18.5.06

சூரியன் 79

‘சரி ராசம்மா.. நான் உடனே பொறப்பட்டு வரேன். மாமாவை கவலப்படவேணாம்னு சொல்லு.’

இணைப்பைத் துண்டித்த செல்வராகவன் எதுக்கு இப்ப வக்கீல் வீட்டுக்கு என்று நினைத்தான். ஒரு வேள நேத்து மாமா ஃபோன்ல சொன்ன விஷயமா இருக்குமோ.. சரி நாளைக்கு போனா தெரிஞ்சிரப் போவுது என்று அதை ஒதுக்கி வைத்தான்.

பிறகு,  தன் மனைவி செல்வியை அழைத்தான். எதிர் முனையில் நீண்ட நேரம் அடித்துக்கொண்டிருந்ததே தவிர யாரும் எடுத்தபாடில்லை.

எரிச்சலுடன் செல்வியின் செல் ஃபோன் எண்ணை டயல் செய்தான். இரண்டும் மூன்று முறை மணியடிக்க, ‘ஏன் எடுக்க மாட்டேங்குறா?’ என்ற முனகலுடன் துண்டிக்க முனைய, ‘என்னங்க என்ன விஷயம்? ஏன் மொபைல்ல கூப்டறீங்க?’ என்று குரல் வந்தது.

‘நீ வெளியில போறேன்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேண்டியதுதானே.. நான் வீட்டு நம்பர இவ்வளவு நேரம் சுத்திக்கிட்டிருந்தேன்.’ என்றான் எரிச்சலுடன்.

எதிர்முனையிலிருந்து சூடாக பதில் வந்தது. ‘ஏன் என்ன விஷயம்? திடீர்னு அம்மா வீட்லருந்து ஃபோன் வந்துது. நாளைக்கு அம்மாவும் அப்பாவும் வராங்களாம். அதான் வீட்ல ஒன்னுமில்லையேன்னு பஜாருக்கு வந்தேன். சொல்ல மறந்துபோச்சி. இப்ப எதுக்கு வீட்டுக்கு ஃபோன் செஞ்சீங்க?’

‘நா இன்னைக்கி அவசரமா சென்னைக்கி புறப்பட்டு போணும். மாமா கிட்டருந்து ஃபோன் வந்துது. அதான் ஒரு ரெண்டு நாளைக்கு வேண்டியத பேக் செஞ்சி வையின்னு சொல்லலாம்னு வீட்டுக்கு ஃபோன் செஞ்சேன். ரிங் போய்ட்டேருக்கே தவிர யாரும் எடுத்த பாடா காணோம். அதான் ஒன் செல்லுக்கு ஃபோன் செஞ்சேன். நீ வீட்டுக்கு போனதும் பேக் செஞ்சி வைக்கிறியா?’ என்ற செல்வம் தன் மேசைக்கு முன் வந்து நின்ற சிப்பந்தியை நோக்கி என்ன என்பதுபோல் சைகை செய்தான்.

‘ஐயா நேத்தைக்கே வரவேண்டிய ஜீனி லோடு இன்னும் வரலைங்க.. அதான் ஞாபகப்படுத்தலாம்னு..’ என்று தலையைச் சொறிந்துக்கொண்டு நிற்க , ‘சரி நீங்க போங்க.. நான் ஏற்பாடு பண்றேன்.’ என்று அனுப்பி வைத்துவிட்டு, ‘ஏய் என்ன சத்தத்தையே காணோம்.. லைன்ல இருக்கியா இல்லையா?’ என்றான் மனைவியிடம்.

‘இங்கதான் இருக்கேன். அது சரி.. இப்ப திடீர்னு என்ன சென்னைக்கு.. என்னவாம் ஒங்க மாமாவுக்கு?’

செல்வியின் குரலில் இருந்த கேலி அவனுக்கு தெளிவாகப் புரிந்தாலும் அதைக் கண்டுக்கொள்ளாமல், ‘ஏதாவது  அவசரமான சோலியாருக்கும்லே.. இல்லாட்டி ஃபோன் செஞ்சி கூப்டுவாகளா? நீ தொணதொணங்காம பேக் செஞ்சி வையி.  ராத்திரியே பொறப்பட்டு போனாத்தான் சரியாயிருக்கும். நீ வாங்குன வரைக்கும் போறும்னு நிறுத்திட்டு வீட்டுக்கு போ.. ஒங்கம்மா என்ன என்னைக்கும் வராத விருந்தாளியா?’ என்றான்.

‘ஏஞ்சொல்ல மாட்டீங்க? ஒங்களுக்கு ஒங்க மாமன் குடும்பந்தான முக்கியம்? எங்கம்மா, அப்பான்னா எப்பவும் எளக்காரந்தான?’

செல்வம் பார்த்தான். ஊருக்கு கிளம்பிச் செல்லும் நேரத்தில் எதற்கு வீண் வம்பு என்று நினைத்தான். ‘ஏய் அம்மா செல்வி.. போறும்.. நா சும்மா விளையாட்டுக்குச் சொன்னத நீ வம்புக்குன்னாலும் பெருசாக்கிறாத. மிஞ்சிப் போனா ரெண்டு நா வேலையாத்தான் இருக்கும் ஒங்கம்மாவ ஒரு வாரம் இருந்துட்டு போச்சொல்லு.. நா வந்ததுக்கப்புறம் போனாப் போறும்.. நீ வெரசா வீட்டுக்கு போயி நாஞ்சொன்னத செய்யி.. நா இன்னும் அரைமணியில அங்க இருப்பேன்.’ என்று இணைப்பைத் துண்டிக்க இருந்தவனை செல்வியின் குரல் தடுத்து நிறுத்தியது.

‘ஏங்க, நீங்க கார எடுத்துக்கிட்டு போய்ட்டா நாளைக்கு அம்மா, அப்பாவ கூப்ட ஸ்டேஷனுக்கு எப்படி பேறதாம்?’

செல்வத்துக்கு எரிச்சல் வந்தது. ‘அதுக்கென்ன செய்யணுங்கற?நம்ம டிராவல்ஸ்ல சொன்னா ஒரு வண்டிய அனுப்பிட்டுப் போறாங்க. இத நா சொல்லித்தரணுமாக்கும்?’

‘நா சும்மாத்தான கேக்கேன். எதுக்கு இப்ப நீங்க எரிஞ்சி விளறிய?’ என்று எதிர் முனையில் அதே எரிச்சலுடன் குரல் வர செல்வம் அமைதியானான்.

‘சரி, சரி. ஆரம்பிச்சிராத. வாங்க வேண்டியத முடிச்சிக்கிட்டு வீடு போய் சேர்..’ என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தான்.

தன்னுடைய தாய் மாமன் தயவில் இரண்டு வருடங்களுக்கு முன்  SM (சிலுவை மாணிக்கம் என்ற பெயரின் சுருக்கம்) Sweets and Snacks என்ற பெயரில் திருநெல்வேலியில் சிறியதாக ஒரு இனிப்பு கடையைத் துவக்கிய செல்வ ரத்தினம் என்ற செல்வம் தன்னுடயை அயரா உழைப்பாலும் வணிக சாதுரியத்தாலும் மளமளவென வளர்ந்து இன்று திருநெல்வேலியில் மூன்றும் செல்வியின் சொந்த ஊராகிய அம்பா சமுத்திரத்தில் ஒரு கிளையென ஒரு முழுமையான உணவகமாக பெருக்கியிருந்தான்.

இளம் வயதில் தன் தந்தையை இழந்து தாயுடன் ஒரு வேளை வயிற்றுப்பாட்டுக்கே வழியில்லாமல் நின்ற சமயத்தில் கைகொடுத்து வளர்த்து ஆளாக்கிய தன்னுடைய தாய் மாமனுக்கு இன்றும் விசுவாசமாய் இருந்தான் செல்வம்.

ராசம்மாள்-ராசேந்திரன் திருமணத்திற்குப் பிறகு சம்பந்தியின் பேச்சை தட்டமுடியாமல், ‘ஒன்ன வெளிய அனுப்பறதுக்கு இந்த மாமனுக்கு மனசில்லடா செல்வம். ஆனா மருமகப்பயன்னுருக்கற அந்த மிருகத்த எதிர்த்துக்கிட்டு என்னால ஒன்னும் செய்யமுடியலடா.. நீ போயிரு.. இந்த கம்பெனிக்கு நீ ஒன் ஒடம்ப ச்செருப்பா தேய்ச்சிப்போட்ட.. அத இந்த மாமன் மறக்கவே மாட்டேண்டா.. நீ தைரியமா அம்மாவ கூப்டுக்கிட்டு போ.. தின்னவேலில்ல எனக்கு தெரிஞ்சவரோட கடை ஒன்னெ நமக்கு தெரிஞ்ச பயலுக யாருக்காச்சும் உபயோகப்படும்னு வாங்கி போட்டிருந்தேன். அது நீதாங்கறது எனக்கு இன்னவரைக்கு தெரியாம இருந்திச்சி பாரு.. நீ அத எடுத்து நடத்துலே.. மாமா வேணுங்கற முதல தரேன்.. நீ எனக்கும் என் குடும்பத்துக்கும் ஒளச்சதுக்கு நா சம்பளம்னு இன்ன வரைக்கும் ஒன்னுமே தரலையேடான்னு அடிக்கடி சொல்வேனில்லே.. இதுதான் அதுன்னு நினைச்சிக்கடா..’ என்று தழுதழுத்த குரலுடன் தன்னை தட்டிக்கொடுத்து வழியனுப்பி வைத்ததை அவன் மறக்கவேயில்லை.

அவருடைய நிறுவனத்திலிருந்து வெளியே வந்தபிறகும் அவருக்கு மிகவும் விசுவாசமாக இருந்தான். அவர் எப்போது கூப்பிட்டாலும் கையிலிருந்தது எந்த வேலையாயிருந்தாலும் ஓடிவிடுவான்.

ராசம்மாளை ராசேந்திரன் கேவலமாக நடத்துகிறான் என்று கேள்விப்பட்டவுடனே அவனை வெட்டி சாய்த்துவிட்டுத்தான் மறுவேலை என்று கிளம்பியவனை சமாதானப்படுத்தி நிறுத்தியவளே ராசம்மாள்தான். ‘நீ இப்படி மளுங்கி, மளுங்கி போறதாலத்தான் பிள்ள அவன் அந்த எகிறு எகிறுறான். நீ மட்டும் ஒரு வார்த்த சொல்லு பிள்ள, அவன வெட்டிட்டு செயிலுக்கு போனாலும் பரவால்லைன்னுட்டு வெட்டி போடறேன். இப்படி இவன் கிட்ட அடிபட்டு மிதிபட்டு சாகவா பிள்ள மாமா அவ்வளவு பணத்த கொட்டி இவனுக்கு கட்டி வச்சாக?’

அப்போதெல்லாம் கண்ணீருக்கிடையே அவனைப் பார்த்த பார்வையை காணச் சகியாமல் பஸ் ஏறி திருநெல்வேலிக்கு வந்துவிடுவான்.

அந்த கவலையை மறக்க அவனுக்கு இருந்த ஒரே வழி அவன் துவங்கியிருந்த உணவகம்தான். அதிலேயே ஒரு வெறியுடன் ஒன்றிப்போனான்.

‘செல்வம். என்னலே இது? ஒளைக்க வேண்டியதுதான். அதுக்காக இப்படியா? நீ இப்படியே போனேன்னு வச்சிக்க.. நீ நடத்திக்கிட்டிருக்கற ஸ்வீட் ஸ்டால் ஒரு வேளை ஹோட்டலா மாற வாய்ப்பிருக்கு. ஆனா அத அனுபவிக்க ஒனக்குத்தான் குடுத்து வச்சிருக்காது.. சொல்லிட்டன். பேசாம நா ஒருத்திய பாத்துக் குடுக்கேன், கட்டிக்கோ. அப்பத்தான் ராத்திரியான கடைய மூடிட்டு வீட்டுக்கு போணும்னாவது ஒனக்கு தோணும்.’ என்று சிலுவை மாணிக்க நாடார் அவனைக் கட்டாயப்படுத்தி கட்டி வைத்தவள்தான் இந்த செல்வி..

பஞ்சைப் பனாதையாட்டமா வந்து நின்னவ இப்ப என்னடான்னா என்னையவேல்லே குறுக்குக் கேள்வி கேட்டுக்கிட்டு நிக்கா. ‘டேய் செல்வம். நீதான் படிறா படிறான்னு நா தலபாடா அடிச்சும் படிக்காம சின்ன வயசுலயே கடை, கன்னின்னு நின்னுட்ட.. ஒனக்கு வரவளாவது படிச்சிருக்கட்டுமேன்னுட்டுத்தான் பி.ஏ படிச்சி டீச்சர் வேல பாக்கற பொண்ண பாத்திருக்கேன்.. வேண்டாம்னு அளும்பு பண்ணாம சரின்னு சொல்லு.. பொண்ணு பாக்கறதுக்கு சுமாரா இருந்தாலும் நல்ல வாயாடி பொண்ணாட்டமாருக்குடா.. வாயடிச்சாலே புத்திசாலின்னுதான் அர்த்தம். ஒன் கட கணக்கு வளக்க பாத்துக்க சம்பளமில்லாம ஒரு ளும் கெடச்சா மாதிரி இருக்குமில்லே.. என்ன நா சொல்றது?’

வாயாடின்னு நீங்க சர்வ சாதாரண்மா சொல்லிட்டீயளே.. வாயா அது.. ஏ அப்பா.. என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட சுந்தரம் தன்னுடைய மேலாளரை அழைத்தான். ‘நா மெட்றாஸ் வரைக்கும் போணும்.. டிரைவர கூப்ட்டு கார  கடைக்கு முன்னால கொண்டு வரச்சொல்லுங்க. அப்புறம் அந்த ஜீனி மண்டிய கூப்ட்டு லோட் இன்னும் வரலைன்னு கேளுங்க. நா அநேகமா ரெண்டு நாள்ல வந்துருவேன். இடையில ஏதும் கேக்கணும்னா செல்லுக்கு போன் போடுங்க.’

அடுத்த பத்து நிமிடத்தில் வீட்டையடைந்த செல்வம் சாவகாசமாக சோபாவில் அமர்ந்து செல் ஃபோனில் வாயாடிக்கொண்டிருந்ததைப் பார்த்து எரிச்சலைடந்தான்.

‘ஏய் செல்வி. என்ன இது? நா என்ன சொன்னேன், நீ என்ன செஞ்சிக்கிட்டிருக்கே? என் பெட்டிய அடுக்கினியா இல்லையா?’

‘அதெல்லாம் அப்பவே ரெடியாயிருக்கு.’ என்று  கேலியுடன் பதில் வர செல்வம் தொடர்ந்து தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தவளை எரிச்சலுடன் பார்த்தான். என்ன கொளுப்பு இவளுக்கு என்று நினைத்தான்.

சரி இவளிடம் வம்பு செய்துக்கொண்டிருந்தால் தன்னுடைய நேரம்தான் வீணாகும் என்று நினைத்த செல்வம் குளிச்சிட்டு கிளம்பற வழிய பாப்போம் என்று முனகியவாறு தன்னுடைய அறையை நோக்கி நடந்தான்.

குளித்து முடித்து செல்வி அடுக்கி வைத்திருந்த பெட்டியை திறந்து ஒரு பார்வை பார்த்தான். அவனுடைய பயணத்திற்கு தேவையான எல்லாமே இருக்க திருப்தியுடன் பெட்டியை மூடி கையில் பிடித்துக்கொண்டு ஹாலுக்கு வந்தான்.

‘சரி ராசம்மா. இதோ செல்வம் புறப்பட்டுக்கிட்டுத்தான் இருக்கார்..’ என்ற செல்வி தொலைப்பேசியில் பேசுவதைக் கேட்டு திடுக்கிட்டு நின்றான்.

இணைப்பைத் துண்டித்துவிட்டு எழுந்த செல்வி, ‘என்னங்க.. நீங்க என்னமோ மாமா கூப்டறாகனீங்க.. ஒங்க மாமன் பொண்ணு என்னடான்னா அத்தான் பொறப்பட்டுட்டாரான்னு ரெண்டுதரம் ஃபோன் பண்றா.. என்ன நடக்குது எனக்கு தெரியாம?’ என்றாள் விஷமத்துடன்..

செல்வம் எரிச்சலுடன், ‘ஏன் அதையும் அவகிட்டவே  கேக்கறதுதான?’ என்றான்.

‘அவ கிட்ட கேக்கறது இருக்கட்டும். நீங்க ஏன் மாமா கூப்ட்டார்னு சொன்னீங்க?’ என்ற எதிர் கேள்வி கேட்டவளை செல்வம்  எரிச்சலுடன் பார்க்க, ‘ராசம்மா ராசேந்திரன டைவோர்ஸ் செய்ய போறாளாமே?’ என்றாள் செல்வி படு கேஷ¤வலாக..

பிறகு அதிர்ச்சியுடன் கையிலிருந்த பெட்டியை தவறவிட்ட செல்வத்தைப் பார்த்து, ‘வக்கீல் வீட்டுக்கு அதாங்க ஒங்க ஃப்ரெண்ட் இருக்காரே மோகன், அவர் வீட்டுக்கு துணையா போகத்தான் ஒங்கள வரச்சொல்லியிருக்கா.. ஏன் ஒங்கக்கிட்ட அவ சொல்லலையா இல்லே தெரியாத மாதிரி எங்கிட்ட நடிக்கிறீங்களா?’ என்றாள் கேலியுடன்..

தொடரும்..


  





5 comments:

G.Ragavan said...

இவன் ரொம்ப நாள் கழிச்சி கதையில வர்ரான். நல்ல உழைப்பாளி. நன்றி உள்ளவன். இவனையேக் கட்டீருந்தா அவ சந்தோசமா இருந்திருப்பா. சரி..நடக்குறது நடந்தே தீரும்னு ஆகிப் போச்சு.

இப்ப எதுக்கு மாமா கூப்புடுறாரு. மகளைக் கட்டிக்கச் சொல்லியா? இல்ல யாவாரத்தப் பாத்துக்கச் சொல்லியா? இல்ல பழி வாங்கச் சொல்லியா?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அரவிந்தன்,

இந்த பெண்பிள்ளைகளே இப்படிதான் நம்பமாட்டார்கள்.எப்பொழுதும் சந்தேகம்தான். //

தேகம் இருக்கற எல்லாருக்குமே இந்த சந்தேகம் இருக்குங்க.

இதுல ஆண் என்ன பெண் என்ன..

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

இப்ப எதுக்கு மாமா கூப்புடுறாரு.//

மாமாவா கூப்ட்டார்? மருமக இல்லே..

ராசம்மாவுக்கு ராசேந்திரன பழிவாங்குறதுல ஒரு டூல் வேணும்.. அதுவும் செல்வமாவும் இருக்கலாம்..

siva gnanamji(#18100882083107547329) said...

என்னங்க, இன்னுமொரு ராணிய
கொண்டு வறப்போறீங்களா?
மாணிக்கவேலு படுறது போதும்
செல்வத்தையும் படுதவேணாம்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

இன்னுமொரு ராணியா?

சேச்சே.. செல்வி ஒரு சராசரி குடும்பப் பொண்ணு.. என்னா கொஞ்சம் சந்தேகம்.. தன் புருஷனுக்கு மாமன் பொண்ணு இருக்கறான்னு தெரிஞ்சா எந்த பொண்ணுமே சந்தேகப்படத்தான் செய்யும்.