5.5.06

சூரியன் 71

பிறகு அவருடைய மனம் மாறுவதற்குள் அங்கிருந்து அகல வேண்டும் என்ற முடிவுடன் மாதவன் மற்றும் அவருடை மனைவி, மகளுடன் விடைபெற்றுக்கொண்டு தங்களுடைய வாகனத்தை நோக்கி விரைந்தனர்..

வாகனம் விமான நிலையத்தைவிட்டு வெளியேறி சுந்தரலிங்கத்தின் குடியிருப்பை நோக்கி வேகமெடுத்தது. வாகனத்தின் ஓட்டுனர் வங்கி ஊழியர் என்பதால் சற்று முன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி பேசாமல் இருவரும் மவுனமாக பயணம் செய்தனர்.

வாகனம் சுந்தரலிங்கத்தின் குடியிருப்பை நெருங்கியதும் அவர், ‘பிலிப் நீங்க இந்த வண்டிய எடுத்துக்கிட்டு போயிருங்க. எனக்கு எல்லா முதல் ஞாயிற்றுக்கிழமையும் அஷ்ட லக்ஷ்மி கோவிலுக்கு போற பழக்கம் இருக்கு.. குளிச்சிட்டு புறப்படத்தான் டைம் இருக்கும்னு நினைக்கிறேன். நான் வீட்டுக்கு திரும்புனதும் ராத்திர எந்நேரமானாலும் உங்கள கூப்பிடறேன். நாளைக்கு நாம சேர்மன மீட் பண்றப்போ என்ன பேசணுங்கறதப்பத்தி பேசணும்.. என்ன சொல்றீங்க?’ என்றார்.

பிலிப் சுந்தரம் சரி என்று தலையை அசைத்தார். பிறகு சுந்தரலிங்கம் இறங்கி சென்றதும், ‘நேரா நம்ம ஃப்ளாட்டுக்கு போங்க.’ என்றார் ஓட்டுனரிடம்.

இன்று விமானதளத்தில் நடந்தது தெரியவரும்போது சேதுமாதவன் எப்படி ரியாக்ட் செய்வார் என்ற கவலை அவரை தொற்றிக்கொண்டது.

அவர் இந்த வங்கியில் பணிக்கு சேர்வதற்கு முன் சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வந்த அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் துணை பொது மேலாளராக பணியாற்றி வந்தார். தன்னுடைய நேர்மைக்கும், திறமைக்கும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற அங்கலாய்ப்பு அவருக்கு இருந்தது.. ஆகையால் சரியானதொரு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்.

அவர் மேலாளராக இருந்த கிளையில்தான் சிலுவை மாணிக்கம் நாடாருடைய உணவகத்தின் கடன் கணக்கு இருந்தது. அவருடைய அசுர வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க அவருக்கு தேவைப்பட்ட சமயங்களில் எல்லாம் எவ்வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் அவருடைய தேவைகளை சரியாக கணித்து தன்னுடைய தலைமையக அதிகாரிகளிடம் பரிந்துரைத்து உதவி செய்தார்.

அவருடைய நேர்மையும், பணிவும், அயரா உழைப்பும் நாடாருடைய கவனத்தை ஈர்த்தது. கிறிஸ்த்துவ அதிகாரியான அவரை அவர் பணிபுரிந்த வங்கி சரிவர அங்கீகரிக்கவில்லை என்பதை குறிப்பாலுணர்ந்த நாடார் தான் இயக்குனராகவிருந்த வங்கியில் பொது மேலாளர் பதவிக்கு ஆட்கள் தேவைப்பட்ட நேரத்தில், ‘எங்க பேங்க்ல ஜி.எம் போஸ்ட்டுக்கு ட்கள் எடுக்கறதா இருக்கோம் சுந்தரம்.. அப்ளை பண்ணுங்களேன்..’ என்றார்.

சரி போட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து அனுப்பி வைத்தார்.. அவரையும் சேர்த்து இறுதி நேர்காணலுக்கு காத்திருந்தவர்களுள் ஒருவர் சுந்தரலிங்கம். அவர் மும்பையில் தலைமையகத்தைக் கொண்டிருந்த ஒரு தனியார் வங்கியில் பிலிப்பைப் போலவே துணைப் பொது மேலாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார். ஆனால் பிலிப் சுந்தரத்தைவிட அதிகம் படித்தவர். அவரையும் விட ஒரு வயது மூத்தவர்.

நேர்காணலின் முடிவில் இருவருக்குமே பொது மேலாளர் பதவி கிடைத்தது.

ஆனால் சுந்தரலிங்கம் அவரைவிடவும் அதிகம் படித்திருந்ததுடன் மும்பை, தில்லி, கொல்கொத்தா போன்ற பெருநகரங்களில் பணியாற்றிய அனுபவம் இருக்கவே அவர் பிலிப்  சி.ஜி. எம் பதவி உயர்வு பெறுவதற்கு ஒரு வருடம் முன்பே சி.ஜி.எம் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

இருப்பினும் ஒரே காலக்கட்டத்தில் வங்கியில் நுழைந்தவர்கள் என்ற நட்பு அவர்களிடையே கடந்த பத்தாண்டு காலமாக இருந்து வருகிறது. முந்தைய சேர்மன் இருந்த சமயத்தில் இவர்கள் இருவரையும் கலந்தாலோசிக்காமல் அவர் எந்த முடிவும் எடுத்ததில்லை. சேதுமாதவனின் இடையூறுகள் இருந்தபோதிலும் பிலிப் சுந்தரமும் சுந்தரலிங்கமும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துக்கொண்டிருந்ததால் அவர்களுக்கிடையில் இன்றுவரை எந்த ஒரு மனத்தாங்கலும் ஏற்பட்டதேயில்லை.

இனியும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற தன்னுடைய முடிவில் உறுதியாய் இருந்தார். ஆனால் இன்றைய நிகழ்ச்சி அவருடயை மனதில் லேசான சலனத்தை ஏற்படுத்தியிருந்தது. புதிய சேர்மனுக்கும் சேதுமாதவனுக்கும் இடையில் மனக்கசப்பு இருந்ததை அரசல் புரசலாக அறிந்துதான் வைத்திருந்தார்.

இருப்பினும் அது ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வதில் விருப்பமில்லாத அளவுக்கு இருக்கும் என்று அவரும் சுந்தரலிங்கமும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன்னைப் புறக்கணித்துவிட்டு பிலிப் மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோர் அளித்த வரவேற்பை சேர்மன் பெற்றுக்கொண்டார் என்று சேதுமாதவன் அறியவரும் நேரத்தில் நிச்சயம் இது ஒரு பிரச்சினையாக வெடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்று நினைத்தார் பிலிப்.

அத்துடன் இவ்விஷயம் தெரியவந்தால் சிலுவை மாணிக்கம் நாடார் எப்படி ரியாக்ட் செய்வார் என்றும் யோசித்தார். ஏற்கனவே மாதவனை நான்கு வருடங்களுக்கு சேர்மனாக நியமித்ததை தான் தலையிட்டு ஒன்றும் செய்யவில்லை என்பதில் தன் மீது கோபமாய் இருக்கிறார் என்பதும் தெரியும். நாளை, மறுநாள் இன்றைய விஷயமும் தெரியவந்தால் என்ன ஆகுமோ என்று நினைத்தார்.

‘சார் நா ஒங்கள இறக்கிட்டு போயிரட்டுமா, இல்ல நிக்கணுமா?’ என்ற ஓட்டுனரின் குரல் கேட்டு நினைவுகள் கலைந்த பிலிப், ‘நீங்க ஆஃபீஸ்ல கொண்டு வண்டிய விட்டுட்டு போயிருங்க. நாளைக்கு காலைல கொஞ்சம் சீக்கிரமா வரணும்.. நம்ம புது சேர்மன் வர்ற நாளாச்சே.’ என்றவாறு இறங்கி தன்னுடைய குடியிருப்பை நோக்கி நடந்தார்.

***

‘ஏன்னா இது நாம பாக்கப்போற பொண்ணாட்டம் இல்லை? என்னன்னா இது கண்றாவி?’ என்றாள் மாப்பிள்ளையின் தாய்!

வாகனத்திலிருந்த அனைவருடைய பார்வையும் சீனி மற்றும் மைதிலியை நோக்கி திரும்ப மாப்பிள்ளை, ‘என்னம்மா நீ.. கண்றாவி, கிண்றாவின்னுட்டு அந்த பையன பாரு, கால்ல கட்டு போட்டிருக்கான். யாரா இருந்தா நமக்கென்ன? அவனால நடக்க முடியலையோ என்னவோ.. அதனாலதான் தாங்கி பிடிச்சி கூட்டிக்கிட்டு போறாளோ என்னவோ? நோக்கு எல்லாமே தப்பாத்தான் தெரியும். மாமா வண்டிய எடுங்கோ..’ என்றான்.

‘ஏண்டா கோபு நோக்கு வேணா இதெல்லாம் சாதாரணமா இருக்கலாம்டா.. நாங்க பையன பெத்தவா.. கண் மண் தெரியாம கழனி பானையில போய் தலைய விட்டுட்டாப்பல ஆயிரக்கூடாதோன்னா.. அதான்.. நாலையும் யோசிச்சி செய்ய வேண்டியதாயிருக்கு.. என்ன வைஷ¤ சொல்றே?’ என்றார் மாப்பிளையின் தந்தை நாராயணன் சாஸ்திரிகள்..

வைஷ¤ என்ற வைசாலி, ‘அதானே.. இவனுக்கென்ன? நாளைக்கு என்னடி வைஷ¤ இந்த மாதிரி பொண்ணையா நம்மாத்துக்கு மாட்டுப் பொண்ணா கொண்டாந்தேன்னு ஒங்கம்மா நொடிச்சிக்கிட்டா நா என்னத்த பண்றது? ஏன்னா இப்படியே ஆத்துக்கு திரும்பி போய்ட்டா.. இனியும் போய் பொண்ண பாக்கணுமா என்ன?’ என்றாள் தன் கணவரைப் பார்த்து.

வாகன ஓட்டுனர் திரும்பி தன் தமக்கையைப் பார்த்தார். ‘ஏங்க்கா என்ன நீ.. ஒரு நிமிஷம் அந்த பொண்ண பார்த்துட்டு நீயும் அத்திம்பேரும் என்னவோ அந்த பொண்ணு அந்த பையனோட ஓடிப்போய்ட்டா மாதிரி பேசிண்டிருக்கேள்? அவா ஆத்துக்கு போவோம்.. பொண்ண பார்ப்போம்.. சாடை மாடையா இப்ப பார்த்தத பத்தி கேப்போம். உண்மைய சொல்லிட்டான்னா விகல்பம் இல்லாம பழகியிருக்கான்னு நினைச்சிப்போம். இல்லன்னா ஒன்னும் பேசாம எழுந்து வந்துருவோம். அத விட்டுட்டு இப்படியே சொல்லாம கொள்ளாம திரும்பிப் போனா நல்லாருக்குதுக்கா..’

அதுவும் சரிதான் என்று எல்லோருக்கும் தோன்றவே வாகனம் மைதிலியின் வீட்டை நோக்கி விரைந்தது..

****

‘எனக்கு இந்த வீடு ரொம்ப பிடிச்சிப் போச்சிங்க. நாம பம்பாய்ல இருந்த அளவுக்கு வசதிகள் இல்லன்னாலும் தற்சமயத்துக்கு இது தாராளமா போதும். நாலு பெட் ரூம் நமக்குன்னே சொல்லி கட்டுனா மாதிரி இருக்கு பாருங்க. அத்தோட இந்த லொக்காலிட்டி ரொம்ப பிடிச்சிருக்குங்க. காலைல கண் முளிச்சதும் நேரா பீச்.. சாயந்திரத்துல காலாற நடக்கறதுக்கு இந்த காலனிய சுத்தி இருக்கற தார் ரோடு.. அப்புறம் கூப்பிடற தூரத்துல அஷ்ட லக்ஷ்மி கோவில்..’

சரோஜா அடுக்கிக்கொண்டே போக மாதவனும் வத்ஸலாவும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தனர்.

சரோஜா எப்பவுமே இப்படித்தான் ஒன்னு புடிச்சி போச்சினாலும் புகழ்ந்து தள்ளிருவா.. அதுவே புடிக்காம போச்சின்னா திட்டி தீத்திருவா  என்று நினைத்தார் மாதவன்.

அவருக்கும் வீடு பிடித்துத்தான் இருந்தது. அதைவிட கண்ணுக்கெதிரே கடல் என்பது மிகவும் பிடித்தது.. ஒரு பீச் சேரை வாங்கிட்டா போறும்.. நடுராத்திரியிலயும் பீச்ல போட்டுக்கிட்டு ஒக்காந்திருக்கலாம்.. மும்பையில பரபரன்னு ஓடி மனசும் ஒடம்பும் களைச்சிப்போயிருக்கற இந்த நேரத்துல நாம எடுத்த இந்த முடிவு நல்லதுதான் போலருக்கு.

ஆனா இன்னைக்கி சாயந்திரம் எடுத்த ஒரு முட்டாள்தனமான முடிவால என்னென்ன பிரச்சினை வருமோன்னு நினைச்சாத்தான்.. I should attack and find a peaceful solution for this stupid decision tomorrow itself, before Sedhu finds out..

‘என்னங்க நா பேசிக்கிட்டே போறேன் நீங்க ஒன்னுமே சொல்லாம அங்க என்னத்த பார்த்துக்கிட்டிருக்கீங்க?’

மாதவன் திடுக்கிட்டு தன் மனைவியைப் பார்த்தார். ‘என்ன சரோ?’

சரோஜா சலிப்புடன் தன் மகளைப் பார்த்தார். ‘என்னாச்சிடி ஒங்கப்பாவுக்கு.. ஏய்.. ஒனக்காவது நான் சொன்னது காதுல விழுந்துதா?’

வத்ஸலா தன் தாயை நெருங்க கட்டியணைத்தாள். ‘அம்மா ஒனக்கு பிடிச்சிருந்தா எங்க எல்லாருக்குமே பிடிச்சா மாதிரித்தாம்மா. ஆனா எனக்கும் இந்த வீடு பிடிச்சிருக்கு. எனக்கும் சீனிக்கும் மேல பெட் ரூம்ஸ்.. ஒங்க ரெண்டு பேருக்கும் கீழ.. சின்னதா ஒரு டைனிங் ரூம்.. மும்பை மாதிரி படா பெரிசா இல்லாமல் அழகா ஒரு சின்ன விசிட்டர்ஸ் ரூம்.. வெளிய ஒக்காந்து பீச் காத்து வாங்கறது ஒரு சிட்டவுட்.. அதுமட்டுமில்லம்மா. வர்ற வழியிலதான் Chennai Theosophical Society போர்டை பார்த்தேன். நானும் போய் மெம்பராக முடியுமான்னு பாக்கப் போறேன்..’

மாதவன் வியப்புடன் மகளைப் பார்த்தார். ‘ஏய் தியாசொஃபி ப்ராக்டிஸ் பண்ற வயசா இது?’

வத்ஸலா சிரித்தாள். ‘இல்லப்பா.. அந்த சொசைட்டியோட கேர் ஆஃப்ல நிறைய ப்ராஜெக்ட்ஸ் இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. அதான்..’

‘அப்ப சரி.. என்ன சரோ.. இங்கேயே இருந்துரலாமா? பேங்க்ல சொன்னா ரெண்டுநாள்ல நமக்கு தேவையான ஃபர்னிச்சர்ஸ் வந்துரும்.. வேணும்னா நீயும் வத்சும் நாளைக்கு ஒரு ரவுண்ட் போய் செலக்ட் பண்ணிட்டு வந்திருங்க.. என்னோட அப்பாய்ண்ட்மெண்ட் டேர்ம்ஸ் பிரகாரம் ரெண்டு லட்சத்துக்கு ஃபர்னிச்சர்ஸ் வாங்கிக்கலாம். என்ன சொல்றீங்க?’

வத்ஸலா சலிப்புடன், ‘என்ன டாட். அதுல என்ன கிடைக்கும்?’ என்றாள்..

மாதவன் சிரித்தார். ‘மீதிக்குதான் க்ரெடிட் கார்ட் இருக்கே.. பே பண்ணிட்டு பில் வரும்போது கட்டிரலாம். என்ன? சரி.. இப்ப கிளம்பி ஹோட்டலுக்கு போமுடியாது. இன்னும் ஒரு ரெண்டு மணி
நேரத்த போக்கணும்.. என்ன சரோ ப்ளான்?’

சரோ பொய்யான கோபத்துடன் மாதவனைப் பார்த்தாள். ‘என்ன, அஷ்ட லக்ஷ்மி கோவிலுக்கு போ வேணாமா..? அங்க எப்படியும் ஒரு அரை மணி நேரம் போயிரும். அப்படியே பீச்ல போயி கொஞ்ச நேரம் ஒக்காந்திருக்கலாம். எட்டு எட்டரை மணிக்கு கிளம்புனா போய் சேர்றதுக்கு சரியாயிருக்கும்.. என்ன சரியா?’

‘அம்மா சொன்னா அப்பீல் ஏது.. என்னப்பா?’ என்று வத்ஸலா சிரிக்க சரோ, மாதவன் இருவரும் சேர்ந்து சிரித்தனர்.

தொடரும்..


3 comments:

G.Ragavan said...

அஷ்டலட்சுமி கோயில் பக்கத்துல வீடா....ரொம்ப நல்ல ஏரியா அது. காத்துக்குக் காத்தும் ஆச்சு. ரோடும் ரொம்ப நல்லாயிருக்கும். அமைதியான ஏரியா.

பொண்ண ரோட்டுல பாத்ததுமே ஒரு முடிவுக்கு வராம இப்படிப் பேசிப் பாக்கனும்னு நெனைக்கிறது நல்லதுதான்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

பொண்ண ரோட்டுல பாத்ததுமே ஒரு முடிவுக்கு வராம இப்படிப் பேசிப் பாக்கனும்னு நெனைக்கிறது நல்லதுதான். //

கரெக்ட்..

siva gnanamji(#18100882083107547329) said...

driving seydhu kondirundhavarai
paaraattanum