30.3.06

சூரியன் 51

‘என்ன அங்கிள் நான் சொன்னதுல தப்பு ஏதாச்சும் இருக்கா?’

தன்னுடைய நினைவுகளில் மூழ்கிப் போயிருந்த தனபாலசாமி ரம்யாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு அவளைப் பார்த்தார்.

‘என்னம்மா கேட்டே?’ என்றார்.

ரம்யா தோட்டத்தில் பதிந்திருந்த தன் பார்வையை அவர் பக்கம் திருப்பினாள்.

‘இல்ல அங்கிள். இருபத்தி நாலு மணி நேரத்துல தூங்கற நேரத்தத் தவிர ஒரு ரெண்டு மணிநேரம் எங்களுக்குன்னு ஒதுக்கணும்னு எங்க அப்பாவுக்கு தோனியதே இல்லைன்னு சொன்னேனே அது தப்பா?’

தனபால் சமையலறை வாயிலில் நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய மகளைப் பார்த்து லேசாக புன்னகைத்தார். ‘இங்கே வந்து உட்கார்’ என்பதுபோல் சைகை செய்தார்.

புவனா நேரே ரம்யாவை நோக்கிச் சென்று அவளையும் அழைத்துக்கொண்டு உணவு மேசைக்கு சென்று அமர்ந்தாள்.

தனபால் இருவரையும் கனிவுடன் பார்த்துவிட்டு தொடர்ந்தார்.

‘நீ நினைக்கறது தப்பில்ல ரம்யா. ஆனா எந்த ஒரு தகப்பனும் தன் பிள்ளைகளை வேணும்னே புறக்கணிக்கறதில்லை. இப்ப என்னையும் புவனாவையுமே எடுத்துக்கயேன். இவ அம்மா இறந்தப்போ இவளுக்குன்னு என்னை விட்டா யாருமே இல்லை. அந்த வயசுல ஒரு பொண்ண வீட்ல வச்சிக்கிட்டு என்னால வளக்க முடியாதுன்னு நினைச்சித்தான் போர்டிங் ஸ்கூல்ல விட்டேன். அதுல புவனாவுக்கு வருத்தம்தான். எங்கம்மா, என்னோட அண்ணா வீட்ல இருந்தாங்க. அவங்களோட விடாம போர்டிங் ஸ்கூல்ல விட்டதுல புவனாவுக்கு மட்டுமில்ல, எங்கண்ணா, அம்மா எல்லாருக்குமே வருத்தம்தான். அம்மா பாசத்துக்காக ஏங்குற பிள்ளைய போயி போர்டிங்ல விட்டுட்டியேப்பான்னு எங்கம்மா வருத்தப்படாத நாளே இல்ல.. ஆனாலும் அதுதான் புவனாவுக்கு நல்லதுன்னு எனக்குப் பட்டது. இப்பவும் சொல்றேன். இன்னைக்கி நா புவனாவ வீட்ல தைரியமா விட்டுட்டு போக முடியுதுன்னா அதுக்குக் காரணம் புவனாக்கிட்டருக்கற துணிச்சல்தான். தனியா எந்த நேரத்துலயும் வெளிய போய் வர்றதுக்கும், தனியா இவ்வளவு பெரிய வீட்ல இருந்துக்கறதுக்கும் ஒரு பொண்ணுக்கு தைரியம் வேணும். அது புவனாக்கிட்ட இருக்குன்னா அது அவ போர்டிங்ல படிச்சதுதான் காரணம்னு நா நினைக்கிறேன். உன் விஷயத்துலயும் அதத்தாம்மா உங்கப்பா நினைச்சிருப்பார். அது மட்டுமில்லை.. இந்த விஷயத்த உன்னோட கோணத்துலருந்து மட்டும் பார்த்தா மத்த அப்பா மாதிரி நம்ம அப்பா இல்லையேன்னு தோனும். நானும் புவனாவும் அன்னியோன்னியமா இருக்கோம்னு உனக்கு தோனுது. ஆனா புவனாவ கேட்டுப் பார். ‘உங்கள பார்த்தாலே ஒரு போலீஸ் ஆஃபீசர பாக்கறா மாதிரி இருக்குதுப்பா’ன்னு அவளே எங்கிட்ட சொல்லியிருக்கா. வீட்டுக்கு வீடு வாசப்படிங்கறா மாதிரி ஒவ்வொரு வீட்லயும் ஒவ்வோரு விதமான பிரச்சினை. சில பேரண்ட்ஸ் ஒரேயடியா பிள்ளைங்க விஷயத்துல தலையிட்டு அவங்கள சுயமா ஒரு முடிவெடுக்க முடியாம வளர்த்துருவாங்க. என்னைக் கேட்டா அதுதான் ரொம்பவும் கெடுதியானது.’

ரம்யா தன் தோழியைப் பார்த்தாள். பிறகு, ‘நீங்க சொல்றத நான் ஒத்துக்கறேன் அங்கிள். நீங்க சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா புவனாவ போர்டிங் ஸ்கூல்ல சேர்த்தீங்க. ஆனா புவனாவே எங்கிட்ட சொல்லியிருக்கா. எந்த வேலையிருந்தாலும் ஒவ்வொரு மாசமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையும் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அவளை போய் பார்த்து அவகூடவே ஒரு நா முழுசும் தங்குவீங்கன்னு. ஆனா எங்கப்பா ஆறு மாசத்துக்கு ஒரு முறை வந்தாலும் மிஞ்சிப்போனா ஒரு மணி நேரம் வீட்ல இருப்பார். புறப்பட்டுப் போற அன்னைக்கிக் கூட அவரோட ட்ரெய்ன் புறப்படற நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னால வரைக்கும் வீட்ல இருக்க மாட்டார். வேணும்னே என்னையும் அம்மாவையும் அவாய்ட் பண்றா மாதிரி நடந்துக்குவார் அங்கிள். மனச வெறுத்து சொல்றேன் அங்கிள். அவருக்கு நாங்க ரெண்டு பேரும் ஒரு பொருட்டே இல்லை . அப்புறம் எப்படி மனசு ஒட்டும்? அதான் அவருக்கு ஒரு லெசன் டீச் பண்ணனும்னு வீட்ட விட்டு வந்துட்டேன்.’

தனபால் அவளை புன்னகையுடன் பார்த்தார். ‘சரிம்மா. I understand. வீட்ட விட்டு வந்துட்டே.. இப்ப என்ன பண்றதா உத்தேசம்?’

ரம்யா இந்த கேள்வியை எதிர்பார்க்காததுபோல் திகைப்புடன் அவரைப் பார்த்தாள்.

‘என்னம்மா, திகைச்சுப்போய்ட்டே? வீட்ட விட்டு வரணும்னு தோனிய உனக்கு மேல்கொண்டு என்ன செய்யணும்னும் தெரிஞ்சிருக்கணுமே அதனால கேட்டேன்.’

ரம்யா பதில் பேச முடியாமல் தலையைக் குனிந்துக்கொண்டாள்.

‘சரி.  வீட்ட விட்டு வந்ததுனால இந்த பிரச்சினை சால்வாயிரும்னு நீ நினைக்கறியாம்மா? உங்கப்பாவ தண்டிக்கறதா நினைச்சி நீசெஞ்சிருக்கற காரியம் உங்கம்மாவையும் பாதிச்சிருக்குமே. எல்லாம் உன்னாலதாண்டின்னு உங்கப்பா உங்கம்மாவ குற்றம் சொல்லியிருப்பாரே.. சரி அதுவும் போட்டும். இந்த விஷயம் ஒருவேளை உன்ன பொண்ணு பாக்க வந்த பையனோட பேரண்ட்சுக்கு தெரிஞ்சிப்போயி இந்த மாதிரி பொண்ணு எங்களுக்கு வேணாம்னுட்டா? அது உன்ன நீயே தண்டிச்சிக்கிட்டா மாதிரி ஆயிராதா?’

ரம்யாவின் தோள்கள் குலுங்கியதிலிருந்து அவள் அழுவதை உணர்ந்த புவனா அவளை தன்னோடு அணைத்துக்கொண்டாள்.

தனபால் தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு எழுந்து நின்றார். ‘சரி புவனா, எனக்கு டைம் ஆவுது. நான் கிளம்பறேன். அப்பா கமிஷ்னர மீட் பண்ணிட்டு நாலு, நாலரைக்குள்ள வந்திடறேன். ரம்யா, இன்னைக்கி முழுசும் இருந்து யோசனை பண்ணி வைம்மா. சாயந்திரம் நான் வந்ததும் நாம மூனு பேருமா உங்க வீட்டுக்கு போலாம். நான் அதுக்கு முன்னால உங்கப்பாவ கூப்டு நீ இங்கதான் இருக்கேன்னு சொல்லணும். என்ன சொல்றேம்மா?’

ரம்யா தலையை நிமிர்ந்து அவரைப் பார்க்க துணிவில்லாமல், ‘சரி அங்கிள்’ என்றால் மெல்லிய குரலில்.

தனபால் அவளை நெருங்கி அவளுடைய தலைமுடியை கனிவுடன் தடவி விட்டு, ‘Be strong. வாழ்க்கையில இதவிட பெரிய பிரச்சினைகளையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கும்மா. எத்தனை பெரிய பிரச்சினையானாலும் உன்ன சுத்தி இருக்கறவங்களோட ஹெல்ப் இருந்தா ஈசியா சமாளிச்சிரலாம். You can’t do everything on your own. அத நீ புரிஞ்சிக்கிட்டா போறும்.’ என்று றுதல் கூறிவிட்டு வாசலை நோக்கி நடந்தார்.

********

மத்தினம்மா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட கன்னியர் மடத்தலைவி ராணியின் அறைக்கதவுகளைத் திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

தன்னுடைய மடத்தின் வாசலில் இரண்டு வயது சிறுமியாக அனாதையாய் விடப்பட்டிருந்தவளை தன்னுடைய சக கன்னியர் எத்தனையோ மறுத்துக் கூறியும் சொந்த மகளைப் போலவே வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கிய பெண்ணா இது என்று அவரை பயமுறுத்தியது ராணியுடைய கோலம்..

சிறுவயது முதலே  ராணி யாரையும் மதியாமல் எடுத்தெறிந்து பேசுவதில் கெட்டிக்காரி. எப்போதும் ஜெபமும், தபமுமாய் இருந்த கன்னியர்கள் வளர்த்த பெண்ணா இது என்று அவளுடைய பள்ளி ஆசிரியைகள் அதிர்ந்துபோய் மடத்தில் வந்து அவளுடைய நடத்தையைப் பற்றி புகார் கூறியபோதெல்லாம் ஒரு தாய்க்குரிய பாசத்துடன் தான் புறக்கணித்ததுதான் தான் செய்த மிகப்பெரிய தவறு என்பதை பலமுறை உணர்ந்திருக்கிறார் மத்தீனா.

பதினெட்டு வயது மங்கையாய் பள்ளியிறுதி முடித்து ‘எனக்கு மேல படிக்கறதுக்கு இஷ்டமில்லை சிஸ்டர்.’ என்று அவள் தன்  முன்னே வந்து நின்ற நாள் இப்போது நினைவுக்கு வந்தது. ‘அப்ப என்னடி பண்ணப்போறே?’ என்ற தன்னுடைய கேள்விக்கு, ‘ஏன் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கற ஐடியாவே இல்லையா உங்களுக்கு? உங்கள மாதிரியே என்னையும் மொட்ட அடிச்சிக்கிட்டு கன்னியாஸ்திரியா ஆக்கிடலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தீங்கன்னா அத இப்பவே மாத்திக்குங்க. என்னாலல்லாம் அப்படி இருக்க முடியாது.’ என்ற கோபத்துடன் தன்னுடன் வாதிட்டு திருமணம் முடித்துக்கொண்ட இவள் திருமண வாழ்க்கையில் தானும் சந்தோஷமாய் இருந்ததில்லை தன்னுடைய கணவன், குழந்தைகளையும் சந்தோஷத்தை அனுபவிக்க விட்டதில்லை என்பதை அவள் அறிந்துதானிருந்தாள்.

தலைவிரிக் கோலத்துடன் தான் அறைக்குள் நுழைந்ததையும் பொருட்படுத்தாமல் மூர்க்கத்தனமான பார்வையுடன் தன்னை பார்ப்பதையும் பொருட்படுத்தாமல் அவளிடம் சென்று குனிந்து அவளுடைய கலைந்துக் கிடந்த முடியை அன்புடன் கோதிவிட்டார்.

‘இப்ப எதுக்கு இங்க வந்தீங்க? நான் உயிரோட இருக்கேனான்னு பாக்கவா?’ என்று ஆத்திரத்துடன் அலறிய ராணியை பார்த்து தலையை அசைத்தாள். ‘இல்ல ராணி.. உன் துக்கத்த பங்கு போட்டுக்க வந்திருக்கேன். கமலி உனக்கு எப்படி முக்கியமோ அதுபோலத்தாண்டி நீயும் எனக்கு.. இந்த தள்ளாத வயசுலயும் நீ இந்த ஊர்ல இருக்கேன்னுதானடி நானும் முதியோர் மடத்துக்கு போகாம இங்கயே இருக்கேன்? என்னைப் பார்த்தா அப்படி ஒரு கேள்வி கேட்டே..? வா.. எழுந்து வந்து உம் பொண்ணு முகத்துலருக்கற அந்த அலாதியான அமைதிய பார்.. அவ நேரா கர்த்தர்கிட்டதாண்டி போயிருக்கா.. நம்மளவிட்டுட்டு போய்ட்டாளேங்கற துக்கம் இருந்தாலும் அவ ஆத்மா சாந்தியடையறதுக்காட்டியும்  உன்னோட சோகத்த கர்த்தரோட பாதத்துல வச்சிட்டு அவளுக்காக பிரார்த்திக்க வேணாமாடி? இப்படி மூலைல உக்கார்ந்துக்கிட்டு ஏற்கனவே மகள இழந்த சோகத்துலருக்கற அந்த அப்பாவி மனுஷன் ஏண்டி மேலும் வேதனைப் படுத்தறே?’

தன் தலைமுடிமேலிருந்த மத்தீனம்மாவின் கரங்களைத் தட்டிவிட்டுவிட்டு எழுந்த ராணி அவரைப் பார்த்து மேலும் ஆக்ரோஷ்த்துடன் இரைந்தாள். ‘யார் அப்பாவி? அந்த மனுஷனா? அவருக்கு அவரோட அப்பாத்தான முக்கியம்? எம்பொண்ணு தலைவலியால துடிதுடிச்சி செத்திருக்கா. அப்ப இந்த மனுஷன் எங்க இருந்தாரு? ரூம பூட்டிக்கிட்டு தூங்கத்தான செஞ்சாரு? அதே அவரோட அப்பா, எண்பது வயசு கிழம்.. லேசா படபடன்னு வந்தவுடனே கார எடுத்துக்கிட்டு ஆசுபத்திரிக்கு ஓட தெரியுதில்லே.. இல்ல மதர்.. நீங்க நினைக்கறா மாதிரி அந்தாளு அப்பாவியில்லே. எல்லாம் வேஷம்.. கூட இருந்து இத்தன வருஷமா அனுபவிச்ச எனக்கு தெரியாததா ஒங்களுக்கு தெரிஞ்சிரப்போவுது..?’

கன்னியர் மடத்தலைவி தன் முன்னே கோபவெறியுடன் நின்ற அவளை எப்படி சமாதானப்படுத்துவதென தெரியாமல் திகைத்துப் போய் நிற்க வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்ற சப்தம் கேட்டு ராணி அறைக்கு வெளியே செல்லவும் வந்து நின்ற ஆட்டோவிலிருந்து வந்தனா இறங்கவும் சரியாக இருந்தது..

அடுத்த நிமிடம், ‘நீ எங்கேடி இங்க வந்தே.. கொலைக்காரி.. வேசி..’ என்ற கூக்குரலுடன் அவளை நோக்கி ராணி ஓட பாதிரியார், கன்னியர்கள், உபதேசியார் எல்லோரும் திடுக்கிட்டுப் போய் வந்தனாவையும் ராணியின் பின்னால் விரைந்துச் சென்ற மாணிக்கவேலையும் பார்த்தனர்.

தொடரும்..



3 comments:

G.Ragavan said...

நல்ல அறிவுரைகள். அரக்கப்பறக்க முடிவெடுக்காம ஆற அமர சில பிரச்சனைகளுக்கு முடிவெடுக்கனும். அதத்தான் தனபால் சொல்றாரு.

கன்யாஸ்திரி வளத்த பொண்ணா ராணி....அப்படியுமா இப்பிடி? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம். பிள்ளையத் தொலைச்ச வேதனை கண்டிப்பா இருக்கத்தான் செய்யும். வந்தனா மேல பாயுறதுல வியப்பில்லை.......

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

நம்ம நாட்டுல இந்த மேல்தட்டு குடும்பங்கள்லதான் இந்த மாதிரி அப்பாவ பழிவாங்கணும், அம்மாவ பழிவாங்கணும்னு பிள்ளைங்க நினைக்கறது. இதுக்கு ஆங்கில நாவல்கள் மற்றும் ஆங்கிலப் படங்களில் குழந்தைகள் தவறான பாதையில் செல்ல பெற்றோரின் அலட்சியப்போக்கே காரணம் என்று சித்தரிக்கப்படுவதுதான்னு நினைக்கிறேன். எனக்கு நெருங்கிய நண்பரின் குடும்பத்திலும் இப்படியொரு அசம்பாவித சம்பவம் நடந்ததை நான் கண்டிருக்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

கன்யாஸ்திரி வளத்த பொண்ணா ராணி....அப்படியுமா இப்பிடி? //

இப்படி நினைக்கிறது தப்பில்லைதான். அப்பேர்பட்ட மகாத்மாவின் புதல்வர்களுள் ஒருவனே குடிகாரனானபோது இது எம்மாத்திரம்?