4.5.06

சூரியன் 70

சிலுவை மாணிக்கம் நாடாரின் வாகனம் வீட்டு வாசலில் வந்து நின்று அவர் இறங்கி வாகனத்தின் கதவை அடைக்கும் சப்தத்திலிருந்தே அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என்பதை குறிப்பாலுணர்ந்து நடந்துக்கொள்வாள் ராசாத்தியம்மாள்.

செவிப்பறை கிழிந்து விடுவதுபோல் ஓங்கி அறைந்தால் மனுஷன் படு மோசமான மனநிலையில் இருக்கிறார் என்பதை உணர்ந்துக்கொண்டு அடுத்த அரை மணி நேரத்திற்கு அவர் கண் முன்னிருந்து மறைந்து இருப்பாள். அவராக அழைக்கும்வரை நடுக்கூடம் பக்கமே தலைகாட்ட மாட்டாள். ராசம்மாளும் அப்படித்தான்.

‘கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்பாங்க.. கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இந்த மனுஷன கட்டுனதுலருந்து கோபத்ததாம்யா பார்த்திருக்கேன்.. என்ன குணமோ, போ’ என்று வீட்டுக்கு வருவோரிடம் புலம்புவதோடு நிறுத்திக்கொள்வாள்.

அன்றும் அப்படித்தான்.. ‘ப்ளசரு கதவ போட்டு அடிச்சி சாத்தி என்னத்த பண்றது.. அது வாயில்லா சீவனாச்சே.. அதும்பாட்டுக்கு அடிச்சி மூடுனாலும் அடிக்காம மூடுனாலும் வா தொறந்து அளவா போவுது..? இன்னைக்கி என்னென்ன ஏச்சு விளப்போவுதோ’ என்று தனக்குள் புலம்பியவாறு கூடத்தை விட்டு அகன்று புழக்கடையை நோக்கி ஒட்டமும் நடையுமாக சென்றாள்..

தன் உள் அறையிலிருந்த ராசம்மாள் ( நாடாரின் ஒரே மகள்) தன் தாய் புழக்கடைப் பக்கம் ஓடுவதை வைத்தே, ‘அப்பா வந்துட்டாக போல..’ என்ற முடிவுக்கு வந்து.. இந்த நேரத்துல அப்பா முன்னால போயி வாங்கி கட்டிக்க வேண்டாம்..’ என்ற தீர்மானத்துடன் தன் அறைக்குள்ளேயே முடங்கிப் போனாள்.

தோளில் கிடந்த துண்டை நடுக்கூடத்திலிருந்த சாய்வு நாற்காலியில் வீசியெறிந்த நாடார், ‘எலேய் எங்க யாரையும் காணோம்? எளா ராசாத்தி.. எங்கிட்டுளா போன?’ என்று இரைந்தார்.

தன் தாய் ஏதாவது ஏடாகூடமாக பேசி அப்பாவின் ஆத்திரம் அதிகக்கூடும் என்ற நினைத்த ராசம்மாள் படபடப்புடன் கூடத்திற்குள் நுழைந்து, ‘என்னப்பா.. சில்லுன்னு மோர் ஃப்ரிட்ஜ்லருக்கு கொண்டு வரட்டா?’ என்றாள்.

ராசாத்தியம்மாள் வந்தால் தன்னுடைய ஆத்திரத்தை அவள் மேல் காட்டலாமே என்று நினைத்திருந்த நாடார் மகளைக் கண்டதும் சாந்தமடைந்தார்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்து கால்களை இருக்கையின் கையில் நீட்டிக்கொண்டு சாய்ந்து அமர்ந்து கண்களை மூடி தன்னுடைய ஆத்திரத்தை மென்று விழுங்கினார்.

ராசம்மாள் கொண்டு வந்த குளிர்ந்த மோரை ஒரே மடக்கில் குடித்து முடித்துவிட்டு காலி டம்ளரை நீட்டினார். ‘அத அப்படியே அந்தால மேசைல வச்சிட்டு.. அந்த ச்சேர இளுத்து போட்டுக்கிட்டு ஒக்காரு..ஒங்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசோணும்..’

ராசம்மாள் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து தன் தந்தையை பார்த்தாள்.

சிறிது நேரம் கண்களை மூடி அமர்ந்திருந்த நாடார் திடீரென்று.. ‘இனி என்னடே பண்றதா முடிவு பண்ணியிருக்கே?’ என்றார்.

ராசம்மாள் திடுக்கிட்டு என்ன சொல்வதென தெரியாமல் விழித்தாள். காலையில் புறப்பட்டுச் சென்றபோது தன் தாய் 'பொண்ணோட விஷயத்த மறந்துட்டீங்களா' என்று கேட்டதற்கு பட்டும்படாமல் எரிந்து விழுந்தவரா திரும்பி வந்து இந்த கேள்வியைக் கேட்கிறார் என்று பார்த்தாள்.

‘என்ன முடிவுன்னா? என்னப்பா கேக்கறீங்க?’

நாடார் தன் மகளையே பார்த்தார். ‘அப்பா உன் மாமனார் வீட்டுக்குத்தான் போயிருந்தேன். எம் பொண்ணுக்கு என்னடா வழின்னு கேக்க?’

புழக்கடையிலிருந்த ராசாத்தியம்மாள் சமையலறை நோக்கி வரவும் நாடாரின் இந்த கேள்வி அவளுடைய செவியில் விழவும் சரியாயிருந்தது. நின்ற இடத்திலிருந்தே அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்கலானாள்.

‘என்னடே அவன் என்ன சொன்னான்னு கேக்க மாட்டியா?’

ராசம்மாள் மறுமொழி கூறாமல் குனிந்துக்கொண்டாள். என்ன சொல்லியிருக்க போகிறார். ராசேந்திரனின் இந்த பொறுப்பற்ற நடத்தையை அவளே வெட்கத்தை விட்டு பலமுறை அவரிடம் கூறியும், 'எல்லாம் போகப் போக ச்சரியாயிரும்மா.. நீ தான் பாத்து நடந்துக்கணும்..' என்று தன்னையே அறிவுருத்தியவராயிற்றே..

‘இங்க பார் ராசம்மா. அந்த பய பிடி குடுத்தே பேச மாட்டேங்குறான். அது மட்டுமில்லடே. உம் மாப்பிள்ள செஞ்சி வச்சிருக்கற காரியத்துக்கு அவன என்ன பண்ணாலும் தகும்.. அதனால அப்பா ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.. அதுக்கு நீ என்ன சொல்லப்போறேங்கறத பொருத்துத்தான் மேல்கொண்டு ஆக வேண்டியத பாக்கணும். என்னடே சொல்றே?’

‘நீங்க ஒங்க முடிவு என்னன்னு சொல்லுங்கப்பா. என்ன பண்ணலாம்னு நா சொல்றேன்.’

'அப்படி கேளு.. சொல்லுதேன்.' என்று எழுந்த நாடார் கூடத்தின் குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறே சற்று முன் அவருடைய சம்மந்தி ரத்தினவேலுவின் வீட்டில் நடந்த சம்பாஷனையை விவரித்தார். முடிவில் ‘அவனும் அவன் மவனுமா சேர்ந்து நம்ம முதுகுல குத்திட்டான்வடே.. இதுக்கும் மேல பொறுமையா சவத்தப்போல இருந்தம்னா ஏறி மிதிச்சிருவான்வ.. சரி போட்டும், பிசினஸ்லதான் கயவாணித்தனம் பண்ணிட்டான்வன்னு பாத்தா ஒன் விசயத்துலயுமில்லடே வெள்ளாடிட்டான்வ.. வேணும்னா ஒம் பொண்ணெ விட்டு விவாகரத்து நோட்டீஸ் விட்டுப் பாரும்வேன்னில்லடே சவால் விடறான்..?’ என்று குரலை உயர்த்தினார் நாடார்.

மறைவில் நின்று கேட்டுக்கொண்டிருந்த ராசாத்தியம்மாள் தன்னை மறந்து கூடத்திற்குள் நுழைந்து கோபத்துடன் தன் கணவரைப் பார்த்தாள். ‘நீய மாப்பிள்ளைக்கிட்ட பேசனியளா? இல்லேல்லே? இந்த விசயத்துல அவர் என்ன சொல்றார்ங்கறதுதானங்க முக்கியம்? ஒங்களுக்கும் சம்மந்திக்கும் நடுவுல வியாபாரத்துல பலதும் நடக்கும்க.. அதுக்கும் இவளோட வாழறதுக்கும் முடிச்சு போடாதீங்க..’

நாடார் எரிச்சலுடன், ‘ஏ.. கூறுகெட்ட மூதி.. நா என்ன சொல்லிக்கிட்டிருக்கேன். நீ என்ன பேசுத? அவன் அப்பனே இவ வேணாம்லேன்னு மாப்பிள்ளக்கிட்ட சொல்லிக் குடுத்துருக்கான், நீ என்னமோ பேசிக்கிட்டே போற.. இங்க பார், ரத்தினவேலுவும் அவன் பையனும் – சம்மந்தி, மாப்பிள்ளைங்கறதெல்லாம் அப்புறம்,  எப்ப எனக்கு துரோகம் பண்ணிட்டான்வளோ அப்பவே அவிய குடும்பத்துக்கும் நம்ம குடும்பத்துக்கும் இடையில இனி எந்த ஒட்டும் ஒறவும் கூடாது.. சொல்லிட்டன்.. இதுல ராசம்மாவோட வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருக்கறதனால நா அவ என்ன சொல்லுதான்னு தெரிஞ்சிக்கணும்.. நீ எதெடி ஒளுங்கா புரிஞ்சிருக்கே.. ராஜா மாதிரி ஒரு பையன வீட்டுக்குள்ளாறவே வச்சிக்கிட்டு வெறும் வெள்ளத் தோலுக்கு ஆசைப்பட்டு பின்னால போனீங்க? தாயா இருந்து பொண்ணுக்கு ஒரு நல்ல வளிய காட்டுவேன்னு பாத்தேன்.. நீயும் சின்ன பொண்ணாட்டாம் இவ கூட சேர்ந்துக்கிட்டு ஆடுன.. இப்பவாச்சும் வாய மூடிக்கிட்டு சும்மா கெட.. நா பாத்துக்கறேன்..’ இரைந்தவர் தன் மகளை நெருங்கி அவளுடைய தோள்களை தொட்டார்.

‘இங்கன பார்டே.. நீ படிச்ச பொண்ணு.. ராசேந்திரனுக்கு எந்த வகையிலும் குறைஞ்சி போயிரலே.. அவன் பண்ண காரியத்துக்கு நா நாளைக்கு மெட்றாஸ் போனதுமே நம்ம வக்கீல பார்த்து அவனயும் அவன் அப்பனையும் நம்ம கம்பெனியிலருந்து சட்ட பூர்வமா வெளிய தள்ளப் போறேன். நம்ம செல்வத்த மறுபடியும் உள்ளார கொண்டு வரணும்.. அப்புறம் இனி நீதான் நம்ம கம்பெனியோட எம்.டி. என்னடே சொல்றே?’

ராசம்மாள் திடுக்கிட்டு தன் தந்தையைப் பார்த்தாள். ஏன்.. இருந்தா என்ன? நான் படிச்ச படிப்பும் காமர்ஸ்தான? கணக்கு வழக்க பாக்க முடியாதா என்ன? ‘ஒனக்கு பொங்கி போடவே வரலே.. இதுல கம்பெனி விசயத்தபத்தி கேக்காதேன்னு எத்தன தரம் சொல்றது? அப்படியே நா சொல்லிட்டா மட்டும் வெளங்கிரப்போவுதாக்கும். பட்டிக்காடு.. பட்டிக்காடு. புள்ள பெத்துக்கறதுக்கும் பொங்கி போடறதுக்குந்தாண்டி நீ லாயக்கு.. அத ஒளுங்கா செய்யி போதும்.’ என்று தன்னை அடிக்கடி மட்டந்தட்டிய ராசேந்திரனை பழிவாங்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம்..

போதும்.. அடங்கி போய் அவமானப்பட்டதும் அவன் திருந்தி வருவான், திருந்தி வருவான்னு காத்துக்கிடந்தது போதும்.. அப்பா சொல்றதுதான் சரி.. ஆரம்பத்துல கண்ண கட்டி காட்டுல விட்டது போல இருக்கும்னாலும் செல்வம் இருக்கான்.. சமாளிச்சிரலாம்.. சமாளிக்கணும்..

ராசம்மாள் மனதில் உறுதியுடன் தன் தந்தையைப் பார்த்தாள், ‘சரிப்பா.. எனக்கு சம்மதம். நா ஒங்களோட சென்னைக்கு வர ரெடி.. அத்தோட ராசேந்திரனுக்கு டைவோர்ஸ் நோட்டீசும் நாளைக்கே செர்வ் பண்ணிரணும்..’

தன்னுடைய நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயங்குவாள் என நினைத்திருந்த நாடார் தன்னுடைய மகள் இத்தனை எளிதாக ஒத்துக்கொள்வாள் என்று எதிர்பார்க்கவில்லை. அத்துடன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பவும் அவள் தயாராவாள் என்று கனவிலும் நினைத்திராத நாடார் வியப்புடன் தன் மகளைப் பார்த்தார்.

‘என்னடே சொல்ற? நல்லா யோசிச்சிட்டே இல்லே..?’

ராசாம்மாள் எழுந்து தன் தாயின் கைகளைப் பற்றினாள். ‘என்னம்மா சொல்றீய? என்னடா இவ இப்படி சொல்றாளேன்னு நின¨க்கிறியளா? ஆமாம்மா... எத்தன நாளைக்கித்தான் இங்கயே அடஞ்சிக்கிடந்து அழுதுக்கிட்டுருக்கறது.. அவர எத்தன தரம் ஃபோன்ல கூப்ட்டிருப்பேன்.. ஒரு தடவ.. ஒரேயொரு ஒரு தடவ என்னெ மன்னிச்சிரு ராசம்மா.. நீ இல்லாம என்னால முடியலடின்னு ஒரு வார்த்த..? சொல்லலையேம்மா.. அப்புறம் நா மட்டும் எதுக்கு அவர நெனச்சிக்கிட்டு இருக்கணும்..?’

ராசாத்தியம்மாள் அப்போதும் விளங்காமல் தன் மகளையும் கணவரையும் பார்த்தாள். ‘ஏட்டி.. ஒங்கப்பாருதான் பித்துப்பிடிச்சி பேசறார்னா நீயுமா?  மாப்பிள்ளைய பிசினஸ்லருந்து களட்டி விடறாமாதிரியாட்டி கல்யாணத்துலருந்து களட்டி விட்டுற முடியுமாடி? ஒங்கப்பாரு சொல்றாருன்னு கண்ண மூடிக்கிட்டு கெணத்துல விளுந்துராத.. நான் போயி சம்மந்தியம்மா கிட்ட பேசறம்லே.. மாப்பிள்ள அவிய அம்மா சொன்னா கேப்பாராருக்கும்..’

‘ஏய்.. அவ என்ன ஒன்ன மாதிரி படிக்காத தற்குறியாய்யே.. புருசங்காரன் என்ன அக்கிரமம் செஞ்சாலும் பொறுத்து போறதுக்கு..? ஆமா சம்மந்தியம்மாங்கறயே அவ யாருடி? நாம் பார்த்து முடிச்சி வச்சவதான..? அவகிட்ட நீ போயி மடியேந்தி நிக்கணுமாக்கும்? தராதரம் தெரியாதவன் பொஞ்சாதிக்கு மட்டும் தெரிஞ்சிருமாக்கும்..? இங்க பார்.. நீயும் மூட்டய கட்டிக்கிட்டு எங்க கூட ஊர் வந்து சேர்.. ராசம்மா கம்பெனிக்கி போயிட்டா புள்ளய பாத்துக்க ஆள் வேணுமில்லே.. இல்ல வரப்பிடிக்கலையா, வாய மூடிக்கிட்டு இங்கனயே விளுந்து கிட..’ என்று இரைந்த நாடார் தன் மகளின் தலையை பாசத்துடன் தடவிக் கொடுத்தார். ‘இங்க பார்டே.. நீ இப்ப எடுத்த முடிவு சரியான முடிவு.. அப்பா கொஞ்சம் தூக்கம் போடப்போறேன்.. சாயந்திரம் எட்டு மணிக்குள்ள புறப்படணும்.. நீ போயி எடுக்க வேண்டியதெல்லாம் எடுத்துக்க..’ என்றவாறு தன் அறையை நோக்கி நடந்தார்.

‘எக்கேடோ கெட்டுப் போங்க.. நா மாத்தரம் இங்க இருந்து என்னத்த பண்றது..? பூதம் காத்தமாதிரி இந்தா பெரிய வீட்டுல நா ஒருத்தி மட்டும் இருக்கவா.. நா ஒங்கூடவே வரேன் தாயி..’ என்ற தாயை கட்டிப் பிடித்துக்கொண்டு, ‘தாங்ஸ்மா’ என்று கண் கலங்கினாள் ராசம்மாள்..

தொடரும்..

No comments: