24.5.06

சூரியன் 83

‘எத்தனை பெரிய பிரச்சினையானாலும் உன்ன சுத்தி இருக்கறவங்களோட ஹெல்ப் இருந்தா ஈசியா சமாளிச்சிரலாம். You can’t do everything on your own. அத நீ புரிஞ்சிக்கிட்டா போறும்.’

அன்று காலை புவனாவின் தந்தை தனபால் சாமி கூறிய  அறிவுரையை நினைத்துப் பார்த்தாள் ரம்யா.

உண்மைதான். இத புரிஞ்சிக்காமத்தான் அவசரப்பட்டு யாரும் தேவையில்லைன்னு நினைச்சி வீட்ட விட்டு வெளியே போனேன். கடைசியில என்ன நடந்தது? வீட்டு விஷயம் வெளிய தெரிஞ்சி அவமானப்பட்டதுதான் மிச்சம்.

எனக்கு மட்டுமா? பாவம் அம்மா. அப்பாக்கிட்ட மாட்டிக்கிட்டு ரெண்டு நாளா என்ன அவஸ்தைப் பட்டாங்களோ. அப்பாவ பார்த்தாலும் பாவமாத்தான் இருந்துது. அவர் ஹால்ல ஒக்காந்து தனபால் சாமி அங்கிளோட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம அவஸ்தைப் பட்டதத்தான் பாத்தமே..

அப்பா நமக்கு தெரியாம என்னமோ செஞ்சிருக்கார் போல. அதான்
அந்த அங்கிள் துருவி, துருவி கேட்டதும் எழுந்து ரூமுக்கு போய்ட்டார். கீழ எறங்கி வந்தப்பவும் அப்பா மூஞ்சில களையே இல்லையே.. என்ன பிரச்சினை? என்னாலதானா?

நானாவது அப்பா கோபப்பட்டப்போ பேசாம இருந்திருக்கலாம். தப்பே என் பேர்ல வச்சிக்கிட்டு எல்லார் மேலயும் கோபப்பட்டு என்ன பிரயோசனம்?

அப்பா சொன்னா மாதிரி இது சங்கர் வீட்டுக்கு தெரிஞ்சிருந்தா எவ்வளவு பிரச்சினையாயிருக்கும்? ஏந்தான் என் புத்தி அப்படி போச்சிதோ..

அறைக்கதவு தட்டப்படும் ஓசை கேட்கவே வாரிச் சுருட்டிக்கொண்டு  எழுந்தாள் . ‘ரம்யா, நாந்தான் அப்பா.. கதவ திற..’

பரபரப்புடன் எழுந்து துப்பட்டாவை போட்டுக்கொண்டு கதவைத் திறந்தாள். எதிரே நின்ற தன் தந்தையையும் தாயையும் பார்த்தாள். ‘என்னப்பா?’

‘உங்கிட்ட அப்பா கோவிச்சிக்கிட்டதுதான் தப்புதான் ரம்யா..’

தன் தந்தையின் முகத்தில் கடுகடுப்பையும், குரலில் எரிச்சலையுமே கண்டிருந்த ரம்யாவுக்கு அவருடைய முகத்திலிருந்த குற்ற உணர்வையும், குரலில் இருந்த பாசத்தையும் கண்டதும் நிலைகுலைந்து போனாள். திரும்பி ஓடிப்போய் கட்டிலில் அமர்ந்துக்கொண்டாள்.அவளையுமறியாமல் கண்கள் கலங்கி லேசாக விசும்ப ஆரம்பித்தாள்.

இதை எதிர்பார்க்காத சுசீந்தரா தன்னுடைய கணவனைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்து தன் மகளருகில் சென்றமர்ந்தாள். ‘ஏய் ரம்யா.. எதுக்கு அழறே..? அப்பாவும் நானும் மனம்விட்டு உங்கிட்ட பேசணும்னுதான் வந்திருக்கோம். கண்ண துடச்சிக்கிட்டு உம் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு. பேசி ஒரு முடிவுக்கு வருவோம். நாங்க பார்த்த மாப்பிள்ளைய பிடிக்கலையா சொல்லு.. நிச்சயம் ஆனாலும் பரவாயில்லைன்னு நிறுத்திரலாம்.’

பாபு சுரேஷ் தன் மனைவியை வியப்புடன் பார்த்தார். அட! இவளுக்கு இப்படியெல்லாம் கூட பேச வருதே.. நாந்தான் இவங்க ரெண்டு பேரோட அருமையையும் புரிஞ்சிக்காமயே இருந்துட்டேன் போலருக்கு..

ரம்யாவின் அறைக்குள் நுழைந்த பாபு அப்போதுதான் முதல் முறையாக அறைக்குள் நுழைந்தவரைப் போல அறையைச் சுற்றிலும் நோட்டம் விட்டார்.

உண்மையிலேயே கடந்த ஐந்தாறு வருடங்களில் இப்போதுதான் அந்த அறைக்குள் முதல் முறையாக நுழைகிறார் என்பதை அவரே உணர்ந்து ஒரு குற்ற உணர்வு மேலிட, ‘ரம்யா.. சும்மா சொல்லக்கூடாது.. ரொம்ப அழகா வச்சிருக்கே உன் ரூமை..’ என்றார் தன் மகளைப் பார்த்து.

ரம்யாவும் சுசீந்தராவும் வியப்பு மேலிட ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பிறகு என்ன தோன்றியதோ குபீரென்று இருவரும் சிரிக்க பாபு சுரேஷ் விஷயம் புரியாமல் அவர்களையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டு நின்றார். பிறகு அவரும் சிரிப்பில் கலந்துக்கொள்ள சட்டென்று அந்த அறைக்குள் சந்தோஷம் பரவி மூவர் மனதையும் லேசாக்கியது.

சிரிப்பினூடே பொங்கி வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு ரம்யா தன் தந்தையைப் பார்த்தாள். ‘I am really sorryப்பா. வேணும்னு ப்ளான் பண்ணி செய்யலை.. ஏதோ ஒங்கள பனிஷ் பண்றதா நினைச்சிக்கிட்டு இப்படியொரு முட்டாள்தனமான காரியத்த செஞ்சிட்டேன்.. என்னெ மன்னிச்சிருங்க டாட்.’

அவளுடைய குரலில் இருந்த உண்மையான குற்ற உணர்வை புரிந்துக்கொண்ட பாபு அவளருகில் சென்று அமர்ந்தார். ‘இல்ல ரம்யா.. நாந்தான் உங்கிட்டயும் உங்கம்மாக்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கணும்.. தினம் பத்து மணி நேரம் பாக்கற வேலையில நா காட்டுன அக்கறைய மீதி பதினாலு மணி நேரம் வாழ வேண்டிய வாழ்க்கைய மறந்துபோனேன்னு நினைக்கறப்போ நா எவ்வளவு பெரிய ஃபூலாருந்திருக்கேன்.. I have been an idiot to ignore my family.. I am sorryடா..’

ரம்யா புன்னகையுடன் தன் தாயைப் பார்த்தாள். சுசீந்தராவோ இந்த மனுஷனெ எந்த அளவுக்கு நம்பலாம்னு தெரியலையே.. என்ற குழப்பத்தில் மவுனமாக இருந்தாள்..

பாபு தன் மகளையும் மனைவியையும் பார்த்தார். ரம்யாவை தேடுவதற்கு சேதுமாதவனின் உதவியை நாடியதும் அவர் அனுப்பிய ஆட்கள் போலீசிடம் சிக்கிக்கொண்டதையும் இவர்களிடம் இனியும் மறைப்பது சரிதானா என்று நினைத்தார்.  அந்த புவனா வழியாகவோ அல்லது தனபால் சாமி வழியாகவோ தெரிவதைவிட நாமே இவர்களிடம் கூறிவிடுவதுதான் நல்லது என்று நினைத்து ‘அப்பா இன்னொரு முட்டாள்தனமும் பண்ணிருக்கேன் ரம்யா. அத உங்கிட்ட சொல்லிரணும்னுதான் உன் ரூமுக்கு வந்தேன்.’

ரம்யா அதிர்ச்சியுடன் தன் தந்தையைப் பார்த்தாள். ‘என்னப்பா சொல்றீங்க?’

பாபு சுரேஷ் அன்று காலையில் தான் சேதுமாதவனை தொடர்புகொண்டதிலிருந்து தனபால்சாமி இதுகுறித்து தன்னை  துளைத்தெடுத்ததுவரை ஒன்றுவிடாமல் கூறிமுடித்தார்.

தன்னுடைய மனதிலிருந்த பாரத்தை இறக்கிவைத்துவிட்ட நிம்மதியில் இனி தன்னை தன் மகளோ என்ன குறை கூறினாலும் பொறுமையுடன் கேட்பதற்கு தயாராக தலை குனிந்து காத்திருந்தார்.

அவருடைய பேச்சின் துவக்கத்தில் பொங்கி வந்த கோபம் அவர் கூறி முடித்தபோது தன் மனதிலிருந்து அடியோடு மறைந்துபோயிருந்ததை உணர்ந்த ரம்யா தன்னுடைய தந்தையின் அருகில் நகர்ந்து அவருடைய தோளில் கைவைத்தாள்.

‘நீங்க செஞ்சது சரியோ தப்போ, ஆனா என் அப்பாங்கற  ஸ்தானத்திலிருந்து இத நீங்க செஞ்சீங்கன்னு நினைக்கும்போது தப்பா தோனலைப்பா. அதுவுமில்லாம நீங்க செஞ்சதுக்கு மூல காரணமே நாந்தானேப்பா.. நா மட்டும் இந்த முட்டாத்தனமான காரியத்த செய்யலேன்னா.. போயும் போயும் ஒங்களுக்கு சுத்தமா புடிக்காத அந்த ஆள்கிட்ட போயி உதவி கேட்டிருப்பீங்களா?’

சே.. என்ன மனுஷன் இவர்.. சொந்த பொண்ண கண்டுபிடிச்சி குடுங்கன்னு ஆஃபீஸ்லருக்கற ஒருத்தர்கிட்ட போய் கேட்டு அந்தாள் அனுப்பின அடியாள்ங்கக் கிட்ட வயசுக்கு வந்த, கல்யாணம் பேசி முடிச்சப் பொண்ணோட ஃபோட்டோவ கொடுத்து தேடச்சொல்லி.. அந்த பயல்க போலீஸ்ல மாட்டி.. இதுமட்டும் பேப்பர்ல, கீப்பர்ல வந்திருந்தா என்னாவறது?

ரம்யா என்னடான்னா அதையெல்லாம் மறந்துட்டு அப்பன் தோள்ல கைய்ய போட்டுக்கிட்டு உருகுறா? நல்ல பொண்ணு, நல்ல அப்பன்.. ஏதோ இந்த மட்டுக்கும் சொன்னாரே..

‘என்ன சுசீ.. நீ ஒன்னுமே சொல்ல மாட்டேங்குறே..?’ என்ற கணவரை எரிச்சலுடன் பார்த்தாள். ‘நா என்னத்த சொல்றது.. அதான் நீங்களே முட்டாள்தனமும்னு ஒத்துக்கிட்டீங்களே..’என்றாள். ‘சரிங்க.. நீங்க செஞ்சிட்டீங்க. ஆனா இது மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க காதுல விழுந்தா என்னாவறதுன்னு ஒரு நிமிஷம் யோசிச்சி பாத்தீங்களா?’

பாபு சுரேஷ் தன் மனைவியைப் பார்த்தார். ‘நீ சொல்றது சரிதான் சுசீ. ஆனா இதையெல்லாம் யோசிச்சி பாக்கற மனநிலையில நா அப்ப இல்லடி.. நாந்தான் ஒரு மூர்க்கனா இருந்தேனே..’

ஆமா.. இருபத்திநாலு மணி நேரத்துல மாறிட்டீங்களாக்கும். இதுக்கு பின்னால என்ன மாயம் இருக்கோ யார் கண்டா.. ஒங்கக் கூட இருபத்தஞ்சு வருஷமா குடும்பம் நடத்தியிருக்கேனே.. அப்பல்லாம் மாறாத நீங்களா இப்ப மாறப்போறீங்க.. பார்ப்போம்.. இந்த குணம் எத்தனை நாளைக்குன்னு..

‘நீ மனசுக்குள்ள நினைக்கறது புரியுது சுசீ.’ என்ற தன் கணவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சுசீந்தரா.

‘என்ன சொல்றீங்க?’

‘என்னடா இவன்.. திடீர்னு நல்லவனாயிட்டா மாதிரி தெரியுதே.. இது நிஜந்தானா..? இல்லே இதுக்கு பின்னால ஏதாவது விஷயம் இருக்கான்னுதானே யோசிக்கறே?’

சுசீந்தரா பதில் பேச வாய் வராமல் தன் கணவனையே பார்த்தாள்.

ரம்யா குறுக்கிட்டு, ‘சேச்சே இல்லப்பா.. அம்மாவுக்கு அப்படியெல்லாம் கூட நினைக்க தெரியாதுப்பா.. என்னம்மா, நா சொல்றது சரிதானே..’ என்றாள் புன்னகையுடன்..

‘ஆமாமா.. எனக்கு அப்படியெல்லாம் கூட நினைக்கத் தைரியம் இருக்கா என்ன? நில்லுன்னா நிக்கணும்.. ஒக்கார்னா ஒக்காரணும்.. அதத்தான இந்த வீட்டுல இத்தன வருஷமா செஞ்சிக்கிட்டிருக்கேன்.. ஒங்கப்பா இப்ப திருந்திட்டேன்னு சொல்றார்.. சரின்னு நம்பிக்கறேன்.. நாளைக்கே பழயைபடி வேதாளம் மாதிரி முருங்க மரத்துல ஏறுவேம்பார்.. அதுக்கும் சரிங்கன்னு ஆமாம் போடணும்..’ சலிப்புடன் பேசிய சுசீந்தராவிடம் நகர்ந்து அவளுடைய கரங்களைப் பற்றினாள் ரம்யா..

‘என்னம்மா நீ.. அப்பாவே இறங்கி வந்து மன்னிப்பு கேக்கறப்போ பெருந்தன்மையா சரின்னு ஏத்துக்கிட்டு சந்தோஷமா இருக்கறத விட்டுட்டு நீ பழையபடி வீம்பு பண்ணா என்ன அர்த்தம்..? போறும்மா.. சின்ன வயசிலருந்து இந்த அம்மாவும் அப்பாவும் எப்பத்தான் சிரிச்சி பேசுவாங்களோன்னு ஏங்கிக்கிட்டிருக்கற என்னெ இனியும் ஏமாத்தாம திருந்தும்மா.. திருந்திட்டேன்னு சொல்ற அப்பாவ சந்தேகப்படாம ஏத்துக்கப் பார்.. இல்லேன்னா இந்த கல்யாணமும் வேணாம்.. ஒன்னும் வேணாம்.. நா எங்கயாவது ஹாஸ்டல பாத்துக்கிட்டு போறேன்..’ என்றாள் ரம்யா..

பதறிப்போன சுசீந்தரா.. ‘ஏய், ஏய்.. என்னைய சொல்லிட்டு நீ மறுபடியும் முருங்க மரத்துல ஏறிக்காத.. இப்ப என்ன? ஒங்கப்பா திருந்திட்டார்.. அவ்வளவுதானே.. சரி.. அவர் திருந்திட்டார்.. நானும் திருந்தணும்.. வீட்டுல சண்டை சச்சரவுன்னு ஒன்னும் இருக்கக்கூடாது.. அதானே.. சரி.. நா ஒத்துக்கறேன்.. இனிமே என்னால இந்த வீட்டுல சண்டையே வராது.. சரியா..?’ என்று ரம்யாவின் வலது கைமேல் தன் கையை வைத்து.. ‘ப்ராமிஸ்..’ என்று புன்னகைக்க ரம்யா சிரிப்புடன்.. ‘ப்ராமிஸ்’ என்றாள் பதிலுக்கு..

பிறகு திரும்பி தன் தந்தையை நோக்கி தன்னுடைய இடது கரத்தை நீட்டினாள். ‘நீங்க என்ன சொல்றீங்கப்பா?’ என்றாள்  ‘No more arguments.. No more fights.. என்ன சரியா?’

பாபு சுரேஷ் கலங்கி நின்ற தன் கண்களை துடைத்துக்கொண்டு.. ‘Yes I agree.. No more fights!’ என்றார் புன்னகையுடன்.

பிறகு எழுந்து நின்று.. ‘ நாளைலருந்து அப்பா ஒரு வாரத்துக்கு லீவு போட்டுரலாம்னு பாக்கேன்.. பதினோரு மணி போல மூனு பேருமா ஷாப்பிங் போலாம்.. மாப்பிள்ளைக்கு சூட் எடுக்கணும்.. அவரும் அவரோட தங்கையும் நம்ம கூட வரேன்னு சொல்லியிருக்காங்க. அம்மாவும் பொண்ணுமா டிஸ்கஸ் பண்ணி என்னென்ன வேணும்னு ஒரு லிஸ்ட் போட்டு வைங்க.. ஏய் சுசீ பசிக்குது. ஏதாச்சும் செஞ்சிருக்கியா’  என்றவாறு வெளியேற..

'நீங்க போய் டைனிங் டேபிள்ல ஒக்காருங்க. நா இவள கூட்டிக்கிட்டு வரேன்.' என்ற சுசீந்தரா.. ‘என்னாச்சிடி ஒங்கப்பாவுக்கு.. என்னால இன்னும் நம்ப முடியலைடி..’ என்றாள் சிரிப்புடன்.

தொடரும்..




4 comments:

G.Ragavan said...

ம்ம்ம்...இந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் எப்பவும் நிலைக்கனும் ஆண்டவா...இவங்களுக்கும் ஒரு நல்ல வாழ்வைக் குடு.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

இந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் எப்பவும் நிலைக்கனும்//

அதத்தான் நானும் விரும்பறேன்..

siva gnanamji(#18100882083107547329) said...

இந்த நிம்மதியும் மகிழ்ச்சியும்
எப்பவும் நிலைக்கட்டும்.....
சுசித்ரா திசை திருப்பாமல் இருக்க
வேண்டும்....

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

இவ்வளவு நேரம் நெட் கனெக்ஷன கிடைக்காம படாத பாடாயிருச்சி..

சுசித்ரா திசை திருப்பாமல் இருக்க
வேண்டும்.... //

தன் மகள் திருமணத்தை நினைத்தாவது திசை திரும்பமாட்டாள் என்று நம்பலாம்.