8.5.06

சூரியன் 72

இந்த பயணம் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொண்டுவராதா என்ற சிந்தனையில் ஆழ்ந்து போனாள் நளினி.

மாலை நான்கு மணிக்கு ஆலப்புழாவிலிருந்து சென்னை செல்லும் ஆலப்புழா எக்ஸ்ப்ரஸ் எர்ணாக்குளம் ஜங்ஷனுக்கு வந்துவிடுமே என்ற நினைப்பில் பரபரப்பானாள்.

வந்தனா மேடத்தைப் பார்த்துவிட்டு உடனே கிளம்பி வந்துவிட முடியாது. கூடவே இருந்து அவர்களை வீட்டிற்கு கொண்டு விட்டுவிட்டுத்தான் வரவேண்டும். ஆகவே எப்படியும் ஒரு வாரம் தங்க வேண்டியிருக்கும் என்ற நினைப்பில் அதற்கு வேண்டியவைகளை¨ சேகரித்து பெட்டியில் அடுக்கி வைப்பதில் அடுத்த ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.

அடுக்களைக்குள் சென்று தனக்கும் நந்துவுக்கும் இரவு உணவுக்கு வேண்டியதை செய்து முடித்தபோது மணி மதியம் இரண்டைக் கடந்திருந்தது. நந்துவின் சகோதரியை வீட்டுக்கு வரச்சொன்னது நினைவுக்கு வர உடனே தன்னுடைய செல்ஃபோனை எடுத்து எதிர்முனையில் சங்கீத்தா எடுத்ததும் சுருக்கமாக அவளுடைய சென்னைப் பயணத்தைப் பற்றி கூறினாள். ‘நல்ல ஐடியா சேச்சி.. ஜாலியா போய்ட்டு வாங்க. நீங்க ஒருவாரமாவது ஸ்டே பண்ணிட்டு வாங்க.’ என்ற சங்கீத்தா எதிர்முனையில், ‘பின்னே சேச்சி..’ என்று தயங்குவதை உணர்ந்த நளினி, ‘எந்தா சங்கீத்தா.. பறயி’ என்றாள்.

‘மெட்றாஸ்ல ஜி.ஜி. ஹாஸ்பிடல்ல டாக்டர் கமலான்னு ஒரு ஜைனக்காலஜிஸ்ட் இருக்காங்களாம். நீங்க ரெண்டுபேரும் போய் பார்த்துட்டு...’

நளினிக்கும் அந்த யோசனை இருந்ததென்னவோ உண்மைதான். வந்தனா மேடத்தின் உடல்நிலை சரியானதும் அவர்கள் மூலமாகவே யாராவது ஒரு மருத்துவரைப் பார்க்க வேண்டும் நினைத்திருந்தாள். அதேபோன்றதொரு யோசனை  சங்கீத்தாவிடமிருந்து வருமென்று அவள் எதிர்பார்க்கவில்லை.

‘சரி சங்கீத்தா நீ சொல்றதும் நல்ல யோசனைதான். டைம் இருந்தா நிச்சயம் செய்றேன். நந்துதான் ஒத்துக்குவாரோன்னு தெரியலை.. பாக்கலாம்.’ என்றாள்.

சங்கீத்தா சந்தோஷத்துடன், ‘ஞான் வேணங்கில் சேட்டண்டிடத்து சம்சாரிக்காம். அண்ணன் இதுக்கு நிச்சயம் ஒத்துக்கும். நான் சொல்றேன்.’ என்றாள்.

'சரி. நீ சொன்னா நந்து கேப்பார்னு நினைக்கிறேன். ஆனா இன்னைக்கி வேண்டாம். ஒரு ரெண்டு திவசம் போட்டே.. புதன் கிழமை கூப்பிடு.. சரியா? வச்சிடறேன்.’ என்ற நளினி இணைப்பைத் துண்டித்துவிட்டு நேரத்தைப் பார்த்தாள்.

குளித்துவிட்டு புறப்பட்டால் சரியாயிருக்கும் என்ற நினைப்பில் குளியலறையை நோக்கி நடந்தாள்.

***

அடக்கம் முடிந்து நண்பர்கள் அனைவரும் ஒவ்வொருவராக கிளம்பிச் செல்ல மாணிக்கவேல் சந்தோஷ் மட்டும் கல்லறையில் மீதமிருந்த பணிகளில் மூழ்கிப்போயிருந்தனர்.

கடைசிவரை தன்னுடைய மேலாளர் குடும்பத்தினருள் ஒருவராய் இருந்து சகல வேலைகளையும் பார்த்த ஜோ தனியாய் சவக்குழு மூடப்படுவதைப் பார்த்துக்கொண்டிருந்த மாணிக்க வேலை நெருங்கினான்.

‘சார்..’ என்று தன்னருகில் தயங்கி நின்ற ஜோவைப் பார்த்த மாணிக்கவேல், ‘சொல்லுங்க ஜோ. நீங்க மட்டும் சரியான நேரத்துல வரலைன்னா.. நீங்க ஒரு ப்ரதர் மாதிரி இருந்து... ஒங்களுக்கு எப்படி.. ' சொல்ல வந்ததைமுடிக்க முடியாமல் தடுமாற ஜோ அவருடைய கரங்களை தரவாய் பற்றி லேசாக அழுத்தினான். ‘சார் நா வந்து..’

‘சொல்லுங்க ஜோ..’

‘வந்தனா மேடம், அங்க துணைக்கு யாரும் இல்லாம..’

மாணிக்க வேல் அப்போதுதான் நினைவுக்கு வந்தவர்போல, 'ஆமா ஜோ. மறந்தே போய்ட்டேன். ஹவ் ஈஸ் ஷி?’ என்றார்.

சவக்குழியை மணலால் மூடிக்கொண்டிருந்தவர்கள் நிமிர்ந்து மாணிக்க வேலைப் பார்க்க அவர் தன்னிடமிருந்த பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து, ‘இத எல்லாருமா ஷேர் பண்ணிக்குங்க. கல்லறையில ஒரு சின்னதா ப்ளாட்ஃபார்ம் போட்டு பண்ணலாம்னு இருக்கேன்.. ஒரு வாரம் கழிச்சி வரேன். ஃபாதர்கிட்ட ஏதும் பெர்மிஷன் வாங்கணுமா?’ என்றார்.

அவர்களுள் ஒருவர், ‘ஆமா சார். நீங்க இந்த நிலத்துக்குண்டான பணத்த சர்ச் ஆஃபீஸ்ல கட்டிட்டு சீட்டு கொண்டுவந்து கல்லறை வாசல்லருக்கற ஆஃபீஸ்ல குடுத்துட்டா போறும். அப்புறம் உங்களுக்கு தேவையான மாதிரி மண்டபமோ இல்ல வெறும் கடப்பா கல்லுல மேடை மாதிரியோ போட்டுக்கலாம். செங்கல் கட்டு வேலையெல்லாம் நாங்களே சீப்பா முடிச்சி குடுத்துருவோம்.’ என மாணிக்கவேல் சரியென்று தலையை அசைத்துவிட்டு, ‘வாங்க ஜோ.’ என்று அவனையும் அழைத்துக்கொண்டு தன்னுடைய வாகனத்தை நோக்கி நடந்தார்.

கல்லறை வாசலில் அவர்களுக்கென வாகனத்துடன் காத்திருந்த சந்தோஷை நெருங்கியதும் ‘சார் நான் போய் வந்தனா மேடத்த பார்த்துட்டு ஒரு எட்டு மணி போல வரேன் சார்.’ என்று ஜோ தயக்கத்துடன் கூற மாணிக்கவேல் நின்று அவனுடைய தோள்களில கையை வைத்து, ‘பரவாயில்லை ஜோ. வி வில் மேனேஜ். நீங்களும் காலைலருந்து அங்கயும் இங்கயும் ஓடி களைப்பா இருக்கீங்க. நீங்க போய் வந்தனா மேடத்த பார்த்துட்டு அப்படியே உங்க வீட்டுக்கு போங்க.’ என்றார்.

அவர்கள் இருவரும் வருவதைப் பார்த்துவிட்டு வாகனத்தில் இருந்து இறங்கி நின்ற சந்தோஷைப் பார்த்து புன்னகைத்துவிட்டு ஜோ தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஏறிக்கொண்டு கிளம்பிச் செல்ல.. மாணிக்க வேல் திரும்பி கல்லறையை ஒருமுறை பார்த்தார். செல்லமாய் வளர்த்த மகளை தனியே விட்டுவிட்டு செல்வதா என்பதுபோல் இருந்தது அவருடைய பார்வை.

சந்தோஷ் அவரை நெருங்கி மெல்லிய குரலில், ‘டாட்.. வாங்க.. தாத்தா வேற முளிச்சிருப்பாங்க. அங்க அம்மா போய் மறுபடியும் பிரச்சினை பண்றதுக்குள்ள நாம் போயிரணும்.. ப்ளீஸ்..’ என்று கெஞ்ச மாணிக்க வேல் நினைவுக்கு வந்தவராய் திரும்பி வாகனத்தை நோக்கி நடந்தார்.

ஆமாம். இப்போது அவருக்கு முன் நின்ற மிகப்பெரிய பிரச்சினை ராணியை சமாதானப்படுத்துவதுதான். எப்படி செய்யப் போகிறேன்? அது சரி.. இனியும் ஏன் அவளைப் பொறுத்துக்கொண்டு போகவேண்டும்? Let her go to hell. I don’t simply care.. போதும் அவளுடைய குணத்திற்கு பயந்து இருந்தது போதும். உயிருக்குயிராய் இருந்த ஒரே மகளே போய்விட்டப் பிறகு.. தனக்குத் துணையாய் மகன்.. வயதான தந்தை.. நிம்மதியாய் இருந்துவிட்டு போவதை விட்டுவிட்டு...

வாகனத்தின் பின் இருக்கையில் ஏதோ யோசனையாக இருந்த தன்னுடைய தந்தையைப் பார்த்தான் சந்தோஷ். எல்லாம் அம்மாவைப் பற்றித்தான் இருக்கும் என்று நினைத்தான். வந்தனா ஆண்ட்டி வந்து சென்றதிலிருந்து அமைதியாய் இருந்த தன்னுடைய தாய் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று நினைத்தான். She has become a real problem for Dad.. பாவம் அப்பா.  எவ்வளவுதான் இறங்கிப்போனாலும் அம்மா விடுவதாய் இல்லை.. கடந்த சில வருடங்களாகவே.. குறிப்பாக அப்பா மீண்டும் மெட்றாஸ் டிரான்ஸ்ஃபர் ஆனதிலிருந்து அப்பாவையும் வந்தனா ஆண்ட்டியையும் சேர்த்து அம்மா புலம்பாத நாளே இல்லை எனலாம்.. தாத்தா இடையில் ஏதாவது பேசினால் அவரையும் சகட்டு மேனிக்கு ஏசிவிடுவதை அவன் பார்த்திருக்கிறான்.

அமைதியான மனநிலையுடன் படுக்கைக்கு சென்ற நாளே இல்லை என்னும் அளவுக்கு தன்னுடைய தாயார் நடந்துக்கொள்வதைப் பார்த்த சந்தோஷே சில நேரங்களில், ‘சே, இப்படி ஒரு அம்மா நமக்கு தேவைதானா?’ என்று நினைத்திருக்கிறான். சில சமயங்களில் மாணிக்கவேலிடம் தன்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்தியிருக்கிறான். ‘டாட், வரவர நிம்மதியா ஒக்காந்து படிக்கக் கூட முடியலை.. இந்த வருஷம் போர்ட் எக்ஸாம்ல நான் என்ன மார்க் வாங்கப் போறேன்னோன்னு பயமாருக்குப்பா.  I am just unable to concentrate in my studies.’

அப்போதெல்லாம்.. அப்பா, ‘கொஞ்சம் பொறுமையாயிரு சந்தோஷ்.. இதுக்கு ஒரு முடிவு நிச்சயம் இருக்கு.. But we will have to be patient.. நீ இங்கருந்து படிக்க முடியலையா? உன் ஃப்ரெண்ட்ஸ் யார் வீட்லயாவது இருந்து படி.. இல்லையா, ராத்திரி பத்து மணிக்குதான் ஒங்கம்மா தூங்க போயிடறாளே.. அப்ப ஒக்காந்து படி..’ என்றதை நினைத்துப் பார்த்தான்.

இன்னும் ஐந்தாறு மாதத்திற்குள் பள்ளி முடிந்துவிடும். அதற்கப்புறம் ஸ்டடி ஹாலிடேஸ்.. நாள்முழுவதும் வீட்டில் எப்படி இருக்கப்போகிறேன்..? கமலியின் எதிர்பாராத மரணம் வேறு அவனை மேற்கொண்டு எதையும் சிந்திக்கமுடியாமல் கட்டிப் போட்டிருந்தது..

‘நீ என்ன நினைக்கிறேங்கறது எனக்கு புரியுது சந்தோஷ்.. அப்பாவும் அதப்பத்தித்தான் நினைச்சிக்கிட்டு வரேன். இன்னும் ஒரு வாரம், பத்து நாள் போட்டும்.. என்னுடைய முடிவு என்னன்னு சொல்றேன்.. I am planning to...’

சந்தோஷ் குழப்பத்துடன் திரும்பி தன்னுடைய தந்தையைப் பார்த்தான். இன்னும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் வீடு வந்துவிடும்.. ‘You are planning to?’ என்றான் தன்னுடைய தந்தையைப் பார்த்து.

வீடு வந்துவிட்டது. வாகனத்தின் கதவில் கைவைத்தவாறு தன்னுடைய மகனைத் திரும்பிப்பார்த்தார். ‘Divorce her.’ என்று கூறிவிட்டு கதவைத் திறந்துக்கொண்டு இறங்கி திரும்பிப் பார்க்காமல் வீட்டு வாசலை நோக்கி நடக்க.. திடுக்கிட்டுப்போய் என்ன செய்வதென புரியாமல் இருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தான் சந்தோஷ்..

***

SSR Hospitalஇன் எட்டாவது தளத்தில் தன்னுடைய வேலையில் மும்முரமாய் இருந்த சோமசுந்தரம் தன்னுடைய அலுவலக தொலைப்பேசி இனிமையாக சிணுங்குவதைப் பார்த்து திரையில் யார் என பார்த்தார். சேதுமாதவன்!

இவன் எங்க இந்த நேரத்துல? மேசையிலிருந்த அலங்கார கடிகாரத்தைப் பார்த்தார். மாலை மணி எட்டு.. தொலைப்பேசியில் இருந்த ஸ்பீக்கர் பொத்தானை அமுக்கி, ‘என்ன மிஸ்டர் சேது? சொல்லுங்க?’ என்றார்.

‘சார் நம்ம சேர்மன் வந்ததும் வராததுமா தன்னுடைய டர்ட்டி கேமை துவக்கிட்டார்.’

சோமசுந்தரத்தின் புருவங்கள் முடிச்சிப் போட்டுக்கொண்டன. என்ன சொல்றான்? மிஸ்டர். மாதவனா? டர்ட்டி கேமா?

தொடரும்..

4 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

madhanikku kuzhandhai vendumenru
maruthuva aalosanai nadacchollum sangeetha........
magal maranamadaindha nerathilum kooda manamurivai nadumalavirku vazhkkayai naragamakkum rani...
penngalil ethanai vidham.....!

siva gnanamji(#18100882083107547329) said...

vow! antha ethan vanthu vittadhai indha ethan kandu pidichadhu eppadi?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

இன்னைக்கு உங்க பின்னூட்டம் சூப்பர்ங்க..

penngalil ethanai vidham.....! //

ஆமாங்க.. பறவைகள் பலவிதம்கறா மாதிரி..

டிபிஆர்.ஜோசப் said...

antha ethan vanthu vittadhai indha ethan kandu pidichadhu eppadi? //

அதான் நீங்களே சொல்லிட்டீங்களே.. எத்தன்னு..

மாதவனையே சாப்டு ஏப்பம் விடக்கூடிய அளவுக்கு எத்தன் சேது.. இந்த விஷயத்த கண்டுபிடிக்கறது அவ்வளவு கஷ்டமா என்ன?