இதுவரை..
மும்பையில் ஒரு தனியார் வங்கியில் உயர் பதவியிலிருந்த எம்.ஆர். மாதவன் சென்னையில் தலைமயகத்துடன் இயங்கிவரும் வேறொரு தனியார் வங்கிக்கு முதல்வராக பதவியேற்க குடும்பத்துடன் சென்னை வருகிறார்.
அவருடைய மகன் சீனிவாசன் தந்தையின் அனுமதியுடன் மும்பையில் தங்கிவிடுகிறார். அவருடைய காதலி மைதிலியைக் காணச் செல்லும் வழியில் அவருடைய தந்தையுடன் தொலைபேசியில் உரையாட அவர் தன்னுடைய மகளை மறந்துவிடச் சொல்கிறார். அதிர்ச்சியில் சாலையி மயங்கி விழுந்து காயப்படும் சீனிவாசனை மைதிலி தனக்குத் தெரிந்த மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்கிறாள்.
மைதிலியை பெண் பார்க்க வந்த குடும்பத்தார் அவரையும் சீனிவாசனையும் சேர்த்து மருத்துவமனை வாசலில் பார்க்க அவளுடைய திருமணம் தடைபட்டு போகிறது..
வங்கியின் நிர்வாக இயக்குனர் சேது மாதவனுக்கு தன்னுடன் ஒரே பதவியில் பணிபுரிந்த மாதவன் சேர்மன் ஆவதா என்ற ஈகோ பிரச்சினை. அவரை அந்த பதவியில் நியமிக்காமலிருக்க தன்னால் ஆன மட்டும் முயற்சித்து தோற்றுப்போய் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்ற சூழ்ச்சியில் இறங்குகிறார்.
ஆக்டிங் சேர்மன் பதவியிலிருக்கும் சுந்தரலிங்கம், சிஜிஎம். பிலிப் சுந்தரம் இவர்களுக்கு மாதவன் மற்றும் சேதுமாதவனுக்கிடையில் நடக்கும் போராட்டத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை..
வங்கியின் H.R Head ஜி.எம். வந்தனாவுக்கு தனிமைதான் பெரிய பிரச்சினை. இளம் வயதில் ஏற்பட்ட காதல் தோல்வியால் திருமணமே செய்துக்கொள்ளாமல் தனிமரமாய் நின்ற நேரத்தில் தன் வாழ்வில் வசந்த தென்றலாய் நுழைந்த அவருடைய நண்பர் மாணிக்க வேலுவின் மகள் கமலியின் மேல் அளவுக்கடந்த பாசத்தை வைத்துவிட்டு அவர் இறந்த செய்தி கேட்டதும் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவ மனையில் இருக்கும் நேரத்தில் தன்னுடைய முன்னாள் காதலரின் நினைவு வர எதற்கு இந்த நினைவு என்று குழம்பிப் போகிறார்..
மற்றொரு ஜி.எம் பாபு சுரேஷ¤க்கு அலுவலகத்தில் தொழிற்சங்க தலைவர் முரளியால் பிரச்சினையென்றால் வீட்டில அவருடைய மகளால் பிரச்சினை. தன் தந்தைக்கு பாடம் புகட்ட நினைத்த ரம்யா வீட்டை விட்டு வெளியேறி தன் தோழி புவனா வீட்டில் தஞ்சம் புகுகிறாள்.
இதையறியாத பாபு சுரேஷ் சேது மாதவனின் உதவியை நாட அவர் தன்னுடைய அடியாட்களை ஏவி விடுகிறார். அடியாட்கள் புவனாவின் புகைப்படத்துடன் எஸ்.பி.தனபால் சாமியின் கையில் சிக்க விஷயம் சிக்கலாகிவிடுகிறது.
தன் வீடு திரும்பும் தனபால் சாமி ரம்யாவை தன் வீட்டில் கண்டு அதிர்ச்சியடைந்து அறிவுரை கூறி அவளுடைய வீட்டில் சேர்க்கிறார். சேது மாதவனைக் குறித்த தனபால் சாமியின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் சமாளிக்கிறார் பாபு சுரேஷ்.
தன்னுடைய அடியாட்கள் போலீசில் சிக்கிய விவரத்தைக் கேள்விப்பட்ட சேதுமாதவன் தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர்களை வெளியில் கொண்டுவருவது மட்டுமல்லாமல் அவர்களுக்கெதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட இதைக் கேள்விப்படும் தனபால் சாமி கொதித்துப் போகிறார்.
வங்கியின் பல்லாவர கிளை மேலாளர் சி.எம் மாணிக்க வேல் தன் செல்ல மகள் கமலியை எதிர்பாராமல் இழந்து தவிக்கிறார். இதற்கு மூல காரணம் தன் மனைவி ராணிதான் என்று முடிவு செய்து அவளை வீட்டை விட்டு அனுப்புகிறார். பிறகு தன்னுடைய தந்தை மற்றும் மகனுடைய வேண்டுகோளுக்கிணங்கி அவள் திரும்பி வர சம்மதிக்கிறார்.
வங்கியின் கேரள கிளைகளில் பணி புரியும் நந்தக்குமார் மற்றும் நளினி தம்பதியர் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து செல்லும் நிலையை அடைகின்றனர். கமலியின் மரணச் செய்தியையும் வந்தனாவின் மருத்துவமனை சேர்க்கையையும் தன் நண்பன் முரளியின் மூலமாக கேள்விப்படும் நந்தக்குமார் தான் சென்னை செல்லவிருப்பதாகவும் தன்னுடன் நளினி வர தயாரா என்று கேட்கிறான். கமலியைப் பற்றி லேசாக கேள்விப்பட்டிருக்கும் நளினி வந்தனாவின் சுகவீனத்தைக் கேள்விப்பட்டதும் தானும் வருகிறேன் என்று அவனுடன் புறப்படுகிறாள். அத்துடன் இந்த சென்னைப் பயணம் தன்னுடைய திருமண வாழ்க்கையில் மீண்டும் வசந்தத்தைக் கொண்டு வராதா என்ற ஏக்கமும் அவளுக்கு இருக்கிறது.
வங்கியின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வந்த ரவி பிரபாகர் தன்னுடைய வாடிக்கையாளர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு தற்காலிக பதவியிழப்புக்குள்ளாகிறார். அவருடைய மனைவி மஞ்சு ரவியுடனான தாம்பத்திய வாழ்வில் வெறுப்படைந்து வேறு வழிதெரியாமல் வீட்டைவிட்டு சென்று தன்னுடைய நண்பர் ஒருவர் வீட்டில் தஞ்சம் புகுகிறார்.
தனக்கெதிராக நடக்கவிருக்கும் விசாரனையை எதிர்கொள்ள அவருடயை குடியிருப்பில் வசிக்கும் ஒரு வழக்கறிஞ நண்பருடைய உதவியை நாடுகிறார் ரவி. அவர்களுடைய ஆலோசனையின்படி வீடு திரும்ப விரும்பும் மஞ்சுவை சந்தோஷத்துடன் வரவேற்கிறார். இருவர் உறவிலும் மீண்டும் மகிழ்ச்சி திரும்புகிறது. மஞ்சு ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் என்று யோசனை கூற தனக்கெதிரான விசாரனை முடியட்டும் பிறகு செய்யலாம் என்கிறார்.
வங்கியின் இயக்குனர் குழுவில் (Directors’ Board ) இருந்த அனைத்து இயக்குனர்களுமே தங்களுடைய பரிந்துரைப்படி நடக்காமல் ரிசர்வ் வங்கி புது சேர்மனை நான்கு வருடங்களுக்கு நியமிக்கப்பட்டதை நினைத்து கோபம் கொள்கின்றனர். ஆனாலும் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்கின்றனர்.
இயக்குனர்களில் மூத்தவரான மருத்துவர் சேதுமாதவனுக்கு பதவிகாலம் முடிய இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் தனக்கு அடுத்து தன்னுடைய பதவியில் யாரை நியமிக்கலாம் என்ற லோசனையில் இறங்க அவருடைய பிரதிநிதியை போர்டில் நுழையவிடுவதில்லை என்று கங்கணம் கட்டுகிறார் இன்னொரு இயக்குனர் சிலுவை மாணிக்கம் நாடார்.
சேது மாதவன் ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் வாங்கியிருந்த கடனை அடைக்க தேவையான தொகையை திரட்ட வங்கிக்கு 300 அதிகாரிகளை நியமிக்கும் ரகசிய திட்டத்தை தயாரிக்கிறார்.
சிறிய அளவில் ஒரு உணவகத்தை தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் துவங்கி அதை தன்னுடைய அயரா உழைப்பினாலும் சாதுரியத்தாலும் மிகப் பெரிய அளவில் வளர்க்கும் சிலுவை மாணிக்கம் நாடார் தன்னுடைய கூட்டாளியும் சம்பந்தியுமான ரத்தினவேலின் துரோகத்தை அறிந்து அதை முறியடிக்கிறார்.
தன்னுடைய தந்தையின் அறிவுரையை மதிக்காமல் வெறும் அழகுக்கு மயங்கி தன்னுடைய முறை மாப்பிள்ளை செல்வத்தை மணமுடிக்க மறுத்து ராசேந்திரனை மணம்புரியும் நாடாரின் மகள் ராசம்மாள் அவனுடைய நடவடிக்கையில் காயப்பட்டு தன் தந்தை வீட்டுக்கே திரும்புகிறாள்.
கூட்டாளி ரத்தினவேலின் துரோகத்துக்கு பழிவாங்கத் துடிக்கும் நாடார் தன்னுடைய மருமகன் ராசேந்திரனை தன்னுடைய நிறுவனத்திலிருந்து விரட்டிவிட்டு அப்பதவியில் தன்னுடைய மகள் ராசம்மாளை நியமிக்க தீர்மானிக்கிறார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் ராசம்மள் தான் ராசேந்திரனை விவாகரத்து செய்துவிட உத்தேசிப்பதாக தன் பெற்றோரிடம் கூற நாடாருக்கு அது மகிழ்ச்சியை அளித்தாலும் அவளுடைய தாய் ராசாத்தியம்மாள் கவலையடைகிறாள்.
தன் தந்தையின் நிறுவனத்தில் நுழைவதற்கு ஏதுவாக தன்னுடைய தந்தையுடன் சென்னை திரும்ப தீர்மானிக்கும் ராசம்மாள் தன்னை துன்புறுத்திய ராசேந்திரனை பழிவாங்க தீர்மானிக்கிறாள். அவனுடனான இந்த போராட்டத்தில் செல்வத்தின் துணை தனக்கு தேவைப்படும் என்று கருதி அவனையும் சென்னைக்கு கிளம்பி வர கோருகிறாள்.
ராசம்மாள், ராசேந்திரன் திருமணத்தை ஆரம்ப முதலே விரும்பாத செல்வம் ராசேந்திரனின் துர்போதனைக்கு பணிந்து அவள் தன்னை தன்னுடைய உழைப்பால் வளர்ந்து நின்ற நிறுவனத்திலிருந்தே வெளியேற்றியதையும் மறந்து அவளுக்கு துணைபோக தீர்மானித்து தன்னுடைய மனைவியின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சென்னைக்கு விரைகிறான்.
ராசம்மாள் ராசேந்திரனுடனான திருமண உறவை முறித்துக்கொள்ள எடுத்த தீர்மானத்தை வரவேற்கும் செல்வம் அவள் ராசேந்திரனை பழிவாங்க எடுத்த தீர்மானத்தால் கவலையடைகிறான்..
வங்கியின் பயிற்சிக் கல்லூரி முதல்வராக இருந்த டி.ஜி.எம். சேவியர் பர்னாந்து தனக்கும் தன்னுடைய உழைப்புக்கும் அதுவரை கிடைக்காத அங்கீகாரம் ஆரம்ப காலத்தில் தனக்கு கிளை மேலாளராக பணி புரிந்து தற்போது சேர்மனாக பதவியேற்கவிருக்கும் மாதவனின் வரவு தனக்கு ஒரு விடிவை ஏற்படுத்தாதா என்று நினைக்கிறார்..
இனி...
மாதவனின் பதவியேற்பு வங்கியினுடைய தலையெழுத்தை மாற்றுமா அல்லது அவருடைய தலையெழுத்தே மாறிப்போகுமா?
சீனிவாசன், மைதிலி காதல் வெற்றியடையுமா? ஆண்களையே அடியோடு வெறுக்கும் வத்ஸலாவின் வாழ்க்கையில் காதலுக்கும், கல்யாணத்துக்கும் இடம் இருக்கிறதா?
சென்னை மாற்றம் தங்களுடைய குடும்பத்தில் மீண்டும் வசந்தத்தைக் கொண்டு வராதா என்று ஏங்கும் மாதவனின் மனைவி சரோஜாவின் எண்ணம் ஈடேறுமா?
மாதவனை அவமானப்படுத்தி, பதவியிறக்கி, அவருடைய பதவியை அடைய சூழ்ச்சியில் இறங்கும் சேதுமாதவனின் கனவு பலிக்குமா அல்லது அந்த சூழ்ச்சிக்கு அவரே பலியாவாரா?
மாதவன், சேது மாதவன் இவர்களுக்கிடையில் நடக்கும் போராட்டத்தில் சுந்தரலிங்கம், பிலிப் சுந்தரம் சிக்கிக்கொள்ளாமல் தப்பிப்பார்களா?
வந்தனாவால் கமலியை மறந்துவிட்டு தன்னுடைய வாழ்க்கையை தொடர முடியுமா? மருத்துவமனையில் இருந்த சமயத்தில் அவளுக்கு தன்னுடைய முன்னாள் காதலருடைய நினைவு வருகிறதே... அதன் பொருள் என்ன? அது மீண்டும் மலருமா?
பாபு சுரேஷின் மகளுடைய திருமணம்.. தலைமையகத்துக்கு மாற்றம் வேண்டும் என்று கேட்கப் போக சோமசுந்தரத்தின் சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொள்ளும் அவர் அதிலிருந்து மீள்வாரா?
தான் கைது செய்த சேது மாதவனின் அடியாட்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டதை கேள்வியுறும் தனபால் சாமியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன..?
மாணிக்க வேலின் குடும்பத்தில் மீண்டும் அமைதி ஏற்படுமா? அவருடைய தந்தையின் கதி என்னவாயிருக்கும்? ராணி திருந்துவாளா?
நந்தக்குமார் நளினி இவர்களின் சென்னைப் பயணம் அவர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகளை விளைவிக்குமா?
ரவி பிரபாகருக்கு எதிரான விசாரனையில் அவர் வெற்றி பெறுவாரா? ரவி மஞ்சுவின் வாழ்க்கையில் வசந்தம் மீண்டும் வருமா?
குழந்தை செல்வத்துக்காக ஏங்கி நிற்கும் இவ்விரு தம்பதியரின் எண்ணம் நடக்குமா?
சேதுமாதவனின் ஒரு கோடி ரூபாய் கையூட்டு திட்டம் நிறைவேறுமா? அவருக்கு பிறகு அவருடைய பதவியில் அமரப்போவது யாராக இருக்கும்? அவருடைய நண்பர் வேணுகோபாலனா, அல்லது அவருடைய ஒரே மகள் பூர்ணிமாவா?
தன் சம்பந்தி ரத்தினவேலுவின் சதியை முறியடித்த மாணிக்கம் நாடார் அவரை பழிவாங்கும் முயற்சியில் வெற்றியடைவாரா?
ராசம்மாள், ராசேந்திரன் விவாகரத்து அவள் நினைத்தபடி நிறைவேறுமா? ராசேந்திரனை பழிவாங்க துடிக்கும் அவளுடைய திட்டம் வெற்றி பெறுமா?
இப்போராட்டத்தில் ராசம்மாளுக்கு துணைபோகும் செல்வத்தின் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுமா?
தன்னை யாரும் கண்டுக்கொள்வதில்லை என்று மருகும் சேவியர் பர்னாந்துவின் அலுவலக வாழ்வில் அவர் எதிர்பார்த்த அங்கீகாரம் புது சேர்மனின் வரவால் கிடைக்குமா?
சென்னை க்ரெடிட் கார்ப்பரேஷனின் எதிர்காலம் என்ன? சட்ட விரோத கையாடலில் ஈடுபட்ட அதனுடைய சேர்மன் முத்தையா, அவருடைய மகன் நேத்தாஜி, மருமகன் இவர்களுடைய கதி என்னவாகும்?
அந்த நிறுவனத்தில் தன்னுடைய ஓய்வூதியம் முழுவதையும் முதலீடு செய்துவிட்டு தவித்து நிற்கும் ரத்னசாமியின் கதி என்ன?
இனி வரும் அத்தியாயங்களில் சொல்கிறேன்..
தொடர்ந்து படியுங்கள்.. உங்களுடைய விமர்சனத்தை தவறாமல் எழுதுங்கள் என்ற வேண்டுகோளுடன்..
ஜோசஃப்
16 comments:
நீங்கள் அடுக்கிய கேள்விகள் எனக்கு அந்த காலத்து சினிமா பாட்டுப் புத்தகங்களில் வரும் கதை சுருக்கத்தை நினைவுபடுத்துகின்றன. அவற்றை படிப்பவர்கள் எப்படியும் படத்தை பார்த்தே தீரவேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு படம் பார்ப்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும் அந்த கேள்விகள்.
உங்கள் கேள்விகளும் அவ்வாறே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பள்ளிப் பருவத்தில் சினிமா பாட்டு பொஸ்தகம் வாங்குவேன்.அதிலெ முன்கதைச்சுருக்கம் போட்டு"..மிகுதியை வெள்ளித்திரையில் காண்க" என்பாங்க.இப்போ " மிகுதியைக் ...
கணினித்திரையில் காண்க" வா?
ஆமா ரூ 100 கோடித் திட்டம்
சேதுமாதவன் திட்டமா?மருத்துவர்
சோமசுந்தரம் திட்டமா?
வாங்க ஜி!
ஆமா ரூ 100 கோடித் திட்டம்
சேதுமாதவன் திட்டமா?மருத்துவர்
சோமசுந்தரம் திட்டமா? //
நூறு கோடியா? அம்மாடியோவ்? ஒரு கோடி சார்..
அது சோமசுந்தரத்தோட திட்டம்தான்..
அதுசரி.. அதெப்படி நீங்களும் டோண்டுவும் சொல்லி வச்சா மாதிரி பாட்டுப்புத்தகத்த பத்தி சொல்லியிருக்கீங்க?
இந்த கேள்விகளை எழுப்பும்போது எனக்கும் அந்த ஞாபகம் வந்தது உண்மைதான்:)
வாங்க டோண்டு சார்..
அடுக்கிய கேள்விகள் எனக்கு அந்த காலத்து சினிமா பாட்டுப் புத்தகங்களில் வரும் கதை சுருக்கத்தை நினைவுபடுத்துகின்றன//
எனக்கும்தான்.. சிஜிக்கும் அதே நினைவு வந்திருக்கு பாருங்க..
'இந்த வயசான ஆளுங்களோட.. 'அப்படீன்னு இளவட்டங்கள் கமெண்ட் அடிக்காம இருந்தா சரி..
attendance :-)
great men think alike!ஹி ஹி ஹி
great men think alike//
என்னையும் சேர்த்துதானே சொல்றீங்க..
நன்றி:)
இது நல்லா இருக்கே. 100ஆவது பதிவுக்கு பொருத்தமாக் கூட!
வாழ்த்துக்கள் டி.பி.ஆர். (சார் போடக்கூடாதுன்னு சகப் பதிவர் ஒருத்தர் சொல்லியிருக்கார்,அதான் இப்படி!)
வாங்க இ.கொ.
சார் போடக்கூடாதுன்னு சகப் பதிவர் ஒருத்தர் சொல்லியிருக்கார்,//
கரெக்ட்..
உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி..
வாங்க நன்மனம்,
attendance :-) //
போட்டுட்டேன்:)
இன்று விருந்தாளிகள் அதிகரிச்சிருக்காங்க!
இன்று விருந்தாளிகள் அதிகரிச்சிருக்காங்க! //
முன்கதை சுருக்கும் இருக்கு இல்லையா..
இதுவரைக்கும் படிக்காதவங்க கூட சரி என்னதான் கிறுக்கியிருக்கார்னு பாக்கற ஆவல்ல வந்திருப்பாங்க..
சரி வந்தது வந்தோம் ஒரு ஷொட்டு கொடுத்துட்டு போவோம்னு எழுதியிருக்காங்க..
எல்லோருக்கும் வந்தனம்:)
வாசிப்பன்! (வாசித்தேன், வாசிக்கிறேன், வாசிப்பேன்..)
வாங்க கிருஷ்ணா,
வாசிக்கணும், வாசிக்கணும், வாசிக்கணும்:)
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி arunmoli.
Post a Comment