5.6.06

சூரியன் 88

சிலுவை மாணிக்கம் நாடாரின் சொகுசு கார் சென்னை எல்லைக்குள் நுழைந்தபோது காலை சுமார் ஐந்து மணியைக் கடந்திருந்தது.

வாகனத்திலிருந்த நான்கு பயணிகளுள் இருவர் எந்தவித கவலையுமில்லாமல் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க முன்னிருக்கையில் அமர்ந்திருந்த நாடாரும் பின்னிருக்கையில் இருந்த ராசம்மாளும் உறங்கியும் உறங்காத நிலையில் எதிர்வரும் நாட்களில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் நல்லதாக இருக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தில் இருந்தனர்.

சிலுவை மாணிக்க நாடாருக்கு இனிவரும் ஒரு வாரக்காலம் அவருடயை வாழ்க்கையில் மிக முக்கியமான காலக்கட்டம் என்பது தெரிந்துதானிருந்தது.

இன்றுதான் அவர் இயக்குனராகவிருந்த வங்கியின் தலைவராக புதியவர் ஒருவர் பதவியேற்கவிருக்கிறார். தன்னுடைய சேமிப்பின் பெரும்பகுதியை முதலீடு செய்திருக்கும் வங்கி அது. ஒரு நிறுவனத்தின் உயர்வும் தாழ்வும் அதன் தலைவருடய கையில்தான் இருக்கிறதென்பதை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். முக்கியமாக ஒரு வங்கி வர்த்தகத்தில் தலைவர் பதவி என்பது மிக முக்கியமான பதவி என்பதும் அவருக்கு தெரியும்.

வங்கியின் முந்தைய தலைவரை அவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தன்னுடைய கொள்கையில் பிடிவாதமாக அவர் நின்றதால்தான் அவர் மிகவும் திறமையானவர், நேர்மையானவர் என்பது தெரிந்திருந்தும் அவர் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்தபோது நாடாரையும் சேர்த்து ஒட்டுமொத்த இயக்குனர் குழுவும் அவருடைய யோசனையை ஏற்றுக்கொண்டு அவரை தலைவர் பதவியிலிருந்து விடுவித்தது.

தலைவர் என்பவருக்கு திறமையும், நேர்மையும் மற்றும் போறாது என்பதற்கு அவர் ஒரு முன்னுதாரணமாக இருந்தார். இந்த இரண்டுடன் தலைவர் தன்னுடைய பணியை வெற்றிகரமாக செயலாற்ற புத்தி சாதுரியமும் ஏன் ஒருவித சாணக்கியத்தனமும் வேண்டும் என்பதை அவர் மறந்துபோனதுதான் வங்கியினுடைய மிகப்பெரிய துரதிர்ஷ்டமாக இருந்தது.

நாடார் தன்னுடைய தொழிலில் வெற்றிபெற எத்தனை சாணக்கியத்தனத்தை, பச்சையாகச் சொல்லப்போனால் குள்ள நரித்தனத்தை, கையாள வேண்டியிருந்தது அவருக்கு மட்டுமே தெரியும். 'எந்த ஒரு தொழில் வெற்றிபெற வேண்டுமானால் வெறும் திறமையும், நேர்மையும் போறாதுலே. நாம மாத்தரம் அப்படியிருந்து என்னலே பிரயோசனம்? நம்ம எதிரியும் அப்படியிருக்கணுமா இல்லையா? என்னலே?’ என்பார் தன் மருமகன் செல்வத்திடம்.

செல்வம் ஒரு நேர்மையான, அயரா உழைப்பாளி. புத்திசாதுரியம் இருந்தவன்தான். ஆனால் அடுத்தவனைக் கெடுத்து நாம் முன்னேற வேண்டுமா என்றுதான் வாதாடுவான். ‘அது இல்லாமலே நாம முன்னேற முடியும் மாமா’ என்பான்.  'டாட்டா, பிர்லால்லாம் அப்படியா முன்னுக்கு வந்தாங்கன்னு நினைக்கறீங்க? என்பான்.’

அப்போதெல்லாம், ‘அடப்போடா முட்டாப் பயலே.. அவனுங்க மட்டும் நேரு குடும்பம் இல்லேன்னா என்னைக்கோ மண்ண கவ்வியிருப்பான்வலே.. எனக்கு நம்ம ரிலையன்ஸ் அம்பானி இருக்கார் பார் அவர் ஸ்டைல்தான் புடிக்கும்.. அப்புறம் கைத்தான் ஃபேன்னு ஒருத்தர் கொண்டுவந்தார் பார், அவர். இவங்க ரெண்டு பேர்தான் நம்ம குருன்னு வச்சிக்கயேன்.. கஷ்டப்பட்டு ஒளைக்கணும்.. ஆனா அதே நேரத்துல எதுல பூந்து எதுல வந்தா வேகமா முன்னுக்கு வரமுடியும்னு தெரிஞ்சிக்கணும்.. நேரா போய் நேராத்தான் வருவேன்னா நம்மள தள்ளிவிட்டுட்டு வேறொருத்தன் முன்னால போயிருவான்..’ என்பார்.

அப்படி பொளைக்கத்தெரியாமத்தான முன்னாலருந்த சேர்மன் அந்த மலையாளத்தான் சேதுக்கிட்ட தோக்கவேண்டியதா போச்சி.. அவனும் அந்த டாக்டர் பயலும் ஆடுன களவாணித்தனம் இவருக்கு தெரியாமல்லே போயிருச்சி.. பாவம் மனுஷன். நல்லவர்தான். ஆனா என்ன செய்ய? பொளைக்கத் தெரியலையே.. எப்ப பார்த்தாலும் பேங்க்ல நம்பர் ஒன்னுக்கும் ரெண்டுக்கும் இடையில சண்டைன்னா பேங்க்ல என்ன நடக்கும்? பொறுத்து, பொறுத்து பார்த்துத்தான் அவர் போறேன்னதும் சரிய்யா சந்தோசமா போய்ட்டு வாங்கன்னு..'

ஆனா ஒன்னு. அந்த மனுசன் இருந்த ரெண்டு வருசத்துல பேங்க் பிசினஸ்சும் சரி, ப்ராஃபிட்டும் சரி ஸ்டெடியா வளர்ந்ததென்னவோ நிசம்தாய்யா.. அந்த மலையாள கம்மனாட்டிய மட்டும் அடக்கி வச்சிருந்தார்னா மனுசன் கொடிகட்டி பறந்துருப்பார்..

சிலுவை மாணிக்கம் நாடாருக்கு தன்னுடைய சிஷ்யன் பிலிப் சுந்தரத்தின் மீதும் ஏமாற்றம்தான். அவரை எப்படியாவது தலைவர் பதவிக்கு உயர்த்தவேண்டும் என்பதுதான் நாடாருடைய விருப்பமாக இருந்தது. ‘நா நெனச்சி என்னய்யா செய்ய? ஒமக்கு அந்த நெனப்பு இல்லேல்லே.. பொஞ்சாதி இல்ல.. பொண்ணும் அமெரிக்காவில எங்கனயோ நிம்மதியா, சந்தோசமா இருக்கு. பொறவு என்னவே.. இருபத்திநாலு மணி நேரமும் பேங்கு, பேங்குன்னுல்லே இருக்கணும்? பழைய சேர்மன் போனதுமே நீரா வந்து என்னெ ஆக்டிங்கா போடுங்கன்னு கேப்பீருன்னில்லே நா பாத்துக்கிட்டிருந்தேன்? நீருதான் வரவேயில்லையேய்யா.. நீரு மட்டும்  நா ஆக்டிங்கா இருக்கேன்னு ஒரு வார்த்த சொல்லியிருந்தாத்தான் நா முடிச்சிருப்பேன்னில்லே.. அதுல ஒரு வருசம் நல்லா செஞ்சிருந்தீர்னா நானே செண்ட்ரல்ல யாரையாச்சும் புடிச்சி சேர்மனாக்கிருப்பேனேய்யா.. என்னத்த சொல்ல..? சாமியாரா போகவேண்டியவரு இங்க வந்துட்டீரு.. ஒமக்கு தெறம இருக்கு, நேர்மை இருக்கு, மாடு மாத்தி ஒளக்கீரு.. என்ன இருந்து என்னய்யா பிரயோசனம்..? மேலே வரணும்னு ஒரு வெறி இல்லையேய்யா..’ என்று அவர் திட்டித்தீர்த்ததுதான் முக்கியம், ‘எனக்கு அந்த போஸ்ட்ல இஷ்டம் இல்ல சார். தப்பா நினைச்சிக்காதீங்க.. நீங்க வெளியிலருந்து யார கொண்டு வந்தாலும் என்னுடைய ஒத்துழைப்பு அவருக்கு நிச்சயம் இருக்கும்.. எனக்கு இன்னும் இருக்கற ரெண்டு வருச சர்வீஸ்ல இந்த பொசிஷன்லருந்தே என்னால என்ன முடியுமோ அத செய்யறேன் சார்..’ என்றவரைப் பார்த்து கோபப்படமுடியாமல், ‘அடப்போய்யா..’ என்று சலித்துக்கொள்ளத்தான் முடிந்தது.

புதிய தலைவர் ஏற்கனவே இதே வங்கியில் துணை பொது மேலாளராக இருந்தவர் என்பதுதான் அவரை தெரிவு செய்ய இயக்குனர் குழு பரிந்துரைத்ததற்கு முக்கிய காரணம். ‘இந்த சேது அவரப்பத்தி சொல்றது அவ்வளவு நல்லா இல்லையே நாடார்.’ என்று சோமசுந்தரம் ஒரு சந்திப்பின்போது கூறியபோது, ‘இங்க பாரு டாக்டரே நமக்கு அந்த மாதிரி ஆளுதான் வேணும்.. இவனுங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்துக்கிட்டா நமக்கு எந்த பவரும் இருக்காதுவே.. இவனுங்க ஒருத்தன ஒருத்தன் அடிச்சிக்கணும்.. ஆனா சேதுவெ அடக்கி ஆளத் தெரியணும். நா கேள்விப்பட்ட வரைக்கும் இந்த மாதவன் லேசுபட்ட ஆளு இல்லே.. பிராஞ்சில மேனேசரா இருக்கறப்பவே ரெண்டு என்க்வயரிய சந்திச்சிருக்கார்.. ரெண்டுலயும் அவர் மேல தப்பில்லேன்னு ஆயிருக்கு. அதுக்கு  யார் யார சமாளிச்சாரோ.. அதே மாதிரி இந்த சேதுவையும் சமாளிப்பார்னு நினைக்கிறேன்.’ என்று தான் கூறியது நினைவுக்கு வந்தது..

மாதவன் இன்னைக்கி வந்து பொறுப்பேத்ததும் அவர் தனியா சந்திக்க ஏற்பாடு பண்ணணும். அவர வச்சி சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு.. ஒத்துவந்தா சரி.. இல்லன்னா நாமளே சேதுவ தூண்டிவிட்டு..

அப்புறம் அந்த  ரத்தினவேல் பயலும் அவன் புள்ளயும்.. அந்த பய மாப்பிள்ள இல்லேன்னு ஆனதுக்கப்புறம் நம்ம கால் தூசுக்குக்கூட பொறமாட்டான். செல்வம் வந்து சேர்ந்துரணும்.. கம்பெனியில பழையபடிக்கு அவனெ சேத்து விட்டுட்டா ஆச்சி.. அவன் பாத்துக்குவான்..

நாம அந்த ரத்தினவேல் பய சேட்டுக்கிட்ட வித்துபோட்ட பங்க வாங்கறதுக்கு பணத்த தெரட்டணும்.. அதான் முக்கியம். அந்த பய பணத்துக்கு சப்பட்டு எந்த களவாணிப்பயலுக்காவது வித்துபோடறதுக்கு முன்னால நாம வளைச்சிரணும்.. ஒருத்தன்கிட்ட மாட்டிக்கிட்டு ஏமாந்தது போறும்..

மோகன்.. அவர்கிட்ட பேசினா எல்லாத்துக்கும் விடை கெடச்சிரும்.. 'பத்து பதினஞ்சி வருச பழக்கத்துல நம்ம குடும்பத்துல ஒருத்தர் மாதிரி ஆய்ட்டார்ம்மா நம்ம வக்கீல்.. நம்ம செல்வந்தான் முதமுதல் கூட்டிக்கிட்டு போனான்.சின்ன வயசுலயே பெஞ்சாதிய பறிகுடுத்துட்டு கலங்கி நின்னவர பார்த்ததுமே எனக்கு புடிச்சி போயிருச்சி.. அதுக்கப்புறம் அவர கேக்காம நா எதையுமே செஞ்சதில்ல.. அந்த ராசேந்திரன கம்பெனியில சேக்கற விசயத்துல கூட அவர் சொன்னத நா கேட்டிருந்தா இந்த பிரச்சினையெல்லாம் வந்தே இருக்காது.. அவன் வேணவே வேணாம்னு ஒத்தக் கால்ல தம்பி நின்னுது.. அப்புறம் செல்வத்த கம்பெனியிலருந்து அனுப்பணும்னு தீர்மானிச்சப்போ அவன கூப்ட்டு சொல்ற திராணிக்கூட அப்பாவுக்கு இல்லாம போனப்போ இந்த தம்பிதான் அவனெ கூப்ட்டு பேசி.. ‘என்ன மாமா நீங்க.. எலேய் வெளிய போடான்னு சொல்லியிருந்தா நானே போயிருப்பேனே.. அதுக்கு ஒங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கே மாமா.. இதுக்கு போயி எதுக்கு வக்கீல் இடையில.. அவருக்கும் தேவையில்லாமல் மனக்கஷ்டம்..’ என்றான் செல்வம்..

உண்மைதான்.  நிஜமாகவே செல்வத்தை அனுப்பியபோது மோகன் கலங்கித்தான் போனார். ‘நாளைக்கு நீங்களா என்னையும் கூப்ட்டு இந்த மாதிரி சொல்றதுக்கு முன்னால நானே போயிரலாம்னு பாக்கேன்.. என்ன சொல்றீங்க?’ என்று தன் முன்னே வந்த நின்ற வழக்கறிஞரை குழப்பத்துடன் பார்த்தார் நாடார்.

‘என்ன தம்பி சொல்றீங்க? செல்வத்த வெளிய அனுப்புனது நம்ம ராசம்மாவுக்காக. அவள போட்டுத்தான் ராசேந்திரன் தெனம் டார்ச்சர் பண்றானே.. கம்பெனியிலருந்துதான அனுப்பிருக்கேன்? தின்னவேலியில ஒரு ஸ்வீட் ஸ்டால வாங்கிப் போட்டோமில்லே.. அத அவனுக்காவத்தான வாங்கிப் போட்டேன்..? அத வச்சி அவன் பொளச்சிக்குவான்.. அவனெ அப்படியே விட்டுரமாட்டேன் தம்பி.. திரும்பி வருவான்.. நீங்க வேணா பாருங்க.. நம்ம கம்பெனிக்கி அவன் திரும்பி வரத்தான் போறான்.. அவனும் நீங்களும் ஒன்னா தம்பி..? யார் சொன்னாலும் அவனெ அனுப்பனா மாதிரி ஒங்கள அனுப்பிருவனா என்ன? நீங்க இல்லன்னா நா இந்த நிலைமைக்கு வந்துருக்க முடியுமா தம்பி?’

‘ஐயா.. நம்ம வீடு வந்துருச்சிய்யா.. அம்மாவும் ராசம்மாவும் எறங்கி உள்ளாறப் போய்ட்டாங்க.. நீங்க..’

நினைவுகளிலிருந்து திடுக்கிட்ட நாடார் திரும்பி மந்திரச்சாமியைப் பார்த்தார்.. ‘லேசா கண்ணசந்துட்டன் போலருக்கு.. எலே நீயாச்சும் எளுப்பக்கூடாது..’

மந்திரச்சாமிக்குத் தெரியும் தன்னுடைய முதலாளி கண்ணயரவில்லையென்று.. கண்ணயர்ந்தாலும் பரவால்லையே.. மனுசன் மூளை அசரவே அசராதே.. எவனெ கவுக்கலாம், எவனெ செயிக்கலாம்னுதான நினைச்சிக்கிட்டிருந்திப்பீங்க..

‘டிக்கிலருக்கற சாமானெல்லாம் எடுத்து உள்ளார கொண்டு வையேன்லே.. எம்மூஞ்ச பாத்துக்கிட்டு ஒக்காந்திருக்கே..’

‘சரிய்யா..’ என்றவாறு பதறிக்கொண்டு இறங்கினான் மந்திரச்சாமி.

‘எலேய், அப்படியே போன் போட்டு நம்ம செல்வம் எங்கருக்கான்னு விஜாரி..’

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

ஏதேது, சி.மு.நாடாரே மாதவனையும், சேதுவையும்
மோதலில் விட்டு ரெண்டு பேரையும் ஒருவழி பண்ணிடுவாரோ?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

ஏதேது, சி.மு.நாடாரே மாதவனையும், சேதுவையும்
மோதலில் விட்டு ரெண்டு பேரையும் ஒருவழி பண்ணிடுவாரோ? //

பின்னே.. அதான இப்ப எல்லா நிறுவனங்கள்ளயும் மேலிடத்துல நடக்குது.. பொறுத்திருந்து பாருங்க எப்படி அடிச்சிக்கறாங்கன்னு..

இப்ப செல்வில நடக்கறதவிட கேவலமாருக்கும்..