3.2.06

சூரியன் 17

சேதுமாதவன்: வங்கியின் நிர்வாக இயக்குனர். கேரளத்தைச் சார்ந்தவர். வயது 58. பி.ஏ. பட்டதாரி. (இரண்டு முறை கோட்டடித்தவர் என்று கூறிக்கொள்கிறார்கள்)

ஷண்முக சுந்தரம்: வங்கியின் இரண்டாவது பொது மேலாளர். வயது 58. சேதுமாதவனுடன் வங்கியில் நேரடி அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். நல்ல திறமையுள்ளவர். நேர்மையாளர், பக்திமான்.

முரளிதரன், சென்னை புறநகர் பகுதியிலிருந்த அந்த காலனியை அடைந்தபோது மாலை மணி எட்டைக் கடந்திருந்தது. எம்.டி. சேதுமாதவன் வீட்டிற்கு அதற்கு முன் பலமுறை வந்திருந்தாலும் ஒரே தோற்றத்தில் வரிசையாக அணிவகுத்து நின்ற அந்த பங்களாக்களில் அவருடைய பங்களா எதுவென்று அவருடைய அட்டகாசமான இறக்குமதி செய்யப்பட்ட சொகுசுக் காரை வைத்துத்தான் அடையாளம் காண்பது வழக்கம். இன்று அதுவும் இல்லாததால் அடையாளம் காண முடியாமல் திரும்பிச் சென்று நுழைவாயிலில் நின்றுக் கொண்டிருந்த காவலாளனை விசாரித்துக் கொண்டு தேடிப் பிடித்து சென்றடைவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

எரிச்சலுடன் வாயிலிலிருந்த அழைப்பு மணியை ஓங்கியடித்துவிட்டு காத்திருந்தான். அடுத்த ஐந்து நிமிடத்திற்கு யாரும் வராததால் கதவை லேசாக தள்ள அது தானாகவே திறந்துக் கொண்டது.

‘எடா மண்டா..’ என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டு உள்ளே நுழைந்து வரவேற்பறையில் யாரும் காணாமல், ‘சாரே..’ என்று உரக்க அழைத்தான்.

அடுத்த நொடியே, ‘எடோ முரளி நேரே மோள்லெக்கு வா.. ஸ்டேர்ஸ் அரியால்லோ..’ என்ற எம்.டி.யின் குரல் கேட்க வரவேற்பறையின் அடுத்த கோடியிலிருந்த (சை எந்துனா இத்தற வெல்லிய ஹால்.. ஆக எம்.டியும் மேடமும் மாத்தறமே உள்ளு.. இதின வேண்டி இத்தற வெல்லிய வீடு..) அலங்கார மாடிப் படி வழியாக முதல் மாடியை அடைந்தான்.

முதல் மாடியிலிருந்த அந்தரங்க விருந்தினர்களுக்கெனவிருந்த பிரத்தியேக  வரவேற்பறையில் நடுநாயகமாக இருந்த சொகுசு சோபாவில் அமர்ந்து மேலை நாட்டு சாராயத்தை குடித்துக் கொண்டிருந்த எம்.டியைப் பார்த்தான். அவனையுமறியாமல்.. ‘அது சரி.. அவ்விட கல்கத்தா தீ பிடிச்சிருக்கின்னு.. இவ்விட சார் வெள்ளத்துல..’ என்று முனுமுனுத்தான்.

அவரையடுத்து.. அட! இதாரு? நம்ம ஜி.எம் சாரா?

வியப்பால கண்கள் விரிய இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

‘எந்தாட முரளி நோக்கன? ஜி.எம் வெள்ளடிக்கிண்டோன்னா? பிராந்தா.. சார் ஜூஸ் குடிக்கியா..’ அட்டகாசமாக வில்லன் குரலில் சிரித்த எம்.டியின் சிரிப்பில் கலந்துக் கொள்வதா வேண்டாமா என்று விழித்தான் முரளி.

முரளி தயக்கத்துடன் பொது மேலாளர் ஷண்முக சுந்தரத்தைப் பார்த்தான். வங்கியில் யாரை வேண்டுமானாலும் அவன் எதிர்த்துப் பேசிவிடுவான். ஆனால் ஷண்முகம் சாரைப் பார்த்தால் அவன் வாயடைத்துப் போய் நிற்பான்.

அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

ஒன்று, அவர் கிளை மேலாளராக இருந்த சமயத்தில்தான் அவன் வங்கியில் குமாஸ்தாவாக சேர்ந்தான். அப்போதெல்லாம் இப்போதிருப்பது போல் தேர்வு முறைகள் இல்லை. ஒரு கிளை மேலாளர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் தற்காலிக குமாஸ்தாவக சேர்க்க முடியும். ஆறோ, ஏழோ மாதங்கள் கழித்து தலைமையலுவலகத்தில் பேருக்கு ஒரு தேர்வும், நேர்காணலும் வைத்து நிரந்தரமாக்கிவிடுவார்கள்.

முரளியின் தந்தை, ஷண்முகத்தின் தந்தையின் வர்த்தக அலுவலகத்தில் கணக்குப் பிள்ளையாக இருந்தவர். மிகவும் கஷ்ட ஜீவனம். அவருக்கிருந்த மூன்று மகன், இரண்டு மகள்களில் முரளிதான் மூத்தவன். கேரள மாநிலத்திலிருந்து பிழைப்புக்காக சென்னைக்கு குடியேறிய குடும்பம். ஷண்முகம்  தந்தையின் பேச்சைத் தட்ட முடியாமல் முரளியின் தோற்றத்திலும் அறிவிலும் திருப்தியடையவில்லையென்றாலும் வேலை போட்டுக் கொடுத்தார். அவர் மட்டும் மனது வைக்காமலிருந்திருந்தால் அவனுடைய படிப்புக்கும் புத்திசாலித்தனத்திற்கும் எந்த கடையில் கணக்கு எழுதிக் கொண்டிருந்திருப்பானோ. அந்த நன்றி விசுவாசம் இப்போதும் அவரைக் காணும்போதெல்லாம் அவனுடைய வாயைக் கட்டிப்போட்டுவிடும்.

இரண்டாவது, வங்கியில் அவன் எத்தனையோ அதிகாரிகளிடம் பணி புரிந்திருக்கிறான்.ஆனால் அவனுடைய  இருபத்தைந்து வருட சர்வீசில் ஷண்முகம் சாரைப் போல் ஒரு அதி திறமையான, நேர்மையான, தெய்வ பக்தியுடைய அதிகாரியை அவன் சந்தித்ததில்லை. ஆகையால் அவனையறியாமலே அவரிடம் அவனுக்கு ஒரு தனி மரியாதை இருந்தது. அவருடைய நேர்மைதான் அவரை உயர்ந்த பதவியை அடைய தடையாயிருந்ததென அவன் அறிந்திருந்திருந்தான். ஓய்வுபெற இன்னும் ஆறே மாதங்களிருந்த நிலையில் முந்தைய சேர்மன் ராகவன் அவருடைய திறமைக்கும் நேர்மைக்கும் மதிப்பளித்து ஓய்வு பெறும்போதாவது ஜி.எம்மா ரிடையர் ஆவுங்க சார் என்று அவர் மறுத்துப் பேசியதைப் பொருட்படுத்தாமல் பதவி உயர்வு அளித்தார்.

அவருக்கருகிலிருந்த எம்.டி அவருக்கு நேர் எதிரானவர் என்று அவனுக்குத் தெரியும். அவர் அடிப்படைப் பட்டப் படிப்பில் தேர்ச்சிப் பெறவே இரண்டு முறை கோட்டடித்தவர் என்றும்.. எந்தவித திறமையும் இல்லாதவர் என்றும் அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதே சமயம் ஒரு நாகப் பாம்பைப் போன்ற விஷம் நிறைந்த நாவும், பற்களும் உடயைவர் என்பதையும் அவன் அறிந்திருந்தான். அவர் எந்தவொரு திறமையுமில்லாமலே எப்படி எம்.டி பதவியைப் பிடித்தார் என்பதும் அவனுக்கு தெரியும்.  அவனுக்கு தன்னைப் பற்றி நன்றாய் தெரியும் என்பதையும் எம்.டி. சேதுமாதவன் அறிந்திருந்தார்.

‘எடோ முரளி.. தான் எந்தா நோக்கி நிக்கனெ.. நீ வருவேன்னுதான் ஒரு காலி க்ளாஸ் வச்சிருக்கேன். ஒழிச்சி குடி.. ஃபாரின் சாதனமான.. ஒழிச்சோ.. ஷண்முகம் சார நோக்கேண்டாடா..’

முரளி அவனையுமறியாமல் ஷண்முகம் சாரைப் பார்த்தான். அவரும் சிரித்துக் கொண்டே ‘எடுத்துக் கொள்’ என்பது போல் தலையை அசைக்க தயக்கத்துடன் காலியாயிருந்த அலங்காரமான வடிவத்திலிருந்த மேலைநாட்டு கண்ணாடி டம்ளரில் சிறியதாய் ஒரு பெக் ஊற்றி, குளிர்ந்த சோடா கலந்து கையில் பிடித்துக் கொண்டு நின்றான்.

‘அவ்விட இருக்கி.. நோ ஃபார்மாலிட்டிஸ்’ என்ற எம்.டியின் உத்தரவின் படி தன் அருகிலிருந்த சொகுசு இருக்கை நுனியில் அமர்ந்து இருவரையும் பார்த்தான்.

சிறிது நேரம் அவரவர் யோசனைகளில் ஆழ்ந்திருக்க கீழ் தளத்தில் சமையலறையில் மிக்ஸி ஓடும் சப்தம் தவிர வீடு நிசப்தமாயிருந்தது.

‘எடோ தான் எந்தா சேம் சைட் கோலடிக்கினே..’

திடீரென்று வந்து விழுந்த கேள்வியின் பொருள் புரியாமல் எம்.டி. சேதுமாதவனை பார்த்தான்.

‘என்ன சார் சொல்றீங்க?’

‘அதான். நம்ம ஜி.எம். சுரேஷ் சாரை எதுக்கு டார்ச்சர் பண்ணிக்கிட்டிருந்தே? அவர் நம்மாளுன்னு தெரியாதா உனக்கு?’

தெரியாம என்ன? எல்லா ஃப்ராடு பசங்களும் கூட்டுன்னு அவனுக்கு தெரியாதா என்ன? என்று தனக்குள் நினைத்தார் ஷண்முக சுந்தரம்.

எனக்கு தெரியாதாக்கும் நீங்க ரெண்டு பேரும் அடிக்கற பகல் கொள்ளை.. என்று நினைத்தான் முரளி.

இருப்பினும் அவர் சொல்வது புரியாததுபோல் பார்த்தான். ‘எனிக்கி மனசிலாயில்லா சாரே.. அத்யேகம் எங்ஙன..’

தன் டம்ளரிலிருந்த சோடா கலக்காத மீதி விஸ்கியை ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட்டு அட்டகாசமாகச் சிரித்தார் சேதுமாதவன். ‘எடோ.. அயாளும் ஞானும் கூட்டுக் கள்ளம்மாறானன்னு தனிக்கி அறியில்லே..’ என்றவர் ஷண்முகத்தை திரும்பிப் பார்த்து, ‘சாரி ஜி.எம். சார். தப்பா நினைச்சிக்காதீங்க. இவன் கிட்ட இப்படி பேசினாத்தான் புரியும்.’ என்றார்.

‘இட் ஈஸ் ஒகே.. ஆனா விஷயத்த நேரடியா சொன்னீங்கன்னா.. வீ கேன் ஃபைண்ட எ சொலூஷன்.. ஐ கேல் ஆல்சோ கோ ஹோம்.. டு டே ஈஸ் சாட்டர்டே யூ நோ.. ஐ ஹேவ் ப்ரோக்ராம்ஸ்..’

உங்க ப்ரோக்ராம் என்னன்னு எனக்கு தெரியாமயா? எவனாவது வேலை கெட்டவன் சங்கீதம்கற பேர்ல கத்துவான். உங்கள மாதிரி பெரிய மனுஷங்க ஆஹா, ஓஹோன்னு கைதட்டிக்கிட்டு நேரம் போறதே தெரியாம உக்காந்துக்கிட்டு... அடப் போய்யா. ஒரு நாளைக்கு போவாட்டி இப்ப என்ன, குடியா முழுகிப் போவுது?

சேதுமாதவனின் கண்களைப் பார்த்தே அவர் ஜி.எம் சாரை மனதுக்குள் வசைப் பாடிக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துக் கொண்ட முரளி தயக்கத்துடன் அவரைப் பார்த்தான்.

அவர் ‘எனக்கெல்லாம் தெரியும்’ என்பதுபோல் பெருந்தன்மையுடன் புன்னகை செய்தார்.

முரளிக்கு சேதுமாதவன் மேல் கோபம், கோபமாய் வந்தது..

‘அதிருக்கட்டும் சார். இப்ப எதுக்கு என்ன அவசரமா கூப்டீங்க? அதச் சொன்னா நல்லாருக்கும் சார்.’ என்றான் சேதுமாதவனைப் பார்த்து.

ஷண்முக சுந்தரம் குறுக்கிட்டு சேதுமாதவன் அவனிடம் தொலைப் பேசியில் கூறியதை சுருக்கமாக கூறி முடித்தார்.

பழைய சேர்மனுக்கு வலக்கரமாய் இருந்த ஷண்முக சுந்தரம் அவருடயை விலகலுக்குப் பிறகு வங்கியின் இயக்குனர்கள் அடங்கிய சேர்மன் கமிட்டியின் கோர்டினேட்டர் என்ற முறையில் வங்கியை நிர்வகித்து வருகிறார் என்பது  முரளிக்குத் தெரியும். அத்துடன் எம்.டி பதவியிலிருந்த சேதுமாதவனுக்கு போர்ட் அங்கத்தினர்கள் வைத்த செக் பாய்ண்ட் ஷண்முக சுந்தரம்தான் என்பதும் அவனுக்கும் வங்கியின் உயர் மட்ட அதிகாரிகள் எல்லோருக்கும் தெரியும். அவருக்கு மேற் பதவியிலிருந்த சி.ஜி.எம் பிலிப் சுந்தரம் தனக்கு வங்கியை நிர்வகிக்க விருப்பமில்லை என்பதை சூசகமாக அறிவித்ததாலும் மீதமிருந்த இரண்டு ஜி.எம்களில் ஒன்று பெண் என்பதாலும் மற்றவர் பாபு சுரேஷ் கிளை மேலாளராக இருந்ததாலும் தற்காலிக சேர்மன் பொறுப்பு ஷண்முக சுந்தரத்தின்மேல் விழுந்தது. அவர் ஒரு விருப்பமில்லாத முள்முடி கிரீடத்தைப் போல்தான் அணிந்திருந்தார் என்றால் மிகையாகாது.

ஆகவே கொல்கொத்தாவில் நடந்ததாய் கூறப்படும் விஷயத்தால் அவருக்குத்தான் அவப்பெயர் ஏற்படக்கூடும் என்றும் அவனுக்கு விளங்கியது. அதற்காகவாவது அவன் ஏதாவது செய்து விஷயத்தை நாளைக்குள் சுமுகமாய் முடிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு அவரை மரியாதையுடன் பார்த்தான். ‘சார் நா ஒன்னு கேக்கலாமா?’ என்றான்.

‘எந்தா வேண்ட, பரயு? நானில்லே..’ குடி போதையில் உளறிய சேதுமாதவனைப் பொருட்படுத்தாமல் ஷண்முக சுந்தரத்தைப் பார்த்தான் முரளி.

அவர் தயக்கத்துடன் தன் அருகில் அமர்ந்திருந்த சேதுமாதவனைப் பார்த்தார். என்னதான் வங்கியை தான் நிர்வகித்து வந்தாலும் இந்த விஷப் பாம்பைப் பகைத்துக் கொள்ள அவர் தயாராயில்லை. தன்னுடயை முயற்சி வெற்றியடைந்தால் இவர் அது தன்னால்தான் சாத்தியமாயிற்று என்று எல்லோரிடம் தம்பட்டமடித்துக் கொள்ள தயங்கமாட்டாரென்றும் அவருக்குத் தெரியும். அதே சமயத்தில் தோல்வியடைந்தால் அதை அவருடைய தலையில் சுமத்தி அதையும் எல்லோரிடத்திலும் பறைசாற்றுவதில் முனைப்போடிருப்பார் என்றும் தெரிந்து வைத்திருந்ததால் இதை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என்று நினைத்தார்.

‘சொல்லுங்க ஜி.எம் சார். முரளி கேக்குதில்லே?’

ஜி.எம் முரளியைப் பார்த்தார். அவனைப் பற்றி வங்கியில் பேசிக் கொள்வதெல்லாவற்றையும் அவர் கேள்விப்பட்டிருந்தார். எப்படி இருந்த பிள்ளை இவன்.. சொல்வார் பேச்சைக் கேட்டு தறிகெட்டுப் போய்... எப்படி வந்திருக்க வேண்டியவன்?

சரி.. அதற்கு இதுவல்ல நேரம் என்று நினைத்துக் கொண்டு.. ‘சொல்லுங்க முரளி.. என்ன வேணுமோ தயங்காம கேளுங்க.. நாளைக்கு சாயந்திரத்துக்குள்ள சால்வ் பண்ணணும். அவ்வளவுதான்..’

முரளி இருவரையும் பார்த்தான். ‘சார் வேணும்னா நான் கல்கத்தா போய் வரலாமா?’

இவ்வளவுதானா என்று நினைத்தார் ஷண்முகம். சேதுமாதவன் முந்திக் கொண்டு, ‘எடோ எந்தா சோதிக்கின? தோ, நேரே போய் அடுத்த ஃப்ளைட் பிடிச்சி போக்கோ.. சால்வ் தி ப்ராப்ளம் அண்ட் கம் பேக் பை தி ரிட்டர்ன் ஃப்ளைட்.. யூ ஹேவ் மை சாங்க்ஷ்ன்..’ என்று கூறிவிட்டு அடுத்த பெக்கை தன்னுடைய டம்ளரில் நிரப்பினார்.

முரளிக்கு அவரைப் பார்க்கவே அருவருப்பாய் இருந்தது. ஷண்முகம் சார் எங்கே... இந்தாள் எங்கே.. இவருக்காகவாவது செய்யணும் என்று தீர்மானித்தவனாய் தன் முன்பே குடிக்காமலிருந்த டம்ளரைப் புறக்கணித்து எழுந்து நின்றான்.

இருவரையும் பார்த்து மெலிதாய் புன்னகைத்தான். ‘சரி ஜி.எம். சார். நான் இப்பவே போன்ல பேசி தீர்க்கப் பாக்கறேன். முடியலைன்னா காலைல ஃப்ளைட் பிடிச்சி போய்ட்டு வரேன்..’ என்று கூறிவிட்டு சேதுமாதவனைப் பார்த்து, ‘ஞான் வராம் சார். அவ்விடருந்து விளிக்காம்.’ என்று ஒப்புக்குக் கூறிவிட்டு மாடிப் படியில் இறங்கினான்.

தொடரும்..



4 comments:

G.Ragavan said...

நடுவுல ரெண்டு நாளாச் சூரியனைக் காணோம்...பாத்தா எனக்கு நல்லா மூக்கடைச்சிருக்கு. சளி பிடிச்சிருக்கு. இன்னைக்கு சூரியன் வந்துருக்கு. நாளைக்குச் சரியாப் போகும். :-)

கதை...பயங்கரமாப் போகுது சார். இத டீவி சீரியல் எடுக்குறவங்க கிட்ட காட்டுனா...ரொம்ப சந்தோஷப் படுவாங்க.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

செவ்வாய் டு வியாழன் ப்ராஜக்ட் ரிவ்யூ நடந்ததுனால ஒன்னும் செய்ய முடியலே.

தி.பா. தொடர் பதிவுகள ஏற்கனவே எழுதி வச்சிருந்ததால போட முடிஞ்சது.

இத டீவி சீரியல் எடுக்குறவங்க கிட்ட காட்டுனா...ரொம்ப சந்தோஷப் படுவாங்க. //

நீங்க சொல்றது எவ்வளவு தூரத்துக்கு சரின்னு தோனலை. இருந்தாலும் நான் சர்வீஸ்ல இருக்கும்போது இதையெல்லாம் கனவுல கூட நினைச்சிப் பாக்க முடியாது. இன்னும் ஒரு நாற்பது எப்பிசோடுக்கு கதைச் சுருக்கம் ரெடி பண்ணி வச்சிருக்கேன். தொடர் ஒழுங்கா முடியட்டும் பாக்கலாம்.

siva gnanamji(#18100882083107547329) said...

ellam sari thdeernu aal kanama poidreengale swamy! athan kashtama irukku
(sory tamil typing teriyalle)

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க சிவஞானம்ஜி,

நாம இப்ப பார்த்துக்கிட்டிருக்கிறதெல்லாமே சனிக்கிழமை நடந்த விஷயங்கள். கதையில இருக்கற முக்கியமான கதாபாத்திரிங்கள் அன்றைக்கு என்ன செஞ்சிக்கிட்டிருந்தாங்கன்னுதான் பார்த்துக்கிட்டிருக்கோம். அதனால தான் உங்களுக்கும் கதா பாத்திரங்கள் காணாம போறாமாதிரியான எண்ணம் ஏற்பட்டிருக்கு. யாரும் காணாம போகலை. இப்ப ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இரண்டு நாட்கள்னு எழுதிக்கிட்டு போறேன். இன்னும் ரெண்டு கதாபாத்திரங்கள் இருக்காங்க. அதுக்கப்புறம் ஞாயிற்ற்க்கிழமை இவங்க எல்லாரும் என்ன செஞ்சாங்கன்னும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு ஒவ்வொரு நாள்னு எழுதறதா உத்தேசம்.

பொறுமையா படிச்சீங்கன்னா புரியும்.