9.5.06

சூரியன் 73

மாப்பிள்ளை வீட்டார் வெளியேறும் வரை பொறுத்திருந்த மைதிலி கோபத்தில் வெடித்தாள்.

‘எதுக்கும்மா இப்படி பண்ணே? என்னோட க்ரெடிபிலிட்டியையே நீ கொறச்சுட்டே. நிச்சயமா இந்த கல்யாணம் நடக்காது. சொல்லிட்டேன்.’

ஹாலில் நின்றிருந்த மைதிலியின் தாய், தந்தை, டாக்டர் ராஜகோபாலன், அவருடைய மனைவி மற்றும் ஒரு சில நெருங்கிய நண்பர்கள் என எல்லோரும் திகைப்புடன் அவளைப் பார்த்தனர்.

ஜானகி தன் மகள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை உணர்ந்தவளாய், ‘எதுவானாலும் அப்புறம் பேசிக்கலாம். நீ உள்ளாற போ.. நா இவாளயெல்லாம் வழியனுப்பிட்டு வர்றேன். அப்புறம் பேசிக்கலாம்.’ என்றாள்.

ராஜகோபாலனும், ‘ஆமாம்மா. எதுவானாலும் அப்புறம் பேசிக்கலாம். பட்டாபி சார், நா வர்றேன். ஏதாச்சும் வேணும்னா என்னெ கூப்டுங்கோ.. மாமி வரேன்.’ என்றவாறு தன்னுடன் நின்றிருந்த நண்பர்களை கண்ணால் ‘வாங்க போவோம்.’ என்று சைகைக் காட்டி தன்னுடன் அழைத்துச் சென்றார்.

வந்திருந்தவர்கள் அனைவரும் விடைபெற்று செல்ல தனித்துவிடப்பட்ட பட்டாபி, ஜானகி மைதிலி மூவரும் ஒருவர் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

‘இப்ப சொல்லு.. என்ன சொல்ல வந்தே?’ என்றார் பட்டாபி.

மைதிலி இன்னமும் கோபம் அடங்காதவளைப்போல் தன் தாயைப் பார்த்தாள்.

அதை லட்சியம் செய்யாமல், ‘ஏண்டி சும்மா நிக்கறே.. இடம் ஏவல் ஒன்னும் பாக்காம படபடன்னு பேசறதே ஒம் பொழைப்பா போச்சே.. எல்லாரும் நிக்கறச்சே இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்றயே.. அதுல யாராச்சும் மாப்பிள்ளையாத்துல போயி சொல்லமாட்டான்னு என்னடி நிச்சயம்?’ என்றாள் ஜானகி.

மைதிலி அப்போதும் கோபம் அடங்காதவளாய், ‘நா இன்னைக்கி நாள் முழுசும் வீட்லதான் இருந்தேன்னு ஏம்மா தேவையில்லாம ஒரு பொய்ய சொன்னே?’ என்றாள். ‘என்னப்பா, நீயும் இதுக்கு உடந்தையாட்டம் பேசாம நின்னே?’

பட்டாபி சங்கடத்துடன் நெளிந்தார். அவருக்கும் அதில் உடன்பாடில்லைதான். ஆனாலும் ஜானகி சட்டென்று அப்படியொரு வார்த்தையை சபையில் கூறியதும் அதை எப்படி மறுத்துப் பேசுவதென தெரியாமல்..

‘என்னெ என்னடி பண்ண சொல்றே? அம்மா சொன்னத மறுத்து சொல்லியிருந்தா அது நன்னாவாருக்கும்?’

ஜானகி தன் கணவனை எரித்துவிடுவதுபோல் பார்த்தாள். ‘அதுசரி. அப்படியொரு எண்ணம் ஒங்களுக்கு இருந்ததாக்கும்.’

‘இங்க பாரும்மா. நா இன்னைக்கி முழுசும் ஊர் பூரா சுத்தியிருக்கேன். தாதர்ல மட்டும் அரைமணி நேரம். சீனி ப்ளாட்பாரத்துல மயங்கி விழுந்து கிடந்தான். மாப்பிள்ளையோட ஆமும் அங்கதான இருக்கு? என்ன அவா யாரோ பார்த்திருக்கா. அதனாலதா சூசகமா.. வெளிய போயிருந்தியாம்மா.. மொகமெல்லாம் டயர்டாருக்கேன்னு கேட்டா. நீ என்ன சொல்லியிருக்கணும்..? ஆமான்னு ஒரே வார்த்தையில சொல்லி முடிச்சிருக்கணும்..’

‘சரிடி.. ஆமான்னு சொன்னேன்னு வச்சிக்கோ.. எங்க, ஏதுன்னு கேட்டா என்னடி சொல்வே..? ஒருவேளை நீ அந்த சீனியோட டாக்சியில ஏறி போனத பார்த்தாளோ என்னவோ?’

மைதிலியின் கோபம் தலைக்கேறியது. ‘பார்த்தா என்னம்மா? அவன் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்.. கீழ விழுந்து கால்ல ஃப்ராக்சராயிருச்சி. நாந்தான் அவன கொண்டுபோய் ஆஸ்பட்டல்ல சேர்த்துட்டு வரேன்னு சொல்லியிருக்கப் போறேன். அந்த கோபுவுக்குந்தான் ஃப்ரெண்ட்ஸ் இருப்பா.. அவர் ஒருவேளை என்னோட எக்ஸ்ப்ளேஷன புரிஞ்சிண்டிருப்பார். நீதான் அவசரப்பட்டு ஒரு பொய்ய சொல்லி.. நீ அப்படி சொன்னதும் அவா மூஞ்சில ஒரு அதிர்ச்சி தெரிஞ்சிதே அத நீ பார்த்தியா? அது சரி, அப்படியே பார்த்திருந்தாலும் நோக்கு புரிஞ்சியா இருக்கப்போவுது..’

ஜானகிக்கு திக்கென்றிருந்தது. தன் கணவரைப் பார்த்தாள். ‘என்னன்னா.. இவ என்னென்னமோ சொல்றா? அவா நா சொன்னத நம்பலையா?’

பட்டாபி அமைதியுடன் தன் மனைவியைப் பார்த்தார். ‘நேக்கும் மைதிலி சொல்றது சரிதானோன்னு தோன்றதுடி.. நீ தேவையில்லாம ஒரு பொய்யச் சொல்லி இந்த சம்மந்தத்த கெடுத்திட்டியோன்னும் தோன்றது. மைதிலி சொல்றா மாதிரி ஒரு வேள அவாளா சம்மதிச்சாலும் மைதிலி ஒரு பொய்ய சொல்லிட்டோமேன்னு மருகிட்டேயிருப்பா. வேணாம்டி.. வேற எடம் பாக்கலாம்.’

ஜானகி உடனே அடங்கிப் போனாள்.. குற்ற உணர்வுடன் மைதிலியைப் பார்த்தாள்.

மைதிலி தன் பெற்றோரை நெருங்கி, ‘இங்க பாருங்க. ஒங்க ரெண்டு பேருக்கும் ஒன்னு சொல்லிக்கறேன். இத்தோட இந்த கல்யாணப் பேச்சை விட்டுருங்கோ. எனக்கும் சீனிக்கும் இடையில இருந்த வெறும் ஃப்ரெண்ட்ஷிப்பை நீங்களே அசிங்கப்படுத்திட்டேள்.. இனி இந்த கல்யாணம் நடக்காம போயி.. எனக்கும் இன்னொரு பையனுக்கும் ஏதோ இருக்குபோலருக்குங்கறா மாதிரி நம்ம அப்பார்ட்மெண்ட்ல இருக்கறவாளே பேசிக்க ஆரம்பிச்சாலும் ஆச்சரியமில்லை.. அதனால இந்த கல்யாண பேச்சு கொஞ்ச நாளைக்கு.....’

அவளுடைய பேச்சை இடைமறிப்பதுபோல் வாசல் மணி ஒலிக்க பட்டாபி சென்று கதவைத் திறந்தார். டாக்டர் ராஜகோபாலன் பரபரப்புடன் காணப்பட்டார்.

‘பட்டாபி சார் ஒரு முக்கியமான விஷயம். அதான் ஃபோன்ல சொல்லாம நானே நேர்ல வந்தேன்.’

‘வாங்கோ.. என்ன விஷயம்?’ என்றார் பட்டாபி.

ராஜகோபாலன் மூவரையும் மாறி, மாறி பார்த்தார். ‘மாப்பிள்ளையாத்துலருந்து சித்த மின்னாடி ஒரு ஃபோன் வந்தது சார். மாப்பிள்ளையோட மாமாவாம்.. மைதிலியையும் சீனியையும் நம்ம க்ளினிக் வாசல்ல வச்சித்தான் எல்லாருமே பாத்திருக்கா. பாத்ததும் அப்படியே திரும்பிப் போயிரலாம்னுதான் மாப்பிள்ளையோட அம்மா சொன்னாளாம். மாப்பிள்ளைதான் போய் பார்க்கலாம்னுட்டு கம்பெல் பண்ணி கூட்டியாந்திருக்கார். எதுக்காக ஒங்க க்ளினிக்குக்கு மைதிலி வந்திருந்தா, கூட வந்த பயைன் யாருன்னுட்டெல்லாம் கேட்டு, கொடஞ்சிட்டார்.’

மைதிலி பொங்கிவந்த கண்ணீரை அடக்கமாட்டாமல் தன்னுடைய அறைக்கு ஓட பட்டாபியும், ஜானகியும் திகைத்துப்போய் நின்றனர்.

******

‘என்னடா சொன்னார்?’ என்ற தன் சகோதரியைப் பார்த்தார் கிருஷ்ணா.

‘அந்த பையனும் மைதிலியும் ஃப்ரெண்ட்ஸாம். அந்த பையனுக்கு இன்னைக்கி காலைல கீழ விழுந்து கால்ல லேசா ஃப்ராக்சர் ஆயிருச்சாம். அந்த பையனோட வீட்ல யாரும் இல்லாததால மைதிலி அவனெ நமக்கு தெரிஞ்ச டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போலாம்னு நினைச்சி இந்த க்ளினிக்குக்கு கூட்டியாந்தாளாம். அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணாம்..’

நாராயணன் சாஸ்திரி தன்னுடைய மனைவியைப் பார்த்தார். ‘பார்த்தியா.. அதுக்குள்ள அவசரப்பட்டு இந்த பொண்ணு வேணாம்னுட்டியே..’

வைசாலி அப்பவும் திருப்தியடையாமல், ‘ஏன்னா.. இந்த விஷயத்த நம்மக்கிட்ட சொல்லிர வேண்டியதுதான? எதுக்கு எங்கயுமே போலேன்னு மறைக்கணும்? கால் ஒடஞ்சிருச்சி கூட்டிக்கிட்டு போனேன்னு சொல்றதுல அந்த பொண்ணுக்கு எங்க வாய் போயிருச்சி? நேக்கென்னமோ ஒன்னும் சரியாப் படலை. அவ்வளவுதான். டேய் கிருஷ்ணா, நீ அந்த தரகர் மாமாவ கூப்டு சொல்லச் சொல்லிருடா.. நமக்கு இந்த சம்பந்தம் வேண்டவே வேணாம். முதல் கோனல் முற்றும் கோனல்ம்பாளே.. ஒரு பொய்ய சொன்னவாளுக்கு இனியும் சொல்லத் தெரியாதா என்ன?’ என்றவள் தன் மகனைப் பார்த்தாள். ‘என்னடா நீ ஒன்னும் பேசாம ஒக்காந்திருக்கே..? பொண்ணு அழகா இருந்ததும் மயங்கிட்டயோ?’

கோபு அமைதியுடன் தன் பெற்றோரை பார்த்தான். ‘நேக்கு அந்த பொண்ண பிடிச்சிருக்கு. அவா அம்மா, அப்பா சொன்ன பொய்க்கு அவ உடந்தையில்லைப்பா. அவ அம்மா சொன்ன பொய் கேட்டதும் முதல்ல அதிர்ச்சி அடைஞ்சது அந்த பொண்ணுதான். நா நல்லா பார்த்தேன். நாம புறப்பட்டு வரச்சேக் கூட அந்த பொண்ணோட முகத்துல ஒரு விதமான கோபம் இருந்தத பார்த்தேன். நாம பொறப்பட்டு வந்தவுடனே நிச்சயம் அவா ரெண்டு பேருக்கும் டோஸ் விட்டிருப்பா. அதனால..’

‘அதனால என்னடா.. நாந்தான் வேண்டாம்னுட்டேனே.. அப்புறம் நீ என்ன பேசிண்டே போறே?’

‘அதெப்படிம்மா? நேக்கு புடிச்சிருக்குங்கறேன். நீ பாட்டுக்கு முடிவு பண்ணிட்டேங்கறே? கல்யாணம் ஒனக்கா இல்ல எனக்கா? என்ன மாமா நீங்களும் அப்பாவும்கூட பேசாம இருக்கேள்? சொல்லுங்கோ..’

நாராயணன் தன் மைத்துனரை பார்க்க அவர் தன் தமக்கையைப் பார்த்தார். ‘என்னக்கா நீ.. கோபுவும் சொல்றது நியாயந்தானே?’

வைசாலி கோபத்துடன் தன் சகோதரனை முறைத்தாள். ‘டேய் நீ கெளம்பு.. ஒன்கிட்ட கார் மட்டுந்தான் கேட்டேன். அட்வைஸ் இல்லை.. நேக்கு கோபுவுக்கு எது சரி, எது தப்புன்னு தெரியும். இங்க பார்றா கோபு.. நீ நான் சொன்னத கேட்டு நடக்கறதாருந்தா நல்ல பொண்ணா பார்த்து கட்டி வப்பேன். இல்ல இந்த தறுதலைதான் வேணும்னா நாளைக்கே ஒன் வழிய பார்த்துண்டு நீ போய்க்கோ.. சொல்லிட்டேன்.. நீங்க என்னன்னா வேடிக்கை பார்த்துண்டு நிக்கறேள்..? எடுத்து சொல்லி புரிய வைங்கோ.. மை டிசிஷன் இஸ் ஃபைனல்.. இந்த பொண்ணு வேண்டாம்.’ என்றவாறு வைசாலி வீட்டுக்குள் செல்ல நாரயணன் சாஸ்திரிகள் பரிதாபமாக தன் மகனைப் பார்த்துவிட்டு தன் மனைவியின் பின்னே சென்றார்.

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

nijam solla thiramai thevai ille;
poi solla dhan niraya thiramai thevaip padum

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

nijam solla thiramai thevai ille;
poi solla dhan niraya thiramai thevaip padum //

பொன்மொழிகள் மாதிரி குறிச்சி வச்சிக்க வேண்டிய வாக்கியம்..