்கார். பொண்ணு  என்னடான்னா ஒரு போலீஸ் அதிகாரி வீட்லயே ஒளிஞ்சிக்கிட்டு நிம்மதியா இருக்கு..

ஊம்.. இன்னும் என்னென்ன கதை சொல்லுதுங்கன்னு பார்ப்பம். இதுல இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருக்கற தன் மகளும் புவனாவும் கூட்டா என்றா நினைத்தபோது அவரையும் அறியாமல் அவருக்கு சிரிப்பு வந்தது. உரக்கச் சிரித்தார்.

‘என்ன அங்கிள் சிரிக்கிறீங்க?’ என்றாள் ரம்யா.

புவனாவுக்கு தன் தந்தை காரணமில்லாமல் எதையும் செய்ய மாட்டார் என்பது தெரிந்திருந்ததால் அவருடைய சிரிப்பிற்குப் பின்னால் என்னவோ மர்மம் இருக்கிறது என்று நினைத்தாள்..

பேசாம உண்மைய சொல்லிடறதுதான் நல்லது என்று வாயெடுத்தாள்.

ஆனால் ரம்யா முந்திக்கொண்டாள். ‘அங்கிள் நான் ஒரு ரெண்டு வாரத்துக்கு புவனா கூட இருந்துட்டு போலாம்னு நேத்துதான் வந்தேன்..’

எஸ்.பி தன் முன்னால் நின்ற இருவரையும் மாறி, மாறி பார்த்தார். அப்படியா? ஆனா இத ஏன் வாசல்ல இருக்கற கான்ஸ்டபிள் நான் வந்ததுமே என்கிட்ட சொல்லலை? அவனுக்கு ஸ்ட்ரிக்ட் இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்துட்டுத்தான போனேன்? சோ.. இந்த பொண்ணு வந்தத வாசல்ல நிக்கற கான்ஸ்டபிள் பாக்கலை..

‘அப்படியாம்மா? ஆனா உன்ன எப்படி உள்ள விட்டான் அந்த கான்ஸ்டபிள்? நா இல்லாதப்போ தெரியாத யாரையும் உள்ள விடக்கூடாதுன்னு சொல்லியிருந்தேனே.. ஏம்மா புவனா?’

புவனா என்னடி இப்படி என்னை மாட்டி விட்டுட்டே.. அதான் அப்பாக்கிட்ட நான் பேசிக்கறேன்னு சொன்னேனே.. என்பதுபோல் தன் தோழியைப் பார்த்தாள்..

‘என்ன புவனா.. உன் ஃப்ரெண்ட பாக்கறே.. ரம்யா வர்றப்போ வாசல்ல கான்ஸ்டபிள் இருந்தானா இல்லையா?’

‘இல்லப்பா.’ என்றாள் புவனா தயக்கத்துடன்..

ரம்யா, ‘அங்கிள் நான் சொல்றேன்..’ என்று குறுக்கிட எஸ்.பி சிரித்தவாறு, ‘It is ok.. நீ சொல்லும்மா. எதுக்கு ரெண்டு வாரம் இங்க தங்கப் போறே.. உங்க வீட்ல யாரும் இல்லையா?’ என்றார்.

ரம்யா தான் மனப்பாடம் செய்து வைத்திருந்ததைக் கோர்வையாய் சரளமாக கூறி முடிக்க புவனா அதிர்ச்சியில் அவளையே பார்ப்பதை எஸ்.பியும் பார்த்துவிட்டார்.

That’s it. இந்த பொண்ணுக்கு அப்பா, அம்மா பார்த்து வச்ச பையனைப் பிடிக்கலை.. வீட்ட விட்டு ஒடி வந்திருக்கு.. சரி.. அதென்ன ரெண்டு வாரம்?

யோசனையுடன் தன் எதிரில் அப்பாவியாய் நின்றவளைப் பார்த்தார். தன் தோழியின் தந்தை ஒரு கண்டிப்பான காவல்துறை அதிகாரி என்று தெரிந்தும் எத்தனை சாமர்த்தியமாக உண்மையை மறைத்து பேசுகிறது இந்த பெண்! இவளுடன் சேர்ந்து தன் மகளும் கெட்டுப் போக மாட்டாள் என்பது என்ன நிச்சயம்?

தனபால் சாமி திரும்பி தன் மகளைப் பார்த்தார். அவளுடைய முகபாவமே தன் தோழி கூறியதில் அவளுக்கு சம்மதமில்லை என்பது தெளிவாகத் தெரியவே தன் மகள் தான் நினைத்தது போல் இன்னும் கெட்டுப் போகவில்லை என்பதை உணர்ந்து நிம்மதியடைந்தார்..

சரி.. குளித்து முடித்துவிட்டு எழும்பூர் எஸ்.ஐ. என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டுவிட்டு மேல்கொண்டு ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்று நினைத்தவாறு எழுந்து நின்றார்.

‘சரி ரம்யா.. தாராளமா இங்க இருக்கலாம். ஜாலியா இருந்துட்டு போம்மா.. புவனாவுக்கும் பொழுது போகும். என்ன புவனா?’ என்றவாறு தன் மகளைப் பார்த்தார்.

ஏதோ யோசனையில் இருந்த புவனா.. ‘எ.. என்னப்பா சொன்னீங்க?’ என்றாள்.

ரம்யா ஏய் என்ன, நீயே காட்டிக்குடுத்துருவ போல என்பது போல் அவளைப் பார்த்து முறைத்தாள்.

இதை கவனியாததுபோல் கீழ் தளத்தின் கோடியில் இருந்த தன் அறையை நோக்கி நடந்தார் தனபால்.. ‘புவனா.. கொஞ்சம் ஹீட்டர ஆன் பண்ணும்மா.. நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள பலாரத்த எடுத்து டேபிள்ல வை.. மூனு பேருமா சேர்ந்தே சாப்பிடலாம்.’

அவர் தலை மறைந்ததும்.. அப்ப்ப்ப்ப்ப்பா.. ஒரு வழியா தப்பிச்சாச்சி என்றாள் ரம்யா..

புவனா எரிச்சலுடன் தன் தோழியைப் பார்த்தாள். ‘ஏய்.. இடியட்.. அப்பா நீயும் நானும் சொன்னதுல ஒன்னையும் நம்பலை.. நீ வேணும்னா பாரு.. டிஃபன் சாப்பிடறப்போ நம்ம வாய்லருந்தே எல்லாத்தையும் கறக்கறாரா இல்லையான்னு.. எப்படியோ, நாம இன்னைக்கி வசமா மாட்டிக்கிட்டோம்.. சரி.. வா.. வந்து கிச்சன்ல எனக்கு ஹெல்ப் பண்ணு..’ என்றவாறு அவள் சமையலறையை நோக்கி நடக்க ரம்யா குழம்பிப்போய் நின்ற இடத்திலேயே நின்றாள்..

தொடரும்..

3 comments:

G.Ragavan said...

போச்சு...ஒளறிக் கொட்டி....ஜீனியக் கொட்டி...காரியத்தக் கொட்டி...இல்ல இல்ல கெடுத்து.......ரம்யாவுக்கு இருக்கு...........

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

ரம்யாவுக்கு இருக்கா?

பின்னே.. வீட்ட விட்டு ஓடிவந்து போயும் போயும் ஒரு போலீஸ் அதிகாரி வீட்லயா தஞ்சமைடயுணும்?

ப்ளாகர் ப்ராப்ளம் நீங்க ஃபேஸ் பண்ணீங்களா?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அரவின்,

உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.