30.5.06

சூரியன் 86

ஆலப்புழை-சென்னை விரைவு வண்டி சென்னை வந்தடையும் நேரம் காலை 5.45 மணி என்று நந்தக்குமாருக்கு தெரியும்.

காலை ஐந்து மணிக்கு செல் ஃபோனில் அலாரம் வைத்துவிட்டு படுத்தவன் அதற்கு அரைமணி முன்பே உறக்கம் கலைந்து எழுந்தான். வண்டி ஏதோ ஸ்டேஷனில் நிற்பது தெரியவே தன்னுடைய படுக்கையைவிட்டு இறங்கி சட்டைப் பையிலிருந்த கண்ணாடியை எடுத்து அணிந்துக்கொண்டு ஜன்னல் வழியே தெரிகிறதா என்று பார்த்தான்.

குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தால் இது ஒரு ரோதனை.. ஜன்னலுக்கு வெளியே எல்லாமே மங்கலாகத்தான் தெரியும். தலை முடியை சரிசெய்துக்கொண்டு வாசலை நோக்கி விரைந்து சென்று பார்த்தான். வண்டி அரக்கோணத்தை விட்டு புறப்பட்டுக்கொண்டிருந்தது. ‘இங்கருந்து ஒரு மணி நேரம் சார். வண்டி ஷார்ப்பா அஞ்சே முக்காலுக்கு செண்ட்ரல் போயிரும்.’ என்ற கோச் அட்டெண்டரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு தன்னுடைய படுக்கைக்கு திரும்பி வந்தான்..

ஸ்டேஷனுக்கு முரளிதரன் வரும் விஷயத்தை நளினியிடம் வேண்டுமென்றுதான் கூறாமல் மறைத்திருந்தான். ‘அவனெ எந்துனா விளிச்செ.. அவனெ எனிக்கி தீர இஷ்டல்லான்னு அறியில்லே..’ என்று வாக்குவாதம் செய்வாள் என்று நினைத்துத்தான் அதை அவளிடமிருந்து மறைத்திருந்தான்.

அவர்களிருவரும் தங்குவதற்கு முரளிதான் ஏற்பாடு செய்திருந்தான். ‘ரூம் ஆயிரம், ஆயிரத்தைந்நூறு வரை பரவால்லை முரளி.. அநேகமா ஒரு வாரம் இருப்போம்.. சீப்பான ஓட்டல்ல ரூம் போட்டா நளினி திட்டுனாலும் திட்டுவா..’ என்று ஏற்கனவே கூறியிருந்தான். பதிலுக்கு, ‘நீ எப்படா பொண்டாட்டி தாசனானே..’ என்று முரளி கிண்டலடித்ததைப் பொருட்படுத்தாமல், ‘எடோ தான் கல்யாணம் களிச்சிட்டில்லல்லோ.. நீ என்ன வேணும்னாலும் பேசுவேடா..’ என்றது நினைவுக்கு வர அவனையுமறியாமல்  உதடுகளில் புன்னகை தவழ்ந்தது...

முரளிதரனும் நந்துவுக்கும் இடையிலிருந்த பழக்கம் ஒரு வருடமா, இரண்டு வருடமா.. பதினைந்து வருட பழக்கமாயிற்றே.. மார்க்சிய சித்தாந்தங்களில் ஊறித் திளைத்திருந்த முரளி நந்துவின் மானசீக குரு என்றால் மிகையாகாது..

‘இங்க பார் நந்து.. நீ ரெண்டுல ஒன்னு தீர்மானம் செஞ்சிரணும்.. யூனியனா.. ப்ரோமோஷனான்னு.. நளினிக்கு என்னெ அடியோட புடிக்காதுன்னு ஒனக்கு தெரியும்.. நீ என்னோட சேர்ந்து யூனியன், கீனியன்னு அலையறேன்னு தெரிஞ்சா அவளுக்கு என் மேலருக்கற கோவம் ஜாஸ்தியாயிரும்.. ஒன்னெ எங்கிட்டருந்து முழுசுமா பிரிக்கறதுக்கு என்ன வேணும்னாலும் செய்வா.. இப்பவே சொல்லிட்டேன்.. அவளுக்கு நீ ஒரு சக்சஸ்ஃபுல் ஆஃபீசரா வரணும்னுதான் ஆசை.. அதனால ஒனக்கு யூனியன் சரிபட்டு வராது.. என்ன சொல்றே?’

முரளியிடம் பழகவாரம்பித்த முதல் இரண்டு வருடங்களில் அவன் தன்னிடம் அடிக்கடி பேசிய வார்த்தைகள் இவை.. அவனும் நளினியும் கோவையில் இருந்த வெவ்வேறு கிளைகளில் கடை நிலை அதிகாரிகளாக பதவி உயர்வுபெற்று அமர்த்தப்பட்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து தன்னுடைய கிளை மேலாளரைப் பகைத்துக்கொண்டு தண்டனை மாற்றத்தில் (punishment transfer) நந்துவின் கிளைக்கு மாற்றப்பட்டவன் முரளி..

அடுத்த ஐந்தாண்டுகளில் நந்துவின் பாதை அடியோடு மாறிப் போனதற்கு மூலகாரணமே முரளிதான் என்பது நளினியின் அசைக்கமுடியாத எண்ணம்.

‘அவனும் அவெண்ட தாடியும்.. அவன்டெ மொகத்த பார்த்தால அவன் ஒன்னுக்கும் ஒதவாதவன்னு ஒங்களுக்கு தெரியலையா நந்து.. அவன்கூட போயி சவகாசம் வச்சீங்க.. அப்புறம் ஒங்க காரியரே நாசமா போயிரும்.. சொல்லிட்டேன்..’

ஆனால் முரளிதரனிடம் ஒரு வசீகரம் இருந்தது.. அவனுடன் நெருங்கி பழகிய எவருமே அவனை பகைத்துக்கொண்டு விலகிச் சென்றதில்லை.. ஆண்கள் மட்டுமல்லாமல் அவன் பணிபுரிந்த கிளையிலிருந்த மற்ற பெண்களும்கூட அவனுடைய வசீகரப் பார்வையில்.. ‘டேய்.. நீ பொண்ணா பொறந்திருக்கணுண்டா.. ஒங் கண்ணுல அப்படியொரு கவர்ச்சி இருக்கு..’ என்று பல சக நண்பர்கள் கூறுவதை நந்து கேட்டிருக்கிறான்..

உண்மைதான். நந்துவுக்கும் அது தோன்றியிருக்கிறது.. அத்துடன் அவன் வைத்திருந்த அந்த டிசைனர் தாடியும் மீசையும்.. அவனை நந்து பார்த்த நாள் முதலாகவே அவனை தாடி மீசையுடந்தான் பார்த்த ஞாபகம்.. ‘எதுக்குடா இது.. இந்த சின்ன வயசில.. சாமியார் மாதிரி..’ என்று நந்து பலமுறை கேட்டிருக்கிறான்.

‘இதுக்கு பின்னால ஒரு ரகசியம் இருக்குடா.. அது ஒனக்கெதுக்கு..’

‘என்ன லவ் ஃபெய்லியரா.. யார்றா அது?’

அப்போதெல்லாம் முரளி சிரித்து மழுப்பிவிடுவான்.. ஆனாலும் இருவரும் சேர்ந்து மது அருந்தும் வேளைகளில் அவன் போதையின் உச்சியில் பழைய மலையாளப் படத்தில் சத்யன் காதல் தோல்வியில் பாடிய பாடலை முனுமுனுப்பதைக் கேட்டிருக்கிறான்..

‘புரிஞ்சும் புரியாமலும் இருக்கற பருவத்துல வர காதல் இருக்கே.. அதுலருக்கற சுகமெல்லாம்.. ஒங்கள மாதிரி, வேலை.. அந்தஸ்த்துன்னு பாத்து வர்ற காதல்ல இல்லடா..’ என்பான் சம்பந்தமில்லாமல்..

நந்தக்குமார் வலியுறுத்தி கேட்டால் மழுப்பி வேறு விஷயத்திற்கு தாவிவிடுவான்..

இவன் மனசுல என்னமோ வேதனை இருக்கு.. சொல்ல மாட்டேங்குறான்.. என்று நினைத்துக்கொண்டு அதை அப்படியே விட்டுவிடுவான் நந்து..

முரளியின் குடும்ப சூழலைப் பற்றி அவ்வப்போது அவன் சொல்வதை வைத்து அவனை நம்பி திருமணத்திற்கு தயாராகவிருந்த இரண்டு தங்கைகள்.. படித்துக்கொண்டிருந்த இரண்டு சகோதரர்களென  ஒரு பெரிய குடும்பமே இருந்தது என்றும் கேள்விப்பட்டிருந்தான்..

அத்தகைய சூழ்நிலையிலும் தன்னுடைய குடும்ப பாரத்தைக் குறித்து அவனிடமோ அல்லது வேறு எவரிடமோ முரளி ஒரு நாளும் புலம்பியதில்லை என்பதையும் பல சமயங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறான்..

மாதத்தின் முதல் நாளன்றே சம்பளத்தின் பெரும் பகுதியை சென்னைக்கு அனுப்பிவிடுவான் என்பதும் நந்துவுக்குத் தெரியும்..

‘ஏன் நீங்களுந்தான் ஒங்க தம்பி, தங்கைங்கள படிக்க வச்சீங்க.. அதுக்காக இப்படியா தாடிய வச்சிக்கிட்டு நா தியாகம் பண்றேன்னு காட்டிக்கிட்டீங்க? அவன் ஒரு குறிக்கோளில்லாத ஆளுங்க.. யூனியன்னு சொல்லிக்கிட்டு எல்லாரையும் கெடுக்கறதுதான் அவன் வேலை.. அவனெ விட்டு தள்ளியே நில்லுங்க.. இல்லன்னா அப்புறம் நீங்கதான் வருத்தப்படுவீங்க..’ என்று நளினி அவனை எச்சரித்தபோதெல்லாம் நந்துவுக்கு அவன் மேலிருந்த பற்று அதிகரித்தது..

நளினி கோவையிலிருந்து பதவி உயர்வு பெற்று கேரளத்திலிருந்த ஒரு கிளைக்கு துணை மேலாளராக சென்றபோது நந்து அவளுடன் செல்ல மறுத்து கோவையிலேயே தங்குவதென தீர்மானித்து நளினியிடம் கூறியதும் அன்று மாலையே அவள் முரளியை தொலைப்பேசியில் அழைத்து வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தாள் என்பதை முரளி சிரித்துக்கொண்டே அவனிடம் கூறியபோது நந்து ஆத்திரமடைய, ‘டேய் நந்து.. எனக்கிப்படி ஒரு ஆள் இருந்திருந்தா ஒருவேளை நானும் இப்படி ஆயிருக்க மாட்டேனோ என்னவோ.. நளினிக்கு ஒம்மேலருக்கற அன்பெ பாக்கும்போது பொறாமையாருக்குடா.. நீ ஏன் கோபப்படறே.. பேசாம அவ கூடவே போ.. அதான் ஒனக்கு நல்லது..’ என்று அறிவுறுத்திய உண்மையான நண்பன் அவன்..

அதன்பிறகு நளினி அப்போது எச். ஆர் இலாகாவிற்கு தலைவராயிருந்தவரைப் பிடித்து நந்துவுக்கும் அவளுடைய கிளை இருந்த ஊரிலேயே இருந்த வேறொரு கிளைக்கு மாற்றம் பெற்றுக்கொடுக்க வேறு வழியின்றி முரளியை விட்டு கேரளம் சென்றதை இப்போது நினைத்துப் பார்த்தான்..

இருப்பினும் முரளியுடனான தொடர்பு விட்டுப்போகாமல் இருக்க நந்துவும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட துவங்கினான்.

அவனுடைய போக்கை முதலில் கவனிக்க தவறிய நளினி அவன் பணிபுரிந்த மேலாளர் ஒருமுறை அவரிடம் அவனைப் பற்றி புகார் கூற நளினி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து வெகுண்டெழுந்தாள்.. ஆனால் நந்துவின் போக்கில் எந்தவித மாற்றமும் ஏற்படாததுடன் அவனுடைய தொழிற்சங்க நடவடிக்கைகள் தீவிரமடைய அவர்களிருவருடைய தாம்பத்திய வாழ்க்கையும் தடம்புரண்டு போனது..

‘ஹ¥ம்.. இப்பருக்கற இந்த நிலமைக்கும் நானுந்தான் காரணம்.. அவளெ மட்டும் சொல்லி என்ன பண்றது?’ என்று மனதுக்குள் நினைத்தவாறு தன்னுடைய பெர்த்திலிருந்து இறங்கி தன்னுடைய பற்பசை.. பிரஷ் வைத்திருந்த பையை தேடி எடுத்து திறந்தான்..

‘எங்க வரைக்கும் வந்திருக்கு நந்து..’

கையில் பிரஷ்ஷ¤டன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.. ‘அரக்கோணம் கழிஞ்சு.. அடுத்து ச்செலப்போ பெரம்பூராயிருக்கிம்.. அரைமணியில செண்ட்ரல் எத்துவாயிருக்கிம்.. ஞான் போயி பல் தேய்ச்சிட்டு வராம்.. இறங்கிய வழிக்கு ஒரு மெட்றாஸ் காப்பி குடிக்கணும்.. ஸ்ட்ராங்கா ஒரு காப்பி குடிச்சி எத்தன வருஷமாச்சிடி.. கோயம்புத்தூர்லருக்கும்போது குடிச்சதுன்னு நினைக்கிறேன்..’

நளினி அவனைப் பார்த்தாள்.. இந்த குழந்தைத்தனம் மட்டும் இன்னும் இவனிடமிருந்து போகவில்லை.. ஆமாம். நந்து சொன்னா மாதிரி தமிழ் நாட்டுக் காப்பிக்கே ஒரு தனி ருசிதான்.. இறங்கனதும் குடிச்சிர வேண்டியதுதான்..

‘நானும் வரேன்..’ என்றவாறு பெர்த்திலிருந்த அவளும் இறங்கி இருவருமே சேர்ந்து பல் தேய்த்துவிட்டு திரும்பி இறங்குவதற்கு தயாராக உடைமாற்ற சுற்றிலுமிருந்த பயணிகள் எழுந்து அந்த இடமே பரபரப்பானது..

அடுத்த அரைமணியில் சென்னை செண்ட்ரல் நிலையம் வந்தடைய பிளாட்பாரத்தில் வந்திறங்கியதுமே புன்னகையுடன் தங்களை வரவேற்ற முரளியைப் பார்த்ததும் பொங்கி வந்த கோபத்துடன் விடுவிடுவென நந்துவை பொருட்படுத்தாமல் நளினி முன்னேறிச் செல்ல நந்து அவள் பின்னால் ஓட முரளி ஒரு விஷம புன்னகையுடன் அவர்கள் பின்னே சாவகாசமாக நடந்தான்..

சென்னை கம கம காப்பியை வாங்கிப் பருக சரவணா பவன் ரெஸ்டாரண்டில் காத்திருந்த நீஈஈஈண்ட க்யூ வரிசையைக்  கவனிக்கும் மனநிலையில் நந்துவோ, நளினியோ இருக்கவில்லையே..


தொடரும்..

5 comments:

G.Ragavan said...

செண்ட்ரல்ல இருக்குற சரவணபவன் ஒரு நல்ல வரப்பிரசாதம். வெல மத்த கேண்டீன்கள விடக் கூட இருந்தாலும் தரமும் சுவையும் நல்லாயிருக்கும். காப்பி குடிச்சதில்லை. நல்லாத்தான் இருக்கனும். ஆனா சரவணபவன் தயிர்வடைன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். நந்து நளினி கிட்ட சொல்லுங்க.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

நந்து நளினி கிட்ட சொல்லுங்க. //

அதான் கோபத்துல ஆளுக்கொரு பக்கமா ஓடறாங்களே.. எங்க சொல்றது?

காப்பி சூப்பரா இருக்கும். எங்க சேர்மன் வரும்போதெல்லாம் குடிக்காம போமாட்டார்.

என்ன.. காலங்கார்த்தால பத்து பதினஞ்சி பேர்க்கு பின்னால க்யூவில நிக்கணும்..

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அரவிந்தன்,

இது தான் இந்த பெண்களிடம் கோபம் வந்துவிட்டால் சுற்றம் பார்க்க மாட்டார்கள்//

என்ன அரவிந்தன்.. சந்தர்ப்பம் கிடைக்கறப்பல்லாம் பெண்கள விடமாட்டேங்கறீங்க:)

அதான் நளினிக்கு முரளிய பிடிக்காதுன்னு தெரியுமில்ல? அப்புறம் எதுக்கு நந்து அவர வரச்சொல்றது?

நளினி அப்படி செஞ்சிருக்கலன்னதான் ஆச்சரியம்..

siva gnanamji(#18100882083107547329) said...

ந்ல்ல உதயம்னு நினைச்சா கூடவெ
ஒரு நெருடலும்...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

நல்ல உதயம்னு நினைச்சா கூடவே
ஒரு நெருடலும்... //

அதாங்க யதார்த்தம்.. அப்பாடா ஒரு பிரச்சினை தீர்ந்ததுன்னு நாம நினைச்சிக்கிட்டிருக்கறப்ப வேறொரு பிரச்சினை முளைச்சிக்கிட்டு வர்றத நாம பார்த்ததில்லை?

ஆனா நளினியின் கோபம் நிரந்தரமானது இல்லைன்னு நினைக்கறேன்.