சேது மாதவன் இருப்புக் கொள்ளாமல் நடு ஹாலில் இங்கும் அங்கும் நடந்துக்கொண்டிருப்பதை சமையலறையிலிருந்தே பார்த்துக்கொண்டிருந்தான் திருநாவுக்கரசு. காலைல ஐயா முளிச்சி முளியே சரியில்லை போலருக்கே. ஒன்னுமாத்தி ஒரு ஃபோனா வந்து அவரோட கோபம் ஏறிக்கிட்டே போவுது? என்ன நடக்குதுன்னே எளவு வெளங்க மாட்டேங்குதே?
ஹாலிலிருந்த தொலைப்பேசி அலறவே நடந்துக்கொண்டிருந்த மாதவன் சட்டென்று நின்று எரிச்சலுடன் அதைப் பார்த்தார். செல் ஃபோன்ல கூப்டாம யார் இதுல கூப்டறா? ஏதாவது ராங் காலாயிருக்கும் என்ற எண்ணத்தில் ‘எடோ திரு.. எடுத்து யாரான்னு நோக்கு. என்னெ அறியாத்த ஆளானெங்கில் ஞான் இவ்விடெ இல்யா.. கேட்டோ.’ என்றார்.
திரு பதறியடித்துக்கொண்டு ஓடிப்போய் ஒலிவாங்கியை எடுத்து காதில் வைத்து ‘ஹலோ’ என்பதற்கு முன் எதிர்முனையிலிருந்து, ‘யார்யா அது?’ என்ற அதிகாரத்துடன் ஒரு முரட்டுக் குரல் ஒலிக்க, எரிச்சலுடன், ‘நான் யாரா இருந்தா உங்களுக்கென்னங்க? நீங்க யாருங்க, அதச் சொல்லுங்க முதல்ல.’ என்றான்.
‘டேய் இங்க பேசறது யாருன்னு சொல்லணுமா? சொல்றேன். -------- ஸ்டேஷன்லருந்து எஸ்.ஐ. பேசறேன். போறுமா? இப்ப சொல்லு.. அங்க சேது மாதவன்னு ஒருத்தர் இருக்காரா?’
போலீசா? சட்டென்று முகம் வெளிறிப் போன திருநாவுக்கரசு திரும்பி தன் முதலாளியைப் பார்த்தான். ‘சார், போலீஸ் ஸ்டேஷன்லருந்து. உங்கக்கிட்டத்தான் பேசணுமாம்.’
மாதவன் அவன் சொன்னதை நம்பாதவர்போல் நின்ற இடத்திலிருந்தே அவனைப் பார்த்தார். ‘போலீஸ் ஸ்டேஷனோ.. எந்துனா? எந்தான்னு சோய்க்கிடோ..’ என்று எரிந்து விழுந்தார்.
திருநாவுக்கரசு, ‘சார் என்ன விஷயம்னு கேக்கறார் சார்.’ என்றான் தொலைப்பேசியில்.
‘என்ன விஷயமா? அவர் அனுப்புன அடியாள்ங்கள புடிச்சி வச்சிருக்கோம். அவனுங்க இவர் சொல்லித்தான் அந்த பார்ட்டிய டார்ச்சர் பண்ணோம்னு சொல்றானுங்க. என்ன குடுக்கறியா, இல்ல நாங்க அங்க புறப்பட்டு வரணுமா? கேட்டுச் சொல்லு.’
திருநாவுக்கரசுக்கு எல்லாம் புரிந்தது. அந்த ரெண்டு தடிப்பசங்க வீட்டுக்குள்ள வந்தப்பவே நெனச்சேன், ஐயா ஏதோ தேவையில்லாம மாட்டிக்கப்போறார்னு. நா நெனச்சது சரியா போச்சி.
‘எடோ எந்தான.. எந்துனா அங்ஙன நோக்குன?’ என்ற மாதவனைப் பார்த்தான்.
‘சார்.. நீங்க அனுப்புன யாரோ ரெண்டு பேர அந்த ஸ்டேஷன்ல புடிச்சி வச்சிருக்காங்களாம்? அதப்பத்தித்தான் உங்கக் கிட்ட பேசணும்னு...’
சேது மாதவன் ஒரு நொடி நேரம் என்ன செய்யலாம் என்று யோசித்தார். ரெண்டு பேர்னா நிச்சயம் பாஸ்கரனும், பத்மனும் தான்.. மண்டமாரு.. இவம்மாரெங்கன போலீஸ்லே பெட்டுப்போயி.. இப்ப என்ன பண்ணலாம்? வீட்ல இல்லேன்னு சொல்ல முடியாது. போலீஸ் விஷயம்..
இவனுங்கள எந்த கேஸ்ல புடிச்சி வச்சிருக்காங்கன்னே தெரியலையே.. அந்த பாபு சுரேஷோட பொண்ணு கேஸ்லயா.. இல்ல.. வேற ஏதாச்சிலுமா?
‘இவ்விட கொடுக்கு.’ என்று ஒலிவாங்கியை வெடுக்கென பிடுங்கி, ‘யெஸ் சேது மாதவன் ஸ்பீக்கிங். என்ன விஷயம் சார்?’ என்றார் அதிகாரத் தோரணையில்.
அவருடைய குரலில் இருந்த தொனி மறுமுனையிலிருந்த வடி காவல்நிலைய துணை ஆய்வாளரை ஒரு நொடி தயங்க வைத்தது. ‘சார்.. பாஸ்கரன், பத்மநாபன்னு ரெண்டு பேர காலையில நம்ம சிந்தாதிரிப்பேட்டை ஸ்டேஷன்ல வச்சி அரெஸ்ட் பண்ணியிருக்கோம். வெறுமனே சந்தேகக் கேஸ்லதான் புக் பண்ணோம். ஆனா இப்பத்தான் தெரியுது போன வாரம் ஆவடியில ஒருத்தர ரெண்டு நாளைக்கு புடிச்சி கஸ்டடியில இல்லீகலா வச்சிருந்து டார்ச்சர் பண்ண கேஸ்ல சம்பந்தப்பட்டிருக்கானுங்கன்னு .’
சேது மாதவன் எரிச்சலுடன், ‘மிஸ்டர் இன்ஸ்பெக்டர்.. இதெல்லாம் எங்கிட்ட எதுக்கு சொல்றீங்க?’ என்றார்.
மறுமுனையில் இருந்து கோபத்துடன் பதில் வந்தது. ‘சார் எங்கள என்ன வேலவெட்டியில்லாதவங்கன்னு நினைச்சீங்களா? இவனுங்கள விசாரிச்சதுல நீங்க சொல்லித்தான் அவர புடிச்சி வச்சோம்னு சொல்றானுங்க. அதான் கூப்டோம்.’
சேது மாதவன் ஒரேயொரு நொடிதான் யோசித்தார். Attack is the best form of defense என்று அவருக்குத் தெரியாதா என்ன.. அதீத கோபத்துடன், ‘நீங்க யார்கிட்ட பேசிக்கிட்டிருக்கீங்கன்னு தெரியுமா இன்ஸ்பெக்டர். நான் சவுத் இந்தியாவுலருக்கற மிகப் பெரிய பேங்க் ஒன்னோட எம்.டி. எவனோ ரெண்டு ரவுடிப்பசங்க என் பேர யூஸ் பண்ணி தப்பிக்கப் பார்த்தா நீங்க ஒடனே என்னோட ஃபோன் நம்பர சர்ச் பண்ணியெடுத்து கூப்டுருவீங்களா?’ என்று இரைந்தார்.
எதிர்முனையில் சிறிது நேரம் பதில் இல்லை.. ராஸ்கல்ஸ்.. பறஞ்ச சோலிய செய்துமுடிக்கான் கழிவில்லாண்டு எண்டே பேரையுமல்லே இட்டுக்கொடுத்திருக்கினெ.. இது பத்மண்டே பணியாயிருக்கணும்.. ஆத்யம் பொறத்தேக்கி கொண்டு வராம்.. இவம்மார எந்தா செய்யேண்டேன்னு பின்னே ஆலோய்க்காம்..
‘சாரி.. சார்.. இவனுங்க ஒங்க ஃபோன் நம்பரையும் கொடுத்ததால ஒங்களுக்கும் இதுல சம்பந்த்தம் இருக்கணும்னு நினைச்சிக்கிட்டேன்.. மன்னிச்சிருங்க.’
இணைப்புத் துண்டிக்கப்பட்ட ஒலிவாங்கியையே பார்த்துக்கொண்டிருந்த சேது மாதவன் திரும்பி திருநாவுக்கரசைப் பார்த்தார். ‘எடோ தான் சுரேஷ் நம்பர டயல் செய்துக் கொடுக்கு..’
அவன் அவரிடமிருந்த ஒலிவாங்கியை பணிவுடன் வாங்கி அவர் கூறிய எண்ணுக்கு டயல் செய்து மறுமுனையிலிருந்து குரல் கேட்டதும் அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகன்றான்.
‘சுரேஷ்?’
‘யெஸ் சார். பாபுதான் பேசறேன்.’
‘உங்க டாட்டர் விஷயம் என்னாச்சி. ஏதாச்சும் தெரிஞ்சிதா?’
எதிர்முனையிலிருந்து சிறிது தயக்கத்துடன். ‘இல்லையே சார். நீங்க அனுப்புன ஆள் ஒருத்தன் காலையில வந்து என் பொண்ணோட ஃபோட்டோ ஒன்ன வாங்கிட்டு போனான். அப்புறம் ஒரு தகவலும் இல்லையே சார். என் ஒய்ஃப் வேற இங்க அழுது, அழுது பிரஷர் ஜாஸ்தியாயி டாக்டர கூப்டற அளவுக்கு போயிருச்சி சார்..’
சேது மாதவனுக்கு எரிச்சலாக இருந்தது. எடோ தண்டெ ஃபேமிலி விஷயம் அறியான் வேண்டிட்டானோ ஞான் விளிச்சது? எண்டெ ஆளுங்கள எங்ஙனெ போலிஸ் பிடிச்சுன்னு அறியாவேண்டிட்டானெ தன்னெ விளிச்சே.. வேறொன்னினுமல்லா..
‘சாரி டு ஹியர் தட் மிஸ்டர் சுரேஷ்.. என்னையும் அவனுங்க கூப்டவேயில்லை.. அதான் கூப்டேன்..’ என்றவர் உடனே.. ‘அப்புறம் சுரேஷ் வேறொரு விஷயம்.’ என்றார்.
‘சொல்லுங்க சார்.’
‘எங்கிட்ட இப்ப சொன்னா மாதிரி நான் யாரையும் அனுப்பி உங்க டாட்டரோட ஃபோட்டோவ வாங்குனேன்னு வேற யாருக்கும்.. நம்ம பாங்குலருக்கறவங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன் தெரியக்கூடாது.. புரிஞ்சிதா.. ஒங்க டாட்டரோட விஷயம் தெரிஞ்சதும் முதல்ல எனக்கு கூப்டு சொல்லுங்க.. சாயந்திரம் நாலு மணி வரைக்கும் இங்கதான் இருப்பேன், என்ன?’ என்றார்.
‘சரி சார்.. ஐ வில் டூ தட்..’
‘எனிதிங்க் எல்ஸ்?’
‘சார் என் பொண்ணு விஷயமும் வெளிய தெரியாம இருக்கணும்.. நீங்க சொன்னீங்கன்னுதான் அந்தாள்கிட்ட அவ ஃபோட்டோவ குடுத்தேன். கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியிருக்கறே நேரத்துல..’
சேது மாதவனுக்கு எரிச்சலாயிருந்தது. ‘டோண்ட் ஒர்றி.. என் சைட்லருந்து விஷயம் வெளியே போகாது. அப்புறமா கூப்டறேன்.’ என்றவாறு எதிர்முனையிலிருந்து பதில் வரும் முன்னர் இணைப்பைத் துண்டித்தார்.
பிறகு சோபாவிலிருந்த தன்னுடைய செல்ஃபோனை எடுத்து ஒரு எண்ணைத் தேடிப்பிடித்து செல் ஃபோனிலிருந்து டயல் செய்யாமல் ஹாலிலிருந்த தொலைப்பேசி வழியாக அந்த எண்ணை டயல் செய்தார்.
மறுமுனையில் எடுத்ததும் படபடவென பேசிவிட்டு இறுதியில், ‘நான் சொல்றது புரிஞ்சிதில்ல? அந்த ரெண்டு பேரும் உங்க கம்பெனி ஆளுங்க. அப்படித்தான் சொல்லிக்கிட்டு உடனே போயி பெய்ல்ல எடுத்துருங்க. நா அந்த பார்ட்டிக்கு ஃபோன் பண்ணி கம்ப்ளெய்ண்ட வித்ட்ரா பண்ண சொல்றேன். என்ன சொல்றீங்க?’ என்றார்.
எதிர் முனையிலிருந்து பதில் உடனே வராமல் போகவே, ‘என்னய்யா யோசிக்கறே? இந்த விஷயத்த ஒளுங்கா முடிச்சிக்குடுய்யா. உன் விஷயத்த நான் நேரம் வரும்போ பார்த்துக்கறேன்..’ என்றார் எரிச்சலுடன்.
‘சரி சார். இப்பவே ஆள அனுப்பறேன்.’ என்று பதில் வரவே மீண்டும் எரிச்சலடைந்தார். ‘யோவ்.. நீ வேற ஆள அனுப்பறதுக்கா நானே ஒனக்கு ஃபோன் பண்றேன்? நீயே போயி எந்த பிரஸ்னமுமில்லாம முடிச்சிட்டு வாயான்னா..ஆள அனுப்பறியா? ஏன் நம்ம ஆளுங்க பண்ணாமாதிரி புத்தியில்லாம ஒன் ஆளும் ஏதாச்சும் செய்யறதுக்கா?’
‘சாரி சார்.. நானே போறேன்.’
‘விஷயம் முடிஞ்சதும் வெளிய இருந்து எனக்கு ஃபோன் பண்ணு. என் செல்லுக்கு பண்ணாத. வீட்டு நம்பர் உங்கிட்ட இருக்குதில்லே. அப்புறம் இந்த கால உன் ரிசீவ்டு கால் லிஸ்ட்லருந்து இப்பவே அழிச்சிரு.. என்ன?’ என்று இணைப்பைத் துண்டித்தார்..
***
‘என்ன அங்கிள் சொல்றீங்க?’ என்றாள் மைதிலி பதற்றத்துடன்.
டாக்டர் ராஜகோபாலன் அவளைப் பார்த்து தலையை அசைத்தார். 'ஆமா மைதிலி. ஆங்கிள்ல ஒரு ஹேர் லைன் ஃப்ராக்சர் இருக்கு. ப்ளாஸ்டர் போட்டாத்தான் சரியாவும். ஒரு ஒரு மணி நேரம் ஆவும். அவருக்கு வலி ஜாஸ்தியா இருந்ததால ஒரு பெய்ன் கில்லர் போட்ருக்கேன். லெட் ஹிம் டேக் ரெஸ்ட்.’
மைதிலி வேறு வழியில்லாமல் ‘ஓக்கே அங்கிள்.. நா வெய்ட் பண்றேன்.’ என்றாள்.
சீனியின் காலில் வெறும் சுளுக்குதானிருக்கும் தேவைப்பட்டால் எக்ஸ்ரே எடுத்து பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில்தான் அவளுடைய குடும்ப நண்பரும் மருத்துவருமான டாக்டர் ராஜகோபாலனுடைய செம்பூர் கிளினிக்கிற்கு சீனிவாசனை அழைத்துக்கொண்டு வந்தாள்.
ஆனால் அவனுடைய கணுக்காலில் லேசான முறிவு ஏற்பட்டிருக்கறதென்பதை அறிந்த மைதிலி சீனியின் வீட்டுக்கு ஃபோன் செய்து அறிவிக்க வேண்டாமா என்ற யோசனையுடன் சீனிவாசன் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.
அவளுடைய தலையைக் கண்டதும் லேசான புன்முறுவலுடன் அவளை தன்னருகில் வருமாறு கையை அசைத்தான் சீனிவாசன்.
‘என்ன சொல்லு..’ என்றாள் மைதிலி அவனை நெருங்கி.
‘டாக்டர் ஹேர் லைன் ஃப்ராக்சர்ங்கறாரே.. இப்ப என்ன பண்ணலாம்?’
‘அதான் சீனி நானும் கேக்கலாம்னு வந்தேன். ஒங்காத்துக்கு ஃபோன் பண்ண வேணாம்?’
‘வேணாம்,மை. அப்பா இன்னைக்கி சென்னைக்கு புறப்பட்டு போணும்.. இந்த நேரத்துல இத சொல்ல வேணாம். It is ok. I’ll manage.. Just take me home after they do the plaster.. You can go home after that. What do you say? I’ll take some rest for a few days and then go to Chennai.’ என்றவனை வியப்புடன் பார்த்தாள் மைதிலி.
‘நீ என்ன சொல்றே சீனி.. நீயும் சென்னைக்கு போறியா?’
பின்ன என்னை என்ன பண்ண சொல்றே? என்பதுபோல் அவளையே பார்த்தான் சீனிவாசன்..
தொடரும்..
1 comment:
சேதுமாதவன் பலே ஆளுதான்...இப்பிடிப் போடுறத அப்பிடிப் போட்டு...அப்பிடிப் போடுறத இப்பிடிப் போட்டு...ம்ம்ம்...தில்லாலங்கடியோ தில்லாலங்கடி......
Post a Comment