17.5.06

சூரியன் 78

வீடு வந்துவிட்டது. வாகனத்தின் கதவில் கைவைத்தவாறு தன்னுடைய மகனைத் திரும்பிப்பார்த்தார். ‘Divorce her.’ என்று கூறிவிட்டு கதவைத் திறந்துக்கொண்டு இறங்கி திரும்பிப் பார்க்காமல் வீட்டு வாசலை நோக்கி நடக்க.. திடுக்கிட்டுப்போய் என்ன செய்வதென புரியாமல் இருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தான் சந்தோஷ்..

பிறகு சுதாரித்துக்கொண்டு வாகனத்திலிருந்து இறங்கி தன் தந்தையின் பின்னால் ஒடினான்.

வீடு மாணிக்கவேலின் உறவினர்கள் மற்றும் ராணி வசித்திருந்த கன்னியர் மட சகோதரிகள், சந்தோஷின் மற்றும் கமலியின் நண்பர் குழுவினரால் நிறைந்து இருந்தது.

எங்கே இந்த நேரத்தில் அவனுடைய தந்தை ஏடாகூடமாக செய்துவிடுவாரோ என்ற பயத்தில் வீட்டு வாசலிலேயே அவரை தடுத்து நிறுத்தினான். ‘டாட் இப்ப ஏதும் பேசிராதீங்க, ப்ளீஸ்..’

மாணிக்கவேல் தன் மகனைத் திரும்பிப் பார்த்தார். சரி என்று தலையை அசைத்துவிட்டு வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த பித்தளை பாத்திரத்திலிருந்த தண்ணீரை எடுத்து முகம், கை, கால் கழுவிக்கொண்டு விருந்தினர் ஒருவர் நீட்டிய துவாலையில் துடைத்துக்கொண்டு சந்தோஷ் பின்தொடர வீட்டிற்குள் நுழைந்து நேரே தன்னுடைய படுக்கையறையை நோக்கி சென்றார்.

சந்தோஷ் சிறிது நேரம் அவர் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தன்னுடைய தாய் அமர்ந்திருந்த இடத்தை நோக்கினான். ராணியை சுற்றி கன்னியர்களும் உடன் வந்திருந்த பெண்களும் அமர்ந்திருக்க ராணி பித்துப்பிடித்தது போல் அமர்ந்திருப்பதைப் பார்த்தான்.

ஹாலின் வேறொரு மூலையில் அமர்ந்து தன்னையே பார்த்துக்கொண்டிருந்த தன்னுடைய நண்பர்களை நோக்கி சென்றான். அவன் தங்களை நோக்கி வருவதைப் பார்த்த நண்பர்கள் எழுந்து நிற்க அவர்களை கண்ணாலேயே சைகைக் காட்டி வெளியே அழைத்துச் சென்றான்.

‘இப்பவே ரொம்ப லேட்டாயிருச்சிடா. நீங்க வீட்டுக்கு போங்க. நா நாளைக்கு கூப்டறேன்.’ என்றவாறு அவர்கள் எல்லோரையும் அனுப்பி வைத்தான். அவர்களைத் தொடர்ந்து கமலியின் தோழிகளும் வெளியேறினர்.

சந்தோஷ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்து தன்னுடைய தாத்தாவின் அறையை ஜன்னல் வழியாக பார்த்தான். அவர் தூக்க மருந்தின் தாக்கத்தில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. அங்கிருந்து மாணிக்க வேலின் அறைக்குள் சென்றான். அவர் தன்னுடைய அறையிலிருந்த மேசையில் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருப்பது தெரிந்தது. என்னவென்று பார்க்க அவருடைய முதுகுக்கு பின்னால் சென்று நின்றான். ‘என்ன டாட் அது? ஏதோ லெட்டர் மாதிரி இருக்கு? யாருக்கு டாட்?’

மாணிக்க வேல் தான் எழுதி முடித்ததை மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு அவனிடம் நீட்டினார். ‘நீ படிச்சு பார்த்துட்டு  வெளியருக்கற மதர்கிட்ட கொண்டு கொடு.’ என்றார்.

சந்தோஷ் கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு அதிர்ச்சியுடன் தன் தந்தையை பார்த்தான். ‘என்ன டாட் நீங்க? இந்த மாதிரி லெட்டர பார்த்துட்டு மதர் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியலையே. இப்ப எதுக்கு டாட்..? ஒரு வாரம் பத்து நாள் போட்டுமே.’

இல்லை என்பதுபோல் தலையை அசைத்தார் மாணிக்கவேல். ‘நோ சந்தோஷ். She has to go.. இது ஒரு தாற்காலிக முடிவுதான். தற்போதைக்கு உங்கம்மா போயி கான்வெண்ட்ல இருக்கட்டும். அப்புறம் என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்.’

‘டாட்..’ என்று இடைமறித்து பேசவந்த சந்தோஷை கையை உயர்த்தி தடுத்தார், ‘தாத்தா எழுந்திருக்கறதுக்குள்ள அவ இங்கருந்து போயிரணும். மதர் ஏதாச்சும் சொன்னா நா பாத்துக்கறேன். வெளிய போய் இத அவங்க கிட்ட குடுக்கறதுக்கு ஒனக்கு தயக்கமாயிருந்தா அவங்கள நா கூப்டறேன்னு சொல்லி கூட்டிக்கிட்டு வா.’

சந்தோஷ¤க்கு அவர் இறுதியில் கூறிய யோசனை பிடித்திருக்கவே ஹாலில் தன்னுடைய தாய்க்கு அருகில் அமர்ந்திருந்த கன்னியர் மட தலைவியை, ‘மதர், அப்பா உங்கக்கிட்ட என்னவோ பேசணுமாம்.’ என்று அழைத்து வந்து கடிதத்தைக் கொடுத்தான்.

கடிதத்தை படித்து முடித்த கன்னியர் மடத்தலைவி ஒரு பெருமூச்சுடன் மேசைக்கு முன்னால் தலைகுனிந்து அமர்ந்திருந்த  மாணிக்க வேலை சோகத்துடன் பார்த்தார். இந்த சூழ்நிலையில் அவரிடம் பேசி எந்த பலனும் இருக்கப் போவதில்லை என்று நினைத்தார்.

கடிதத்தை மடித்து கையில் பிடித்துக்கொண்டு தன் எதிரில் கலங்கிய கண்களுடன் நின்ற சந்தோஷை தட்டிக்கொடுத்தாள், ‘ஓக்கே சந்தோஷ்.. கவலைப்படாதே. உங்கப்பா எடுத்த இந்த முடிவு ஏன் எதுக்குன்னு நா கேக்க போறதில்லை. இப்பவே உங்கம்மாவ என்னோட கூட்டிக்கிட்டு போறேன். சடங்கெல்லாம் முடியட்டும். பாக்கலாம்.’ என்றவாறு வெளியேற என்ன செய்வதென விளங்காமல் சிலைபோல் நின்றான் சந்தோஷ்.

*********

‘நீ நல்லா யோசிச்சிதான இந்த முடிவுக்கு வந்திருக்கே?’ என்ற தன்னுடைய தந்தையைப் பார்த்தாள் ராசம்மாள்.

அவள், அவளுடைய தந்தை மற்றும் தாய் மூவரும் பயணம் செய்த வாகனம் மதுரை எல்லையைக் கடந்து சென்னையை நோக்கி விரைந்துக்கொண்டிருந்தது. விடிந்தால் சென்னை. இன்னும் ஒரு வாரத்திற்குள் அலுவலகம், வீடு என அவளுடைய வாழ்க்கை பரபரப்பாகப் போகிறது.

இந்தியா முழுவதும், ஏன் உலகத்தின் பல பாகங்களிலும் கிளைகளுடன் பிரம்மாண்டமாக வளர்ந்து நின்ற அவளுடைய தந்தையின் நிறுவனத்தினுடைய நிர்வாக இயக்குனராக பதவியேற்கப் போகிறோம் என்ற நினைவே அவளுள் உறங்கிக்கிடந்த வைராக்கியத்தை தட்டியெழுப்பியது.

எத்தனை இரவுகள் தலையணை நனைய அழுதிருக்கிறாள்? அவமானத்தில், ஆத்திரத்தில்... ராசேந்திரனுடைய ஏளனப் பேச்சில் அவள் உள்ளும் நொறுங்காத நாளே இல்லை எனலாம். கையில் குழந்தை இருக்கிறதே என்ற ஒரேயொரு காரணத்திற்காக அவனுடைய அவமான, அசிங்கமான ஏச்சு, பேச்சுக்களை தாங்கிக்கொண்டிருந்தாள்.

ராசேந்திரன் அவளை அடிக்கவும் தயங்கியதில்லை. ஆனால் அவனுடைய கீழ்த்தரமான வார்த்தைகள் அவளை காயப்படுத்திய அளவுக்கு அவனுடைய அடிகள் காயப்படுத்தியதில்லை.

அவன் தன்னை நடத்திய விதத்தை தன் தந்தையிடம் கூறாமல் மறைத்திருக்கிறாள். அவருக்கு மட்டும் ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால் மருமகன் என்றும் பாராமல் அவனைக் கொலை செய்யவும் தயங்கியிருக்க மாட்டார் என்று நினைத்தாள்.

‘என்னம்மா.. நா கேட்டதுக்கு பதில் சொல்லாம அப்படி என்ன சிந்தனை..?’

ராணி திடுக்கிட்டு முன் இருக்கையில் அமர்ந்து தன்னையே பார்த்த தன் தந்தையைப் பார்த்தாள். ‘என்னப்பா கேட்டீங்க?’

‘நாசமா போச்சி. அப்போ ஒங்கப்பா கேட்ட கேள்வி ஒன் காதுல விழவே இல்லையாக்கும். அப்படியென்ன யோசனைடி ஒனக்கு?’ தனக்கு அருகில் பின்னிருக்கையில் அமர்ந்து எரிச்சலுடன் தன்னை நோக்கிய தன் தாயைப் பார்த்தாள் ராசம்மாள்.

‘இல்லம்மா.. அப்பா கேட்ட கேள்வியப்பத்தித்தான் யோசிச்சிக்கிட்டிருந்தேன்.’ என்றவள் தன் தந்தையை பார்த்தாள். 'ஆமாப்பா, நல்லா யோசிச்சித்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். இதுக்கப்புறமும் மழுங்கிப்போயி அவர்கூட வாழறதுக்கு நா தயாராயில்லேப்ப்பா.. என்னோட இந்த முடிவில எந்த மாத்தமும் இல்லே. நாளைக்கு போனவுடனே வக்கீல பாக்கணும்.. உங்களுக்கு ஏதாச்சும் வேலையிருந்தா நா செல்வத்தோட போய் பாத்துக்கறேன்.’

நாடார் வியப்புடன் அவளைப் பார்த்தார். ‘செல்வமா? அவன் திருநெல்வேலியில இல்லே இருக்கான்.’

ராசம்மாள் புன்னகையுடன், ‘இல்லப்பா.. புறப்படறதுக்கு முன்னால நா மாமாவ கூப்ட்டு நாளைக்கு சென்னையிலருக்கறா மாதிரி புறப்பட்டு வரச்சொல்லிட்டேன்.’ என்றாள்.

‘அடிப்பாவி.. அப்பன விட ரொம்பத்தான் வெரசா இருக்கே..’

நாடார் எரிச்சலுடன் தன் மனைவியைப் பார்த்தார். ‘என்னத்துலடி நா வெரசா இருக்கேன்.’

‘வேறெதுல? பிடிக்காதவங்கள வெட்டி விடறதுலதான். அதான் தெனத்துக்கும் செய்யறீங்களே.’

‘பின்னே..? ஒன்னையும் வெட்டி விட்டிருலாம்னுதான் பாக்கேன்.. போன பத்துவருஷமா? முடியுதா? இல்லையே?’ என்றவர் தன் டிரவைரைப் பார்த்தார். ‘என்னலே நீ சிரிக்குதே.. ஒங்க பொளப்பெல்லாம் ஒரு பொளப்பாலேங்கறா மாதிரி இருக்குலே ஒன் சிரிப்பு.’

வாகனத்தை ஓட்டுவதில் மும்முரமாய் இருந்த மந்திரச்சாமி இல்லை என்று தலையை அசைத்தான். ‘ஐயா, என்னய்யா சும்மா இருக்கற என்னெ வம்பு பண்றீங்க?’

நாடார் சிரித்தார். ‘இல்லல்லே.. நீ சிரிக்கறா மாதிரி தோணிச்சிலே.. அதான்.. நீ சிரிச்சாலும் தப்பில்லேல்லே.. நீயும் வீட்ல ஒருத்தன் தானே.. என்ன ராசாத்தி.. ஒனக்கும் என்னையெ பாத்தா சிரிப்பாத்தான் இருக்கு என்ன?’

ராசாத்தியம்மாள் முகத்தை தோள்பட்டையில் இடித்துக்கொண்டு மறுமொழி பேசாமல் ஜன்னல் வழியே பின்னோக்கி ஓடுகின்ற வாகனங்களை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். இந்த மாதிரி இப்ப நடக்கற இந்த சங்கடமான காரியங்களையும் ஓட வச்சா எவ்வளவு நல்லாருக்கும்? பாவி மக, முளுசா முப்பது வயசுகூட வலை. அதுக்குள்ள தாலிய களட்டி குடுத்தா என்னான்னு எவ்வளவு ஈஜியா சொல்லிப்போட்டா.. எல்லாம் படிப்பு குடுக்கற தைரியந்தானே.. நாமளும் நாலு எளுத்து படிச்சிருந்தா இந்த திமிரு புடிச்ச மனுசனோட அவமானப்பட்டு, அவஸ்த்த பட்டுக்கிட்டு மானங்கெட்ட சிறுக்கியாட்டாம் இருக்க வேணாமில்ல..?

ஹ¥ம் இப்ப நினைச்சி என்னத்த ஆவறது..? அப்பனும் பொண்ணும் முடிஞ்சி போச்சின்னு நினைச்ச்துக்கப்புறம் நாம பொலம்பி என்ன பிரயோசனம்..?

வாகனத்திலிருந்த மூவரும் அவரவர் சிந்தனைகளில் மூழ்கிப் போய் அமர்ந்திருக்க நாடாரின் சொகுசு வாகனம் வேகமெடுத்து சென்னையை நோக்கி விரைந்தது..

தொடரும்


7 comments:

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அரவிந்தன்,

நல்ல விறுவிறுப்பாக செல்கிறது.வாழ்த்துக்கள். //

நன்றிங்க. தொடர்ந்து படிங்க.

dondu(#11168674346665545885) said...

அப்பாடா மாணிக்கவேலருக்கு தைரியம் வந்ததா? அவர் மனைவிக்கு ஆங்கிலத்தில் death wish என்று கூறுவார்கள், அதுதான் என நினைக்கிறேன். தனக்கு எங்கும் போக்கிடம் இல்லை என்னும் நிலையிலேயே இவ்வளவு திமிரா? செயலாகப் பிறந்தகம் இருந்திருந்தால் என்னவெல்லாம் ஆட்டம் போட்டிருப்பாங்க?

அவரவரை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால்தான் எல்லோருக்கும் நிம்மதி. அடாவடியாக இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர்களும் மனத்தளவில் ஓர் எல்லையை தனக்கு யாராவது நிர்ணயிப்பதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க டோண்டு சார்,

அவரவரை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால்தான் எல்லோருக்கும் நிம்மதி. அடாவடியாக இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து ஒன்றும் ஆகப்போவதில்லை. //

நீங்க சொல்றது ஒருவகையில சரிதான்.

siva gnanamji(#18100882083107547329) said...

மணைவியால் வதை படும் கணவன்;
கணவனால் வதை படும் மணைவி
அவர்களுடைய துணிகரமான புத்திசாலித்தனமான முடிவுகளால்
அனைவருக்கும் நண்மை ஏற்படட்டும்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

ஒரு மணமுறிவுக்கு காரணம் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கலாம் என்பதைத்தான் இந்த இரு மணமுறிவுகளுமே காட்டுகின்றன..

முந்தையது ஒரு இழப்பால் ஏற்பட்ட பிரிவினை என்றால் பின்னது ஒரு துரோகத்தால் ஏற்பட்டது..

இரு பிரிவுகளுமே சந்தோஷத்தை கொடுக்குமோ இல்லையோ ஒருவகை நிம்மதியை நிச்சயம் கொடுக்கும் என்று நம்பித்தான் இருவருமே இந்த முடிவுக்கு வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

siva gnanamji(#18100882083107547329) said...

உண்மை! உண்மை!!
போனதெல்லாம் போகட்டும்;இனி இருப்பதாவது உருப்படட்டும் என்ற
விரக்தி/ஆசை நிறைவேறடடும்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

விரக்தி/ஆசை நிறைவேறடடும் //

அதே, அதே:))