28.12.06

சூரியன் 159

‘யார்ப்பா ஃபோன்ல, செல்வமா?’ என்றாள் ராசம்மாள்.

நாடார் ஒலிவாங்கியை கையால் மூடிக்கொண்டு தன் மகளைப் பார்த்தார். ஆ,ம் என்று தலையை அசைத்தார். பிறகு, ‘என்னம்மா செல்வி. செல்வம் எல்லாத்தையும் சொல்லிருப்பான்னு நெனைக்கேன். எதப்பத்தியும் கவலப்படாம அவங்கூட கெளம்பி வா.. செல்வம் முன்னெ தங்கியிருந்த வீட்டுலயே கொஞ்ச காலத்துக்கு தங்குங்க.. பெறவு ஒங்க வசதிக்கேத்தாப்பல ஒரு வீட்ட பாத்து வாங்குவோம். என்ன நா சொல்றது?’ என்றார்.

‘.....’

‘சரிடா செல்வம். நா நெனச்சிருந்தத விட வெரசாவே காரியத்த முடிச்சிட்டே.. அவ அம்மாளும் அப்பாவும் ஒங்க கூடவே வராங்களாடா?’

‘.....’

‘அப்ப சரி.. நா நெனச்சாப்பலதான் நடந்திருக்கு. சந்தோஷம்.. நா ஒடனே நம்ம ஆடிட்டர்கிட்ட ஒரு பயல அனுப்ப சொல்றேன். நீயும் கூடவே இருந்து கணக்கு பொஸ்தகங்களையெல்லாம் காமிச்சி ஒரு மதிப்ப போடச் சொல்லு. தற்போதைக்கு இப்போ பாத்துக்கிட்டிருக்கற மேனேஜரையே கடைய பாத்துக்க சொல்வோம்லே.. பெறவு எல்லாருமா ஒக்காந்து பேசி என்ன செய்றதுன்னு முடிவு செய்யலாம்.. என்ன நா சொல்றது?’

‘.....’

‘சரி.. அப்படியே செஞ்சிருவோம்.. நா வச்சிடறேன்.. பொறப்பட்டு வர்றதுக்கு முன்னாடி ஃபோன் போட்டு சொல்லு.. வீட்ட ரெடி பண்ணனுமில்லே?’

இணைப்பைத் துண்டித்துவிட்டு புன்னகையுடன் தன் மகளைப் பார்த்தார் நாடார்.

‘என்னப்பா.. செல்வி சம்மதிச்சிட்டாளாமா?’

நாடார் சிரித்தார். ‘பின்னே.. பய யாரு? நம்ம ட்ரெய்னிங் ஆச்சே? என்னத்தையோ சொல்லி சம்மதிக்க வச்சிட்டான். செல்வியோட ஆத்தாதான் ஆரம்பத்துல மக்கார் செஞ்சிருக்கா.. ஆனா செல்வம் வாச்சாலக்கா பேசி மசிய வச்சிருக்கான். அந்த பொண்ணு புத்திசாலிம்மா.. என்ன எடக்கு மடக்கா பேசுவா.. மத்தபடி வெகுளி. எப்படியிருந்தவள எப்படி ஆக்கிருக்கேன்? இன்னைக்கி அவ பேருலயே ஒரு இருபது இருபத்தஞ்சி லெட்ச சொத்தையில்ல சேத்து குடுத்துருக்கேன்? எப்படியோ சட்டுபுட்டுன்னு அந்த கடைக்கி ஒரு மதிப்ப போட்டு முடிச்சிரணும்.. வேற எவனாவது இடையில புகுந்து குட்டைய கொளப்பிரக் கூடாதுல்லே?’

ராசம்மாளும் சிரித்தாள். ‘அதான பாத்தேன்.. ஒங்க கவல ஒங்களுக்கு..’

‘பின்னே இருக்காதாம்மா.. ஒம் புருசன் இருக்கானே? எமகாதகன்! செல்வியோட ஆத்தா குணம் அவனுக்கும் தெரியுமே.. கூட காசு தரேன், கடைய ஒங்க சம்மந்திக்கு குடுத்துராதீங்கன்னு சொன்னா சரின்னு இளிச்சிக்கிட்டு நிப்பாளே..’

‘அதெப்படிப்பா.. அவர்கிட்ட அவ்வளவு காசு இருக்கும்னு சொல்றீங்க?’

நாடார் சிரித்தார். ‘அட நீ வேறம்மா.. நம்ம ஆடிட்டர கேளு தெரியும்.. எவ்வளவு கொள்ளையடிச்சிருக்கான்னு.. எல்லாம் நம்ம பணம்தான்.. அவங்கப்பன் அன்னைக்கி எங்கிட்டருந்து கொள்ளையடிச்சான்.. இப்ப மகன்.. அதனாலதான் இந்த சம்பந்தம் வேணாம்னு தலபாடா அடிச்சிக்கிட்டேன்.. ஆத்தாளும் பொண்ணுந்தான் ஊர்ல இல்லாத வெள்ளத்தோல பாத்துட்டாப்பல குதிச்சீங்களே.. இப்ப என்னடான்னா நம்ம பணத்த வச்சி நம்மளையே வெல பேச நிக்கான்.. குடும்பச் சங்கதி ஊரெல்லாம் தெரிய வேணாமேன்னு பாக்கேன்.. இல்லன்னா ரெண்டு பயலையும் கோர்ட் வாசல்ல ஏத்திருவேன்.. அட அது கெடக்குது களுத.. நீ சொல்லு.. செல்வம் வர்றதுக்கு இன்னும் பத்து நாளாவது ஆகும்.. நீ ஆஃபீசுக்கு வர்றியா, இல்ல செல்வம் வந்துரட்டுமா?’

ராசம்மாள் வியப்புடன் தன் தந்தையைப் பார்த்தாள். ‘நா ஆஃபீசுக்கு வர்றதுக்கும் செல்வத்துக்கும் என்னப்பா சம்பந்தம்? ஏன் அவன் இல்லாம என்னால ஒன்னும் செய்ய முடியாதுங்கறீங்களா?’

நாடார் உரக்கச் சிரித்தார். ‘அட இங்க பார்றா? நா அப்படி சொல்வேனா? ஆஃபீஸ் விஷயமெல்லாம் ஒனக்கு தெரியுமோ தெரியாதோன்னு அப்படி கேட்டேன்..’

‘எனக்கு வக்கீல் அங்கிள பாக்கணும்.. இந்த பேர் மாத்தறதுக்கு தேவையானதையெல்லாம் இன்னைக்கி முடிச்சிரணும்.. நானும் ஒங்களோடயே வரேன். ஒங்கள டிநகர் ஆஃபீஸ்ல விட்டுட்டு நா அங்கிள பாக்கப் போறேன். அங்கிள், ‘நா கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னால வந்துரும்மா.. இன்னைக்கே ஃபைல் செஞ்சிரலாம்னு சொன்னார்.’

நாடார் கேலியுடன் தன் மகளைப் பார்த்தார். ‘இப்ப பேர மாத்தி என்னம்மா செய்யப் போறே? அதுக்கு இப்ப என்ன அவசியம்னு கேக்கேன்?’

‘இருக்குப்பா.. எனக்கு இருக்கு.. ராசம்மாள்ங்கற பேர வச்சியே என்னெ பட்டிக்காடு ஒனக்கு ஒன்னுந் தெரியாதுன்னு மட்டந்தட்டுனவராச்சே அவர்? அவருக்கு நா யாருன்னு காட்டணும்பா.. அதுக்கு முதல் ஸ்டெப்தான் இந்த பேர் மாத்தம்.. என்னெ தடுக்காதீங்க.’

மகளின் குரலிலிருந்த உறுதி நாடாரையே ஒரு கணம் சிந்திக்க வைத்தது. ‘சரிம்மா.’ என்று இறங்கிவந்தார். ‘எதுக்கும் சாக்கிரதையா இருந்துக்க.. அந்த பயலும் சரி அவன் அப்பனும் சரி.. களவாணிப் பயலுக.. எதையும் செய்ய துணிஞ்சவனுங்க.. சொல்லிட்டேன்.. சரி, துணிய மாத்திக்கிட்டு ரெடியாவு.. தோ வந்துடறேன்.’

நாடார் படியேறி தன் அறைக்குச் செல்ல ராசம்மாள் தன் தாயை தேடிக்கொண்டு சமையலறையை நோக்கிச் சென்றாள்.

*****


சுந்தரலிங்கம் அறையை விட்டு வெளியேறும் வரைக் காத்திருந்த சேதுமாதவன் மேற்கொண்டு என்ன செய்யலாம் என சிந்திக்கலானார்.

இன்னும் அரை மணி நேரத்தில் சோமசுந்தரம் கேட்டிருந்த அந்த கடிதம் கிடைக்காவிட்டால் அவருடைய கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று நினைத்தார்.

அவர் போர்ட்ல இருக்கறவரைக்கும் தனக்கு இருந்துவந்த பாதுகாப்பு இனி இருக்காது என்பதும் அவருக்கு தெரியும். மாதவனுக்கும் தனக்கும் இடையில் இருந்த பழைய பகையை நினைவில் வைத்துக்கொண்டு தன்னை பழிவாங்க வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணம் அவரை மேலும் கலங்கடித்தது. ஆகவே எத்தனை விரைவில் சோமசுந்தரத்தின் பிரதிநிதி ஒருவர் போர்டில் நுழைகிறாரோ தனக்கு அத்தனை நல்லது என்று நினைத்தார்.

சோமசுந்தரத்தின் வழக்கறிஞரையும், ஆடிட்டரையும் அவருக்கும் நல்ல பரிச்சயம் இருந்தது. மூவரும் சேர்ந்து குடிகார க்ளப்பில் அங்கத்தினர்களாயிற்றே.. எத்தனை ஊற்றி கொடுத்திருப்பார்? அந்த விசுவாசம் இல்லாமலா போய்விடும் என்ற நினைப்பு அவருக்கு.

அத்துடன் சோமசுந்தரத்தைப் பற்றிய அந்த செய்தியை ஃபேக்ஸ் மூலம் மாதவனுடைய பிரத்தியேக ஃபேக்ஸ் எண்ணுக்கு அனுப்பியவர் யாராயிருக்கும் என்றும் அவருடைய சிந்தனை ஓடியது.

நேரே மாதவனிடத்தில் சென்று கேட்டுறலாம்னு பாத்தா அந்த ஃபிலிப் வேற நந்தி மாதிரி காலையிலருந்து மாதவன் ரூம்ல ஒக்காந்துருக்கான். சுந்தரலிங்கத்த பாக்கலாம்னு போன எடத்துலயும் அவந்தான் இருந்துக்கிட்டு தடுத்தான். இங்க போனா இங்கயும் இருக்கான்.. என்னதான் நடக்குது?

ஒருவேள நாம அந்த லெட்டர் விஷயமா சுபோத்த கொடஞ்சது ஃபிலிப்புக்கு தெரிஞ்சி அத மாதவன் கிட்ட போட்டு குடுக்கானோ? ஒருவேளை இந்த ஃபேக்சுக்கு பின்னாலயும் இவந்தான் இருக்கானோ? இருக்கும், இருக்கும்.. நாடாரோட ஆள்தானே இவன். பேசாம இவந்தான் சார் இதுக்கு பின்னாலன்னு சோமசுந்தரத்துக்கிட்ட ஒரு போடு போட்டா என்ன?

அடுத்த சில நொடிகளில் சோமசுந்தரத்திடம் இதை சொல்வதன் மூலம் அவர் விரும்பியதை தன்னால் செய்ய இயலாமற் போனதற்கும் ஃபிலிப் சுந்தரம்தான் காரணம் என்று தான் தப்பித்துக்கொள்ள வழியிருக்கிறதே என்ற முடிவுக்கு வந்தார்.

நினைத்ததை செயல்படுத்த தன்னுடைய செல் ஃபோனை எடுத்து சோமசுந்தரம் எண்ணை டயல் செய்தார்.

****

சோமசுந்தரம் தான் வாசித்துக்கொண்டிருந்த பத்திரிகையை மேசையின் மீது வீசியெறிந்தார். ‘இடியட்ஸ்..’ என்று உதடுகள் முனுமுனுக்க அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்தார்.

‘டாட்.. கூல் டவுன்.. இப்படி கோபப்படுறதுனால ஒங்க பி.பிதான் ஏறும்.. ஏற்கனவே டயஸ்டாலிக் லெவல் ஜாஸ்தியாருக்கு..’ என்ற தன் மகள் பூரணியை ஒருமுறை கோபத்துடன் பார்த்தார்.

‘இங்க பார் பூரணி.. நானும் டாக்டர்தாங்கறத மறந்துராத. அதப்பத்தியெல்லாம் கவலைப்படற நேரம் இல்ல அது. காலையிலருந்து ஃபோன் மேல ஃபோன்.. பிச்சாத்து மூனு கோடி ரூபா.. அதுல ரெண்டு கோடிய பொரட்டியாச்சு.. இன்னும் ஒரேயொரு கோடி.. எல்லாம் அந்த கெளவனால.. அப்பவே நம்ம வேணுக்கிட்ட சொல்லியிருந்தேன்.. கவர்ன்மெண்ட்ல வேல செய்யறவனையெல்லாம் ஃபபனான்ஸ் கம்பெனி போர்டுக்குள்ள விடாதீங்கய்யான்னு.. கேக்கல? இப்ப என்னாச்சி.. எவ்வளவு வருசமா ஒளச்சி சம்பாதிச்ச பேர்மா இது.. ஒரே நாள்ல.. இது நம்ம ஆஸ்பத்திரியோட பேரையுமில்லம்மா கெடுத்துருச்சி.. ஒரே ஸ்ட்ரோக்ல ரெண்டு அடி.. மிச்சமிருக்கற இந்த ஆறுமாசத்துல பேங்க்லருந்து எவ்வளவு கறக்கமுடியுமோ அவ்வளவையும் கறந்துரலாம்னு பாத்தேனே? அதுகூட பரவால்லை பூரணி.. போயும், போயும் அந்த நாடார் முன்னால தலை குனியறா மாதிரி ஆயிருச்சே.. அந்த ஃபேக்ஸ் மட்டும் அப்ப வராம இருந்திருந்தா அந்த நியூசையே வெளிய விடாம அமுக்கியிருக்கலாமே.. ராஸ்க்கல்.. அவன் மட்டும் யாருன்னு தெரிஞ்சுது? அவனெ உண்டு இல்லேன்னு ஆக்கிருவேன்..’ கோபத்தின் உச்சியில் அவருடைய குரல் நடுங்குவதைக் கண்ட பூரணி எழுந்து அவரை நெருங்கி அவருடைய கரங்களைப் பற்றினாள்.

‘Leave it Dad.. Leave it to me.. Let me handle it.. நீங்க இன்னைக்கி ஹாஸ்ப்பிடலுக்கு வரவேணாம்.. Take some rest.. இந்த நியூஸ் வெளியானதொன்னும் நீங்க நினைக்கறாமாதிரி அத்தன பெரிய விஷயமில்லை.. எத்தன பேர் படிச்சிருக்கப் போறாங்கன்னு நினைக்கீங்க? ஃப்ரண்ட் பேஜ்ல வந்திருந்தாலும் பரவாயில்லை.. வந்திருக்கறது பிசினஸ் பேஜ்ல.. பிசினஸ் பண்றவங்களுக்கு இது ஒன்னும் பெரிசில்ல டாட்.. It will die down. Don’t worry...’

சோமசுந்தரம் இல்லையென்று தலையை அசைத்தார். ‘இல்லம்மா.. இது யாரோ வேணும்னே செஞ்சிருக்காங்க. எங்க இது பேப்பர்ல வராம போயிருமோன்னு நினைச்சி யாரோ இத ஃபேக்ஸ் மூலமா எங்க போர்ட் மீட்டிங் நடந்துக்கிட்டிருக்கற நேரத்துல எங்க சேர்மன் ஆஃபீசுக்கு அனுப்பியிருக்காங்க.. சேர்மனோட பெர்சனல் ஃபேக்ஸ் நம்பர் தெரிஞ்சிருக்கணும்னா அது நம்ம பேங்குக்குள்ளவே இருக்கற ஆளாத்தான் இருக்கணும்.. இதத்தான் என்னால தாங்கிக்க முடியல.. யார்.. அது யாராயிருக்கும்? அத கண்டுபிடிக்கணும்..’

பூரணிக்கு அவருடைய குரலிலிருந்த உச்சக்கட்ட கோபம் அச்சத்தையளித்தது. இனியும் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தால் அவருடைய கோபம் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்தவள் அவரிடம் சொல்லிக்கொள்ளாமலே ஓசைப்படாமல் வெளியேறினாள்.

இதையறியாத சோமசுந்தரம் தன்னுடைய செல் ஃபோன் ஒலிப்பதை செவியுற்ற சோமசுந்தரம் பூரணி எடுப்பாள் எனக் காத்திருந்தார் . அது தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கவே தான் நின்றிருந்த இடத்திலிருந்து திரும்பி அவள் அமர்ந்திருந்த இருக்கையைப் பார்த்தார். காலியாயிருந்தது.

விரைந்துச் சென்று எடுத்தார். சேதுமாதவன்! ‘என்ன விஷயம்? அந்த லெட்டர் கெடைச்சிதா?’ என்றார். அடுத்த சில நிமிடங்கள் எதிர்முனையிலிருந்து வந்த பதிலை நம்ப முடியாமல் எரிந்து விழுந்தார். ‘என்ன சொல்றீங்க? யார், அந்த ஃபிலிப் சுந்தரமா? I can’t believe this!’

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

பாவம்...பிலிப்!

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

பாவம்...பிலிப்!//

அவர் மட்டுமா.. மாணிக்கவேல்?

எங்க நேத்து காணோம்.. பாத்து பாத்து கண்ணு பூத்ததுதான் மிச்சம்.

சரீ.. நம்ம என்னுலகத்துல பின்னூட்டம் போடறதில்லேங்கற முடிவுக்கு வந்திட்டீங்களா என்ன?