2.5.06

சூரியன் 68

தனபால் சாமியின் தர்மசங்கடமான கேள்விகளிலிருந்து தப்பிக்க மாடிக்கு சென்ற பாபு சுரேஷ் சேது மாதவனின் கடுஞ்சொல்லால் வேதனையுற்று புவனா கிளம்பிச் செல்லும் வரை தன் அறையிலேயே முடங்கிக் கிடந்தார்.

புவனாவை அழைத்துச் செல்ல வந்த வாகனம் கிளம்பிச் சென்ற ஓசையைக் கேட்டதும்தான் இறங்கிவந்தார்.

மாடியிலிருந்து அவர் இறங்குவதையே பார்த்துக்கொண்டிருந்த சுசீந்தரா அவர் ஹாலில் இருந்த சோபாவில் அமரும் வரை காத்திருந்துவிட்டு திரும்பி சமையலறையில் நின்றுக்கொண்டிருந்த ரம்யாவை ‘வா’ என்று தலையை அசைத்தாள்.

ரம்யா தயக்கத்துடன் ஹாலுக்குள் நுழைந்து தன்னுடைய தாயின் அருகில் சென்று நின்றாள். சுசீந்தரா அவளுடைய கரங்களைப் பற்றி தட்டிக்கொடுத்தாள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பது போல்.

‘என்னங்க..?’ என்றாள் தன் கணவனைப் பார்த்து.

சற்று முன் சேது மாதவனின் கோபத்துக்கு இரையான பாபு சுரேஷ் தன்னுடைய கெட்ட நேரம்தான் இதற்கெல்லாம் காரணம் என்று தன்னைத்தானே நொந்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

‘என்னங்க உங்களத்தானே..’

பாபு சுரேஷ் திடுக்கிட்டு நிமிர்ந்துப்பார்த்தார். பிறகு தனக்கு முன்னால் நின்ற தன் மனைவியையும் தன்னுடைய அவமானத்திற்குக் காரணமாயிருந்த தன்னுடைய மகளையும் பார்த்தார்.

எல்லாத்தையும் செஞ்சிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி நிக்கறதப் பார். இவள என்ன செஞ்சாலும் தகும். இருந்தாலும் கல்யாணம் பண்ணி அனுப்பறவரைக்கும் நாம பொறுமையா இருக்கறதுதான் நல்லது.

‘என்ன விஷயம், சொல்லு?’ என்றார் சுசீந்தராவைப் பார்த்து.

‘மாப்பிள்ளை வீட்டுக்கு இது தெரிஞ்சிருக்காதில்லே?’

‘என்னெ கேட்டா? உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமான்னு ஃபோன் பண்ணி கேக்கவா முடியும்? அந்த தனபால் சாமி வேற துருவி துருவி கேள்வி கேக்கறாரு. அவர்கிட்டருந்து தப்பிச்சி மேல போனா அந்த சேது மாதவன்.. பேசாத பேச்சில்லே.  தனபால் சாமி தன்னோட போலீஸ் புத்திய காமிச்சி நாலு பேர்கிட்ட கேள்விய கேக்க ஆரம்பிச்சிட்டார்னா வேற வினையே வேணாம்.’

‘அங்கிள் அப்படியெல்லாம் செய்யமாட்டார். எனக்கு அவர் ப்ராமிஸ் பண்ணியிருக்கார்.’ என்ற ரம்யாவை எரிச்சலுடன் பார்த்தார் பாபு சுரேஷ்..

‘ஏன் ரம்யா நா தெரியாமத்தான் கேக்கேன், அப்பாவ பழி வாங்கறதுக்கு இந்த வழிதான் உனக்கு கிடைச்சிதா? அதுக்கு பதிலா என்னெ செருப்பால நாலு அடி அடிச்சிருக்கலாம்.’

அவருடைய குரலில் இருந்த வெறுப்பை உணர்ந்த ரம்யா கோபத்துடன் தன் தாயைப் பார்த்தாள். அவசரப்பட்டு ஏதும் பேசிராத ப்ளீஸ் என்ற அவளுடைய கெஞ்சலை உணர்ந்தவளாய் தலை குனிந்துக்கொண்டு தன்னுடைய அறையை நோக்கி நடந்தாள்.

தன்னுடைய மகள் திரும்பி கோபத்துடன் பேசுவாள் சேது மாதவனுடைய தாக்குதலுக்கு இரையாகி தன்னுடைய உள்ளத்தில் ஏற்பட்டிருந்த காயத்தை அவள்மேல் ஆத்திரமாய் கொட்டித் தீர்க்கலாம் என்று நினைத்திருந்த பாபு சுரேஷ் அவள் மவுனமாய் தன் அறையை நோக்கி நடக்கவே பொங்கி வந்த கோபத்தை மென்று விழுங்கினார். அதே சமயம் நாம்தான் அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிட்டோமா என்றும் நினைத்தார்.

‘என்னங்க நீங்க? அவளே தப்பெ உணர்ந்துதானே இறங்கி வந்து ஒங்கக் கிட்ட பேச வந்தா? நீங்க என்னடான்னா...’

பாபு சுரேஷ் தன்னுடைய மனைவியின் பேச்சிலிருந்த உண்மையை உணர்ந்தவராய் எழுந்து ரம்யாவின் அறையை நோக்கி நடந்தார். இதை எதிர்பார்க்காத சுசீந்தரா ஒரு நிமிடம் திகைத்து நின்றாள். பிறகு சுதாரித்துக்கொண்டு தன்னுடைய கணவரை பின்தொடர்ந்து ரம்யாவின் அறையை நோக்கி விரைந்தாள்..

******

பிலிப் சுந்தரமும் சுந்தரலிங்கமும் விமான நிலையத்திற்குள் நுழையவும் ‘வருகை’ பகுதியில் தன் மனைவியுடன் காத்திருந்த சேது மாதவன் திரும்பி அவர்கள் இருவரையும் பார்க்கவும் சரியாக இருந்தது..

இரு குழுவினரும் மற்றவர்களை எதிர்பார்த்திராததால் அனைவர் முகத்திலுமே திகைப்பின் ரேகைகள்..

பிலிப் சுந்தரம் அடிக்குரலில், ‘இப்ப என்ன சார் பண்றது?’ என்றார் தன் நண்பரிடம்.

‘வேற வழி? வாங்க போய் ‘ஹலோ’ன்னு சொல்லுவோம். அப்புறம் அவர் என்ன பேசறாரோ அத வச்சி பார்த்துக்கலாம்.’

இருவரும் உதட்டில் ஒரு போலியான புன்னகையுடன் சேது மாதவனை நெருங்கி அவருக்கும் அவருடைய மனைவிக்கும் மாலை வணக்கம் கூறினர்.

‘என்ன சுந்தரம் சார்.. இன்னைக்கி காலைல கூப்டப்பக் கூட நீங்க ஏர்போர்ட்டுக்கு வரப்போற விஷயத்த எங்கிட்ட சொல்லவே இல்லையே?’

நீங்க மட்டும் சொன்னீங்களா என்று கேட்டுவிடலாம்தான். ஆனால் இந்த பாழாப்போன பதவி இடைஞ்சலா இருக்கே.. சுந்தரலிங்கம் அசடு வழிந்தவாறு நின்றார்.

பிலிப் சுந்தரம் இடைமறித்து, ‘அது என்னோட ஐடியா சார். அதுவுமில்லாம நீங்க வரப்போறதும் தெரியாதில்லையா? புதுசா ஜாய்ன் பண்ண வர்ற சேர்மன வரவேற்கறதுக்கு யாருமே வரலைன்னு ஒரு பேச்சு வந்திரக்கூடாதேன்னுதான் சார்கிட்ட சஜ்ஜெஸ்ட் பண்ணேன்..’ என்றார்..

சேது மாதவன் குறும்புடன் தன் மனைவியைப் பார்த்தார். ‘நானும் என்னோட மேடத்த வரவேற்கத்தான் வந்தேன். இன்னைக்கித்தான் கொச்சியிலருந்து வந்தாங்க. கிளம்பலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தப்போ மாதவனோட பி.ஏ.வ பார்த்தோம். மாதவனோட ஃப்ளைட் வர்ற நேரம்தான் சார்னு சொன்னார். அதான் இருந்து ரிசீவ் பண்ணா மாதிரி இருக்கட்டுமேன்னு நின்னோம்..’

சுந்தரலிங்கம் சேது மாதவனின் மனைவி அமர்ந்திருந்த இருக்கையில் வைக்கப்பட்டிருந்த அட்டகாசமான பொக்கேயை பார்த்தார். அவரையுமறியாமல் அவருடைய உதடுகள் கேலியுடன் வளைய பிலிப் சுந்தரம் அவருடைய உள்மனதில் தோன்றியதைப் புரிந்துக்கொண்டு நமக்கேன் வம்பு என்பதுபோல் பார்வையைத் திருப்பிக்கொண்டார். சற்று தள்ளி மாதவனின் காரியதரிசியைப் பார்த்தார்.. அவர் பேர் என்னவோவாச்சே.. என்று தன் மூளையை புரட்ட ஆரம்பித்தார்..

அதே சமயத்தில் இவர்களை நோக்கி திரும்பிய சேர்மனின் காரியதரிசி இவர்களை நோக்கி வந்து இருவருக்கும் வணக்கம் செலுத்த பிலிப், ‘என்ன மிஸ்டர்.. சேர்மனோட ஃப்ளைட் லேண்டாயிருச்சி போல.. கூப்ட்டீங்களா?’ என்றார்.

‘I am trying Sir.. He has not switched on his mobile so far..’

‘அப்படீன்னா அவர் ஏர்க்ராஃப்ட்லருந்து இறங்கலைன்னு நினைக்கிறேன்.. you try once again after some time.’

'Yes Sir,' என்றவாறு அவர் சற்று தள்ளிச் சென்று தன்னுடைய செல் ஃபோனை எடுக்க ஒரு சில நொடிகள் யார் மீண்டும் பேச்சை துவக்குவது என்ற நினைப்பில் மூவரும் அடுத்தவர் துவங்கட்டும் என்று வாளாவிருந்தனர்.

சேதுவின் மனைவி மாயா தேவி எழுந்து தன்னுடைய கணவரிடன் ஏதோ குசுகுசுத்துவிட்டு செல்வதைப் பார்த்த சுந்தரலிங்கம் சேதுமாதவனைப் பார்த்து புருவங்களை உயர்த்தினார்.

சேதுமாதவன் கேலியுடன் பெண்கள் கழிப்பறையை நோக்கிச் சென்ற தன்னுடைய மனைவியைப் பார்த்துவிட்டு, ‘வேறென்ன? மேக்கப் கலைஞ்சிருச்சான்னு பாக்கறதுக்குத்தான்.. வரப்போற மிஸ்ஸர்ஸ் மாதவன முதல் சந்திப்பிலேயே இம்ப்ரஸ் பண்ண வேணாமா.. அதுக்குத்தான்..’ என்றார்.

பிலிப் சுந்தரமும், சுந்தரலிங்கமும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

மூவரும் திரும்பி செல் ஃபோனில் பேசிக்கொண்டிருந்த சேர்மனின் காரியதரிசி சுபோத் மிஷ்ராவைப் பார்த்தனர். சேது மாதவன் மற்றும் சுந்தரலிங்கத்திடம் மாதவனுடைய செல் ஃபோன் எண் இருந்தும் தங்களிடம் அது இருக்கும் விஷயம் மற்றவருக்கு தெரிந்துவிடக்கூடாதே என்ற நினைப்பில் வாளாவிருந்தனர்.

சுபோத் தங்களை நோக்கி பரபரப்புடன் வருவதைப் பார்த்த மூவரும் அவரை நோக்கி நகர்ந்தனர். சேது மாதவன் முந்திக்கொண்டு, ‘What happened Subodh? Has he not landed yet? என்றார்.

‘ஆங்.. சுபோத்.. அதுதான் இவரோட பெயர்..’ என்று தனக்குள் முனகிய பிலிப் அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அவரையே பார்த்தார்.

‘Sir has missed the flight. He is planning to catch the evening 7.30 flight. It might land here at 9.00.’

இதை எதிர்பார்க்காத முவரும் திகைப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள சுபோத் மிஷ்ரா தன்னுடைய முகத்தை அவர்களிடமிருந்து திருப்பிக்கொண்டு, ‘I will return in a few minutes, Sir’ என்றவாறு வாயிலை நோக்கி நடந்தார்.

‘என்ன பண்ணப் போறீங்க சார்?’ என்று தங்களை நோக்கி கேலியுடன் வினவிய சேது மாதவனை அதே கேலியுடன் திருப்பிப் பார்த்தார் சுந்தரலிங்கம்.. நீங்க  என்ன பண்ணப்போறீங்களோ அதையேத்தான் நாங்களும் பண்ணப் போறோம்..

‘என்ன பிலிப்.. what are we going to do? Can we go to my flat and return or.. what do you feel?’ என்றார் தன் நண்பரிடம்.

பிலிப் தன் முன் நின்ற இரு அதிகாரிகளையும் பார்த்தார்.

அதற்குள் பெண்கள் அறையிலிருந்து திரும்பிய மாயா சேதுவிடம், ‘எந்தாயி.. வந்நில்லே?’ என சேது உதட்டைப் பிதுக்கினார், ‘அயாளு ஃப்ளைட்ட மிஸ் செய்துத்தறே..’

மாயா தேவியும் திடுக்கிட்டு மூவரையும் பார்த்தாள். பிறகு சலிப்புடன்.. ‘எனிக்கி வெய்ட்டெய்யாம் பற்றில்லா.. நாம போலாம்.. அதான் பி.ஏ இருக்காரில்லே... போறாததுக்கு இவங்க இருக்காங்களே.. அவங்க பார்த்துப்பாங்க.. வாங்க போலாம்..’ என்றவாறு யாருடைய பதிலுக்கும் காத்திராமல் தன்னுடைய டிராலி வண்டியைத் தள்ளிக்கொண்டு வாயிலை நோக்கி நடக்க சேது மாதவன் வேறு வழியில்லாமல் எதிரில் நின்ற இருவரையும் லட்சியம் செய்யாமல் மாயா தேவியின் பின்னால் ஓட்டமும் நடையுமாக வெளியேறினார்..

அவர்கள் இருவரும் வாகனத்தில் ஏறி மறைந்ததும் பரபரப்புடன் உள்ளே ஓடி வந்த சுபோத் அவர்கள் இருவரையும் நோக்கி வந்து, ‘Sir, Chairman has already landed.. He only asked me to give you that wrong information earlier. I don’t know the exact reason.. But it appears that he wanted to avoid meeting our MD..’

மாதவனைப் பற்றி அவ்வளவாக அறிந்திராத பிலிப் சுந்தரமும், சுந்தரலிங்கமும் ஒருவரையொருவர் பார்த்து ‘பலே ஆள்தான் இந்த மாதவன்.’ என்பதுபோல் புன்னகைத்தனர்.

‘Sir he is coming.. Please go and receive him.’ என்று சுபோத் படபடக்க உதடுகளில் தவழ்ந்த உண்மையான புன்னகையுடன் அவரை நோக்கி விரைந்தனர் இருவரும்..

தொடரும்..

4 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

yabba! yabba! bank oficials aa ille
politicians aa enru santhegama irukku

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

bank oficials aa ille
politicians aa enru santhegama irukku //

சரியா சொன்னீங்க. இதவிடவும் அசிங்கமான சண்டைகளையும் நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்..

G.Ragavan said...

அடடா! என்ன சண்ட...என்ன சண்ட....மனுசன மனுசன் பாத்துக்கக் கூட விரும்பாம......தலையெழுத்துதான் போங்க........

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

மனுஷன் எவ்வளவுதான் படிச்சிருந்தாலும் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் மனுஷன் மனுஷந்தானே..

ஆணவம், அகம்பாவம், பொறாமை இல்லாத மனிதன் ஏது?