சோமசுந்தரத்துடன் பேசி முடித்துவிட்டு (வத்திவைத்துவிட்டு என்பதுதான் சரி) இணைப்பைத் துண்டித்தப்பிறகுதான் தான் செய்தது சரிதானா என்ற நினைப்பு வந்தது சேதுமாதவனுக்கு.
தான் கூறியதைக் கேட்டும் பெரிதாக அதிர்ச்சியைக் காட்டாமலே சோமசுந்தரம் எதிர்முனையில் சிறிது நேரம் மவுனமாக இருந்துவிட்டு ‘Let me see’ என்று சுருக்கமாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தது அவரை சற்றே சிந்திக்க வைத்தது.
‘ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் உங்களுக்கும் மாதவனுக்கும் இடையில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்கின்ற பிரச்சினை ஏற்பட்டும் சூழ்நிலையில் எங்களுடைய இயக்குனர்கள் குழு நிச்சயம் இன்னும் மூன்று, நான்கு ண்டுகள் சேர்மனாக இருக்கப் போகும் மாதவனுக்குத்தான் முன்னுரிமை அளிப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு நடந்துக்கொள்ளுங்கள்.’ என்று முன்பொரு நாள் தன்னை சோமசுந்தரம் வேறு சில இயக்குனர்களுடைய முன்னிலையில் எச்சரித்தது நினைவுக்கு வரவே மேலும் டென்ஷனாகிப் போனார் சேதுமாதவன்.
ச்சை.. பழிவாங்கறதுக்கு இதான் சரியான டைமுன்னு நாம நினைச்சது தப்புத்தான் போலருக்கு. This is not the opportune time.. We will have to wait.. மாதவன் சேர்மன் போஸ்ட்ல ஜாய்ன் பண்ற நேரத்துல நிச்சயமா இந்த மாதிரி சில்லறைத்தனமான பிரச்சினைய எழுப்புறது சரியாயிருக்காது போல..
அதனால நம்ம அணுகுமுறைய இப்போதைக்கு மாத்திக்கணும்.. வேறவழியில்லை..
சற்று முன் குடித்த மதுவின் போதை சற்றே இறங்கியிருந்ததை உணர்ந்த சேதுமாதவன் மீண்டும் மதுப்பாட்டிலை நோக்கி கையை நீட்ட அவருடைய செல் ஃபோன் சிணுங்கியது.
திரையைப் பார்த்தார். பரிச்சயமில்லாத எண்.. யார்ரா இது சாவுக்கிராக்கி. இந்த நேரத்துல.. Ignore செஞ்சிரலாமா என்று நினைத்தவர்.. சே.. யாராச்சும் முக்கியமான ஆளா இருந்து.. வேணாம் யார்னு பார்த்துருவோம்.. ‘யெஸ் ஹூ ஈஸ் தீஸ்?’
எதிர்முனையில் அவர் சற்றும் எதிர்பாராமல் மாதவனுடைய குரலைக் கேட்டவர் சட்டென்று கையிலிருந்து மதுபாட்டிலை வைத்துவிட்டு சீரியசானார். ‘மிஸ்டர் மாதவன்! வந்து சேர்ந்தாச்சா?’ என்றார் குரலில் வலியதொரு உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு.. ‘சாரி சார். என்னால ஏர்போர்ட்டுக்கு வரமுடியலை...’
எதிர்முனையில் தன்னுடைய தொலைப்பேசி அழைப்பிற்கு எப்படி ரியாக்ட் செய்வாரோ என்ற கவலையிலிருந்த மாதவனுக்கு சேதுமாதவனின் குரலிலிருந்து உற்சாகம் போலியானது என்று தெரிந்தாலும் அதைக் கண்டுக்கொள்ளவில்லை.
‘It is Ok. உங்க Executives மிஸ்டர். சுந்தரலிங்கமும் அப்புறம் மிஸ்டர். பிலிப் சுந்தரமும் வந்திருந்தாங்க.’ என்று எதிர் முனையிலிருந்து மிகச்சரளமாக வந்த பொய் சேதுமாதவனை உசுப்பேத்தியது.
எடோ மாதவா.. அபிநயிக்கான இல்லே.. எண்டெடத்து வேண்டா மாதவன்.. எண்டெடத்து வேண்டா.. ஞான் சேது மாதவனாக்கும்.. ஒனக்கு அப்புறமா இருக்கு...நீ கொஞ்சங்கூட எதிர்பார்க்காத நேரத்துல அடிக்கறேன்.. இப்ப வேணாம்..
ஒரு அசட்டு சிரிப்புடன், ‘I know Sir, I know. I only told them to receive you in the airport.’ சமாளித்தார். ‘சொல்லுங்க மாதவன் சார். ஹோட்டல் கம்ஃபர்டபிளா இருக்கா?’
எதிர்முனையில் மாதவன் பதிலுக்கு சிரிப்பது கேட்டதும் பொங்கி வந்த கோபத்தை அடக்கமுடியாமல் சேதுமாதவனின் கை மீண்டும் மது பாட்டிலை நோக்கி நீண்டது.
‘அதெல்லாம் இருக்கு. நான் ஒங்கள கூப்பிட்டது எதுக்குன்னா...’
‘சொல்லுங்க.. ஏதாச்சும் ஹெல்ப்பா?’ பேச்சினூடே ஒரு விரலளவு மதுவை கோப்பையில் ஊற்றி வாயருகே கொண்டு சென்றவர் மாதவனின் அழைப்பைக் கேட்டதும் வியந்துபோய் கோப்பையை தவறவிட மது தரையில் விரிக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கார்ப்பெட்டில் விழுந்து சிதறியது..
‘எங்க சார்?’ என்றார் தன்னையே நம்ப முடியாமல்.
‘இங்க தான் Executive Loungeலயே.. ஒரு Exclusive Bar இருக்கு..’
சேதுமாதவன் தயக்கத்துடன், ‘வேற யாரையும் invite பண்ணியிருக்கீங்களா சார்?’ என்றார்.
எதிர் முனையில் மாதவன் தயங்குவது தெரிந்தது..
‘No, No. வேற ஃப்ரெண்ட்ஸ் யாரையும் கூப்டுருந்தாலும் பரவாயில்லை.. சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னுதான் கேட்டேன்.’
‘வேற யாருமில்லே.. ஏர்போர்ட்டுக்கு வந்திருந்த எக்ஸ்யூட்டிவ்ஸ்தான். They are expected in another ten, fifteen minutes. Nothing official.. நீங்களும் இருந்தா நல்லாருக்கும்னு நினைச்சேன்.. Please come..’
சுந்தரன்மாரானல்லே.. இருந்நோட்டே.. அவனுங்க ரெண்டு பேருமே குடிக்கமாட்டான்க.. இவனுங்களோட என்னத்த பார்ட்டி வேண்டிகிடக்கு.. சரி.. அவனா கூப்டறான்.. வரலேன்னு சொல்லி ஏர்போர்ட்ல அவன் பண்ணத நினைச்சிக்குட்டுத்தான் நா வரமாட்டேங்குறேன்னு அவன் நினைச்சிக்கக்கூடாது.. போவோம்..
‘யெஸ் சார். I will be there in another half an hour.’ என்று இணைப்பைத் துண்டித்தார்.
கார்பெட்டில் சிந்திக்கிடந்த மதுவைக் கண்டுகொள்ளாமல் மீண்டும் ஒரு விரலளவு மதுவை கோப்பையில் ஊற்றி ஒரே மடக்கில் ஊற்றிக்கொண்டு சவரம் செய்துக்கொண்டு புறப்படும் நோக்கத்துடன் குளியலறையை நோக்கி நடந்தார்.
******
‘என்ன மைதிலி இதப்போய் பெரிய விஷயம்னு அப்பாவையும் கூட்டிக்கிட்டு இந்த நேரத்துல வந்திருக்கே.. சீனிவாசன் பேசாம ஒரு ராத்திரிக்கி க்ளினிக்கிலேயே இருக்கட்டும்.. காலையில டாக்சி பிடிச்சி அனுப்பி விடறேன்.’
மைதிலி அதிர்ச்சியுடன் ராஜகோபாலனைப் பார்த்தார். ‘என்ன அங்கிள் நீங்க? அவன் வீட்ல அவன காணோமேன்னு தேடிக்கிட்டிருப்பாங்களே..’
பட்டாபி குறுக்கிட்டு, ‘ஏய் மைதிலி, நீதான் அவா வீட்ல யாரும் இல்லே சென்னைக்கு போயிருக்காங்கன்னு சொன்னீயே.. மறந்துட்டியா?’ என்றார் எரிச்சலுடன்.
‘அந்த சிவகாமி மாமி இருக்காங்களேப்பா.. அவா சாமானையெல்லாம் ஒதுக்கிக்கிட்டுத்தான் போவான்னு சீனிதான் சொன்னான். இவந்தான் அந்த மாமிய அழைச்சிக்கிட்டு போணும்.. இவன் வீட்டுக்கு வரலேன்னு மாமி சென்னைக்கு கூப்டு சொல்லிட்டான்னா வேற வினையே வேணாம்..’
‘சரிம்மா.. இந்த நேரத்துல அவன தனியா ஏத்தி அனுப்பி வழியில ஏதாச்சும் பிரச்சினையாயிருச்சின்னா?’
‘அங்கிள். சீனி எங்க? அவனையே கேட்டுருவோம். அவன் போயிருவேன்னு சொன்னா அனுப்புவோம். இல்லன்னா ராத்திரி இங்க தங்கிட்டு போட்டும்.’
‘அதுவும் சரிதான். பட்டாபி சார். நீங்க இங்கயே இருங்கோ.. நானும் மைதிலியும் போய் பார்த்துட்டு வரோம்.’ என்றவாறு ராஜகோபாலனும் மைதிலியும் வராந்தாவில் இறங்கி நடக்க பட்டாபி வேறு வழியில்லாமல் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினார்.
கட்டிலில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த சீனிவாசனை வாசலில் இருந்தவாறே பார்த்த மைதிலி இவனை எழுப்பி அனுப்ப வேண்டுமா என்று யோசித்தாள். அறைவாசலில் இருந்து உறங்கும் அவனைப் பார்த்தபோது அவளையுமறியாமல் அவன்மேல் ஒரு பச்சாதபம் தோன்றியது. எனக்கு யாருமில்லே மை.. நீயும் என்னெ விட்டுட்டு போயிறாதேன் என்று அவளை நோக்கி அரற்றுவது போலிருந்தது.. ஹ¥ம்.. என்ற பெருமூச்சுடன் தன்னருகில் நின்றிருந்த ராஜகோபாலனைப் பார்த்தாள்.
‘அங்கிள், நா ஒரு காரியம் பண்றேன். அவன் வீட்டுக்கு ஃபோன் பண்ணி மாமி இருக்காளான்னு பாக்கறேன்.’ என்றவாறு தன்னுடைய செல் ஃபோனை எடுத்து டயல் செய்தாள்.
எதிர்முனையில் பரிச்சயமில்லாத குரல் கேட்கவே, ‘நான் சீனியோட ஃப்ரெண்ட் மைதிலி பேசறேன். அங்க சிவகாமி மாமி இருக்காளா?’ என்றாள் ஹிந்தியில்.
ஆமாம் என்று தமிழில் பதில் வரவே.. ‘இருக்காளா.. சித்தே கொடுங்கோளேன்.’ என்றாள்
சிவகாமி லைனில் வந்ததும் அன்று காலையில் சீனிக்கு நடந்த விபத்தைப் பற்றி சுருக்கமாகக் கூறினாள். ‘மாமி.. பதற்றப்படாதேள். சின்ன ஃப்ராக்சர்தான். மாவு கட்டு போட்டுருக்கோம். இப்ப அசந்து தூங்கிண்டிருக்கான். நாளைக்கு கார்த்தால நானே கொண்டாந்து விடறேன்.’
‘என்னடீம்மா நீ.. இப்ப சித்தே நேரத்துக்கி மின்னாடிதான் சரோ மெட்றாஸ்லருந்து கூப்ட்டா.. சீனி செல் எடுத்துண்டு போலையா.. அடிச்சிக்கிட்டேருக்கேன்னா.. மறுபடியும் கூப்டா நா என்ன பண்றது?’
மைதிலிக்கு அப்போதுதான் சீனிவாசனுடைய செல் ஃபோனைப் பற்றி நினைவுக்கு வந்தது. அவனை தாதரில் சந்தித்ததிலிருந்து அவன் தன்னுடைய செல் ஃபோனை உபயோகிக்கவில்லையென்பது.. அப்போ.. அத எங்கயோ மிஸ் ஆயிரிச்சி போலருக்கே.. ஐயையோ இப்ப என்ன பண்றது?
‘புரியுது மாமி.. ஆனா நீங்களே எதையாச்சும் சொல்லி சமாளிங்க மாமி.. ஆண்ட்டி கூப்ட்டா வந்ததும் தூங்க போய்ட்டான்னு சொல்லி சமாளிங்க. சீனி கையில செல் ஃபோன் இல்லே மாமி. அவன் அத வீட்லயே வச்சிட்டு வந்திட்டானா இல்லே வழியில விட்டுட்டானான்னு அவன் எழுந்தாத்தான் தெரியும். விடிஞ்சதும் நானே கொண்டு வந்து விடறேன் மாமி. அதுவரைக்கும் மேனேஜ் பண்ணுங்களேன்.’
தொலைப்பேசியில் கெஞ்சும் மைதிலியையே ராஜகோபாலன் வியப்புடன் பார்த்தார். இவளுக்கு இன்னைக்கி ஏற்பட்ட இழப்பை பற்றி கவலையே படாம.. யாரோ ஒருத்தனுக்கு.. அதுவும் இன்னும் ரெண்டு மூனு வாரத்துல ஊர விட்டே போகப்போறவனுக்கு... இது வெறும் ஃப்ரெண்ட்ஷிப்தானா.. இல்லே வேற ஏதாவதா..
தொடரும்
4 comments:
இப்ப நிச்சயமா 'வேற எதாவதும்'இல்லை. ஆணா எதிர் காலத்திலெ 'வேற எதாவதுமா ஆணா
ஆச்சரிய படுவதற்கும் இல்லை
அப்படி ஆணால் அதற்கு மைதிலியின்
பெற்றோரெ காரணம்
வாங்க ஜி!
நீங்க சொல்றது சரிதான். வெறும் நட்பா இருக்கறத காதல், கல்யாணம் வரைக்கும் கொண்டு விடறது பெற்றோர்தான்.
ஆனா இதுல சீனியோட தரப்பிலருந்தும் காதல்தானே.. மைதிலிக்குதான் குழப்பம்.
மாதவன் எடுக்கும் முயற்சி சரியானதே. ஆனால் எவ்வளவு சரியாக இந்த முயற்சி செயலாகப் போகிறது என்பதைப் பொறுத்துதான் அதன் விளைவும் இருக்கும். உண்மையிலேயே மனம் விட்டுப் பேசினால் நல்லது நடக்கும். ஆனால் ஏற்கனவே முடிவெடுத்து விட்டு பேச உட்கார்ந்தால் ஒன்றும் நடக்காது.
வாங்க ராகவன்,
மாதவனுடைய தரப்பில் இருந்து எடுக்கப்பட்ட முயற்சியில் வஞ்சக எண்ணம் ஏதும் இல்லை. ஆனால் சேதுமாதன் அப்படியல்ல. இது ஒரு தாற்காலிக நடவடிக்கையே.. அவர் ஒரு குமுறும் எரிமலை.. எப்ப வேணும்னாலும் வெடிப்பார்.
Post a Comment