22.5.06

சூரியன் 81

ஏ.சி. கோச்சில் பயணம் செய்வதே ஒரு தனி சுகம்தான். மிதமான குளிரும் மெலிதாக கேட்கும் தடக், தடக் என்ற ஓசையும் தாலாட்டுவதுபோடுவதுபோல இருந்தது.

ஆயினும் உறக்கம் வராமல் நெடுநேரம் விழித்துக்கொண்டிருந்தாள் நளினி. மூன்றடுக்கு படுக்கைகளைக் கொண்ட அந்த ஏ.சி கோச்சில் நடுவில் இருந்த படுக்கைகளில் எதிரும் புதிருமாக அவளும் நந்தக்குமாரும் படுத்திருந்தனர்.

நந்துவுக்கு என்ன களைப்போ வண்டி பாலக்காட்டை தாண்டியவுடனே படுக்கையைப் போட்டுக்கொண்டு படுத்துவிட்டான். நளினியின் பக்கத்து இருக்கை இரண்டையும் நந்துவின் இருக்கையை அடுத்திருந்த இரண்டையும் ஆக்கிரமித்துக்கொண்ட மாணவிகளின் குழு நள்ளிரவுவரை தங்களுடைய ஹாஸ்டல் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டிருக்க நளினியும் அவர்களுடன் சேர்ந்துக்கொண்டாள். அவளுடைய அந்தக்கால அனுபவங்களை அம்மாணவிகள் மிகவும் ரசிக்கவே பேச்சு ஒன்றிலிருந்து வேறொன்றுக்கு போக நேரம் போனதே தெரியாமல் இருந்தது.

‘என்னங்கம்மா இது.. நாங்க தூங்க வேணாமா?’  என்று அடுத்த பகுதியிலிருந்த ஒரு பெரியவர்  வந்து கேட்கும்வரை அரட்டையடித்துக்கொண்டிருந்த மாணவிகள் ஒருவரயொருவர் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்திக்கொண்டு படுக்கையில் விழ நளினியும் தன்னுடைய படுக்கையை விரித்து படுத்தாள்.

ஆனால் கடந்தகால நிகழ்வுகள் அவளை உறங்கவிடாமல் தடுத்தன.

எதிர் படுக்கையில் படுத்து அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த நந்தகுமாரைப் பார்த்தாள். ‘இவங்கிட்ட என்னத்தெ பார்த்து நா காதல் வசப்பட்டேன். முகத்த மூடிக்கிட்டுருக்கற தாடிக்கு பின்னால எதையோ ஒன்ன பார்த்துதான மயங்கிப்போனேன்? அது இப்ப எங்க போச்சி? இல்லே நாந்தான் அத மறந்துப்போனேனா? எதுவாருந்தாலும் போறும் இந்த போலி வாழ்க்கை. பேசாம கேரளாவுலருந்து சென்னைக்கே மாற்றம் கேட்டா என்ன? நாம சென்னையில ப்ரொபேஷனரி ஆபீசரா இருந்தப்போ எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்?

அது மட்டுமா, தமிழ்நாட்டு கஸ்டமர்ஸ் எவ்வளவு மரியாதையா, அன்பா நடந்துக்குவாங்க? அதுவும் ஒரு லேடி ஆஃபீசர்னாலே ஒரு தனி மரியாதைதான். என்னம்மா, எப்படீம்மாருக்கீங்கன்னு எவ்வளவு அன்பா, மரியாதையா.. கேரளாவுல அந்த மரியாதையே இருக்காதே.. என்னவோ நாம அவங்களுக்கு சேவை பண்றதுக்குன்னே அவதாரம் எடுத்து வந்தா மாதிரி என்ன அலட்சியமா நம்மள ட்ரீட் பண்ணுவானுங்க? தமிழ்நாட்டுல வேலை செய்யற சந்தர்ப்பம் கிடைக்கறவரைக்கும் இந்த வித்தியாசமே தெரியாம இருந்துதே.. இங்க ஒரு ரெண்டு வருஷம் வேலை செஞ்சிட்டு திரும்பி கேரளாவுக்கு போனாத்தான தெரியுது இந்த வித்தியாசம்?

நந்துவுக்கும் சென்னை மாற்றம் ஒருவேளை ஒரு நல்ல மாற்றத்த ஏற்படுத்துனாலும் ஏற்படுத்தும். கேரளாவுல இருக்கறவரைக்கும் ஃப்ரெண்ட்சோட சேர்ந்துக்கிட்டு தினமும் குடிச்சி, குடிச்சித்தான் அவன் கொணமே மாறிப்போச்சி. சென்னையில வந்தா அது நடக்காதே..

Yes.. Both of us should start a fresh chapter in our life.. புது சூழ்நிலையில.. புது நண்பர்கள் மத்தியில.. வந்தனா மேடத்தோட கைடன்ஸ்ல..

என்ன, அந்த சசிய நினைச்சாத்தான் பயமாருக்கு. அவனோட இன்ஃப்லூயன்ஸ்ல இவர் மறுபடியும் யூனியன் கீனியன்னு தீவிரமாயிடுவாரோன்னு பயமாத்தான் இருக்கு...

வண்டி ஏதோ ஸ்டேஷனில் நின்று புறப்படுவது தெரிந்தது. நளினி கண்களை இறுக மூடி உறங்க முயற்சித்தாள்.

****

சிலுவை நாடாரின் சொகுசு வாகனம் இருட்டைக் கிழித்துக்கொண்டு சென்னையை நோக்கி விரைந்துக்கொண்டிருந்தது.

வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராசம்மாள் காரினுள் குழந்தைக்காக எரிந்துக்கொண்டிருந்த மெல்லிய ஊதா நிறவிளக்கொளி கண்களை உறுத்தாமலிருக்க ஒரு கைத்துவாலையால் முகத்தை மூடிக்கொண்டு உறங்க முயற்சித்து தோற்றுப்போனாள்..

துவாலையை எடுத்து மடியில் போட்டுக்கொண்டு மூடியிருந்த ஜன்னல் வழியே பின்னோக்கி விரைந்தோடிக்கொண்டிருக்கும் விளக்குக் கம்பங்களை, எதிரிலிருந்து கண்ணைக் கூசவைக்கும் விளக்கொளியுடன் வந்து மறைந்த வாகனங்களை, அந்த நள்ளிரவு நேரத்திலும் படுபிசியாகவிருந்த சாலையோர உணவகங்களை, பெட்டிக்கடைகளை பார்த்துக்கொண்டிருந்தாள்..

தன்னுடைய வாழ்வில் ஒரு அத்தியாயம் முடிந்து வேறொரு அத்தியாயம் துவங்கவிருப்பதை உணர்ந்தாள்..

முதல்ல இந்த ராசம்மாள்ன்ற பேரை மாத்தணும்... சும்மா இல்ல.. சட்டபூர்வமா.. அதுக்குன்னு ஏதாவது ப்ரொசீஜர் இருக்கும்.. நாளைக்கு வக்கீல பாக்கறப்போ கேக்கணும்.. ஒலகம் முழுசும் இருநூத்துக்கும் மேல ப்ராஞ்சஸ், ஃப்ரான்சயீஸ்னு இருக்கற கம்பெனியோட எம்.டியோட பேரு இந்தமாதிரி பட்டிக்காட்டுத்தனமா.. ராஜீன்னு வச்சிக்கலாம்.. பொதுவா.. கூப்டறதுக்கு சின்னதா.. அம்மாவுக்கு ஒருவேளை புடிக்காம போலாம்.. அதப் பாத்தா முடியாது.. இனிமேலாவது நமக்கு எது புடிக்குதோ அதத்தான் செய்யணும்..

ராசேந்திரன டைவோர்ஸ் பண்றதுக்கூடத்தான் அம்மாவுக்கு புடிக்கலே.. அதுக்காக அவன்கூடவே வாழ்ந்துர முடியுமா? செல்வமும் என்ன சொல்வானோ தெரியல.. நேத்துக்கு அவன்கிட்ட பேசினப்பக் கூட சொல்லல.. ஏன்? ஃபோன்ல சொல்ல வேணாம்னு தோனிச்சி.. நாளைக்கு நேர்ல சொல்லும்போது சொல்லணும்.. அவனும் ஒருவேளை 'எதுக்கு இப்ப திடீர்னு? யோசிச்சி செய்யே'ன்னு சொல்லுவான்.

செல்வம் எப்பவுமே அப்படித்தான். எடுத்தோம் கவுத்தோம்னு எதையுமே செய்ய மாட்டான். ஏன், பேசறதுக்கே ஒருதரத்துக்கு மூனுதரம் யோசிப்பான். 'நான் ராசேந்திரனத்தான் விரும்பறேன் செல்வம்'னு நா சொன்னப்போ மட்டும் உடனே சட்டுன்னு 'சரி ராசம்மா. உன் விருப்பம் எதுவோ அதுதான் என் விருப்புமும்'ன்னு சொன்னானே.. ஏன்?

அன்னைக்கி மட்டும் 'வேணாம் ராசம்மா.. நல்லா யோசிச்சி செய்'யின்னு சொல்லியிருந்தான்னா ஒருவேளை இந்த கல்யாணமே நடந்திருக்காதோ.. கல்யாணத்துக்கு முன்னமே ராசேந்திரனைப் பத்தி அரசல் புரசலா கேள்விப்பட்டேனே அத செல்வத்துக்கிட்ட சொல்லி அவனெ விசாரிச்சி சொல்லணும்னு ஏன் எனக்கு தோனாம போச்சி?

சின்ன வயசிலருந்தே நான் கருப்பு அதனாலத்தான் எனக்கு யாரும் ஃப்ரெண்ட்சே அமையமாட்டேங்குறாங்கன்னு யோசிச்சி, யோசிச்சிதான் என்னையுமறியாம இந்த ஒடம்பு நிறத்துமேல ஒரு மோகமே வந்திருச்சின்னு நினைக்கிறேன். மதுரையில காலேஜ்ல என் கூட படிச்ச அந்த சவுராஷ்டிரா சாதிய சேர்ந்த பசங்களோட அந்த கலர்.. அதுதான் என்னெ ரொம்பவும் பாதிச்சிருந்ததுன்னு நினைக்கிறேன்.. நான் அழகுல, லட்சணத்துல அவங்களவிட குறைவா என்ன? இருந்தாலும் கேவலம் இந்த வெள்ள தோலுக்கு ஆசைப்பட்டுத்தான அவளுங்களையே இந்த ஆம்பளப் பசங்க மொச்சிக்கிட்டு அலைஞ்சாய்ங்க.. கறுப்புத் தோல வச்சிக்கிட்டு வெள்ள தோலுக்கு அலைஞ்ச அந்த பசங்கதான் நானும் வெறும் வெள்ள தோலுக்கு ஆசைப்பட்டு அந்த ராசேந்திரன கட்டுனதுக்கு காரணம்..

‘நம்ம செல்வம் தங்கம்மாதிரிம்மா.. சொக்கத் தங்கம். அவந்தான் ராசம்மா ஒன் கொணத்துக்கு ஏத்தவன்.. தோலோட நெறத்த பாக்காம அவன நீ கட்டிக்கிட்டா காலத்துக்கும் ஒன்னெ தலையில வச்சி கொண்டாடுவான்..’ அத்தே (செல்வத்தின் தாய்) எத்தன தடவ கெஞ்சியிருப்பாய்ங்க..

‘ச்சீய்.. அவன் வேலைக்காரண்டி.. வயித்துக்கு பொங்கி திங்க வகையில்லாம எடுபிடிப் பயலா வந்தவனா ஒனக்கு புருசனா வர்றது..? ஒனக்கு மூள, கீள பிசகிப்போச்சாடி..? நீ படிச்ச படிப்பென்ன.. சரக்கு எடுத்து போடற அவன் எங்க.. அவன் மூஞ்சியும் மொகரையும்.’ ராசாத்தியம்மாள் பேசிய பேச்சு அன்று நான் இருந்த மனநிலைக்கு தேனாக இனித்தது. ‘நான் நினைச்சதேயேத்தாம்மா நீயும் நினைச்சிருக்கே.. இந்த அப்பாதான் தேவையில்லாம என்னெத்தையோ அந்த அத்த கிட்ட சொல்லிக்குடுத்து அவிய என்னெ போன ரெண்டு மாசமா தொளைச்சி எடுக்கிறாய்ங்க.. நீதான் அப்பாக்கிட்ட பேசி ராசேந்திரன முடிக்கணும்மா..’

‘என்னம்மா ஒறக்கம் வரமாட்டேங்குதாக்கும்..’

ராசம்மாள் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து மந்திரச்சாமியைப் பார்த்தாள். அவனுக்கும் செல்வத்துக்கும் ஒரே வயது இருக்கும். செல்வம் வந்து சேர்ந்த அடுத்த வருடமே அவளுடைய தந்தையிடம் ஓட்டலில் எடுபிடி வேலைக்கு வந்து சேர்ந்தவந்தான். இருபது வருடங்கள் குடும்பத்தில் ஒருவனாய்..

‘ஆமா மந்திரம்.. என்னமோ நினைப்பு.. தூங்க முடியலை..’

மந்திரச்சாமி ரியர்வ்யூ கண்ணாடியில் பின் இருக்கையில் அமர்ந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்த குட்டி எஜமானியைப் பார்த்தான். எப்படி வாழ்ந்திருக்க வேண்டியவள்.. ‘டேய் செல்வம்.. அந்த ராசேந்திரன் பயல வீட்டுக்குள்ள விட்டே அவன் ஒன்னெ வெரட்டுறதுலத்தாண்டா குறியாயிருப்பான். பக்குவமா சொல்லி ராசம்மாள ஒன் வழிக்கு கொண்டு வரத விட்டுட்டு அவ சொன்னான்னு அந்த களவாணிப்பய அப்பங்கிட்ட போயி பேசறேன்னு மொதலாளிக்கிட்டு சொல்றிய.. இது நல்லாவாருக்கு?’

செல்வமும் அவனும் ஒரே வயதினர் என்பது மட்டுமல்ல ஒரே நேரத்தில் நாடாரிடம் வேலைக்கு வந்தவர்கள். செல்வம் உறவினன் என்பதுமட்டும்தான் அவர்கள் இருவருக்கிடையில் இருந்த வேறுபாடு..

‘இன்னும் எவ்வளவு நேரம் மந்திரம். ஆறு, ஆறரைக்குள்ள போயிருவியா?’

மந்திரச்சாமி சாலையிலிருந்து கண்களை எடுத்து ரியர்வ்யூ கண்ணாடியைப் பார்த்தான். ‘ஆயிரும்மா.. இன்னைக்கி ஞாயித்துக்கிழமையாச்சே.. அதான் கொஞ்சம் டிராஃபிக்காருக்கு..’

‘ஆமா, இல்லேன்னா இவரு பறந்து போயிருவாரு.. லேய்.. வளவளன்னு பேசாம.. செயல்ல ஒன் வேகத்த காட்டுலே..’ முன் இருக்கையில் அமர்ந்திருந்த நாடார் கண்களைத் திறக்காமலே எரிந்துவிழ மந்திரச்சாமி வாயை மூடிக்கொண்டான்..

ராசம்மாள் புன்னகையுடன் கண்களை மூடிக்கொண்டு சரிந்து அமர்ந்தாள்..

மந்திரச்சாமி முதலாளியின் மேலிருந்த கோபத்தை ஆக்ஸிலரேட்டரில் காட்ட வாகனம் சீறிப் பாய்ந்தது.


தொடரும்..



3 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

yes! both of us....fresh chapter../
நல்ல முடிவோட நளினி தூங்க முயல்வது மகிழ்ச்சி....ஆணால்
'மந்திரமூர்தி ஆக்சிலரேட்டரில்....'

வில்லங்கம் ஏதும் பண்ணிடதீங்கப்பு

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!


வில்லங்கம் ஏதும் பண்ணிடதீங்கப்பு //

அத டிரைவர்கிட்ட இல்ல சொல்லணும்?

ஜாக்கிரதையா ஓட்டுவார்னு நம்பறேன்:)

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அரவிந்தன்,

அப்பொ ஒரு விபத்து உருதி //

அத உறுதியா சொல்லமுடியாது:)